Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

புத்தாண்டில் ஜனவரி 24 இல் ஜாதியைப் பாதுகாக்கும், பா.ஜ.க. அரசமைப்பு சட்டமாக்கத் துடிக்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டம்

$
0
0

ஓசூரில் நடைபெற்ற ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில்   தமிழர் தலைவர் முக்கிய பிரகடனம்

ஓசூர், டிச.31 ஜாதியைப் பாதுகாக்கும்- இந்திய அரசமைப் புச் சட்டமாக ஆக்கப் போவதாக பி.ஜே.பி., சங் பரிவார் கூறும் மனுதர்ம சாத்திரம் எரிப்புப் போராட்டம் புத் தாண்டில் ஜனவரி 24 இல் கொளுத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு

30.12.2018 அன்று ஓசூரில் நடைபெற்ற ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். இந்த மாநாட்டிற்கு ஒரு தனிச் சிறப்பு - நான் இந்த மாநாட்டின் தீர்மானங்களை விளக்கவேண்டிய அவசியமில்லாமல், அருமை சகோதரர் திருமா அவர்கள் மிக அருமையாக விளக்கியிருக்கிறார்.

ஒரு புதிய வெளிச்சம்

அதோடு, விடுதலை சிறுத்தைகளுடைய பார்வை யில், அற்புதமான ஒரு திருப்பத்தை இன்றைக்கு அந்தத் தோழர்களுக்கு, அந்த இயக்கத்திற்குப் புதிய வெளிச்சத்தை தந்திருக்கிறார். அவர் நடத்துகின்ற தொலைக்காட்சியின் பெயர் வெளிச்சம். ஆனால், இப்பொழுது வந்திருப்பது ஒரு புதிய வெளிச்சம்; என்ன அந்த புதிய வெளிச்சம்? என்று சொன்னால், வெறும் அரசியலுக்காக, ஓட்டுக்காக, கூட்டணிக்காக இல்லை நம்முடைய இயக்கம். அதைவிட மிக முக்கியமாக எது நம்மைப் பிரித்ததோ, எது நம்மை தாழ்த்தியதோ, எது, எது இதுபோன்ற ஆணவக் கொலைகளுக்கு அஸ்திவாரமாக இருக்கிறதோ - அந்தப் பார்ப்பனீ யத்தை, அந்த சனாதனத்தைக் குழிதோண்டி புதைப்பது தான் நம்முடைய லட்சியம் - அந்த லட்சியத்தை அடை வதற்குரிய பல வழிமுறைகளிலே ஒரு வழிமுறைதான் ஓட்டு முறை. இதைத்தான் அவர்கள் இன்றைக்கு - வேறு எந்த மேடையிலும் சொல்லாத அளவிற்கு - இந்த மேடையில் சொல்லியிருக்கிறார். அதையே 23 ஆம் தேதி அவர்கள் திருச்சியில் நடத்த இருக்கும் சனாதன எதிர்ப்பு மாநாட்டில் வலியுறுத்தப் போகிறேன் என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் - உருவங்கள்தான் வேறு!

அதற்காக தாயக்கழகத்தின் சார்பாக, எல்லோ ருக்கும் தாய்க் கழகம் திராவிடர் கழகம். இங்கே இருக்கக் கூடியவர்கள் இடதுசாரிகள், காங்கிரசு என்றெல் லாம் நினைக்கவேண்டாம் - எல்லோருமே ஒன்றுதான், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் - உருவங்கள்தான் வேறு.

"தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள்தான்!''

திருச்சியில், அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய கொடையினாலே உருவாக்கப்பட்ட மருத்துவமனையை - அன்றைய காலகட்டத்தில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த காலகட்டத்தில், அந்த மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அவருடைய அமைச் சரவையில் ஒன்பது அமைச்சர்கள் அன்றைக்கு. அந்த விழாவில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் உரையாற்றும்பொழுது ஒன்றை சொன்னார்கள்,

தந்தை பெரியாரின் புகழின் சிதறல்கள்தான் தமிழ் நாட்டுத் தலைவர்கள், கட்சிகள் அத்தனையும்'' என்று சொன்னார்.

புகழின் சிதறல்கள்'' என்று அற்புதமான ஒரு சொல்லை சொன்னார்கள். இந்தக் கொள்கை பல வடிவங்களில் இருக்கிறது. காங்கிரசை இணைத்தி ருக்கிறார்களோ, என்றுகூட சில இளைஞர்களுக்கு நெருடல்கள் இருக்கலாம். அவர்களுக்குப் புரிய வேண்டும், மிக முக்கியமாக. இன்றைய அமைப்பில் இருக்கக்கூடியவர்கள் எவ்வளவுத் தெளிவாக இருக் கிறார்கள் என்பதற்கு, என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார் தொலைக்காட்சி செய்தியாளர் இரண்டு நாள்களுக்கு முன்பு.

சோனியா காந்தி அவர்களின் உரை

நான் மிகத் தெளிவாகச் சொன்னேன். இந்த மண்ணின் மனோபாவம் என்ன என்பதைப் புரிந்து கொண்டுதான், தமிழ்நாடு பெரியார் மண் என்பதை புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு - அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் வழிகாட்டித் தலைவராக இருக்கக்கூடிய சோனியா காந்தி அவர்கள் தமிழ்நாட்டிற்கு கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் உரையாற்றும்பொழுது சொன்னார்கள் - உங்களில் பலரும் அந்த உரையை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் - நாங்களும் அந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில்,

வடநாட்டிலிருந்து வரக்கூடிய தலைவர்கள், நம்முடைய தலைவர்களை அழைக்கும்பொழுதெல்லாம், மரியாதைக்காக என்ன சொல்லி அழைப்பார்கள்? நாமும் அவர்களை அழைக்கும்பொழுது என்ன சொல்லி அழைப்போம் என்றால், அவர்கள் பெயரோடு ஜி'யை சேர்த்துத்தான் அழைப்போம்.

திரு''வைப் போட்டார்கள்;

ஜி''யைப் போடவில்லை

இந்த ஊர்களில் இருக்கக்கூடிய பா.ஜ.க.காரர்கள் எல்லாம், இந்த ஊரில் உள்ளவர்களையெல்லாம் ஜி' ஆக்கி விடுகிறார்கள். இராமகோபாலன் ஜி' என்று சொல்கிறார்கள். வடநாட்டினுடைய கலாச்சாரத்தை - ஒரு பண்பாட்டுக் கலாச்சாரத்தை உள்ளே நுழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், செம்மொழியை, தமிழ்மொழி ஆக்கிய கலைஞருடைய மண் இது - பெரியாருடைய சீடனுடைய மண் என்று புரிந்த கரணத்தினால்தான், இந்த மண்ணின் மனோபாவம் என்பதைப் புரிந்தவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக, அந்த அம்மையார் உரையாற்றும்பொழுது, நீங்கள் எத்தனைப் பேர் கவனித்தீர்களோ தெரியாது - எதையும் பெரியார் பார்வையோடு பார்க்கின்ற எங்களுடைய பார்வை இருக்கிறதே - ஒவ்வொரு முறையும் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், திரு.ஸ்டாலின்'', திருமதி கனிமொழி'' என்று, திரு, திரு'' என்று திரு''வைப் போட்டார்கள்; ஜி''யைப் போடவில்லை. அப்படியானால், தமிழ்மண் எப்படிப்பட்ட மண் என்பதை, ஆளுகின்றவர்களாக நாளைக்கு வரக் கூடியவர்கூட புரிந்திருக்கிறார்கள்; புரியாதவர்கள் ஆளுகின்றவர்களாக இருந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அனுப்பப்படப் போகிறார்கள் என்பதுதான் அதற்கு அடையாளம்.

ஆகவே, இந்தக் கொள்கை என்பது இருக்கிறதே - இந்த மண் அவ்வளவு பக்குவப்பட்ட மண் - இந்த மண்ணிலே இன்னமுமா ஜாதி ஆணவக் கொலை? இதுதான் எங்களுக்குக் கவலை. இந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல நண்பர்களே - நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவேதான், அடிப்படையை நோக்கிப் போக வேண்டும். இன்னமும் ஜாதி - தீண்டாமை, அழிப்பு, ஒழிப்பு என்பதற்கான அந்தத் தீர்மானங்களை இங்கே தெளிவாகக் கொடுத்திருக்கிறோம். பார்ப்பனர்களே இப்பொழுது அந்த நிலைக்கு வந்துவிட்டார்கள்.

"இந்து மதம் எங்கே போகிறது?''

இந்து மதம் எங்கே போகிறது?'' இந்த புத்தகத்தை இங்கே மேடையில் அமர்ந்திருக்கிறவர்கள் யாரும் எழுதியது அல்ல. இதை எழுதியவர் அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

உடனே என்ன சொல்வார்கள், இவர்கள் இந்து மதத்தைப்பற்றித்தான் பேசுகிறார்கள்; இவர்கள் தாக்குவது எல்லாம் இந்து மதத்தைத்தானே? பார்ப்பனீயத்தைத் தாக்குகிறார்கள் என்று நினைக்கின்றார்களே!

இராமானுஜ தாத்தாச்சாரியார் 101 வயது வரை வாழ்ந்தவர். சங்கராச்சாரிக்கே யோசனை சொல்லக் கூடியவர். அரசியல் சட்டத்திலேயே ஜாதியைப் பாது காக்கவேண்டும் என்று அம்பேத்கர் அவர்களிடம் போய்ச் சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான், இந்தப் புத்தகத்தை எழுதியவர்.

அந்தப் புத்தகத்தில் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்றால்,

ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களை விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.''

ஆரியர்கள் மனுஸ்மிருதியோடு வந்தார்கள்

எந்த சனாதனத்தைப்பற்றி இங்கே பேசினார்களோ, ஜாதி மூலாதாரம் எது என்று இங்கே பேசினார்களோ, இங்கே மேடையில் இருக்கின்ற அத்தனை தலைவர் களும் கர்ஜித்தார்களோ, அந்த ஒரு வரிதான் இங்கே மிக முக்கியம்.

ஆரியர்கள் பெண்களை விட்டுவிட்டுத்தான் வந் தார்கள்; ஆனால், மனுஸ்மிருதியோடு வந்தார்கள்.

இதுதான் மிக முக்கியம். அந்த மனுஸ்மிருதிதான் சனாதனத்திற்குத் தந்தை. நம்முடைய ஆள்கள்தான்; நம்முடைய சகோதரர்கள்தான். அவர்களை மனநோயா ளியாக ஆக்கியிருக்கிறார்களே?

மனநோயாளி மட்டுமல்ல, ஜாதி வெறி!

தான் வளர்த்து, ஆளாக்கி, அந்தப் பிள்ளையைக் கொஞ்சி, அதற்காகத் தியாகங்கள் செய்த - தன்னுடைய சொந்தப் பெண்ணையே கொலை செய்வதற்கு கூலிப் படையை ஏவுகிறான் என்று சொன்னால் - அந்த ஜாதி வெறித்தனம் இருக்கிறதே - மனநோயாளி என்று அவர்கள் சொன்னார்களே - அது சரியான சொல் - மனநோயாளி மட்டுமல்ல, ஜாதி வெறி - அந்த வெறியை எப்படி ஏற்றினார்கள்?

ஒரு நோயைக் கண்டுபிடிக்கவேண்டுமானால், அந்த நோயின் மூலாதாரம் எது என்று ஆராயவேண்டும்; அந்தக் கிருமிகள் எங்கே இருக்கின்றன என்று ஆராயவேண்டும். அந்தக் கிருமிதான் மனுஸ்மிருதி.

இங்கே அருமையான விளக்கத்தைத் தந்தார் நம் முடைய திருமா அவர்கள்.

ஏன் பெரியார் கடவுள் மறுப்புக்குப் போனார்?

ஏன் பெரியார் பார்ப்பன வெறுப்புக்குப் போனார்?

அது தனி மனித வெறுப்பு அல்ல.

இல்லாத கடவுள்மீது எங்களுக்கு என்ன கோபம்?

இருக்கின்றவர்களோடு போராட்டம் செய்யலாம்; இல்லாதவனோடு ஏன் போராட்டம் என்றால், அதைத் தான் அவர்கள் மய்யப்படுத்தி, அந்த ஜாதியை அவர்கள் வலியுறுத்துகின்ற நேரத்தில் - எவ்வளவு அதிகமாக வலியுறுத்தினார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

உடனே நீங்கள் சொல்லலாம், எப்பொழுதோ எழுதப்பட்ட மனுதர்மம் - இப்பொழுது யாருக்குத் தெரியும்? இவர்கள் எல்லாம் புதிதாக, மதுரை வீரன் கதைபோல, அல்லது ஆரிய மாலா கதைபோல, அந்தக் கதைகளையெல்லாம் இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவையெல்லாம் எப்பொழுதோ வந்தது என்று நாளைக்கு யாராவது சொல்லலாம்; இல்லை நண்பர்களே, அவையெல்லாம் எப்பொழுதோ வந்ததல்ல; இந்த மனுதர்மத்தினுடைய முக்கியத்துவம் என்னவென்று சொன்னால், இன்றைக்கு இருக்கின்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் - இந் திய அரசியல் சட்டம் - சமதர்மத்தை எடுத்துச் சொல்லக்கூடிய அரசியல் சட்டம் - எப்படிப்பட்ட அரசு என்று சொல்லுகின்ற நேரத்தில், நண்பர்களே,

Sovereign, Socialist, Secular, Democratic, Republic

தேசிய நூலாக பகவத் கீதைதான்

மேற்கண்ட அய்ந்து அம்சங்களை வலியுறுத்தினார் களே, அந்த அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து விடுங்கள். அதற்குப் பதிலாக, நாங்கள் மறுபடியும் நல்ல செல்வாக்கோடு மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டால், அடுத்தது, இந்திய அரசியல் சட்டம் இருக்கவேண்டிய இடத்தில், மனுதர்மம்தான் இருக்கும்; தேசிய நூலாக பகவத் கீதைதான் இருக்கும் என்று ஏன் அவர்கள் சொல்கிறார்கள்? கடவுள் பக்திக்காகவா? அல்ல.

தயவு செய்து நண்பர்களே, பக்திப் போதை ஏறிய, ஜாதி போதை ஏறிய, மத போதை ஏறிய தோழர்கள், பார்ப்பனர்களைத் தாண்டி, அவர்களுடைய வலை யில் சிக்கிக் கொண்டிருக்கின்றவர்கள் இதை எண் ணிப்பார்க்கவேண்டும். ஒன்றை ஒன்றே - நீங்கள் புரிந்துகொண்டு சொல்லவேண்டுமானால், அவர்களை எண்ணிப் பாருங்கள், பார்ப்பனர்களுடைய பெருமை களைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், அங்கே சொல் லுகிறார்கள், இதே மனுதர்மத்தில்.

சனாதனம் என்கிற ஒரே வார்த்தையில், அதை யெல்லாம் அடக்கிவிடக் கூடிய அந்த வாய்ப்புகளை அவர்கள் எடுத்துச் சொன்னார்களே, அந்த சனாதனத்திலே, மனுதர்மத்திலே ஜாதிக்கு அடையாளம் எவ்வளவு ஆழமாகப் போயிருக்கிறது.

தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால், கல்வி வள்ளல் காமராசரால்...

இன்னமும்கூட சில பேர் கேட்கிறார்கள், நம்மாள் கள் படித்தவர்கள் - தந்தை பெரியாரால், திராவிட இயக்கத்தால், கல்வி வள்ளல் காமராசரால், நாமெல்லாம் படித்து, பேண்ட், சட்டை போட்ட பிறகு - கணினி அறிவு பெற்று - வெளிநாடுகளுக்கெல்லாம் ஒரு காலத்தில் நம்மாட்கள் போக முடியாது - இன்றைக்கு வெளிநாடுகளுக்கெல்லாம் நம்மாட்கள் போயிருக்கிறோம் என்று சொல்கின்ற இந்தக் காலகட்டத்தில் என்ன சொல்கிறார்கள்?

‘‘What is the Relevance?''

''என்ன சார், இப்பொழுது போய் பார்ப்பனர், பார்ப் பனரல்லாதார் என்று பேசலாமா? அவர்கள் எல்லாம் சமமாக ஆகிவிட்டார்களே - அவர்களும் நம்மைப் போன்று நான்வெஜ் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்களே! ஆங்கிலத்தில் கேட்கிறார்கள்‘‘What is the Relevance?'' என்கிறார்கள்.

நண்பர்களே, இந்த ஒரு வரியைப் பாருங்கள். அம்பேத்கர் அவர்கள் எழுதிய அரசியல் சட்டம். அல்லது மதச்சார்பில்லாத அரசியல் சட்டம் - சமத்துவத்தை, சமதர்மத்தை சொல்லுகின்ற அரசியல் சட்டம் - ஜன நாயகத்தை, குடியரசை சொல்லுகின்ற அரசியல் சட்டம் - இவை அத்தனையையும் ஒழித்துவிட்டு, மனுதர்மம்தான் அரசியல் சட்டமாக வரவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

அசல் மனுதர்மம்

அசல் மனுதர்மம் புத்தகத்தில்,  11 ஆவது அத்தி யாயத்தில், 84 ஆவது சுலோகத்தைப் படிக்கின்றேன் கேளுங்கள்.

பிராமணன் பிறப்பினாலேயே தேவர்களுக்கும் பூசிக்கத் தக்கவனாக இருக்கிறான். மனிதர்களுக்குள் மிகவும் உயர்ந்தவராய் இருக்கிறான் என்பதைக் கேட்கவேண்டியதில்லை. பின்னும் உலகத்தாருக்கு நம்பத் தகுந்த பிராமணனாக இருக்கிறான். இவ்விஷயத் தில், அவன் உபதேசிக்கிறதே வேத, மந்திர புராணம்'' என்கிறது மனுதர்மம்.

கருவறைக்குள்ளேயே பெண்களை கேவலப்படுத்தி நடத்தியது தேவநாதன் என்கிற அர்ச்சகன். அதுவும் காஞ்சிபுரத்தில். அதே காஞ்சிபுரத்தில், மடத்தினுடைய மேலாளர் சங்கரராமன் கொலை நடைபெற்றது. அந்தக் கொலையை செய்தவர்கள், 89 பிறழ் சாட்சிகளை வைத்து வெளியே வந்தவர்கள். அவர்கள் எல்லாம் இன்றைக்குத் தேவர்கள் - கடவுளைவிட மேலானவர்கள்!

அசல் மனுதர்மம்தான்

இந்திய அரசியல் சட்டமாக்கப்படும்

அந்த அசல் மனுதர்மம்தான், இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக, மீண்டும் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ஆர்.எஸ்.எஸ். வந்தால், மீண்டும் பா.ஜ.க. வந்தால், என்ன நடக்கும் என்றால், அசல் மனுதர்மம்தான் இந்திய அரசியல் சட்டமாக்கப்படும்.

வருண தர்மத்தைக் காப்பாற்றவேண்டும் என்பது தான் அவர்களுடைய நோக்கம். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.

வருண தர்மத்தைக் குறை சொல்லக்கூடாது என்பார்கள். கடவுள், திருவிழா என்கிற பெயரில் ஏன் ஆர்.எஸ்.எஸ். கொடியை நடுகிறான்.

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்

நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன். அந்தத் தருமத்தை, அவன் அவனுக்குரிய தர்மத்தை அவனவன் செய்யவேண்டும் என்பதை, நானே நினைத்தாலும் மாற்ற முடியாது.

மனுதர்மம் அரசியல் சட்டம்; கீதை தேசிய நூல். இதுதான் சனாதனத்தினுடைய உற்பத்தி. அதனுடைய வேரை அறுக்கத்தான் இந்த மாபெரும் கூட்டம் இங்கே வந்திருக்கிறது.

ஜாதி வெறியர்களைப் பார்த்துக் கேட்கிறோம்!

ஜாதி வெறித்தனத்தை உண்டாக்கியிருக்கிறார்களே, அவர்களைப் பார்த்துப் கேட்கிறோம், ஜாதி வெறி யர்களைப் பார்த்துக் கேட்கிறோம். உங்கள் பிள்ளைகளை நீங்கள் கூலிப் படைகளை வைத்துக் கொல்கிறீர்களே, அது நியாயமா?

இன்றைக்கு ரத்தம் ஏற்றுகிறார்களே, அப்பொழுது என்ன பிள்ளை ஜாதிமாருக்கு பிள்ளை ஜாதியினரின் ரத்தம்தான் ஏற்றுகிறார்களா? அய்யங்கர் ரத்தம் அய்யங்காருக்கு ஏற்றப்படுகிறதா?

உடற்கொடை கொடுக்கிறார்களே, அந்த உடல் உறுப்புகள் செட்டியாருடைய உடல் உறுப்பு செட்டி யாருக்கு பொருத்தப்படுகிறதா?

தாழ்த்தப்பட்டவர் ரத்தம், தாழ்த்தப்பட்டவருக்குத் தான் ஏற்றப்படுகிறதா?

இல்லை. ஒருவருக்கு என்ன ரத்தப் பிரிவோ, அந்த ரத்தப் பிரிவுதான் அவருக்கு ஏற்றப்படுகிறது. இதுதான் அறிவியல், மருத்துவம்.

ஒரு அய்யங்கார் விபத்தில் அடிபட்டு, மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை.

இரண்டு, மூன்று நாள்களாகியும் அவருக்கு ரத்தம் ஏற்றவில்லை. உடனே அந்த அய்யங்கார் மருத்துவரைப் பார்த்து, ஏங்க இன்னும் எனக்கு ரத்தம் ஏற்றவில்லை'' என்று கேட்கிறார்.

உங்களுடைய ரத்தம் ஏ1 பாசிட்டிவ் வகையைச் சார்ந்தது. நாங்களும் விளம்பரம் கொடுத்திருந்தோம். ஒருவர் மட்டுமே மனிதநேயத்தோடு வந்தார் அந்த விளம்பரத்தைப் பார்த்து என்றார் மருத்துவர்.

"நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாச்சு!''

அப்படியானால், ஏன் எனக்கு இன்னும் ரத்தம் ஏற்றவில்லை என்று அந்த அய்யங்கார் கேட்க,

இல்லீங்க, வந்த ஒரு இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைத் தொட்டாலே தீட்டு என்று நீங்கள் சொல்பவர்; உங்களுடைய அனுமதி இல்லாமல், அவருடைய ரத்தத்தை நாங்கள் உங்களுக்கு ஏற்ற முடியுமா? என்கிறார் மருத்துவர்.

இல்லை, நான் செத்துப் போகிறேன், அவருடைய ரத்தத்தை என்னுடைய உடம்பில் ஏற்றக்கூடாது; எனக்கு ஜாதிதான் முக்கியம் என்று சொல்வாரா?

நம்மைவிட அவர்கள் கெட்டிக்காரர்கள்.

அந்த அய்யங்கார் என்ன செய்வார்?  மருத்துவ ருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு,  அய்யய்யோ, அதையெல்லாம் இப்பொழுது யார் பார்க்கிறார்கள்? நான் பெரியார் கட்சியில் சேர்ந்து எவ்வளவு நாளாச்சு'' என்பார்.

ஜாதி வெறியர்களைக் கேட்கிறோம் - ஜாதி வெறித் தனத்திற்காக தங்களுடைய சொந்தப் பிள்ளைகளை அழிக்கவேண்டும் என்பதற்காக கூலிப் படைகளை ஏவுகிறீர்களே, உங்களைப் பார்த்துக் கேட்கிறோம்.

நீங்கள் மனதார சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு நோய் வந்தால், உங்கள் ஜாதி டாக்டரிடம்தான் நீங்கள் சிகிச்சை செய்துகொள்வோம் என்று நீங்கள் பிடிவாதமாக இருப்பீர்களா? அங்கே ஜாதியை தேடுவீர்களா?

பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்பொழுது மட்டும் ஜாதியைத் தேடுகிறீர்களே? அந்த ஜாதிக்கு என்ன அடையாளம்?

ஒவ்வொரு ஜாதிக்காரர்களுக்கும், ஒவ்வொரு தர்மா மீட்டரா?

ஜாதிகளைப் பார்த்தா உடல் உறுப்புகளைப் பொருத் துகிறார்கள்?

தர்மா மீட்டரை வைத்துப் பார்க்கின்ற டாக்டர், ஒவ்வொரு ஜாதிக்காரர்களுக்கும், ஒவ்வொரு தர்மா மீட்டரை வைத்தா பார்க்கிறார்?

இது பள்ளனுக்கு வைத்த தர்மா மீட்டர்; இது கள்ளருக்கு வைத்த தர்மா மீட்டரா? என்று பார்க்கிறார்.

ஸ்டெதஸ்கோப் வேறு வேறா வைத்துப் பார்க்கிறார்?

அட மடப் பயலே, உன்னை எந்த அளவிற்கு ஜாதி வெறித்தனமாக ஆக்கியிருக்கிறது என்று நினைத்தால், அந்த நூலுக்கு ஆதாரம் போகவேண்டும் - அதுதான் மிக முக்கியம்.

கூலிப்படைகளையும் சேர்த்துச் சொல்கிறோம். இனிமேல், நீங்கள் திவ்யாக்கள், இளவரசன்கள், நந்தீஷ் கள், சுவாதிகள் போன்று மீண்டும் நடக்கவிடக்கூடாது. இதுதான் கடைசியாக இருக்கவேண்டும்.

தற்கொலை பட்டாளத்தைத் தயாரிக்கின்ற மாநாடு!

இந்த மாநாடு வெறும் பேச்சுக் கச்சேரி மாநாடு அல்ல. தற்கொலை பட்டாளத்தைத் தயாரிக்கின்ற மாநாடு.

இங்கே கூடியிருக்கின்ற கருஞ்சட்டையாக இருந் தாலும், இங்கே கூடியிருக்கின்ற செஞ்சட்டையாக இருந்தாலும், இங்கே கூடியிருக்கின்ற நீலச்சட்டையாக இருந் தாலும், இங்கே கூடியிருக்கின்ற வெள்ளைச் சட்டையாக இருந்தாலும், அனைவரும் வெள்ளை மனத்தவர்கள். நாங்கள் உடலினால், பலராய் காண்போம் - உள்ளத்தால் ஒருவரே!

நாட்டுக்கு ஒருமைப்பாடு பேசுகிறார்கள் - தேசியம் என்று சொல்கிறார்கள். இங்கே மனிதனுக்கு ஒருமைப் பாடு பேசக்கூடிய ஒரு மாபெரும் இயக்கம் இந்த இயக்கம். எனவேதான் சொல்கிறோம், இந்த இயக்கம், ஜாதி மறுப்புத் திருமணங்கள் எண்ணற்ற திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புள்ளிவிவரங் களையும் எங்களால் சொல்ல முடியும்.

சுயமரியாதைத் திருமணம் நிலையம் என்று, நாங்கள் நடத்துகின்ற திருமணங்கள் கடந்த இரண்டு ஆண்டு களில், நவம்பர் 2018 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற திருமணங்கள் 320. தாழ்த்தப்பட்டவருக்கும், மற்றவர்களுக்கும்.

இந்த நிலையில், ஒரு பத்திரிகையாளர் கேட்கிறார், என்னங்க, பெரியார் தோற்றுவிட்டார் போலிருக்கிறதே? அம்பேத்கர் தோற்றுவிட்டார் போலிருக்கிறதே?'' என்று.

ஏனென்றால், எவனோ இரண்டு கிறுக்கன், கூலிப் படையை வைத்து ஒரு வேலை செய்கிறான்; அதுகூட நடக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இரு க்கிறோம். அது கவுரவக்கொலை என்று சொல்லக்கூடாது; ஆணவக் கொலை என்று அதனை நாங்கள் சொல்கி றோம். இதுபோன்று ஊடகங்கள் சித்தரிக்க முயலுகின்றன. ஒரு சாலையில், நாள்தோறும் 5 ஆயிரம் கார்கள் செல் கின்றன. ஒரு காருக்கு விபத்து ஏற்பட்டால், அதுதான் செய்தியாகுமே தவிர, பத்திரமாக செல்லும் கார்கள் செய்தி ஆகாது. அதுபோன்றுதான் இங்கே நடக்கிறது.

ஆகவே, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு, எங்கள் உயிரையும் கொடுப்பதற்கு, நாங்கள் தற் கொலைப் பட்டாளங்களைத் தயாரிப்போம்.

காவல்துறை அதை செய்யவேண்டும்; காவல்துறையிலேயே அதற்கென்று ஒரு பிரிவு வேண்டும். அதற்காக ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி இருக்கிறோம். அதை காவல்துறை செய்யவில்லையானால், இனி மேல், அந்த வேலையை இந்தப் படை செய்யும். அதற் காகத்தான் இந்த மாநாடு. வெறும் பேச்சு மாநாடல்ல, இந்த மாநாடு. எவ்வளவு காலத்திற்கு நாம் வாழப் போகிறோம்? திடீரென்று நாளைக்கு நாம் செத்தோம் என்றால், பெரியார்தான் சொல்வார், நோயினால் ஒரு மனிதன் சாவதைவிட, விபத்தினால் சாவதைவிட, கொள்கைக்காக செத்தால், அவர்கள் செத்தவர்கள் அல்ல; என்றைக்கும் வாழ்கிறவர்கள், அதுதான் மிக முக்கியம் என்பார்.

அந்த உணர்வுகள் நமக்கு வந்தாகவேண்டும். அந்த உணர்வுகளுக்காகத்தான் நாம் தயாராகவேண்டும்.

நாளைக்கு வருகின்ற நல்லாட்சி, கூலிப்படைகளை விட்டு வைக்குமா?

கூலிப்படைகளே, உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறோம். தயவு செய்து, அற்பத்தனத்திற்காக உங்க ளை விற்றுக் கொள்ளாதீர்கள். நல்ல ஆட்சி வருகின்ற பொழுது, கூலிப்படைகளை விட்டு வைப்பார்களா? நாளைக்கு வருகின்ற நல்லாட்சி, இந்தக் கூலிப்படைகளை விட்டு வைக்குமா?

திராவிடர் கழகம்தான் முன்னால் நிற்கும்

எந்தப் பார்ப்பானும் கூலிப்படையாக வருவதில்லை. நம்மைத்தான் கூலிப்படையாக ஆக்குகிறான். கோடரி இருக்கிறதே, அந்தக் கோடரிதான் மரத்தை வெட்டுவ தற்குப் பயன்படுகிறது; கோடரியினுடைய கைப்பிடி, மரத்தினால்தான் செய்யப்பட்டு இருக்கிறது. அது போன்று, நம் இனத்தில் உள்ளவர்களே கூலிப்படைகளாக வருகிறீர்களே, அந்தக் கூலிப் படையினருக்கும் சேர்த் துச் சொல்கிறேன், ஜாதி வெறியர்களுக்கும் சேர்த்து - நாளைக்கு வருகின்ற ஆட்சி, உங்களை என் கவுண்ட்டர் செய்தால் - அய்யோ, எங்கள் தோழர்களை என்கவுண் ட்டர் செய்யாதீர்கள்; மனித உயிரைக் காப்பாற்றுங்கள்'' என்று கேட்பதற்கு, இந்தத் திருமாவளவன்தான் இருப்பார்; இந்த ராசாதான் இருப்பார்; இந்தக் கம்யூனிஸ்ட் நண்பர்கள்தான் இருப் பார்கள்; இந்த காங்கிரசு நண்பர்கள்தான் இருப்பார்கள்; திராவிடர் கழகம்தான் முன்னாலே நிற்கும்.

