டாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல்
குன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் உள்ள கழக ஆதரவாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரி யலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி விட்டது.
கழகத் தலைவர் கடும் துயரத்தால் தாக் குண்டார். கழகத் தலைவரின் குடும்பத்தினர் போலவே திராவிடர் கழகக் குடும்பத்தினரும் மீள இயலாப் பெரும் வேதனைக் கடலில் தத்தளித்தனர்.
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் எனும் பெயரில் நடை பெற்ற விடுதலை' சந்தா வழங்கும் விழா, கஜா புயலுக்கு நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியில்' பங்கேற்றார். கழகத் தலைவரின் வாழ்விணையர் மோகனா அவர்களுக்கு அவர்தான் சால்வை அணிவித்தார். சகோதரி மோகனா அவர்களுடன் மேடையில் அமர்ந்திருந்தார்.
கழகக் குடும்பத்தினருடன் அளவளாவினார். கழகக் குடும்பத்தினர்களிடம் கடைசியாக விடைபெற்றுச் செல்ல வந்தார் என்று கருதும் வண்ணம் தோழர்கள் வேதனைப் பெருமூச்சு விடும் நிலை ஏற்பட்டுவிட்டதே! அன்று மாலை கழகத் தலைவரின் இல்லம் சென்று இரவு 10.30 மணிவரை கலகலப்பாகப் பேசி, உறவாடி விடைபெற்றுச் சென்றார். கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, அதுதான் இறுதி சந்திப்பு என்று கற்பனையில்கூட நினைக்க முடியாத நிலையில், 4 ஆம் தேதி மாலை வந்த மரணச் செய்தி மண்டையில் பலங்கொண்டு தாக்கியதுபோல், மரண அடி கொடுத்ததுபோல் ஆக்கிவிட்டதே!
விபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்தவித பாதிப்பும் பெரிய அளவில் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களுக்கோ, வாகனத்தை ஓட்டிச் சென்ற டாக்டர் கவுதமனுக்கோ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், டாக்டர் பிறைநுதல் செல்வியை வீட்டுக்கு, மகன் டாக்டர் இனியன்மூலம் அனுப்பி வைத்துவிட்டு, எதிரே வந்து மோதிய வாகனத்தில் உள்ளவர் எந்தளவு பாதிப்புக்கு ஆளானார் என்பதில் கவனம் செலுத்தி, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு, இரண்டு மணிநேரம் கழித்துதான் டாக்டர் கவுதமன் வீட்டிற்கு வந்துள்ளார். தன் வாழ்விணையர் விபத்துக்குள்ளான ஒரு சூழ்நிலையில், இப்படி நடந்துகொள்ளும் மனப்பான்மை யாருக்குத்தான் வரும்? ஆம், தந்தை பெரியார் அவர்களின் தத்துவச் சீலத்தைத் தன் நெஞ்சுக்குள் உறைய வைத்த உண்மையான சீடர் களுக்குத்தான் அத்தகைய பக்குவமும், உணர்வும் ஏற்பட முடியும். அந்த வகையிலே டாக்டர் கவுதமன் உன்னதமான உயர்ந்த இடத்திலே ஒளிவீசுகிறார்!
விபத்து நடந்து வீட்டிற்கு வந்த நிலையில், டாக்டர் பிறைநுதல் செல்வி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தவித பாதிப்புக்கும் ஆளானவராக இல்லாத நிலையில்தான் காணப்பட்டார். சுமார் இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில், உள்ளுக்குள் பாதிக்கப்பட்ட பகுதியில் வலி ஏற்படத் தொடங்கிய நிலையில், உட னடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டவுடன், ஒரு மருத்துவப் பட்டாளமே திரண்டு விட்டது. பரிசோதனைகளுக்குப் பின் கல்லீரல், மண்ணீரல் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து எல்லோரும் மனநிறைவு பெற்ற நிலையில், குருதியில் சர்க்கரையின் அளவு மித மிஞ்சி சென்ற நிலையில், மரணம் நிகழ்ந்து கழகப் பொருளாளரை, நமது பாசமிகு உடன்பிறப்பை டாக்டர் கவுதமன் அவர் களின் விலைமதிக்க முடியாத வாழ்விணையரை, நமது கொள்கைச் செல்வத்தை, பண்பாட்டின் குடியிருப்பை மரணம் கவ்விக் கொண்டதே என்ன செய்ய! என்ன செய்ய!!
72 வயதுதானே. இந்தக் காலகட்டத்தில் இந்த வயதெல்லாம் மிகப்பெரியது அல்லவே!
துயரம்! துயரம்!! மீள முடியாத ஆறாத் துயரம்! துயரம்!!
கழகத் தலைவர் தன் அறிக்கையில் குறிப் பிட்டதைப்போல, தனக்குப் பின் இயக்கம், அறக் கட்டளைகளை நல்ல முறையில், நாணயமான வகையில் நடத்திச் செல்வோரை அடையாளம் கண்டு அமர்த்தியதைக் குறிப்பிட்டுள்ளார்கள் - தலைவரின் இந்தக் கணிப்புதான் மறைந்த நமது கொள்கைச் சீலமாம் கழகப் பொருளாளருக்கு அணி விக்கப்பட்ட மிக உயர்தரமான புகழ் மாலை என்பதில் அய்யமில்லை.
புரந்தார்கண் நீர்மல்க சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
தம்மைச் சார்ந்தோரின் கண்களில் கண்ணீர் வழியுமாறு சாவு வருமானால், அச்சாவு இரந்தாவது பெற வேண்டியதாகும் என்ற இந்தக் குறளைத் தன் கண்ணீர் அறிக்கையில் கழகத் தலைவர் குறிப்பிட்டது இவ்விடத்தில் நினைவு கூர்தல் பொருத்தமானதாகும்.
எந்தளவுக்குக் கழகப் பொருளாளர் ஒருவர்மீது கழகத் தலைமை நம்பிக்கை என்னும் உயர் மதிப்புக் கிரீடத்தைச் சூட்டியிருந்தது என்பதற்கான அளவு கோலே இது.
கழகப் பொருளாளர் மறைவு என்ற மரண அடியைத் தாங்கிப் பரிதவித்த நிலையில், குன்னூ ருக்குப் புறப்படக் கழகத் தலைவரின் குடும்பத்தினர் தயாரானார்கள்.
இரவு நீலகிரி விரைவு இரயில் வண்டியில் பயணிக்க ஏற்பாடு துரிதமாக நடந்தது - கழகத் தலைவர், அவர்தம் வாழ்விணையர், (வீ.அன்புராஜ் நேற்று காலை விமானம்மூலம் வந்தடைந்தார்) கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் புறப்பட்டனர். வெளியூர்களில் செய்தி பரவிய நிலையில், தோழர்களும் இரயில், பேருந்து, கார்கள் மூலமாக எது எதெல்லாம் கிடைத்ததோ அந்த வாகனங்களைப் பயன்படுத்தி குன்னூர் நோக்கிப் புறப்பட்டனர்.
உள்ளூரில் பலதரப்பட்ட மக்களும், மருத்துவர் களும், உள்ளூர்ப் பிரமுகர்களும், கட்சியினரும் சாரை சாரையாக வந்து கழகப் பொருளாளர் உடலுக்கு மாலைகள் வைத்துக் கண்ணீர் உகுத்த காட்சி அசாதாரணமானது.
இறுதிப் பயணம்
குன்னூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் சந்தை சாலையில் ரெய்லி காம்பவுண்டில் உள்ள டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் இல்லத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம், 3 கி.மீட்டர் தூரத்தைக் கடந்து, குன்னூர் வெல்லிங்டன் மயானத்தில் எரியூட்டப்பட்டது அவரது உடல். வழிநெடுக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று மறைந்த அம்மையாருக்குக் கண்ணீர் உகுத்தனர்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பலர் சொன்ன ஒரு செய்தி முக்கியமானது. இந்த ஊரில் இருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் பிரசவம் டாக்டர் பிறைநுதல்செல்வி அம்மாவின் கையால் பிரசவம் பார்க்கப்பட்டுப் பிறந்தவர்கள் என்று சொன்னபொழுது கழகத்தின் பொருளாளராக மட்டுமல்ல - அவர் சார்ந்த மருத்து வத்துறையிலும் எத்தகைய சாதனை முத்திரையைப் பொறித்துள்ளார் என்பதை எண்ணும் பொழுது ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் பூரிப்போடு தலை நிமிர்கிறான்.
டாக்டர் கவுதமனிடத்தில் திமுக தலைவர் தொலைபேசி மூலம் ஆறுதல்
மறைந்த டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் வாழ்விணையர் டாக்டர் கவுதமனிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆறுதல் உரையாடல் 10 மணித் துளிகள் வரை நீடித்தது.
யாரும் கிட்டவே நெருங்க முடியாத கொள்கை உறுதி மட்டு மல்ல - மனிதநேயத்திலும், வரித்துக் கொண்ட பணியில், தொழிலில், தொண்டறம் என்னும் மனிதநேய மணத்தைத் தூவியுள்ளார் என் பதை உணர முடிகிறது.
ஆம்புலன்ஸ் மூலமாக உடல் கொண்டு வரப்பட்டு, வீட்டில் பார்வையாளருக்கு வைக்கப்பட்ட பொழுது எங்குப் பார்த்தாலும் கதறல் சத்தம் - அழுகை அவல ஒலி சூழ்ந்து தாக்கியது.
கழகத் தலைவர் மலர் மாலை வைத்தார் - ஆம், தமிழர் தலை வரின் கண்ணீர் தம் உடலின்மீது சொரிய வேண்டும் என்று கழகத் தவர் - கருஞ்சட்டையினர் கருதி னாலும், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத் திருக்கும் என்று சொல்ல முடியாது என்பது தானே யதார்த்தம். அந்த வகையில் நம் கழகப் பொருளாளர் பெரும் பேற்றைப் பெற்றார்.
பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநரும், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வியின் வாழ்விணையருமான டாக்டர் கவுதமன் கழகத் தலைவரையும், குடும்பத்தினரையும் கண்ட பொழுது கதறிய சத்தம் இன்னும் நம் செவிப்பறையில் ஒலித்து மோதிக் கொண்டே இருக்கிறது. அந்தத் துயர நேரத்திலும் 'தவிர்க்க முடியாததை ஏற்றுத் தீர வேண்டும்' என்னும் பகுத்தறிவு நெறியினைத் தலைவர் போதிக்கத் தவறவில்லை.
இரங்கல் கூட்டம்
டாக்டர் பிறைநுதல் செல்வியின் இல்லத்தின்முன் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
கோவை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தோழர் கருணாகரன் தொடக்கத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் வாழ்க்கை நிரலினை எடுத்துக் கூறினார். குறிப்பாக குன்னூர் வட்டாரத்தில் மருத்துவத் துறையில் அவருக்கு இருந்தபேரும், புகழும் அளப்பரியன என்பதையும், கட்சிகளின் வட்டாரத்தில் மட்டுமல்லாது அவற்றையும் கடந்து பொது மக்கள் மத்தியில் டாக்டருக்கு இருந்த மரி யாதை கலந்த பாசத்தையும் உருக்கமாக எடுத் துரைத்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
இரண்டு வகையான இழப்புகள் - குடும்பத் தலைவரை இழந்து பரிதவிக்கும் பரிதாப நிலை. இரண்டாவது கழகப் பொருளாளரைப் பறிகொடுத்த தால் கழகத்தினர் அடையும் துயரம். அதிலும் குறிப்பாக கழகத்தின் தலைவர் என்ற முறையில் ஆசிரியருக்கு ஏற்பட்ட பேரிழப்பு - கூடுதல் சுமைபற்றி எடுத்துக் கூறினார். முக்கிய கழகத் தொண்டறச் செம்மலை இழந்ததால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய நாம் - ஒவ்வொருவரும் இன்னும் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வாழ்வின் ஆதாரமாம் வாழ்விணையரை இழந்து துயரத்தின் மிகப் பெரிய ஆழத்தில் வீழ்ந்து கிடக்கும் டாக்டர் கவுதமன் அவர்கள் - அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்தபோது - தந்தை பெரியார் வெளி யிட்ட அந்த அறிக்கையினை மீண்டும் பல முறை படித்துப் பார்த்து, தன் எதிர்காலப் பாதையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
குன்னூர் சிட்டிசன் ஃபோரம் அமைப்பின் தலைவர் ஜெபரத்தினம் குன்னூர் வாழ் மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
குன்னூரின் தலைசிறந்த குடிமகள் என்று குறிப்பிட்டார்.
மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ. வந்தியதேவன் அவர்கள் தம் உரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொலைப்பேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டு, உடனடியாக குன்னூர் சென்று ஆசிரியர் அண்ணண் வீரமணி அவர்களுக்கும், டாக்டர் குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் கூறுமாறு அறிவுறுத்தியதை எடுத்துக் கூறினார்.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி நிபந்தனையற்ற தொண்ட ராகக் கழகத்தில் பொறுப்பேற்றுத் தொண்டாற்றினார் டாக்டர் பிறைநுதல் செல்வி என்று குறிப்பிட்டார்.
குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் இரகிம் தன் உரையில், 35 ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு வந்தது இந்த டாக்டரின் குடும்பம். திராவிட இயக்கத் தின் புரிதலை எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தினார். நான் ஒரு பேச்சாளனாக உருப்பெற்றதற்கே காரணம் டாக்டர் அம்மாதான் என்று உருக்கமாகப் பேசினார்.
காங்கிரஸ் சார்பில் ஜே.பி. சுப்பிரமணியம் அவர்கள் தன்னுரையில், டாக்டரின் இழப்பு அவர் சார்ந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல - குன்னூர் வாழ் பொதுமக்களுக்கே ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் பண்பு நலன்களைக் கோடிட்டுக் காட்டினார். அன்பு, எளிமை, அடக்கம், தொண்டுள்ளத்தை எடுத்துக் கூறி, தன் மகளுக்கான மணமகனைத் தன் குடும்பத்தில் இருந்து தேர்வு செய்துகொடுத்ததையும் நினைவூட்டினார்.
எஸ்.டி.பி. அய்யைச் சேர்ந்த பிலால் கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து அனைவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் என்று புகழாரம் சூட்டினார். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆனந்த ராஜ், இந்தப் பகுதியில் வாழும் பெண்கள் சமுதாயத் துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும், இறுதி வரை கொள்கை வீராங்கணையாக வாழ்ந்து மறைந்த அம்மையார் போல நாமும் பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த தோழர் பெல்லி அவர்கள் சிறிய மாவட்டமான இந்தப் பகுதியில் முற்போக்கு விதைகளை விதைத்தவர்; அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் இவர் கருத்து தனித்தன்மை வாய்ந்தாக இருக்கும். எங்கள் தாயை விட நாங்கள் மதிக்கும் தாய் டாக்டரம்மா என்று கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்ஸிட்டு) கட்சியின் செயலாளர் தோழர் பத்ரி முக்கியமான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
டாக்டர பிறைநுதல்செல்வி அவர்கள் அற்புதமான களப் போராளி. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்தார். குன்னூரில் தந்தை பெரியார் சிலை இல்லாத நிலையில், தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட வேண்டும்; அதற்காக தங்கள் குடும்பத்தின் சார்பில் பத்தாயிரம் ரூபாயைத் தருகி றேன் என்று அறிவித்தார். டிசம்பர் 4இல் அம்மையார் மறைந்துள்ளார். 2019 டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அவர் விரும்பிய வண்ணம் தந்தை பெரியார் சிலையைக் குன்னூரில் அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் பெரியார் திடலில் டிசம்பர்18ஆம் தேதி டாக்டர் பிறைநுதல் செல்விக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 18.12.2018 செவ்வாய் காலை 11.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சென்னைப் பெரியார் திடலில் நடைபெறும். மறைந்த பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்களின் உருவப் படத்தினை திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தது போல் மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் உருவப் படத்தினை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் உரை ஆற்றுவார்.
(குன்னூர் - இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிவிப்பு 5.12.2018).
மேனாள் தமிழக அமைச்சர் இராமச்சந்திரன் (திமுக) அவர்கள் தன் உரையில் குன்னூரில் டாக்டர் குடும்பம் சிறப்பானது; பொதுப் பணியில் முன்னிலை வகிக்கக் கூடியது. விபத்து நேர்ந்த நிலையில்கூட தனது இணையர் பாதிக்கப்பட்டதைக்கூட பின்னுக்குத் தள்ளி எதிர் திசையில் கார் ஒட்டி வந்து விபத்தில் சிக்கியவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு, மருத்துவமனைக்கு அனுப்பி உரியதை செய்து முடிந்த பிறகே தான் தன் வீட்டுக்குச் சென்று தமது துணைவியரின் உடல் நிலை குறித்துக் கவலை செலுத்தினார் டாக்டர் கவுதமன். இத்தகைய மனிதர் களைக் காண்பதரிது என்று உருக்கமுடன் குறிப்பிட்டார்.
மாவட்ட திமுக செயலாளர் முபாரக், குன்னூரில் டாக்டர் அம்மாவின் பெயரைச் சொன்னாலே ஒரு தனி மதிப்புதான். திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனது இரங்கலைத் தெரிவித்ததுடன் இறுதி நிகழ்ச்சியில் நம் தோழர்கள் பெரும் அளவில் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டார்.
இங்கே என் மகன் வந்திருக்கிறார். டாக்டர் அம்மா பிரசவம் பார்க்கப் பிறந்தவன், தனியார் மருத்துவமனையில் என் மனைவியைக் கொண்டு போய் சேர்க்க எனக்கு வசதி வாய்ப்புகள் உண்டு என்றாலும் எனது தாயார் சொன்னார்; டாக்டர் பிறைநுதல் செல்வி அம்மா பணியாற்றும் அரசு மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறினார் என்றால், டாக்டர் அம்மையாரின் பெருமைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்? குன்னூரில் இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் மாணவர்கள் டாக்டர் அம்மாவின் பிரசவ மேற்பார்வையில் பிறந்தவர்களே என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட முபாரக் அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த பொழுதெல்லாம் நாங்கள் எல்லாம் பிரதான கட்சி எங்கள் கட்சி என்று பார்க்காமல் தாய்க் கழகத்தின் திராவிடர் கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் டாக்டர் அம்மா அவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்போம். இறுதியில் அவரைத்தான் பேச வைப்போம் என்று புகழ் மாலை சூட்டினார் திமுக மாவட்டச் செயலாளர்