தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மதிக்கவும் - மானமிகு கலைஞருக்கு நன்றி செலுத்தும் வகையிலும்
திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்குத் தமிழர் தலைவர் அன்பு வேண்டுகோள்!
வாழ்த்துப் பெற்றார்
திருவாரூரில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் (சென்னை, 4.1.2019).
திருவாரூரில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் ஏன்? என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அருமை வாக்காளர்ப் பெருமக்களே!
28.1.2019 அன்று திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கவேண்டும் என்பதற்கான காரணக் காரியங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம் - சிந்தியுங்கள், செயல்படுங்கள்!
அண்ணா பெயரால் கட்சி - ஆட்சி நடத்துவது அண்ணா தி.மு.க. ஆனால், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. ஆட்சியில் அண்ணா பெயருக்குப் பொருத்தமாக கலைஞர் ஆர்வத்தோடு உருவாக்கியது - என்றும் நிலைத்துப் புகழ்பாடுவது அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.
8 ஏக்கர் பரப்பில், 3.75 லட்சம் சதுர அடியில் ஒன்பது தளங்களைக் கொண்டது - 12 லட்சம் நூல்கள் அணி செய்தன.
ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்ன செய்தார்? அதனை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்; குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்றார். சென்னை உயர்நீதிமன்றம் தலையிடவில்லை என்றால், ஆசியாவிலேயே சிறந்த கருவூலத்தைத் தமிழர்கள் இழந்திருக்க வேண்டியிருக்கும். எந்த அளவு உயர்நீதிமன்றம் சென்றது என்றால், அரசு சரிவரப் பராமரிக்காவிட்டால், நீதிமன்றமே நேரடியாக சரி செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
சேது சமுத்திரத் திட்டம்
சேது சமுத்திரத் திட்டம் என்பது திராவிட இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை. எத்தனை மாநாட்டுத் தீர்மானங்கள் - போராட்டங்கள். தி.மு.க. இடம்பெற்ற மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (மத்திய அமைச்சராக மாண்புமிகு டி.ஆர்.பாலு) ரூ.2427.40 கோடி செலவில் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அதனை முடக்கியவர் முதலமைச்சர் ஜெயலலிதா அல்லவா! ராமன் பாலத்தை நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்தவேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியவர்தான் ஜெயலலிதா.
தீ பரவட்டும்' என்று உரையாற்றிய அண்ணாவை, அவர் நாமம்' வாழ்க என்று உச்சரிப்பதன் பொருள் என்ன? கொள்கைக்கு நாமம் தானா?
அந்தத் திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தென்மாவட் டங்களே புதுப்பொலிவுடன் பொருளாதாரச் செழுமை பூத்து ஒளியூட்டும் பூமியாக மாறி இருக்குமே - எத்தனை ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டியிருக்கும் - இந்தத் துரோகத்தை வரலாறு என்றுமே மன்னிக்காது - மன்னிக்கவே மன்னிக்காது.
தி.மு.க. ஆட்சியில் உழவர் சந்தை - இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் - கலைஞர் சிந்தனையில் உதித்த திட்டம். 25.35 லட்சம் பேர் பயன்பெற்ற இத்திட்டம் இப்பொழுது எங்கே? எங்கே??
தமிழ்நாடு சட்டப்பேரவை நடந்த கட்டடம் பழுதாகி - மழைக் காலத்தில் கோப்புகள் எல்லாம் பாழாகும் அளவுக்கு நிலைமை மோசமான நிலையில், ரூ.450 கோடி செலவில் 9 லட்சம் சதுர அடியில் எழிலுடன் புதிய சட்டமன்றத்தை உருவாக்கி, பிரதமர் மன்மோகன்சிங்கை வரவழைத்துத் திறப்பு விழா செய்யப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அங்கு சிறப்பு மருத்துவமனையை நடத்திக்கொண்டு இருக்கிறதே! சென்னை கோட்டையில் நிறுவிய புரட்சிக்கவிஞர் நூலகம் எங்கே? எங்கே??
துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்
சென்னை மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்குப் பறக்கும் சாலை சுமார் ரூ.1,800 கோடி செலவில் அமைக்க முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதனால் மதுரவாயலில் இருந்து துறைமுகத்துக்கு லாரிகள் நேரடியாக வந்து செல்லலாம். சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஆனால், ஜெயலலிதா அரசின் தடையால், இந்தப் பணி பாதியில் முடங்கியது. கட்டுமான நிறுவனம், இழப்பீடு கோரியது. மேலும், சென்னை துறைமுகத்துக்கு வரவேண்டிய சரக்குகளும், வருவாயும், ஆந்திர எல்லையோரம் உள்ள கிருஷ்ணாம்பட்டினம் மற்றும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களுக்குச் சென்றுவிட்டன. சென்னை துறைமுகம் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் ரூ.3,686 கோடி செலவில் செயல்படுத்தப் படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்ட முடக்கத்தால் தடைபட்டிருக்கின்றன.
உச்சநீதிமன்றம் ஓங்கி அடித்ததே!
செம்மொழிப் பூங்கா என்ன செய்தது? தொல்காப்பியப் பூங்கா ஏன் கண்களை உறுத்தியது - பெயர் மாற்றம் ஏன்? ஏன்??
அரசியல் காழ்ப்புணர்ச்சி - காழ்ப்புணர்ச்சிதானே! சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே அ.தி.மு.க. ஆட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மனதிற்கொண்டு சொன்னது என்ன தெரியுமா?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
The law must not permit change of policy because another political party with different political philosophy coming to power, as it is the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies.
முதலில் இருந்த ஒரு ஆட்சியினர் ஒரு காரியத்தை செய்தால் தனிப்பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிவிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்பொழுது பழைய ஆட்சியினுடைய தொடர்ச்சி சென்ற ஆட்சியின் செயலை பின்பற்றவேண்டியதுதான் - வந்திருக்கின்ற ஆட்சியின் கடமையாக இருக்கவேண்டுமே தவிர, அதை உடைப்பதற்கு புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை'' என்று ஓங்கிக் குட்டியதே உச்சநீதிமன்றம்.
இதைவிட ஓர் ஆட்சிக்கு அவமானம் வேறு இருக்க முடியுமா? மக்கள் நலத் திட்டங்களை மனதில் மூளும் காழ்ப்புத் தீயால் சுட்டெரிப்பது எந்த வகையில் சரி? நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும்.
சமச்சீர் கல்வி!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை முடக்கியதும் அ.தி.மு.க. ஆட்சிதான். புதிய நூல்களைப் புறக்கணித்துவிட்டு, ரூ.250 கோடி செலவில் பழைய நூல்கள் அச்சிடப்படவில்லையா? உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதே. ரூ.250 கோடி யார் வீட்டுப் பணம்? நூறு நாள்கள் மாணவர்களின் கல்வியும் பாழ் - சமச்சீர்க் கல்வி புத்தகங்களிலும் கருப்பு மையினால் இருட்டடிக்கப்பட்ட பகுதிகளும் உண்டு. திருவள்ளுவரும் தப்பவில்லையே!
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் வரலாற்றுக் கல்வெட்டுகளாகும். காலத்தை வென்று நிற்கக்கூடியவை. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் - தமிழ் செம்மொழி - அண்ணா நூற்றாண்டு நூலகம் - பெரியார் நினைவு சமத்துவபுரம் - தமிழறிஞர்கள் வலியுறுத்தி வந்த தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு (அதை ரத்து செய்தது அ.தி.மு.க. ஆட்சி), உழவர் சந்தை, வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை - 2 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயிகள் பயனடையும் வண்ணம் ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி - விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கூட்டுறவு சங்கக் கடன் வட்டி விகிதம் 9 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைப்பு - புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் - உள்ளூர்க்கார்கள் 75 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு என்ற நிபந்தனை - அடுக்கடுக்கான மகளிர் நல வாழ்வுத் திட்டங்கள் - யாருடைய நினைவிலும் வாராத திருநங்கையர்களுக்கான ஆணையம் - பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, சேலத்தில் இரயில்வே மண்டலம் - நெசவாளர் பயனடையும் வகையில் சென்வாட் வரி நீக்கம் - ரூ.968 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் - பொடா சட்டம் ரத்து -
15,000 சாலைப் பணியாளர்களை - 12,000 மக்கள் நலப் பணியாளர்களை அ.தி.மு.க. அரசு வீட்டுக்கு அனுப்பி, அவர்கள் குடும்பங்களின் வயிற்றில் அடித்த நிலையில், அவர்களுக்கெல்லாம் மீண்டும் வேலை வாய்ப்பு அளித்த கருணை உள்ளம் படைத்தது தி.மு.க. ஆட்சி.
நுழைவுத் தேர்வு ரத்து - சிறுபான்மையினருக்கும், அருந்ததியினருக்கும் தனி ஒதுக்கீடு - (அ.தி.மு.க. 2014 - நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் (பக்கம் 20) இட ஒதுக்கீட்டில் சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் என்று சமூகநீதியின் அடிப்படையையே தகர்த்தது என்பதை நினைவு கூர்க) உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - தொழில் வளர்ச்சியில், இந்தியாவின் டெட்ராய்டு சென்னை என்று டெக்கான் ஹெரால்டு படப்பிடிப்பு - இந்தியாவிலேயே எல்லாவற்றிலும் தி.மு.க. ஆட்சியே சிறந்தது என்று சி.என்.என். - அய்.பி.என். நிறுவனம் வைர மாநில விருது வழங்கிப் பாராட்டு, மாற்றுத் திறனாளிகளின் நலவாழ்வுக்கான உதவிகள் - திட்டங்கள், உணவுப் பங்கீடு திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்குவதுபோல், மற்ற மாநிலங்களும் பின்பற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றமே பெருமிதமான கருத்து - என்று தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மானமிகு கலைஞர் அவர்கள் 1957 முதல் தொடர்ந்து - தோல்வி என்றால் என்னவென்று அறியாத வெற்றித் திருமகனாக ஜொலித்தவர். அய்ந்து முறை சாதனை முதலமைச்சராக இருந்து அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்
கடைசி இருமுறை சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் திருவாரூரில் நின்று சொந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர். திருவாரூர் தனி மாவட்டம் - மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக் கழகம், கலைக் கல்லூரிகள் என்றெல்லாம் திருவாரூர்த் தொகுதிக்கு முதலமைச்சர் கலைஞர் சாதித்துத் தந்த மாமணியான வரலாறு பேசும் திட்டங்களாகும்.
இன்றைய அ.தி.மு.க. ஆட்சியைப் பொருத்தவரை மேனாள் முதல்வர் ஏற்காத திட்டங்களைக்கூட மத்திய பி.ஜே.பி. ஆட்சிக்கு அடிபணிந்து ஏற்றுக்கொண்டதை என்ன சொல்ல!
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (அந்தி யோத்யா - அன்ன யோஜனா), உதய் மின் திட்டம் உதாரணத்துக்குச் சிலவாகும்.
நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியும், மத்திய அரசை வலியுறுத்தி - தமிழ்நாட்டுக்கே உரித்தான சமூகநீதியை - கோட்டைவிட்டது வரை அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தையும், தோல்விகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியைக்கூட போதுமான அளவு மத்திய அரசை வலியுறுத்திப் பெற இயலாத பலவீனமான அரசாகிவிட்டது அ.தி.மு.க. அரசு.
இந்த நிலையில், திருவாரூரில் கலைஞர் இருமுறை போட்டியிட்ட திருவாரூர் தொகுதிக்கு இப்பொழுது இடைத்தேர்தல் - கலைஞர் அவர்கள் மறைவுற்ற காரணத்தால்.
கலைஞர் மறைந்திருக்கலாம் - ஆனாலும், அவர் நினைவைப் போற்றும் வகையில் நன்றியுள்ளவர்கள் நாங்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும், மானமிகு கலைஞரின் தொண்டர், சீடர் - மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற உழைப்புத் தேனீ பூண்டிக்கலைவாணன் அவர்களை கலைஞர் பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட, அதிகம் பெறச் செய்து அவரை வெற்றியடையச் செய்வது அவசியம். மானமிகு கலைஞரே போட்டியிடுகிறார் என்று கருதவும் வேண்டும்.
அதன்மூலம் பாசிச பி.ஜே.பி. - அதன் தொங்கு சதையான அ.இ.அ.தி.மு.க.வுக்குச் சரியான பாடம் கற்பித்ததாக அமையும். மக்களவைத் தேர்தலுக்கான மணியோசை இது என்ற கணிப்பை ஏற்படுத்தவேண்டும்.
இந்த இடைத்தேர்தலில் திராவிடர் கழகம் தன் பங்களிப்பு முத்திரையைப் பிரகாசமாகப் பதிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாக்காளர்ப் பெருமக்களே, உங்கள் உரிமையைக் கேவலம் பணத்திற்காக விற்று விடாதீர் - பண மூட்டைகளின் கனவை நாசமாக்கவேண்டும், வேண்டும்!
திருவாரூர் என்பது நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. என்று பரிணமித்து வளர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்!
அதன் பெற்றியை, வெற்றி வாகையாக நிலை நிறுத்துவீர்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
5.1.2019