* கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக!
* மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக!
* நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!
* உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திடுக!
கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து - புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, ஒத்தக் கருத்துள்ள வர்களையும் ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 27 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இம்மாதம் 16 ஆம் தேதி விடியற்காலை வீசிய கஜா புயல் (இதன் கண்பகுதி 26 கி.மீ. நீளமும், 20 கி.மீ. அகலமும் கொண்டது) 165 கி.மீ. வேகத்தில் வெறிகொண்டு வீசி மக்களைச் சூறையாடித் தன் கோரப் பசியைத் தீர்த்துக் கொண்டுவிட்டது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக நாகப்பட்டினத்தில் 10 ஆம் எண் கூண்டு துறைமுகத்தில் ஏற்றப்பட்டது.
மடிப்பிச்சை ஏந்தும் நிலை!
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், இராமநாதபுரம், தேனி (டெல்டா மாவட்டங்களையும் தாண்டி) முதலிய மாவட்டங்களின் மக்கள் வாழ்வைச் சூறையாடி வீசி எறிந்துவிட்டது.
வீடுகளையும், அன்றாட வாழ்வுக்குச் சோறு போட்ட கால் நடைகளையும், பயிர்களையும், மரங்களையும் இழந்து அடுத்த நிலை வாழ்வுக்கு மடிப்பிச்சை ஏந்தும் அவல நிலையில், கண்ணீரும் கம்பலையுமாக மக்கள் பரிதவிக்கும் காட்சி கொடுமையிலும் கொடுமை!
நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை. பாடப் புத்தகங்களைப் பறிகொடுத்துக் கைப்பிசைந்து நிற்கும் பிள்ளைகள், உணவு இல்லை, குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை என்று இல்லை, இல்லை'' என்பதைத் தவிர வேறு எதையும் அறியாத மக்களாக ஆக்கப்பட்ட நிலைக்குக் காரணமான இயற்கையின் கோணல் புத்தியை என்னவென்று சொல்லுவது!
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கலாமா?
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்குச் செல்லும் அமைச் சர்களை முற்றுகையிடும் அளவுக்கும், அவசர நிவாரணம் கோரி சாலை மறியலில் ஈடுபடும் அளவுக்கும் மக்கள் ஆத்திரத்தோடு வெடித்துக் கிளம்பிவிட்டனர். அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்'' என்று குறள் சொல்வது இந்த இடத்திற்கு மிகவும் பொருந்தும்.
நடைபெற்று இருக்கும் இழப்பினை - என்னதான் கடுமுயற்சி செய்தாலும் மாநில அரசால் ஈடுகட்டவே முடியாத நிலை.
இதில் அவசர அவசரமாகத் தலையிட்டு உரியதைச் செய்யவேண்டிய மத்திய அரசோ, யாருக்கோ வந்த விருந்து என்று தேர்தல் வாண வேடிக்கையில் திளைத்துக் கொண்டுள்ளது.
குமரி, நெல்லை மாவட்டங்களை ஒக்கிப் புயல் தாக்கியபோது மத்திய அரசு எப்படி நடந்துகொண்டது - ஏதோ பிச்சை போட்டதுபோல் கொடுத்து, தம் கடமை முடிந்துவிட்டதாகக் கடையை மூடிக்கொண்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெள்ளம், புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட மொத்த தொகை ரூ.97,352 கோடி ஆகும். ஆனால், இதில் ரூ.3,884 கோடியே 45 லட்சத்தை (3.99 சதவிகிதம்) மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது.
மாநில அரசின் வருமானங்களிலிருந்து கணிசமான அளவுக்கு நிதியைக் கையகப்படுத்தும் மத்திய அரசு, அந்த மாநிலங்களுக்கு எதிர்பாராதவிதமாக இயற்கைப் பேரிடர் ஏற்படும்பொழுது உற்றது உதவவேண்டிய கடமையை உதாசீனப்படுத்தலாமா?
இதுபோன்ற மிகவும் நெருக்கடியான தருணத்தில்கூட மனிதாபிமானக் கண்ணோட்டத்துக்குப் பதிலாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசியல் கண்ணோட்டத்தோடு நடந்து கொள்ளலாமா?
காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்வு நடந்தபோது ஆயிரம் கோடியைத் தூக்கிக் கொடுக்க முடிகிறது - தேர்தல் அரசியல் கண்ணோட்டத்தோடு; தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கொடுத்தும் என்ன பயன்? தமிழ்நாட்டில் பா.ஜ.க. போணியாகாது என்ற முறையில் நடந்துகொண்டால், உள்ளதும் போச்சு'' என்ற நிலைக்குத்தான் தள்ளப்படும் என்று எச்சரிக்கிறோம்!
மத்திய அரசோ, பிரதமரோ வடமாநிலங்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? தென்மாநிலங்கள் என்றால் பாராமுகம் ஏன்?
உண்மையைச் சொல்லப்போனால், மாநில அரசுக்குத்தான் மக்களுண்டு - மத்திய அரசுக்கு என்று மக்கள் கிடையாது. இந்த நிலையில், மக்களோடு நேரடியாக அன்றாடம் தொடர்பு கொண்டுள்ள மாநில அரசின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதுதான் ஒரு மத்திய அரசின் கடமையாக இருக்க முடியும்.
மத்திய அரசை வலியுறுத்த தயக்கம் காட்டும் மாநில அரசு
தமிழக அரசோ, மத்திய அரசை வலியுறுத்தி எதையும் பெறும் நிலையில் இல்லாதிருப்பது வேதனைக்குரியது!
தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
அரசு சார்பில் பொருள்களையோ, நிதியையோ, அரசிடம் பல்வேறு அமைப்புகள் வழங்கும் பொருள்களையோ பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்படுவதோடு, அப்படி அளிக்கப்படும்பொழுது விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது பொறுப்புள்ள அதிகாரிகள் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வது அவசியமாகும்.
27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
இதன்மூலம் அரசுக்குத் தேவையில்லாத கெட்ட பெயர் நீங்குவதற்கும் வழிவகுக்கும்.
இந்த நிலையில்,
1. உள்ளாட்சித் தேர்தல் நடக்காத காரணத்தால் ஏற்படும் இடர்ப்பாடுகள் என்ன என்பதை இதுபோன்ற நேரங்களில் உணர முடிகிறது. வரும் டிசம்பருக்குள் அல்லது 2019 ஜனவரிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட தமிழக அரசு முன்வரவேண்டும்.
2. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திடவும்,
3. கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு இடமின்றி மத்திய அரசு, மாநில அரசு கேட்கும் தொகையை வெட்டாமல் அப்படியே வழங்கவேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலும், (கஜாப் புயலைப் பேரிடராக அறிவிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது.)
4. மத்திய அரசை வலியுறுத்தி உடனடியாக தேவையான நிதியைப் பெற்றிட மாநில அரசை வலியுறுத்தியும், ஒத்தக் கருத் துள்ளவர்களையும் ஒன்றிணைத்து வரும் 27 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
காலத்தால் ஆற்றவேண்டிய இந்தக் கடமையைக் கழகத் தோழர்களே திட்டமிட்டுச் சிறப்பாக ஏற்பாடு செய்வீர்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
20.11.2018