**பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு
**மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம்
**2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு
கோவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
கோவை, நவ.18 சபரிமலைப் பிரச்சினையை அரசியல், தேர்தல் இலாபத்துக்காக பி.ஜே.பி. - சங் பரிவார் வட் டாரங்கள் பயன்படுத்துகின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்றுமுன்தினம் (16.11.2018) கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் அதனு டைய மாநில மாநாடு, அதேபோல, சமூகநீதியை நிலை நிறுத்தக்கூடிய மாநாடு பல்வேறு அமர்வுகளுடன் தஞ்சை யில் வருகிற பிப்ரவரி 2, 3 ஆகிய நாள்களில் மிகச்சிறப்பாக பெரிய அளவில் நடக்க இருக்கிறது.
அதில், அநேகமாக வெளிநாட்டுத் தலைவர்கள், வட நாட்டுத் தலைவர்கள் , பல பகுதிகளிலேயிருந்து சமூக நீதியையும், கழகத்தின் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆதரவாளர்கள் அறிஞர் பெருமக்கள் பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அடுத்த ஆண்டு 2019ஆம் ஆண்டிலே அன்னை மணியம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழா மார்ச் 10 முதல் தொடங்குகிறது. ஓராண்டில் கழகத்தின் சார்பில் நடத்தப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து அதற்கான குழுக்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். அதற்காகவே தனியே மணியம்மையார் பவுண்டேஷன் என்கிற ஓர் அறக்கட்டளையும் பதிவு செய்யப்பட்டு, அதன் சார்பாக புதிய கல்வி நிறுவனங்கள், மற்ற பிரச்சார நிலையங்கள், மருத்துவமனைகள் தொடங்குவது என்பதும் மிகத் தெளிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மலேசியப் பாடத் திட்டங்களில் பெரியார்!
தந்தை பெரியார் அவர்களுடைய மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் அழகாக சொன்னதைப்போல, உலகளாவிய நிலையில் இன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள் போற்றப்படுகிறார்கள். மலேசி யாவில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு பெரியாருடைய நூல்கள் நூலகங்களிலே இடம்பெற்று பாடங்கள் சொல்லிக் கொடக்கப்படுகின்றன.
அதுபோலவே மிகப்பெரிய அளவிற்கு தந்தை பெரியார் கண்ட பல்வேறு கனவுகள், பல்வேறு இலட்சியங்கள் இன்றைக்கு நிறைவேற்றப்படுகின்றன.
ஒரு காலத்தில் உச்சநீதிமன்றம் பல நேரங்களில் அவருடைய கொள்கைக்கு விரோதமாக இருந்த நிலை மாறி, இன்றைக்கு உயர்ஜாதி அமைப்புகளைக்கொண்ட நீதிபதிகளாக இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களுடைய புரட்சிகரமான சமூகக் கருத்துகளை தங்களுடைய தீர்ப்புகளிலே ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.
உதாரணம் சபரிமலைக்கோயிலிலே பெண்களை அனு மதிப்பது போன்ற பல்வேறு செய்திகளைச் சொல்லலாம். மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது
தந்தை பெரியாருடைய மண்டைச்சுரப்பை உலகு தொழுகிறது என்பதற்கு அடையாளமாக அமெரிக்கா விலே செப்டம்பரில் தந்தைபெரியாருடைய பிறந்த நாள் விழாவையொட்டி, மிகப்பெரிய அளவில், பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்துகொள்ளக்கூடிய வகையில், பெரியார் பன்னாட்டமைப்பு சார்பில் அந்தத் தோழர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள், மாநாடுகள் இரண்டு நாள்கள் தந்தைபெரியாருடைய கருத்துகளை அகில உலகமும் எடுத்துச்செல்லக்கூடிய கருத்துகள் பரப்பப்படுவதற்கு நடத்தப்படுகின்ற மாநாடாக இருக்கும்.
செப்டம்பரில் வாசிங்டனில் மாநாடு
அமெரிக்காவிலே நடைபெறக்கூடிய மாநாடு, அமெ ரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன் நகரிலே நடக்க ஏற்பாடாகியிருக்கிறது. பெரியார் பன்னாட்டமைப்பு அமெ ரிக்கா சார்பில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஜெர்மனியிலே முதல் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. இது இரண்டாவது பன்னாட்டு மாநாடு பெரியார் சுயமரியாதை மாநாடு, பெரியார் கொள்கைகளைப் பரப்பக்கூடிய மாநாடு. ஆகவே, இப்படி உலகப்பெரியாராக தந்தை பெரியார் கொள்கைகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
அதேநேரத்திலே, நம்முடைய நாட்டில் மதவாதம், அறைகூவலாக இருக்கும் நேரத்தில், இவைகளை சந்திப்பது எப்படி, மாநில உரிமைகள் நாள்தோறும் பறிபோகக் கூடிய சூழ்நிலையிலே, அதைக்காப்பாற்றுவத எப்படி என்பதைப்பற்றி எல்லாம் மாநில மாநாட்டிலே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
ஏற்கெனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை என்று சொல்லக்கூடிய தந்தை பெரியார் நடத்திய இறுதிப்போராட்டம், அது வெற்றி கண்டுள்ளது. தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற் றாமல் இருக்கிறேனே என்று கலைஞர் வருத்தப்பட்ட நிலையிலே, கலைஞர் மறைவதற்கு முன்னாலேயே, ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் தமிழ்நாட்டுக் கோயிலில் அர்ச்சகர் நியமனம் நடந்துள்ளது. அதைக்கேட்டு கலைஞர் மகிழ்ந்திருக்கிறார் என்பது மிக முக்கியமான ஒரு செய்தியாகும்.
ஆகவேதான், ஜாதி ஒழிப்பு , பெண்ணடிமை நீக்கம், குறிப்பாக பெண்கள்மீதான பாலினக்கொடுமைகள் இவை களைத் தடுத்து நிறுத்தக்கூடிய திட்டங்களை இந்த மாநாடு அறிவிக்கும்.
ஆகவே, இந்த மாநாட்டைப்பொறுத்தவரையிலே, மாநில மாநாடு என்று சொன்னாலும்கூட, பல்வேறு புதிய திட்டங்கள், இரண்டு ,மூன்று ஆண்டுகளுக்கு நடத்த வேண்டிய ஒரு சமுதாயப்புரட்சித் திட்டங்களை அதிலே அறிவிப்போம்.
கோவைப்பகுதியிலேஇருக்கக்கூடியகழகத்தோழர் களோடு கலந்து பேசவும், இதேபோன்று ஒவ்வொரு பகுதியிலும் கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டி ருக்கிறோம். இதுதான் எங்களின் வருகையின் நோக்கம்.
ஜாதி ஆணவக் கொலை அவமானகரமானது
செய்தியாளர்:கிருஷ்ணகிரியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பாக ஜாதி ஆணவக் கொலை நடைபெற் றிருக்கிறது. போராடித்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதே?
தமிழர் தலைவர்: பொதுவாக பாலினக் கொடுமைகள் ஜாதிய அடிப்படையிலே, அதிகமாக இங்கே பெரியார் பிறந்த மண்ணாக இந்த மண் இருந்தும்கூட, இங்கொன்றும், அங்கொன்றும் நடைபெறுவதுகூட, நமக்கெல்லாம் மிகப் பெரிய அவமானம்; நமக்கு அவமானம் என்பதைவிட, இந்த அரசுக்கு மிகப்பெரிய அவமானம்!
ஒரு பக்கத்திலே முன்னேற்றக் கருத்துகள் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலக்கட்டத்திலே, இதுமாதிரி ஆணவக் கொலைகள் என்பது ஜாதியை அடிப்படையாக வைத்து நடைபெறுவது என்பது முற்றிலும் கண்டிக்கத் தகுந்தது.
காவல்துறையில் தனிப் பிரிவு தேவை!
ஏற்கெனவே, பல மாநாடுகளிலே அதைத் தெளிவாக எடுத்துச்சொல்லியதைப்போல, அதற்கென்று ஒரு தனிப்பிரிவே, காவல்துறையில் க்யூ பிராஞ்ச் மாதிரி, மற்ற மற்ற சிலை கடத்தல் தடுப்புக்கு, கடவுளைக் காப்பாற்றுவதற்கு எப்படி பிரிவுகளை உருவாக்குகிறார்களோ, அதுபோல, மனிதர்களைக் காப்பாற்ற, குறிப்பாக இதுபோன்ற ஆணவக்கொலைகளைத் தடுக்க, அதேநேரத்தில் காதல் திருமணங்களைச் செய்துகொள்ளக்கூடிய அந்த மணமக்களுக்குத் தகுந்த பாதுகாப்பை உருவாக்கி, போதுமான அளவுக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற திட்டங்களையெல்லாம் அந்த மாநாட்டிலே கொண்டுவந்து, நிறைவேற்ற இருக்கிறோம்.
இது ஒரு அகில இந்திய பிரச்சினை. வட நாட்டிலே காப்' பஞ்சாயத்து என்று சொல்லக்கூடிய ஜாதிப் பஞ்சாயத்துகள் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே இது வரையிலே நூறு அளவிற்கு குறைவாகத்தான் இருக்கிறது.
நடைபெறக்கூடிய கலப்பு மணங்கள், ஜாதி மறுப்புத் திருமணங்கள் எங்களுடைய தலைமையிலே, நாங்கள் நடத்தி வைப்பதிலே, பெரியார் சுயமரியாதை திருமண நிலையங்களிலே ஏராளம் இருக்கிறது.
இருந்தாலும், எப்படி பயணத்தில் நல்ல அளவிற்கு போய்ச்சேருகின்றவர்கள்செய்தியாவதில்லையோ, விபத்து கள்தான் செய்திகள் ஆகிறதோ, அதேபோலத்தான் இதுவும்.
இருந்தாலும், இந்த அளவுக்குக்கூட இருக்கக்கூடாது என்பது எங்களுடைய உறுதியான கொள்கை.
ஆகவே, அதை எதிர்த்து ஒரு பக்கம் சட்டம், கடுமை யான சட்டம், கடுமையான தண்டனை, இன்னொரு பக்கம் தீவிரமான பிரச்சாரம் இதை இரண்டையும் இணைத்து செய்துகொண்டிருக்கிறோம்.
பெற்றோர்களின் சூழ்ச்சி!
செய்தியாளர்: இதில் தமிழக அரசின் நிவாரணத் தொகையை உடனடியாக அரசு கொடுப்பதில்லை என்பது குறித்து...?
தமிழர் தலைவர்: அதாவது, இதில் தொகை என்று சொல் வது இருக்கிறது பாருங்கள், தொகை தேவைதான் ஆனால், தொகை இதற்கு ஈடு இல்லை. உயிருக்கு தொகை ஈடாகுமா? அதுவும் திட்டமிட்டு, அதுவும் என்ன செய்கிறார்கள் என்று சொன்னால், சூது, சூழ்ச்சியோடு இது நடத்தப்படுகிறது. அந்த பெண்ணும்கூட ஏமாந்து விடுகிறார்கள்.
அந்த பெற்றோர் தங்களின் வாஞ்சையைக்கூட பின்னால் வைத்துவிட்டு, ஜாதிவெறியை முன்னாலே வைத்து, நீ உள்ளே வா, உங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று சூழ்ச்சிப்பொறியை வைத்து, அவர்கள் அதை நம்பிக்கொண்டு வந்து, பிறகு உயிரோடு எரித்த சம்பவம் விருத்தாசலம் போன்ற இடங்களில் நடந்தது. மற்ற மற்ற இடங்களிலும் நடக்கிறது. ஆகவேதான், முதலாவது இந்த காதல் திருமணங்கள், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு போதிய பாதுகாப்புத் தனியாக கொடுக்க வேண்டும். நிதியுதவியெல்லாம் அடுத்தபட்சம்தான். முத லில் இந்த நிலைகளைக் கடுமையாகத் தண்டிக்கிறோம் என்று சொன்னால்தான், மிகப்பெரிய அளவுக்கு அச்சம் உண்டாகும். இதிலே முதன்மையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர் கள் யார் தூண்டிவிடுவதற்கான காரணமாக இருந்தார்களோ, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக அதிலே தயவு தாட்சண்யம் காட்ட வேண்டிய அவசியமே கிடை யாது.
செய்தியாளர்: கஜா புயலிலே தமிழக அரசின் செயல் பாடு பாராட்டப்பட வேண்டியது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே...?
தமிழர் தலைவர்: உள்ளபடியே இதுவரை தமிழக அரசு நடந்துகொண்ட விதத்திலேயே இது ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால், வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியமாக இருந்தாலும், தமிழக அரசு மிகப்பெரிய அளவிலே இவ்வளவு பெரிய வன்மையான கஜா புயல் உயிர்ச்சேதங்கள் குறைவுதான். பொருள்கள் சேதமாகியிருக்கின்றன. மரங்கள் வீழ்ந்திருக்கின்றன. பயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியது. உயிர்ச்சேதங்கள் குறைவாக ஆகியிருப்பதற்கு காரணம் தமிழக அரசின் முன் எச்சரிக்கையான நடவடிக்கையே!
ஒரு பக்கம் மின்சாரத்தை நிறுத்தி சேதத்தைத் தடுத் திருக்கிறார்கள் தேவையான நேரத்திலே. அதேநேரத்திலே முன் ஏற்பாடுகள் சிறப்பாக ஆங்காங்கே எங்கெங்கெல்லாம் வரும் என்று சொன்னார்களோ, அங்கெல்லாம் முன் ஏற் பாடுகளை செய்ததனுடைய காரணத்தால்தான் கனத்த மழையோடும், அதனுடைய விளைவுகளுடன் போய் விட்டது.
எதிர்க்கட்சியின் கண்ணியமான அணுகுமுறை!
ஆகவேதான், இது பாராட்டப்பட வேண்டியது. இதில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்கு தளபதி ஸ்டாலின் அவர்களுடைய பாராட்டு உள்ளது. ஏனென்றால், எதிர்ப்பதே எங்கள் வேலை அல்ல என்று பாராட்ட வேண்டியவர்களை பாராட்டுவோம், ஊக்கப் படுத்த வேண்டியவர்களை ஊக்கப்படுத்துவோம். கண் டிக்க வேண்டியவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் கண்டிப்போம். அதேநிலைதான் திராவிடர் கழகத்துக்கும். திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல. அதேநேரத்தில் எந்த அரசாக இருந்தாலும், பாராட்டப்பட வேண்டிய செயல்கள் செய்யும்போது பாராட்டுகிறோம். - அதுதான் கண்ணியம்! அதேநேரத்தில் நீட்' போன்ற மிகப்பெரிய மசோதாக்கள் உருவாக்கி இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும்கூட, தொடர்ந்து பல்வேறு பிள்ளைகள், மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு நிலை உள்ளதே! என்ன ஆயிற்று அந்த மசோதா என்றே தெரிய வில்லை.
இதிலே காட்டுகிற துடிப்பு போலவே, டில்லியோடு தம்முடைய உரிமைக்குப் போராடக்கூடியதிலும் தமிழக அரசு இருந்தால், இன்னும் பாராட்டலாம்.
சபரிமலை: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் இரட்டை வேடம்!
செய்தியாளர்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்தும்கூட, சபரிமலைக்கோயிலில் அனைத்து வயது பெண்கள் யாரும் போக முடியா சூழ்நிலை இருக்கிறதே?
தமிழர் தலைவர்: பினராய் விஜயன் அவர்கள் நேற்றுகூட மிகத்தெளிவாக அனைத்துக்கட்சிக் கூட்டத் தைக் கூட்டியிருக்கிறார். இங்கே நடப்பது வைதிக நம்பிக் கையாளர்களுடைய போராட்டம் அல்ல. மதவெறியர்கள் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். பிஜேபி போன்றவர்கள் இதை மிகப்பெரிய அளவிற்கு ஆக்கி அதன்மூலமாக தாங்கள் கேரளாவிலே காலூன்ற வேண்டும் என்று நினைக்கிற போராட்டம். இதை பிஜேபி தலைவரே தெளி வாகப் பேசி, அது பத்திரிகையிலே வந்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று. ஏனென்றால், இதே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் முதலில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று வழக்கு போட்டவர்கள். வழக்கு போட்டது மட்டுமல்ல. வாதம் செய்ததும் அவர்கள்தான். இதையெல்லாம் இன்றைக்கு மறைத்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத் ததை வரவேற்காமல், இதை எதிர்த்து அங்கே கேரள கம்யூனிஸ்ட் அரசு இருக்கிற காரணத்தால், கேரளாவிலே இருக்கிற ஒரு முற்போக்கு அரசை வீழ்த்துவதற்காக இதை பயன்படுத்துகிறார்கள்.
இதிலேஒருகெட்டவாய்ப்பு,விரும்பத்தகாதஒன்று காங்கிரசும்இதிலே சேர்ந்துகொண்டு அரசியல்செய்வது இருக்கிறதே, அந்த வாக்கு வங்கி அரசியல் கேரள காங்கிரசைப் பொறுத்தவரையிலே கண்டனத்திற்குரியதாகும்.
அவர்களைப் பொறுத்த வரையில், இதே முதலமைச்சர், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்த மாட்டோம் என்று சொல்லியிருந்தால், இதே கட்சிகள் என்ன செய்தி ருப்பார்கள்? உச்சநீதிமன்றத்தையே அவமதிப்பதை அனுமதிக்கலாமா? இந்த அரசாங்கம் செய்யவில்லையே என்றுதான் அப்போது குறை சொல்லியிருப்பார்கள்.
எனவே, அரசியல் சட்டத்தை செயல்படுத்துகிற ஓர் அரசாங்கம் பாராட்டுக்குரியது. அதைவிட தீர்ப்பை செயல்படுத்தியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் அவசரப்படவில்லயே!
இன்னொன்றும் ஆணி அடித்தைப்போல உச்சநீதி மன்றம் நேற்று செய்திருக்கிறது. ஒரு 46 மனுக்கள் சீராய்வு மனு என்று சொல்லி ரெவியூ பெட்டிஷன் போட்டிருக்கிறார்கள். இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்களே தவிர, தடைசெய்யுங்கள் என்று கேட்டபோது, தடைசெய்ய முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள். இது பின்னாலே வரக்கூடிய முடிவுக்கு முன்னோட்டமாகும். இதுவரை எந்த சீராய்வு மனுவிலும் தலைகீழாக தங்களுடைய கருத்துகளை மாற்றி நீதிபதிகள் சொன்னதாக பழைய வரலாறே கிடையாது.
இருந்தாலும் அது ஒரு சடங்கு. சில வக்கில்களுக்கு நல்ல வருமானம் அவ்வளவுதான்.
செய்தியாளர்: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரி மலைக்குப் போவதற்காக ஆன்லைனில் அனுமதிக்காக பதிவு செய்துள்ளார்கள். ஆனால், இந்துத்துவா போன்ற அமைப்புகள் ரத்தத்தைச் சிந்தியாவது எந்த பெண்களையும் விடமாட்டோம் என்கிறார்களே?
தமிழர் தலைவர்: அதைச் சொல்வதற்கு இவர்கள் யார்? இவர்கள் அரசாங்கமே, மோடி அரசாங்கம் அப்படி இருக்கும்போது அரசியல் சட்டத்தைக் காப்பாற்று வோம் என்றுதான் ஒவ்வொருவரும் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் சட்டப்படி உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு என்பது செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. உச்சநீதிமன்றமே தீர்ப்பை மாற்றினால் ஒழிய, செயல்படுத்த வேண்டிய ஒன்று. ஆகவே, பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் கலவரம் செய்கிறவர்கள் என்றால், கலவரம் செய்கிறவர்களை கடுமையாகத் தண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது கேரள அரசின் கடமை. இதைக் கண்டிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு ஒரு பக்கம் பிள்ளையையும் கிள்ளிவிடுவது, தொட்டிலையும் தாலாட்டுவது என்றும் இருக்கக் கூடாது.
காங்கிரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது!
செய்தியாளர்: நேற்று நடந்த அனைத்துக்கட்சிக் கூட் டத்தை காங்கிரசு கட்சி புறக்கணித்துள்ளது. உடன்பாடு இல்லை என்றும் சொல்லியிருக்கிறதே...? மே மாதம் தேர்தல் வரப்போகிறதே...?
தமிழர் தலைவர்: நான் ஏற்கெனவே சொன்னேனே, காங்கிரசு வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. கேரளாவைப் பொறுத்தவரையிலே எப்போதுமே போட்டி காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்டுகளுக்கும்தான். பிஜேபி இப்போது காலூன்றுவதற்காக தலையை நீட்டுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று பிஜேபியினர் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். காங்கிரசு எதிர்க்கட்சி. இதைவைத்தாவது ஆட்சிக்கு வரமுடியுமா என்று தப்பாக நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பழமொழி போல, கடல் வற்றி கருவாடு தின்ன கொக்கு காத்திருந்து செத்ததுதான் மிச்சம்! உள்ளாட்சித் தேர்தலை நடத்த அஞ்சும் அ.தி.மு.க.
செய்தியாளர்: உள்ளாட்சித் தேர்தல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளிப்போகிறதே? அது எதனால்?
தமிழர் தலைவர்: மக்களுக்கே மறந்துபோய்விட்ட செய்தியை நீங்கள் நினைவுபடுத்தியதற்கு நன்றி. திரும்ப திரும்ப எத்தனையோ முறை உயர்நீதிமன்றம் குட்டுக்குமேல் குட்டு வைத்து விட்டது. இடைத்தேர்தலைப்பற்றிகூட பேசிக்கொண்டிருக்கிறார்களேதவிர ஊரட்சிமன்றத் தையோ, உள்ளாட்சித் தேர்தலைப்பற்றியோ கவலைப் படாமல் இருப்பத மிகப்பெரிய கேடு.
அதிலும், குறிப்பாக இயற்கையினுடைய பேரிடர் போன்ற இதுமாதிரி நடக்கக்கூடிய இடத்திலே அந்த ஊராட்சி மன்றங்கள் இருந்து, அந்த தலைவர்கள் இருந்து பணியாற்றினால்தான், உடனடியாக பல்வேறு நிவாரணங்கள்கூட சரியாக மக்களுக்குப்போய்ச் சேரும். எனவே, உங்கள் மூலமாக தமிழக அரசுக்கு வேண்டு கோள். நீங்கள் 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துகிறீர்களோ இல்லையோ, உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள்-. அதுதான் மிக முக்கியம். இந்த ஏற்பாட்டுக்கு இவ்வளவு முனைப்பு காட்டும் நீங்கள், அதிலும்கூட தமிழக அரசுமுனைப்பு காட்டி, அடுத்து சில மாதங்களுக்குள்ளாகவே ஊராட்சி மன்றத் தேர்தல்களை, உள்ளாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.
இராமன் கோவில் பிரச்சினை- இம்முறை இராவணனுக்கே வெற்றி!
செய்தியாளர்:ராமன் கோயில் உடனடியாகஅமைக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கூறுகின் றனவே?
தமிழர் தலைவர்: அதாவது ஏற்கெனவே இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திலே இருக்கிறது. இதை அவசரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல மனுக்கள் போட்டதை, இது அவசரமான பிரச்சினை அல்ல, இதை ஜனவரியிலே நாங்கள் விசாரிப்போம். ஜனவரியிலே எப்போது எடுத்துக்கொள்வது, எப்போது நடத்துவது என்பதை முடிவு செய்வோம் உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்ட பிற்பாடு, ராமன் கோயில் ராமன் கோயில் என்று இவர்கள் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பது, சாமியார்களை விட்டு உலா வரச் செய்வது, சாமியார்களை விட்டு மிரட்டச் செய்வது என்றால், ஏற்கெனவே மோடி அரசு பல களங்களில் தோல்வியைக் கண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு, அதேபோல ஜிஎஸ்டியிலே ஏற்பட்ட அதிருப்தி, அதேபோல இளைஞர்களுக்கு வேலைவாய்புப் இல்லை என்பது, பல துறைகளிலே அவர்கள் தங்களுடைய மதிப்பைக் குறைத்துக் கொண்டு விட்டனர். பணம்தான் மதிப்பிழந்தது. இப்போது மோடி அரசே மதிப்பிழந்து இருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்திலே இவைகளையெல்லாம் திசைதிருப்புவதற்கு ராமன் பயன்படுகிறான். ராமன் எப்போதுமே மரத்துக்குப்பின்னாலே இருந்து அம்பு விட்டவன். ராமன்கோயிலும் மறைமுகமாக அவர்களுக்குப் பயன்படுகிறது.
ஆனால், இந்த முறை வெல்லப் போவது இராவணனே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.