Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

வளைகுடா நாடான ஓமனில் தமிழர்கள் சந்திப்பு எதிர்கால தமிழ்நாடு குறித்து 35 நிமிட உரை

$
0
0

"பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்போம்!''

மஸ்கட், டிச.10 வளைகுடா நாடான ஓமன் தலைநகரில் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பண்பாட்டுப் படையெடுப் பினை முறியடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகரமான மஸ்கட் நகருக்குக் கழகத் தலைவரும், ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி அவர்களும், அவரது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும் 9.12.2018 அன்று விமானம்மூலம் வருகை தந்தனர். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் உடன் வந்திருந்தார்.

நேற்று பிற்பகல் விமான நிலையத்தில், திராவிடர் இயக்கப் பற்றாளர்களான திரு.அரவிந்தன், பொறியாளர் வெங்கடேசன், அவரது வாழ்விணையர் திருமதி சாமுண்டீசுவரி ஆகியோர் வரவேற்று தங்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்தனர்.

இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஓமன் நாட்டு தமிழ் மன்றத் தலைவரான பொறியாளர் பஷிர் அவர்களை அவரது இல்லத்திற்குச் சென்று, உடல்நலம் விசாரித்தார் கழகத் தலைவர். அங்கே கழகத் தலைவரையும், பொதுச்செயலாளரையும் ஓமன் நாட்டு தமிழ்க் கழக முக்கிய பொறுப்பாளர்களும், பெரியார் பற்றாளர்களும் சந்தித்தனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் மாணவி பொறியாளர் அனிதா மற்றும் பஷிர் அவர்களின் குடும்பத்தவர்களும் வரவேற்றனர். சிறிது  நேரம் உரையாடிவிட்டு, பிறகு மஸ்கட்டில் சிறப்பாக நடந்துவரும் ஓமன் பன்னாட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் 86 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவிற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

9.12.2018 மாலை 7.15 மணிக்கு அஞ்சப்பர் உணவு விடுதி கூட்ட அரங்கில் நிகழ்ச்சி தொடங்கி, 8.45 மணிக்கு முடிவுற்றது.

எதிர்கால தமிழகம் எப்படி இருக்கவேண்டும்?

ஆசிரியர் அவர்களை, எதிர்கால தமிழகம், தமிழ்நாடு, தமிழ் மக்கள் இருக்கவேண்டியது எப்படி?'' என்ற தலைப்பில் உரையாற்றக் கேட்டுக் கொண்டார் அக்கழகத்தின் ஒருங் கிணைப்பாளரான தோழர் தேவா அவர்கள்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தலைமை தாங்கிய கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா அவர்கள், அரியதோர் உரையாற்றினார். (அவரது உரை தனியே). சிவக்குமார் (சிவா) அவர்கள் வரவேற் புரையாற்றினார்.

தோழர்கள் அமைப்புச் செயலாளர் தோழர் ஜோஸ், இளை ஞரணிச் செயலாளர் தோழர் திருமாவளவன், வலைதளச் செயலாளர் தோழர் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் தலைவர் தோழர் சவுகத் உசேன் அவர்கள் வேறு முக்கிய பணி காரணமாக, துணைத் தலைவர் சுல்பி அவர்கள் நேரில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, வாழ்த்துத் தெரிவித்தார் தோழர் தேவா மூலம்.

நன்றி உரையை பொருளாளர் புகழேந்தி அவர்கள் நிகழ்த்தினார்.

ஓமன் விமான நிலையத்தில், திராவிடர் இயக்கப் பற்றாளர்களான அரவிந்தன், பொறியாளர் வெங்கடேசன் தலைமையில், தமிழர் இன உணர்வாளர்கள் தமிழர் தலைவர் அவர்களை வரவேற்றனர். படம் 2: தமிழர் தலைவர் அவர்களுக்கு ஓமன் நாட்டு வாள் சின்னம் பொறித்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பொருளாளர் மறைவு எனினும்...

கூட்டத் தலைவர் தேவா அவர்கள்  உரையாற்றும்பொழுது, தாங்கொணாத துயரம் தலைவருக்கு - ஆசிரியருக்கு, தாய்க் கழகத்தின் பொருளாளர் அவர்களின் திடீர் மறைவினால் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் எங்கு வராமல் போய் விடுவாரோ என்று நாங்கள் கலங்கியிருந்தோம். ஆனால், கடமை ஆற்றிடுவதில் தந்தை பெரியாரைப்போல அவர்கள் ஏற்றுக்கொண்ட பணியைத்  தவிர்க்கக் கூடாது என்ற அரும் பண்புடன் இங்கே வருகை தந்துள்ளார் என்று கூறி, பெரிய பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஆசிரியருக்கு ஓமன் நாட்டு வாள் சின்னம் பொறித்து ஓர் அழகிய நினைவுப் பரிசினை அளித்துப் பொறுப்பாளர்களும் இணைந்து வழங்கி மகிழ்ந்தனர்.

35 நிமிட உரை

இதை ஏற்று கழகத் தலைவர் 35 நிமிட உரையும், 10, 15 மணித்துளிகள் கேள்வி - பதில் நிகழ்வையும் சிறப்புறத் தந்து, ஏற்பாட்டாளர்களை மிகவும் மகிழ்வித்தார். தாய்மார்களும் குழுமியிருந்தனர்.

கழகத் தலைவர் தனது உரையில், தன்னை அழைத்து ஏற்பாடு செய்தவர்கள் 86 ஆவது பிறந்த நாள் விழா என்று ஏற்பாடு செய்துள்ளனர் என்பது இங்கே வந்த பிறகே அறிந்தேன். பொதுவாக நான் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதில்லை. ஆனால், 75 ஆம் ஆண்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று மானமிகு சுயமரியாதைக்காரரான நம்மினத்தின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அன்புக் கட்டளை இட்டார். அவரே முன்னின்று நடத்தி மகிழ்ந்தார்!

அதன்பிறகு, விடுதலை' நாளேட்டிற்கு சந்தா வழங்கும் விழாவாகத்தான் நடைபெற்றது! பெரியாரின் பெருமைகளைப் பேசும் எளிய தொண்டன் நான். பெரியாரின் பெருமைகளை பேசா நாட்கள் பிறவா நாட்கள் எனக் கருதி பேசுபவன்.

தாய் நாட்டில் உள்ள தமிழர்களைவிட, பணி செய்ய வந்த நாட்டிலும் கொள்கைப் பற்றுடன் உள்ள உங்களது சந்திப்பில் உங்கள்  இன உணர்வைக் கண்டு பெரிதும் பாராட்டி மகிழ்கிறேன்.

ஓமன் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோர் (9..12.2018)

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்திட ஒன்று சேர்ந்துள்ள நீங்கள், 1940 இல் இந்த ஓமன் கடல் விழுங்கிய திராவிடர் தளபதி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் இல்லை என்ற குறையைக் களைந்து, அனைவரும் பல பன்னீர்செல்வங்களாக, திராவிட இன உணர்வாளர்களாக இருப்பது, அவர் புதைத்து விதையாகி, உணர்வு மரமாகி, வளர்ந்து கொள்கைச் செல்வங்கள் என்று தொடங்கி, ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிந்த ஒரு தாயகம் தமிழ்நாடு நிச்சயம் உருவாகும் என்று கூறி, தனது உரையில் விளக்கினார் (உரை தனியே வரும்).

பிறகு பலரும் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்து, பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles