ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய பாதுகாப்பு அரண்'' திட்டம்!
ஜாதி, மதம், பெண்ணடிமை தகர்க்க முதல் உயிர்க் கொடை என்னுடையது!!
ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கவும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குப் பாதுகாப்பு அரண் அமைக்கும் ஒரு திட்டம் உருவாக்கப்படும்; ஜாதி, மதம், பெண்ணடிமை இவற்றினை அழிக்க உயிர்க்கொடை அளிப்பதில் முதல் உறுப்பினர் நானாகவே இருப்பேன் என்ற உணர்வும், துணிவும் மிக்க பிறந்த நாள் செய்தியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
நாளை (2.12.2018) எனது வயது 86 ஆம் ஆண்டு தொடக்கம்.
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின் சுயமரியாதை வெளிச்சத்தில் பூத்தவன்; காய்த் தவன் - கனிந்துகொண்டு இருப்பவன்.
வயது ஏற ஏற முதுமை' - உறுப்புகளுக்கும், பலருக்கு உள்ளத்திற்கும் தளர்ச்சி' ஏற்படுவது இயல்பு.
ஆனால், பெரியார் தொண்டர்களுக்கோ, முதுமை வரவர, முதிர்ச்சியின் ஆளுமை உறுதி அதிகரிக்கவே செய்கிறது!
உறுப்புகள் களைத்தாலும் - இளைத்தாலும்....
உறுப்புகள் களைத்தாலும், இளைத்தாலும் உள்ளமும், உற்சாகமும் குறைவதில்லை. இதன் ரகசியம்'' - உள்ளொன்று வைத்துப் புறமொன்றுப் பேசிடும் இரட்டை வாழ்க்கை இல் லாமல் உள்ளத்தில் உள்ளதைப் பேசி, பேசியதை செயலாக் குவதிலும், அதற்குரிய விலை தருவதற்கும் தயங்காத கொள்கை லட்சிய உறுதிப்பாடுமேயாகும்.
எளிதில் கிடைக்காத இரு செல்வங்கள்!
பெரியார் தொண்டர்கள் இந்த அறியாமை நிரம்பியுள்ள உலகத்தோடு ஒட்ட ஒழுகாதவர்கள்' - மாறாக, பகுத்தறிவுப் பாதையும், சுயமரியாதைப் பயணமும் மேற்கொண்டு மக்களை - உலகத்தை நம்மோடு அழைத்துச் செல்லும் அரிமா பணியாற்றும் பெரியாரின் இராணுவ வீரர்கள்!
எவருக்கும் எளிதில் கிடைக்காத இரண்டு செல்வங்களை நமக்கு அளித்தவர் நமது பேராசானான தந்தை பெரியார்!
1. தன்மானம்
2. இனமானம்
இவற்றைவிட நம் பெறற்கரிய பேறு வேறு எவை?
75 ஆண்டுகால பொதுவாழ்வு - என்னைப் பொறுத்தவரை - ஒரு இனமானப் போராளியாய் களத்தில் நிற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ளச் செய்யும் பெரியாரின் அந்த அற்புதப்' பாதை! ஈரோட்டுப் பாதை!!
அய்யா தந்த அறிவுச் சுடராம் அந்தப் பேரொளி அகிலமெல்லாம் இன்று பரவிடும் ஒளியாகி ஓங்கி நிற்கிறது!
உருவத்தால் தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், தத்துவங்களால், போராட்டங்களால் தந்தை பெரியாரின் லட்சியப் பயணம் நிரம்பி, களைப்பறியா களப் பணிகளால் எங்கெங்கும் மலர்ந்து மணம் வீசுகிறது!
ஓய்வறியாப் பணியால் இளமை குன்றாது
வயது வளர கவலைகள் தோன்றும். ஆனால், கருஞ்சட்டை இராணுவத்திற்கோ, ஓய்வறியாப் பணியால் உள் ளங்கள் இளமையாகும்; இயக்கமும், கொள்கை வெற்றிகளும் வளமையின் விளைச்சலாகும்.
இது ஒரு புதிய சுயமரியாதை விஞ்ஞான விதியாகும்!
அய்யாவின் காலத்தைவிட மிகவும் ஆபத்தான இன எதிரிகளும், மூடநம்பிக்கை வியாபார முகவர்களும், மதவெறிக் கூத்துகளும், நாம் போராடிப் பெற்ற வெற்றி களைக்கூட, சூழ்ச்சி, சூது வழிகளில் தட்டிப் பறிக்க முயலும் தந்திர நரித்தன நயவஞ்சகத் திட்டங்களுமே நம் முன் ”மலைபோல்'' நிற்கின்றன!
அவைகளை கரையும் பனிபோல் ஆக்கி விரட்டும் மனத்திண்மை நமக்கு உண்டு. காரணம், நாம் மானம் பாராத, நன்றியை எதிர்பாராத, புகழ் வேட்டை ஆடாத, பதவி தேடாத, பொன் பொருள் தேடாத, மானமொன்றே நமது வாழ்வு; சமத்துவமும், மனிதநேயமுமே நமது இலக்கு; இவற்றை அடைய நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதி, நம்பிக்கை முன் எதிர்ப்பு என்ற மாமலையும் ஓர் கடுகே!
இயற்கைப் பேரிடரின் கொடுமை!
செயற்கை எதிர்ப்புகளைச் சமாளிக்கும் இவ்வேளையில் இயற்கைப் பேரிடரால் எம்மக்கள் - தோழர்களுக்கு ஏற்பட் டுள்ள சொல்லொணா, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வரலாறு காணா இழப்பினை இரண்டு நாள்களுக்குமுன் கண்டு எம் உள்ளம் வெந்தது; என்றாலும், வீறுகொண்டு மீண்டும் எழுவோம் என்ற தளரா தன்னம்பிக்கையுடன், உலகத்தின் மனித நேயம் உங்கள் பக்கம் என்று நாம் கூறியதைக் கேட்டு, நம் மக்கள், நம் தோழர்கள் புதுத் தெம்பை சிறுகச் சிறுகப் பெற்று வரும் மாறுதலைக் கண்டு நாம் ஆறுதல் அடைந்தோம்.
ஜாதி அழிப்பு மாநாடு விரைவில்!
ஜாதி ஆணவக் கொலை என்ற விஷமங்களைத் தடுத்து நிறுத்தி, ஜாதியை - தீண்டாமையை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்தி பெயர்த்தெடுக்கும் திட்டங் களைத் தீட்டுவது, காதல், ஜாதி மறுப்புத் திருமண வாழ் விணையருக்குப் பாதுகாப்பு அரண் அமைப்பு ஒன்றினை - கட்சிகளைக் கடந்து ஏற்படுத்துவது நமது உடனடித் திட்டம்!
மத்திய - மாநில அரசுகள் தனிக் காவல் படைப் பிரிவினையும், கடுமையான சட்டத்தினை நிறைவேற்ற வற்புறுத்தும் வகையிலும் விரைவில் ஓர் ஜாதி அழிப்பு மாநாட்டை நடத்துவது - என்பது நமது அவசரத் திட்டமாகும்!
பாலின சீண்டல்கள், வக்கிரங்களுக்கு எதிரான மற் றொரு பாதுகாப்பு முயற்சிகள் எனப் பல்முனைத் திட்டங் களையும்பற்றி திராவிடர் கழகம் தீவிரத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த ஆயத்தமாகிக் கொண்டுள்ளது!
மேற்கண்ட பணிகளை நாம் செய்யாமல் வேறு எவர் செய்வர்?
உயிர்க்கொடை அளிப்பேன்!
உயிர் நமக்கு வெல்லம் அல்ல; இதுவரை குருதிக்கொடை உறுப்புக் கொடைதான் பெருகுகிறது.
இனி, தேவைப்படின், புதிய உலகு - மனிதநேயம் - ஆளும் மதவெறி - ஜாதி வெறி, ஆணாதிக்க பெண்ணடிமை வெறிகளை ஒழிக்க, கருஞ்சட்டைப் பட்டாளம் உயிர்க் கொடையும் கடும் விலையாக தரத் தயாராகிடும் அணியில் முதல் உறுப்பினராகிடுவதே எனது பிறந்த நாள் உறுதியாகும்!
தந்தை பெரியார் சொல்வதைப்போல,
விபத்தால் சாவதைவிட
நோய்களால் மரணிப்பதைவிட
லட்சியப் போரில் இராணுவ வீரனைப் போல் போராட்டக் களச் சாவு சிறந்ததல்லவா!
நான்கு முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்ததே எனது இந்த எஞ்சிய வாழ்வு!
கொடுமையான எதிரிகளைச் சந்திக்க, லட்சியப் போரில் மானங்காக்கும் மகத்தான பணியில் ஈடுபாடு கொள்வதே, முதுமையை விரட்டி, இளமையை வரவழைக்கும் இன்பத்தின் வழியாகும்!
வன்முறையில் நம்பிக்கையில்லை என்றாலும், போர்க் களத்தில் புல்லாங்குழல் ஓசையா கேட்கும்?
எனது புது உறுதி!
லட்சியத்திற்கு விலை கொடுக்கவும், எதையும் இழந்து, இழக்கக்கூடாத சுயமரியாதையை மனிதகுலம் மீட்டெடுக்க புது உறுதிதான் எனது பிறந்த நாள் செய்தி!
எனக்கு உறுதுணையாக உள்ள என்னருந் தோழர்களே உங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
உரு(மு)ளுகின்ற பகைக்குன்றை
நான் ஒருவனே எதிர்ப்பேன்!''
என்ற பெரியாரின் தொண்டர்கள் அல்லவா நாம். அதனால்தான் இத்தகைய துணிவின் பாய்ச்சல் - தோழர்களே!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
1.12.2018
சென்னை