எனவேதான், நீங்கள் கூலிப்படைகளாக மாறாதீர்கள்; உங்களை விற்றுக்கொள்ளாதீர்கள். மனிதநேயத்தோடு நடந்துகொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொல்வீர்களா? உங்கள் மகளை நீங்கள் கொல்லுவதற்கு மனம் வருமா?

எனவேதான், அந்த உணர்வோடு உங்களுக்கு நான் சொல்கிறேன், எவனோ வெறியன் கேட்டான் என்பதற் காக, நீங்கள் பயன்படலாமா? எனவேதான், பெற்றோர் களுக்கும் சொல்கிறேன், பெற்றோரே, நீங்கள் திருந்துங்கள். ஜாதி வெறித்தனத்திற்கு ஆளாகாதீர்கள்.

பேயைவிட பேய் பிடித்தவன் ஆட்டம் அதிகம்!

குன்றக்குடி அடிகளார் மிக அழகாக ஒன்றே சொல்வார்கள்.

"பேய் அதிகமாக ஆடாது; பேயைவிட அதிகமாக ஆடுபவன் பேய் பிடித்தவன்தான். ஏனென்றால், இவன் சும்மா இல்லையென்றாலும், பூசாரி அடிக்க அடிக்க அதிகமாக ஆடுவானாம் பேய் பிடித்தவன்.''

அதுபோன்று பூசாரிகள் உங்களை ஆட்டுகிறார்கள்; நீங்கள் பேய் பிடித்தவர்கள் போல் ஆடக்கூடாது.

ஆகவேதான், ஜாதி என்பதை வைத்துக்கொண்டு இனிமேலும் வாழலாம் என்று நினைக்காதீர்கள். அது செல்லரித்த ஒரு தத்துவம். அதற்கு இடம் கிடையாது. இதோ நெருக்கி உட்கார்ந்தோம்; குளிர் இல்லை. தனித்தனியாக அமர்ந்தால், குளிருகிறதே - அதுபோன்று, இந்த சமுதாயம் நெருங்கி வருகிறது - நெருக்கப்படுகிறது. எதிரிகள் எங்களை நெருக்குகிறார்கள். எதிரிகள் என்ன ஆயுதம் எடுக்கிறார்கள் என்று பார்க்கின்ற நேரத்தில், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்.

எனவேதான், இந்த மாநாட்டில் ஒரு அறிவிப்பை செய்கிறோம். 2019 ஜனவரி 23 ஆம் தேதி, சனாதனத்தை எதிர்த்து, இந்த தேசத்தைக் காப்பதற்காக, பெரியார் தலைநகரமாகக் கொண்ட திருச்சி - அங்கே நம்முடைய சகோதரர் திருமா அவர்கள் - அம்பேத்கர் இல்லையே - பகவத்சிங் இல்லையே என்று நினைக்கவேண்டிய அவசியமில்லை - எல்லோரும் சேர்ந்து நாங்கள் இருக்கிறோம் - அந்தப் பணிகளை செய்ய - நாங்கள் ஒரே உருவமாக இருக்கிறோம்.

எங்கள் வண்ணங்கள் முக்கியமல்ல -

எங்கள் எண்ணங்கள்தான் மிக முக்கியம் என்ற உணர்வோடு இருக்கின்றோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜனவரி 23 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடத்து கிறார்கள். இந்த மனுதர்மத்தை ஜனவரி  24 ஆம் தேதி, ஜாதி ஒழிப்பு வீரர்கள் - தமிழ்நாடு முழுவதும் கொளுத்துகின்ற போராட்டத்தினை அறிவிக்கின்றோம்.

எனவே, ஜாதிக்கு மூலாதாரம் எங்கே இருக்கின்றது?

தத்துவங்கள்தான் எங்களுக்கு எதிரிகளைத்தவிர, தனி மனிதர்கள் அல்ல!

எது மூலாதாரம் - எது வேர்? அந்த வேரை வெட்டு வோம். நாங்கள் கிளைகளை வெட்டுகின்ற பைத்தியக் காரர்கள் அல்ல; வேரை வெட்டுவோம் - ஆளை வெட்ட மாட்டோம். தத்துவங்கள்தான் எங்களுக்கு எதிரிகளேத்தவிர, தனி மனிதர்கள் அல்ல என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவேதான் நண்பர்களே, மிகத் தெளிவாக உங் களுக்குச் சொல்லுகிறோம் - இது மிக முக்கியமான அறிவிப்பு. எனவே, ஒத்தக் கருத்துள்ளவர்கள் அத்துணைப் பேருக்கும், மனுதர்மத்தினுடைய பகுதிகள் வரும் - அதைக் கொளுத்துவோம் - இதை யாராவது தடுத்து, சிறைச்சாலைக்கு வா என்று சொன்னால்,  எங் களை அடைப்பதற்கு சிறைச்சாலைகள் போதாது. புதிய சிறைச்சாலைகளை வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புத் தீரர்கள் என்பதற் காகவே வாழ்வோம்.

2019 ஜனவரி 24 ஆம் தேதி திருச்சியில்

மனுதர்ம எரிப்புப் போராட்டம்!

எனவே, எதை நீ, அரசியல் சட்டத்திற்குப் பதிலாக, மீண்டும் ஒரு புதிய அரசியல் சட்டமாக மனுதர்மத்தைக் கொண்டு வரலாம் என்றும்,  இந்த தேசத்தை மீண் டும் வருணாசிரம தர்மமாக ஆக்கலாம் என்று நினைக் கிறாயோ, அதற்கு அடித்தளம் - அதற்குப் பதில் சொல்வது - சனாதனத்தை மட்டுமல்ல - சனதான அரசியலையும் வீழ்த்துவதற்காக இருக்கக்கூடிய மிக முக்கியமான இந்த மனுதர்ம எரிப்புப் போராட்டம் என்றைக்கு?

ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?

புதிய ஆண்டான 2019 ஜனவரி 24 ஆம் தேதி.

23 ஆம் தேதி தேசியம் காப்போம் மாநாடு -  அது பேச்சல்ல; பேச்சு என்றால், தியரி - இது லேபரட்டரி. பிராக்ட்டீகல். ஜாதி ஒழிப்பு, சனாதன ஒழிப்பு என்னவென்று காட்டுவதற்காக தெளிவானது.

பாதுகாப்புப் படையாக நாங்கள் இருப்போம்!

அடுத்த அறிவிப்போடு என்னுரையை முடிக்கவிருக் கின்றேன்.

இந்த அமைப்புகள் எல்லாம் சேர்ந்து, யார் யாரெல் லாம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள் கிறீர்களே, அவர்களுக்குப் பாதுகாப்புப் படையாக நாங்கள் இருப்போம். நீங்கள் வரலாம். எங்களிடம் சொல்லலாம். உங்களுக்குப் பாதுகாப்பு - உங்களுடைய வாழ்க்கைக்குப் பாதுகாப்பு உள்பட எங்கள் அணி தயாராகும். அதற்கான திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

ஆகவே, உங்களுக்குப் பல வாய்ப்புகள் உண்டு.

எனவே, துணிந்து ஜாதியை நொறுக்குங்கள் -

மனுதர்மத்தைத் தூக்குங்கள் -

ஜாதியைக் காப்பாற்றுகின்ற இராமாயணத்திற்கும், சம்பூகனின் தலைசீவிய இராமராஜ்ஜியத்திற்கும் இட மில்லை என்று காட்டுங்கள்.

அதேபோல, அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லிவிட்டு,

18 இடங்களில் ஜாதி, ஜாதி என்று அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே, அவை அத்தனையும் நீக்க ப்படவேண்டும்.

பாலம் கட்டும்வரை ஜாதி ஒழிப்பு - மாற்றுப் பாதை என்பது  கொஞ்ச காலத்திற்கு

ஜாதி போனால், இட ஒதுக்கீடு போய்விடும் என்று நினைக்காதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி, இட ஒதுக்கீடு நீடிப்பதைப்போல, இந்த நாட்டில், சில காலத்திற்கு, பாலம் கட்டும்வரை ஜாதி ஒழிப்பு - மாற்றுப் பாதை என்பது கொஞ்ச காலத்திற்கு. அதைக்கூட நாங்கள் இழப்பதற்குத் தயாராக இருக்கிறோம், ஜாதி ஒழியுமானால். எப்பொழுது நீ பாலத்தைக் கட்டி முடிக்கிறாயோ - அப்பொழுது மாற்றுப் பாதைக்கு இடம் இருக்காது - ஜாதியற்ற சமூகம்.

நாட்டையே சமத்துவபுரம் ஆக்குகின்ற வரையில், எங்களுக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை!

எனவேதான், எங்கள் காலம், பெரியார் வகுத்த அந்தப் பணி, அம்பேத்கர் வகுத்த அந்தப் பணி, இது தொடர்ந்த கலைஞருடைய சமத்துவபுரம் - சில ஊர்க ளிலே சமத்துவபுரம் என்று  இங்கே சொன்னார்கள் - இந்த நாட்டையே சமத்துவபுரம் ஆக்குகின்ற வரையில், எங்களுக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை - இந்தப் பயணம் தொடரும் - இந்தப் படை அந்தப் பணியை செய்யும். அதுதான் அந்தப் பிரகடனம்!

நன்றி, வணக்கம்!

புதிய உலகம்! ஜாதியற்ற உலகம்! சனாதனமற்ற உலகம்!

வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்!!

ஒழிக ஜாதிகள்! வருக புத்துணர்வு! புதிய உலகம்! ஜாதியற்ற உலகம்!

சனாதனமற்ற உலகம்!

பார்ப்பனியமற்ற உலகம்!

பேதமற்ற உலகம்!

பெண்ணடிமை நீங்கிய உலகம்!

வருக! வருக!!

அதற்கு எங்களை அர்ப்பணித்துக் கொள்கிறோம் என்கிற சூளுரையோடு என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles