Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மோடி அலை என்பதெல்லாம் ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவைத் தேர்தலிலும் முறியடிக்கவேண்டும்!

$
0
0

5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிவிப்பதென்ன?

5 மாநில தேர்தல் முடிவுகள் தந்த பாடத்தை செயல்படுத்தவேண்டும்

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் கற்பிப்பது என்ன? மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்தால் மதவாத பா.ஜ.க.வை முறியடிக்கலாம் என்ற நம்பிக்கையை -பாடத்தைக் கற்றுச் செயல்படவேண்டும் என்று   திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை  வருமாறு:

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.

இம்மாநிலங்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருந்தது. தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ். என்ற தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற சந்திரசேகர ராவ் தலைமையில் ஆட்சி நடந்து ஓராண்டுக்குமுன்பே - அதன்மீது மக்கள் வெறுப்பு அதிகமாகப் படரும் முன்பே - சட்டசபையைக் கலைத்து, சட்டமன்றத் தேர்தலில் துணிந்து இறங்கினார். அவரது ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி!

அம்மாநிலத்தில் எப்போதும் ஜாதி அடிப்படையில் ரெட்டிகளுக்கும், கம்மாக்களுக்கும் அரசியல் அதிகாரப் போட்டி என்றே வந்ததை மாற்றி, வேறு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் தலைமையிலான ஆட்சி முன்பு ஏற்பட்டதோடு, மீண்டும் அது தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது - சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது மிகையில்லை.

எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்

மூன்று முறை தொடர்ந்து சவுகான் தலைமையில் ம.பி.யில் நடைபெற்றது பா.ஜ.க. ஆட்சி; அப்பட்டமான இந்துத்துவா அஜெண்டாவை இந்தத் தடவை ஆர்.எஸ்.எஸ். ஆணைக்கு ஏற்ப செயல்படுத்தித் தோல்வி கண்டுள்ளது! பசு மாட்டுக்கென தனியே ஒரு மந்திரி எத்தனை வேடிக்கை!  தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்பது மகிழ்ச்சியான செய்தி! (எருமை மாடும், இதர பிராணிகளும் என்ன பாவம்'' செய்தனவோ தெரிய வில்லை). மதவெறிக்கு நல்ல தீனி போட்டதாலும், 4 ஆவது முறை என்பதாலும், Anti-Incumbency - ஆட்சிக்கு எதிரான வாக்காளர் மனப்போக்கு என்பதையும் தாண்டி, மோடி - அமித்ஷா ஆகிய இருவரின் ஆணவப் பேச்சுகளையும், நடத்தைகளையும் கண்ட மக்களிடையே வெறுப்பு மேலோங்கி ம.பி.யிலும், ராஜஸ்தானத் திலும், சத்தீஸ்கரிலும் பெரும் தோல்வியை பா.ஜ.க.வுக்கு அளித்து வாக்காளப் பெருமக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இந்த முடிவுகள் ஒரு முன்னோட்டமே!

வரும் 2019 மே மாதம் நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இந்த முடிவுகள் ஒரு முன்னோட்டமேயாகும்!

இந்தத் தேர்தல்களிலும் சரி, இனி வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தல்களானாலும் சரி - யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, வாக்காளர்கள் கண்ணோட்டத்தில் யார் வரக்கூடாது என்பதே முக்கியம் ஆகும்!

மோடி - ஆர்.எஸ்.எஸ். - அமித்ஷா ஆகியோரின் ஆணவத் திற்கு மீண்டும் கிடைத்த பலத்த அடிதான் இந்த 5 மாநில ஒட்டுமொத்தத் தோல்வியாகும்!

ஆட்சி பலம், பண பலம், பிரச்சார பலம் (Money Power, Muscle Power, Media Power) (அதிகார) படை பலம் எல்லாம் பயன்படுத்தப்பட்டு, பா.ஜ.க. தரப்பில் முழு வீச்சில் மோடி - அமித்ஷா - ஆர்.எஸ்.எஸ். அஸ்திரங்களாக' பயன்படுத்தியும் எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை!'

அரசியலில் அடக்கம் என்ற பாடத்தை அறவே கற்கவில்லை

1. பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆணவப் பேச்சுகள், ஆர்.எஸ்.எஸ். அவசர அவசர ஆணைகள், திட்டங்கள்.

சில எடுத்துக்காட்டுக்கள்: கருநாடக மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாள்கள் முன்பு, இனி காங்கிரசு முதலமைச்சர்களை எங்கும் பார்க்க முடியாது; ஒரே ஒரு நாராயணசாமி - சிறிய மாநிலத்தில் (புதுச்சேரியின் முதல்வர்) கணக்குக்கு இருப்பார்'' என்றார்.

கருநாடகத்தில் இரண்டு நாள் பா.ஜ.க. முதலமைச்சர் எடியூரப்பாவின் அமைச்சரவை வெளியேறி - உச்சநீதிமன்ற ஆணைப்படி காங்கிரசு - மதச்சார்பற்ற கட்சி ஆட்சி ஏற்பட்ட தற்குப் பிறகும்கூட, அவர் அரசியலில் அடக்கம் என்ற பாடத்தை அறவே கற்கவில்லை.

2. பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்ற (நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் சொல்லி ஒப்புதல் பெறாமல்) திடீர் முடிவை அறிவித்து, அனைத்து ஏழை, எளிய, வியாபார, விவசாய, நடுத்தர வர்க்கங்களின் மத்தியில் வேதனையை, திண்டாட்டத்தை ஏற்படுத்தியதைத்தவிர, கருப்புப் பணமும் எதிர்பார்த்த அளவுக்கு அரசுக்குக் கிடைக்கவில்லை.

சுண்டைக்காய் கால் பங்கு, சுமை கூலி முக்கால் பங்கு'' என்ற கேலிக் கூத்தாகவே தொடர்கிறது.

விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை

3. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தற் கொலைகள் நாளும் அதிகரிப்பு - அதேநேரத்தில், கார்ப்பரேட்டு களான அதானி, அம்பானிகளுக்கு எல்லாம் நிதிச் சலுகை - உதவிகள் என்ற ஒருதலைப்பட்ச ஆட்சி அணுகுமுறை!

4. எடுத்தேன் கவிழ்த்தேன்' என்ற எதேச்சதிகாரப் படலம் எதிலும்.

5. பேச்சுரிமை, கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்பட்டு வயதான சிந்தனையாளர்கள் மீதெல்லாம் அர்பன் நக்சல்கள்' என்று புனையப்பட்ட வழக்குகள்!

6. அறிவிக்கப்படாத நெருக்கடி காலம்'போல, பல துறை களிலும்!

7. முக்கிய அரசின் இயந்திரங்களான ரிசர்வ் வங்கி, சி.பி.அய்., வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமாக இயங்கவே முடியாத நிலை; பழிவாங்கும் அரசியல் படமெடுத்தாடல் - உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிருப்தி.

8. சாமியார்கள், பசுப் பாதுகாவலர்கள் என்ற குண்டர்கள், தாழ்த்தப்பட்டோரையும், சிறுபான்மையினரையும் தாக்கி, மரணம் - இதனைக் கண்டுகொள்ளாத போக்கு.

மாநிலங்களை மறைமுகமாக அழிக்கும் நடைமுறைப் போக்குகள்!

9. கல்வி, சமூகநீதி இவற்றையும், மாநில உரிமைகளையும் காலில் போட்டு மிதித்து, மாநிலங்களை மறைமுகமாக அழிக்கும் தொடர் நடைமுறைப் போக்குகள்.

10. புயல், வெள்ளம், உதவிகளைக்கூட, மோடி அரசு, கட்சிக் கண்ணோட்டத்தோடு அணுகிடும் அநீதி.

11. பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வால், ஏழை, எளிய மக்கள் நாள்தோறும் அவதி.

இப்படிப் பற்பல பல காரணங்கள் இந்தத் தோல்விகளுக்கு அடிப்படையாகும்.

ராகுல் காந்தியின் கடும் உழைப்பிற்குப் பலன்!

21 கட்சிகள் காங்கிரசு தலைமையில் ஓரணியில் இணைந்திருப்பதும், யார் பிரதமர்? என்ற பிரச்சினையைக் கிளப்பி - பிரித்தாளும் தந்திரத்தை வீசிய மோடி வித்தையை பலிக்க விடாமல், காங்கிரசு தலைமை, அது இப்போது முடிவு செய்யவேண்டிய பிரச்சினை அல்ல'' என்று சாதுர்யமான பதில் அளித்தது எல்லாம் வெற்றி வியூகத்தைத் தந்துள்ளது, காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியின் கடும் உழைப்புப் பலன் அளித்துள்ளது.

இதைவிட அதிகமாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களைத் தவிர்த்து - மெத்தனம் அடையாமல், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காவி ஆட்சியை அகற்றிட ஒற்றுமையை மேலும் கட்டிக் காப்பாற்றி, மக்களின் நம்பிக்கையை மேலும் வைப்பு மூலதனம் போல் பெறவேண்டும்.

தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசும், முதல்வரும், அமைச்சர்களும் பா.ஜ.க. என்ற மூழ்கும் கப்பலில் பயணம் செய்து தங்களைக் காப்பாற்றிடும் ஆட்சியாக தொடரலாம் என்று  நினைத்தால் அது தவறான எண்ணம்; அவர்கள்  சரியான பாடத்தை கற்கட்டும்!

மோடி பலசாலி' என்று ஒரு மாதம் முன்பு பேசிய ஒரு நடிகர், இப்போது திடீர் பல்டி அடித்துள்ளார் என்பதும் அரசியல் நகைச்சுவையும், எச்சரிக்கையும் ஆகும்.

மோடி அலை வீசவில்லை; மோடி அலைந்ததுதான் மிச்சம்!

தென்னாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க. என்பதுகூட மாறி, இந்தி பிரதேசங்களிலும் நிலைக்க முடியாது என்ற சுவரெழுத்துப் பளிச்சென எழுதப்பட்டுவிட்டது இத்தேர்தல் முடிவுகளால்!

காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பெற்ற 2014 ஆம் ஆண்டு வெற்றி ஒரு குருட்டு' வாய்ப்பே தவிர, மக்களின் இந்துராஷ்டிர ஆதரவு அலை அல்ல என்பது புரிகிறது.

பிரதமர் மோடி அலை' வீசவில்லை; மோடி அலைந்ததுதான் மிச்சம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

காங்கிரசு கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணையாமல் தனித்துப் போட்டியிட்டதால், மத்திய பிரதேசத்தில் 23 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 7 தொகுதிகளிலும் காங்கிரசு வெற்றி பறிபோனது. இனியாவது இந்நிலையை பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி தவிர்ப்பது நல்லது -  தவிர்க்கப்படவேண்டும்.

பாடம் - அனைவருமே கற்கவேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

12.12.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles