Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

தஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பார்கள்

$
0
0

திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி

திருவாரூர், ஜன.11  தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில்  முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நேற்று (10.1.2019) காலை திருவாரூரில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவ்விவரம் வருமாறு:

பிப்.23, 24 இல் தஞ்சையில் மாநில மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாள்களில், தஞ்சையில் மிகப் பிரம்மாண்டமான அளவில், முதல் நாள் திராவிடர் கழக மாநாடாகவும், இரண்டாம் நாள் சமூகநீதி மாநாட கவும் நடைபெறவிருக்கிறது. அம்மாநாட்டில் ஒரு பெரிய பேரணியும் நடைபெறும். அம்மாநாட்டில், பல்வேறு வடநாட்டு சமூகநீதிப் போராளிகளான தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்கள் சிலரும் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள்.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளி ரணி, தொழிலாளரணி என்று பல்வேறு அணியினர் பங்கேற்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் மே மாதத்தில் நடைபெறவிருப்பதால், மத்திய - மாநில ஆட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற சரிவுகள் காரணமாக, மேலும் விரைவுபடுத்தக் கூடிய சூழலில், இந்த மாநாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது.

மீண்டும் மத்தியில் காவி ஆட்சி ஏற்படக்கூடாது. மோடி தலைமையில் இருக்கக்கூடிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அமைக்கக்கூடாது. முற்றிலும் யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில், இந்தியாவில் இருக்கின்ற எல்லா முற்போக்குக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும்; அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்று பொதுவானவர்கள் அந்த உணர்வினை பெற்றிருக்கிறார்கள் என்பதை விளக்கிச் சொல்லி, பல்வேறு போராட்டத் திட்டங்களையும் அந்த மாநாட்டில் அறிவிக்க இருக்கின்றோம்.

வெளிநாடு - உள்நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

எனவே, சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்து, பெண்ணுரிமைக்கு பாலின கொடுமைகள் மற்றவைகள் மூலமாக ஏற்பட்டிருக்கின்ற ஆபத்துகள், கல்வியை காவி மயமாக்கக் கூடிய சூழல்கள் இவைகளையெல்லாம் எதிர்த்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நடத்துவதற்கு, தமிழ்நாட்டில் உள்ள ஒத்த கருத்துள்ள கட்சிகள், தலைவர்கள் என்பது மட்டுமல்லாமல், வடபுலத்திலும் மற்றும் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஒத்தக் கருத்துள்ளவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

அதற்கான மூன்று, நான்கு மாவட்டங்கள், மண்டலங் கள் அதையொட்டிய தலைமைப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் இப்பொழுது நடைபெறவி ருக்கிறது.

உயர்ஜாதியினரை தாஜா செய்வதற்காக....

செய்தியாளர்: பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையிலும், மக்களவையிலும்  நிறைவேற்றியிருக்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து?

தமிழர் தலைவர்: அவர்களுக்கு எந்த இடத்தில் தங்களுக்கு ஆதரவு வருமோ - யார் இதுவரையிலும் பி.ஜே.பி.,க்கு ஆதரவு கொடுத்தார்களோ அந்த உயர் ஜாதிக்காரர்களாகக் கருதப்படக்கூடிய பார்ப்பனர்கள், வடநாட்டில் இருக்கின்ற உயர்ஜாதிக்காரர்களின் எதிர்ப்பு கள் கடுமையான எதிர்ப்புகளாக மாறிவிட்டது.

அதன் காரணமாகத்தான், அவர்களுக்கு அடித்தளமாக, மிகவும் ஆதரவாக இருக்கக்கூடியது என்று அவர்கள் நம்பிய, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் அவர்கள் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்திருக்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால், தங்களுக்கு  அறுதிப் பெரும் பான்மை மட்டுமல்ல, ஆட்சிக்கே மீண்டும் வர முடியாமல் போய்விடும் என்று அஞ்சி, ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு, ஒரு அறிக்கையை அனுப்பினார்கள் பா.ஜ.க.வுக்கு.

அதில் தெளிவாக, எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தைத் நீர்மைப்படுத்தியது, அந்த சட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி, கடுமையான நடவடிக்கை அதன்மேல் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை, நீங்கள் மாற்றி, வேகப்படுத்தியதால்தான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற அந்தக் கோபத்தினால்தான், உயர்ஜாதியினர் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற ஒரு ரகசிய அறிக்கையை கொடுத்தார்கள்.

இந்தக் கோபத்தை அப்படியே தொடரவிட்டால், நாம் வெற்றி பெற முடியாது என்பதற்காக, உயர்ஜாதியினரை தாஜா செய்வதற்காக, அதற்காகத்தான் இப்படியொரு மசோதாவினைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இது அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமாகும்.

ஏற்கெனவே முற்பட்ட ஜாதிகள் என்பது மட்டுமல்ல, இதில் குறிப்பிடத்தகுந்த செய்தி என்னவென்றால், முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு என்று சொல்கிறார்கள்.

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. வறுமை ஒழிப்பிற்கு இவர்கள் தனியாக பணியாற்றுவது என்பதைப்பற்றி கவலையில்லை.

இட ஒதுக்கீட்டின் தத்துவமே, காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்டு, அதனால், வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகஅநீதியின் காரணமாகத்தான் - சமூகநீதி வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு என்பதே ஆரம்பித்தது.

இட ஒதுக்கீட்டில், இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழ்நாடுதான். ஆகவே, இந்த அடிப்படையில் இன்னமும் பல வடநாட்டுத் தலைவர்களே கூட, முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள்கூட அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

வேலை வாய்ப்பில், நாங்கள் இட ஒதுக்கீட்டினை அவர்களுக்கும் கொடுக்கப்போகிறோம் - அதனால் எல்லோருக்கும் கிடைக்கும் என்று மோடி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டைக் கொடுக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை

2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், பிரதமர் மோடி என்ன சொன்னார், 2 கோடி பேருக்கு ஆண்டொன்றுக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்.

5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத் திருந்தால், இப்படிப்பட்ட மசோதாவுக்கோ, அரசியல் சட்டத் திருத்தத்திற்கோ அவசியம் வந்திருக்குமா? என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டும்; இதைத்தான் மக்களும் கேட்கிறார்கள்.

ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை அவர்கள் போடுவோம் என்று சொன்னார்கள். அப்படி அவர்கள் போட்டிருந்தால், இதற்கு அவசியம் வந்திருக்குமா? இதையெல்லாம் மூடி மறைக்கத்தான், இப்படியொரு நாடகத்தை அவர்கள் ஆடுகிறார்கள். சட்டம் நிறைவேறி இருக்கிறது; ஆனால், அது அரங்கத்திற்கு வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ஏனென்றால், ஏற்கெனவே இந்திய அரசியல் சட்டத்தின் தீர்ப்பின்படி, சமூகரீதியாகவும், அதேபோன்று கல்வி ரீதியாகவும்தான் இட ஒதுக்கீட்டைக் கொடுக்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீட்டைக் கொடுக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை.

ஒரே நாளில் அவசர அவசரமாக இரண்டு அவை களிலும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எந்தவிதமான விவாதமும் இல்லாமல், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் கவிஞர் கனிமொழி  போன்றவர்களும், மற்றவர்களும் சொன்ன தைப்போல, அது தேர்வுக்குழுவுக்கும் செல்லவில்லை. அவசர கதியில் இந்த மசோதாவை நிறைவேற்றி, அதன்மூலம் உயர்ஜாதிக்காரர்களைத் திருப்தி செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த மசோதாவினை நீதிமன்றம் ஏற்காது என்பதனை பல சட்ட வல்லுநர்கள் உள்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பல ஊடகங்களும் இதைப்பற்றி விவாதங்களை நடத்தியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ளவர்களைப் பழிவாங்கவேண்டும் என்று நினைக்கிறது  மத்திய அரசு

செய்தியாளர்: கஜா புயல் பாதித்த பகுதிகளில், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வருகிறதே?

தமிழர் தலைவர்: மத்திய அரசு, தமிழ்நாட்டை தங்களது ஆளுமைக்குக்கீழே இருக்கக்கூடிய மாநிலமாகவே கருதவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், தமிழர்கள், தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கருதுகின்ற காரணத்தினால், எப்படியெல்லாம் தமிழ்நாட்டு விவசாயிகளை, தமிழ்நாட்டு இளைஞர்களை, தமிழ்நாட்டில் உள்ளவர்களைப் பழி வாங்கவேண்டும் என்று நினைக்கிறது.

அதற்கு உதாரணம், தமிழ்நாட்டில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும், மக்களையும் பார்வையிட பிரதமராக உள்ள மோடி வரவில்லை; வரவில்லை என்பதுகூட முக்கியமல்ல, ஒரு அனுதாப வார்த்தையைக்கூட சொல்லவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

எனவே, தமிழ்நாட்டை பழிவாங்கும் நோக்கில், தமிழ்நாட்டை தங்களுடைய கணக்கிலிருந்து கழித்துவிட்ட ஒரு உணர்வைத்தான் பெறுகிறார்கள் என்பதைக் காட்டு கிறது.

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல...

செய்தியாளர்: பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ரேசன் கடைகளில் 1000 ரூபாய் உதவித் தொகை கொடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: உயர்நீதிமன்றம் தினமும் ஒரு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அண்மையில் கேட்கப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், இது என்ன உங்களுடைய  கட்சி பணமா? இது மக்கள் பணம்தானே - அதை எடுத்து உங்கள் இஷ்டப்படி இறைக்கலாமா? எல்லோருக்கும் பொங்கல் பரிசு என்று கொடுக்கலாமா? வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குத்தானே கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறது.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழக அரசு இதனை செய்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். ஆகவேதான், நீதிமன்றம் அதனைத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இப்பொழுது அவர்கள் இந்தப் பக்கமும் வராமல், அந்தப் பக்கமும் வராமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல தமிழக அரசு நடந்துகொண்டிருக்கிறது.

எந்த அளவிற்கு நீதிமன்றம் சென்றிருக்கிறது என்றால், நீதிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வோமோ என்று சொல்கின்ற அளவிற்கு வந்திருக்கிறது.

பொன்.மாணிக்கவேல் என்ன சொல்கிறார்?

செய்தியாளர்: அய்.ஜி. பொன்.மாணிக்கவேல், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வைத்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அதைவிட மிக முக்கியமானது. தஞ்சாவூரில் உள்ள சிலைகள் எல்லாம் பிரதமர் அலுவலகத்திற்குப் போகவிருக்கிறது என்கிற செய்தி வந்ததே, அதுகுறித்து பொன்.மாணிக்கவேல் என்னவென்று சொல்லட்டும்; பிறகு மற்றதை பார்ப்போம்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles