Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர்வளக் குழுமத்திற்குக் கண்டனம்

$
0
0

அணையைக் கட்டக் கூடாது என்று கருநாடக அரசுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம்

சென்னை, டிச.7  கருநாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதியளித்த மத்திய நீர் வளத்துறைக்குக் கண்டனமும், கருநாடகத்தில் அணை கட்டக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்ற வேண்டுகோளும் அடங்கிய தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (6.12.2018) மாலை எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

நேற்று (6.12.2018) மாலை 4 மணியளவில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் ப.தனபால் கீழ்க்காணும் அரசின் தீர்மானத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிவார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து சட்டமன்றப் பேரவை விதி 33 அய் தளர்த்தி, இன்று இப்பேரவை அரசின் அலுவல் எடுத்துக்கொள்ளப் பெறவேண்டும் என அவை முன்னவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

அரசின் தனித் தீர்மானம்

இதையடுத்து முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் மேகதாது அணை தொடர் பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம்

இம்மாமன்றத்தில் 5.12.2014, 27.3.2015 ஆகிய நாள்களில் கருநாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கருத்தில் கொள்ளாமலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல், கருநாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கருநாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை தொடங்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இம்மாமன்றம் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய நீர்வளக் குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிடவேண்டும் என்றும் இம்மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கருநாடக அரசோ அல்லது அதன்கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கருநாடகாவில் உள்ள காவிரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கருநாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என இம்மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.''

என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார் முதலமைச்சர்.

இவ்வாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles