ராமன் கோவில் கட்டுவது என்ற பெயரால் வன்முறைக்குத் திட்டம்
ராமனை வைத்துத் தேர்தலில் கரையேற முயற்சி
லக்னோ, நவ. 26 நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ராமன் கோவிலைக் கையில் எடுத்துக்கொண்டு கரையேற திட்டமிடும் வகையில் அயோத்தியில் தர்ம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ராமர் கோவில் விவகாரம் வன்முறையாக மாறும் போதெல்லாம் அந்த வன்முறை தோன்றுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு இந்துமகாசபை கூட்டிய தர்மசபா என்னும் கூட்டங்கள் காரணமாக இருக்கும். தர்மசபா என்ற பெயரில் கூட்டங்களைக் கூட்டி வன்முறையில் இறங்க நேரடியாகவே கட்டளை இடுவார்கள். இந்த நிலையில் மீண்டும் அயோத்தியில் தர்மசபை கூட்டம் நேற்று கூடியது. இதனால் அயோத்தி நகரில் பதற்றம் நிலவுகிறது.
உச்சநீதிமன்றத்தின்மீது சீற்றம்
அயோத்தி ராமர் கோவில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டுஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது. இதற்கு இந்துத்வா அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசு ராமர் கோவில் அமைக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என பலர் கோரிக்கை எழுப்பி உள்ளனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தியே விசுவ இந்து பரிசத் சார்பில் தர்ம சபை கூட்டம் நடைபெற்றது.
தர்ம சபைக் கூட்டமும் - வன்முறையும்!
தர்மசபை கூட்டத்தை ஒட்டி நகரெங்கும் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. தீவிர பாதுகாப்பினால் உள்ளூர் மக்கள் நடமாட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ராமன் கோவில் கட்டப்படவேண்டும் என்று இதுவரை மூன்று முறை தர்மசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது, இந்த மூன்று கூட்டங்கள் முடிந்த பிறகு அடுத்த சில நாட்களிலேயே கடுமையான மதக்கலவரம் நாடு முழுவதும் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு பக்சர் மற்றும் வாரணாசியில் இந்து தர்மசபா கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பின்னர் வாரணாசி, பக்சர் போன்ற நகரங்களில் இசுலாமியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதன் பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
"அயோத்தியில் ராணுவம் தேவையில்லையாம்;
அங்கு நடப்பது விழாதானாம்!''
தர்மசபா கூட்டம், சிவசேனா தொண்டர்கள் கூட்டம் என அயோத்தி நகரம் எங்கும் பயங்கரமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என்பதற்காக துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவமும் வரவேண்டுமென்று உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அவருக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் விழாவுக்கு ராணுவத்தைக் கொண்டு வர வேண்டும் என நான் நினைக்கவில்லை. அங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. மற்ற கட்சிகளைப் போல பாஜக இல்லை. சட்டம் ஒழுங்கை மாநில பாஜக பார்த்துக் கொள்ளும்'' என்று கூறினார்.
விசுவ இந்து பரிசத் அமைப்பு மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கூட்டிய கூட்டத்தில் கூடியோரில் பாதிக்கும் மேற்பட்டோர் பள்ளி செல்லும் பிள்ளைகள் ஆகும். தேர்விற்குத் தயாராக வேண்டியவர்களை கோவில் கட்ட தயார் செய்து வன்முறையாளர்களாக மாற்றும் வேலையில் விசுவ இந்துபரிசத்தும், இதர இந்து அமைப்புகளும் செயல்படுகின்றனர்.
மோகன் பாகவத் கருத்து
அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டோம் என்று நாகபுரியில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வர இருக்கும் காலகட்டத்தில், ராமன் கோவில் பிரச்சினையைக் கையிலெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.