*எல்லாவற்றையும் இழந்து மக்கள் தவிக்கிறார்கள் - போதுமான எண்ணிக்கையில் வி.ஏ.ஓ.க்கள் இல்லை;
*உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லை
*அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய குழுக்கள்மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவேண்டும்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
உரத்தநாடு, நவ.28 கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைபாடுகளை அறிந்து உடனடியாகத் தெரிவிக்க கிராம நல அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) போதிய எண்ணிக்கையில் இல்லை; உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழல். இழப்புக்கு ஆளானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல - மத்திய அரசோ கண்டுகொள்ளவும் இல்லை. இந்நிலையில், நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழு அமைத்து வழங்கிடவேண்டும்; உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரத்தநாட்டில் செய்தியாளரிடம் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று (28.11.2018) காலை உரத்தநாட்டிற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஏராளமான இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள்
சேதுராயன்குடிக்காடு என்ற உரத்தநாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்ற இதுபோன்ற கிராமங்களை, தஞ்சையிலிருந்து புறப்பட்டு வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது எங்கு பார்த்தாலும் மரங்கள் விழுந்து கிடப்பது மட்டுமல்ல, மக்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படக் கூடிய அளவிற்கு, வீடுகளை இழந்து, தார்ப்பாயை வீட்டின் மேல் போட்டுத்தான் அவர்கள் ஏதோ வசித்துக் கொண்டிருக்கிறார்கள், மிகுந்த வேதனையோடு இருக்கிறார்கள். பலருக்குச் சரியான உணவுகளும் கிடைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஏராளமான இழப்புகளை சந்தித்திருக்கின்றனர்.
இன்னும் ஓர் அய்ந்தாண்டுகள் இருந்திருந்தால், பலன் தரும் என்று சொல்லக்கூடிய தேக்குமரங்கள் அடியோடு சாய்ந்து போயிருக்கின்றன. தென்னைமரங்கள்தான் அவர்களுடைய வாழ் வாதாரம். அந்த மரங்களும் புயலால் அடியோடு சாய்க்கப்பட்டு விட்டன. தாங்கள் வசித்த குடிசைகளையும் அவர்கள் இழந்திருக் கிறார்கள்.
கிராம நல அதிகாரிகள் இல்லை
இந்நிலையில், வி.ஏ.ஓ.க்கள் என்று சொல்லக்கூடிய கிராம நல அதிகாரிகள் போதிய அளவிற்கு இல்லை. ஒரு கிராம அதிகாரி, அய்ந்து கிராமங்களைப் பார்க்கக்கூடிய அளவிற்கு உள்ளது. அந்தப் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கக்கூடிய நிலை என்பது மிகப்பெரிய குறைபாடு.
ஒரு பக்கம் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாமல், தள்ளித் தள்ளிப் போகிறது. அதன்மூலமாக, பிரதிநிதிகள் வந்து, இந்தக் குறைபாடுகளை உடனடியாக மேலிடத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பில்லாத ஒரு சூழல்.
அதைவிட இன்னொரு மிக முக்கியமான செய்தி என்னவென்று சொன்னால், கிராம அதிகாரிதான் அறிக்கை கொடுக்கவேண்டும். அதற்குமேல் வருவாய்த் துறை அதிகாரி, வட்டாட்சியர் என்று செல்லும்.
அய்ந்து கிராமத்திற்கு ஒரு கிராம அதிகாரி என்றால், அவரால் எப்படி பணியாற்ற முடியும்? உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய முடியும்? ஆகவே, உடன டியாக அரசாங்கங்கள் கொடுக்கும் பணம், நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானபடி போய்ச் சேரவேண்டும்.
ரூ.1,200 போதவில்லை
கேரளாவில் புயலால் பாதிக்கப்பட்ட மரம் ஒன் றுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். எட்டு வழிப் புறவழிச் சாலை என்று சொல்லி, மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். எங்களுக்கு வெறும் 1,200 ரூபாய் மட்டும் என்றால் எப்படி? வீழ்ந்த மரங்களை எடுப்பதற்கே அந்தத் தொகை போதாது என்கிற உள்ளக் குமுறலோடு கூறும் குறைபாடுகள் எல்லாம் நியாயமானவையே!
பாதிக்கப்பட்டதின் காரணமாக, ஆத்திரத்தில் மக்கள் அவர்களுடைய கஷ்டத்தினை வெளிப்படுத்து கிறார்கள். அதை அமைச்சர்களோ, மற்றவர்களோ அரசியல் கட்சிகள்தான் தூண்டிவிடுகின்றன என் றெல்லாம் சொல்லக்கூடாது; எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றக்கூடாது. எரிகின்ற நெருப்பில் தண்ணீரை ஊற்றவேண்டுமே தவிர, மேலும் அது எரிவதற்குக் காரணமாக, இவர்களுடைய பேச்சு அமைந்துவிடக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கவேண்டும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கவேண்டும். எந்த விவசாயியும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது. நாங்கள் இருக்கிறோம், உங்களை வாழ வைப்போம் என்று
பாதிக்கப்பட்டமக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையில், விவசாயிகளை எங்களுடைய உறவுக்காரர்களாகக் கருதி, அவர் களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் யார் யார் மூலம் செய்ய முடியுமோ, அதை செய்வோம் என்று சொல்லியிருக்கிறோம்.
பிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டில் புயல் அடித்ததா என்று தெரியுமா? தெரியாதா?
உடனடியாக அரசாங்கம் அதனை செய்ய வேண்டும். மத்திய நிவாரணக் குழு இப்பொழுதுதான் வந்திருக்கிறது. பிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டில் புயல் அடித்தது தெரிந்ததா என்று தெரியவில்லை. ஏனென்றால், எந்தவிதமான ஒரு ஆறுதலையும் அவர் தெரிவிக்கவில்லை. முதலமைச்சர்தான், பிரதமர் மோடியை சந்தித்து, சொல்லியிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ஒருவர்கூட இங்கே பாதித்த பகுதிகளைப் பார்க்கவரவில்லை.
அப்படிப்பட்ட ஒரு சூழல் இங்கே இருக்கிறது. அதனால், மக்களுக்குக் கோபம் வருவது இயல்புதான். அதிலொன்றும் அரசியல் கிடையாது. அவர்களுக்கு ஒன்றும் போராடவேண்டும் என்கிற அவசியம் கிடையாது - ஏனென்றால், அவர்களே பட்டினியாகக் கிடக்கிறார்கள்.
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைக்கவேண்டிய கடமை அரசுகளுக்கு உண்டு.
அதேபோன்று தனியார் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நிறைய செய்கிறார்கள். அதை, முன்னால் இருக்கின்ற ஊர்க்காரர்களே பறித்துக்கொண்டு, உள்புறமாக உள்ள ஊர்களுக்கு அனுப்பாமல் தடுக்கிறார்கள். பல இடங்களில் இதுபோன்று நடந்துகொண்டு இருக்கிறது. அதை கண்காணிக்கவேண்டும்; காவல்துறையினரின் உதவியோடு, பல இடங்களில் உள்ளே சென்றிருக்கிறார்கள்.
நிவாரணப் பொருள்கள் யாருக்குச் சென்றடையவேண்டுமோ, அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டும்
இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களும்கூட, நாம் முழு வயிறு சாப்பிடுவதைவிட, இன்னும் பத்து பேர் அரை வயிறோடு இருப்பது நம்மாட்கள்தான் என்று எண்ணி, விட்டுக்கொடுக்கின்ற மனப் பான்மை வேண்டும். மனிதநேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வருவதை ஒருங்கிணைக்கவேண்டும். நிவாரணப் பொருள்கள் யாருக்குச் சென்றடையவேண்டுமோ, அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டும். அந்தப் பணிகளை திராவிடர் கழகம், மகளிரணி, மற்ற அமைப்பினர் செய்யவேண்டும்.
திராவிடர் கழகத்தின் சார்பில் மருத்துவ முகாம்கள்!
அதேபோன்று எங்கெங்கே மருத்துவ முகாம்களை நடத்தவேண்டுமோ - அதனை அரசாங்கம் மட்டுமே செய்ய முடியாது என்பதால், எங்களைப் போன்ற அமைப்புகள் - பெரியார் மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளில் அவர்கள் மருத்துவ முகாம்களை நடத்துவார்கள்.
ஆகவே, இருகை ஓசை இப்பொழுது தேவை. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். இதில் அரசியல் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
ஆகவேதான், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். நம்மால் முடியும் என்ற தைரியத்தை அவர்களுக்கு ஊட்டவேண்டும். அவர்களுக்குத் துணையாக நாம் இருக்கின்ற எண்ணம் வரவேண்டும்.
ஆகவே, முதலில் நிவாரணம் என்பது உடனடியாக செய்யவேண்டியது. தொலைநோக்கோடு செய்யவேண்டியது சில திட்டங்கள்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவேண்டும்!
அந்தந்த ஊர்களில், நிவாரணங்கள் சரியானபடி கிடைப்பதற்கு, எங்களைப் போன்றவர்களின் வேண்டு கோள், திராவிடர் கழகத்தினுடைய வேண்டுகோள் என்னவென்றால், தயவு செய்து மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துக் கட்சி, அனைத்து அமைப்புகளின் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் மூலமாக நிவாரணங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தால், விருப்பு வெறுப்புகள் இல்லாமல், எந்த நோக்கத்தோடு அந்த நிவாரண உதவிகள் அளிக்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்த உதவிகள் சேரவேண்டியவர்களுக்குப் போய் சேரும்.
பாதிக்கப்பட்ட இடங்களில் மின்னிணைப்புப் பணிகளில் குறைபாடு என்று சொல்ல முடியாது!
செய்தியாளர்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதி களை நாங்கள் பார்த்த வகையில், இன்னும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின்னிணைப்புகள் இல்லாமல் இருக்கின்றன. அவர்களுடைய அடிப் படை கோரிக்கை என்னவென்றால், உணவுத் தேவைகள்கூட பிறகு, முதலில் மின்னிணைப்பு வந்தால்தான் எங்களுக்குக் குடிநீர் கிடைக்கும் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: மின்னிணைப்பைப் பொறுத்த வரையில், அவர்கள் வேகமாகத்தான் செய்து வருகிறார்கள், அரசாங்கத்தைப் பொறுத்தவரையில். நாம் அதனைப் பெரிய குறையாகக் கருதவேண்டிய அவசியமில்லை. எல்லா இடங்களுக்கும் உடனடியாக மின்னிணைப்பு வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், சில இடங்களில் மின் கம்பிகளை அகற்றுவதற்கே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாங்கள் வரும்பொழுது பார்த்துக் கொண்டே வந்தது என்னவென்றால், வயல்களில் மின் கம்பங்களை நட்டு வைத்திருக்கிறார்கள், அந்தக் கம்பங்கள் எல்லாம் புயலால் சாய்ந்து கிடக்கின்றன. அதனை அகற்றுவது சிரமம்தான்.
இதில் பாராட்டவேண்டியது என்னவென்றால், மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப் படையில் பணிகள் செய்து கொண்டுள்ளனர். இன்னும் நிறைய அதிகாரிகளை அதற்காகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, அதிகாரிகளை, ஊழியர்களை மற்ற மாவட்டங்களிலிருந்தோ, மற்ற மாநிலங்களிலிருந்தோ வரவழைக்கலாம். ஓய்வு பெற்ற மின் அதிகாரிகளையெல்லாம் மறுபடியும் அழைக்கலாம். அவர்கள் எல்லாம் மனிதநேயத்தோடு வந்து பணியாற்ற தயாராக இருப்பார்கள். அரசாங்கம், இருக்கின்றவர்களை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்காமல், ஓய்வு பெற்றவர்களையும், தன்னார்வத் தொண்டு பணியாளர்களையும் அழைக் கலாம். அப்படி அழைத்தால், இன்னும் வேகமாகவும், போர்க்கால அடிப்படையிலும் பணிகள் நடைபெறும்.
அடிப்படைத் தேவை மின்சாரம்தான். செல் போன்களைக்கூட சார்ஜ் செய்ய முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு தலைநகரம் சென்னையில்கூட, செல்போன் சார்ஜ் செய்வதற்காகவே கிண்டி மேம்பாலத்தில் மக்கள் அமர்ந்து போக்குவரத்தையே நிறுத்திவிட்டார்கள்.
முதல் தேவை மின் இணைப்புதான். ஆகவே அதனை உடனடியாக செய்யவேண்டும். இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.