Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

"தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஆழ்கடல் போன்றது உயர்வு - தாழ்வினை நீக்கி மானுடத்தை மாண்புறச் செய்வது!''

$
0
0

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை

புதுடில்லி, பிப்.5 டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக்  கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்'' எனும் தலைப்பில் ஆழமானதொரு உரையினை ஆற்றினார்.

அன்று (23.11.1946) சேலம்' நகராட்சி கலைக் கல்லூரியில் தத்துவ விளக்கம்' எனும் தலைப்பில் தந்தை பெரியார் ஆழமானதொரு உரையாற்றினார். இன்று (4.2.2019) டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்'' எனும் தலைப்பில் பெரியார்தம் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர்  ஆழமானதொரு விளக்க உரையினை வழங்கினார்.

டில்லி பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தத்துவத் துறையின் பேரா சிரியர் பி.கேசவகுமார் தலைமை வகித்தார். முனைவர் ஆயிசா கவுதம் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் பல துறை சார்ந்த பேராசிரியப் பெரு மக்கள் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் தமிழர் தலைவர் உரையினை செவிமடுத்தனர்.

மேலும் கூட்டத்தில்  கருநாடக மாநில மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்மகுமார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் தமிழர் தலைவரது உரையினைக் கேட்க வருகை தந்திருந்தனர். ஏறக்குறைய 70 நிமிடங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்பற்றி விளக்க உரையாற்றினார். அதற்கடுத்து 20 நிமிடங்கள் வருகை தந்தோரின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் விடையளித்தார்.

தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட சில செய்திகள்:

தந்தை பெரியார் தமது தொடக்க நிலைக் கல்வியைக் கூட முடிக்காதவர். சுயசிந்தனையாளர். அந்த சிந்தனைகள் இன்று பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களையும் தாண்டி கற்றறிந்த சான்றோர் மத்தியில் பேசப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வரும் நிலை இன்று உருவாகி உள்ளது. பெரியாரது குடும்பம் மத நம்பிக்கை, சடங்குகளைக் கடைப்பிடித்து பழுத்த கடவுள் நம்பிக்கையாளர்கள் உள்ள குடும்பம் ஆகும். அத்தகைய குடும்பத்தில் அந்த நம்பிக்கையிலிருந்து விலகி நின்று அதன் பாதிப்பு தனது செயல்களில் இல்லாதபடி இயல்பாகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

மனித சமுதாயம் ஏற்றத் தாழ்வின்றி சமத்துவமாக வாழவேண்டும்; எல்லோருக்கும் எல்லாம்' என்பதாக இருக்கவேண்டும் எனும் எண்ணங்கள் சிறு வயதிலிருந்தே  அவரிடம் தென்படத் தொடங்கியது. பிறப்பின் அடிப் படையில் மனிதர்கள் பாகுபடுத்தப்பட்டு, ஜாதி அடையாளத்துடன் இழிவுபடுத்தப்படுவது பெரியாரது மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில், தாகத்திற்குத் தண்ணீர் வேண்டி, உயர்ஜாதி குடும்பத்திடமும், தாழ்த்தப்பட்ட ஜாதி குடும் பத்திடமும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவர் பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட விதம் பின்னாளில் சுயமரி யாதைத் தத்துவத்தை மானுட குலத்திற்கே வழங்கிட வைத்தது. எதையும் ஏன்? எதற்கு? யாரால்?' எனும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்ந்து உண்மை நிலையினை அறிந்து கொள்ளும் உளப்பாங்கினை அவரிடம் உருவாக வைத்தது. 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என எளிமையாக, அழகாக அந்த நேரத்தில் ஓர் ஆழமான தத்துவ வெளிப்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிட வைத்தது. சுயமரியாதையும் (மானமும்), பகுத்தறிவும் (அறிவும்) ஒவ்வொரு மனிதருக்கும் உண்மையான அழகை வழங்கிடும் தன்மை வாய்ந்தது.' இதை உணராத நிலையில்தான் மனிதர்களிடம் உயர்வு - தாழ்வு நிலை ஏற்பட்டு, மனிதரை மனிதர் இழிவுபடுத்திடும் நிலை, அடக்குமுறை, அடிமைப்படுத்தி வைக்கும் சுரண்டல் நிலை உருவானது.

இந்த மாபெரும் உலகளாவிய பொருத்தப்பாடு கொண்ட மனிதநேய தத்துவத்தை வெறும் அறிவுசார் கூற்றாக மட்டும் பெரியார் வழங்கிடவில்லை. அதனை மனிதரிடம் உணரச் செய்து அவர்களை மேம்படச் செய்வதற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அத்தகைய பிரச்சாரம் பரந்துபட்ட அளவில் நடைபெறவேண்டும். தனது காலத்திற்குப் பின்பும் தொடர்ந்திடவேண்டும் எனக் கருதி அதற்காக ஓர் அமைப்பினை உருவாக்கினார். காரணம், பல நூற்றாண்டுகள் மனிதரிடம் நிலவி வரும் உயர்வு - தாழ்வு பெரும்பாலான உழைக்கும் மக்களை அடிமைப்படுத்திடும் நிலை ஒரு மனிதரது வாழ்நாள் காலத்தில் மாறிவிட முடியாது. சமூகத்தில் நிலவிடும் அடக்குமுறையினை பாதுகாத்து வரும் ஆதிக்கவாதிகள் அவ்வளவு எளிதாக மாறுபவர்கள் அல்ல; ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவினைப் பயன்படுத்தும் நிலை உருவாகும்பொழுதுதான் அவர்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்பதால், இயக்கம் சார்ந்த செயல்பாட்டை போராட்டம், பிரச்சாரம் என்ற வழிமுறைகளில் வன்முறைக்கு இடமின்றி அமைத்துக் கொண்டார்.

இந்த நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை' பெறுவதைவிட, முன்னுரிமை பெறவேண்டியது சமூக விடுதலை' எனக் கருதியதால், சமத்துவம், ஒடுக்கப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் என நடைமுறை காணவேண்டும் என்ற நோக்கில்தான் 1919 இல் காங்கிரசு கட்சியில் பெரியார் சேர்ந்தார். தனது எதிர்பார்ப்பு நிறைவேறாது என அவருக்குக் கிடைத்த அனுபவங்களினால் 1925 இல் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.

தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்திட தனியாக அமைப்பினை உருவாக்கினார். சுயமரியாதை இயக்கம் என தொடக்கக் காலத்தில் அழைக்கப்பட்டாலும், தனது பிரச்சார வல்லமையால், விடா முயற்சியால் அந்த அமைப்பு மாபெரும் இயக்கமாக  - சுயமரியாதை இயக்கமாக உருவெடுக்க கடுமையாக உழைத்து பெரியார் சமுதாயப் பணி ஆற்றினார்.

சமூகநீதியை முன்னெடுத்து, பார்ப்பனர் அல்லாத இயக்கமாக உருவான நீதிக்கட்சி அன்றைய சென்னை ராஜதானியில் 1920ஆம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்தது. தந்தை பெரியார் காங்கிரசுக் கட்சியில் வலியுறுத்தி, நடைமுறைப்படுத்த முடியாத 'வகுப்புவாரி உரிமை" 1928ஆம் ஆண்டு அரசாணையாக உருவானது. இந்த நிலை ஆட்சியில் உள்ளோருக்கு ஏற்பட்டதற்கு தந்தை பெரியாரின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சி, அதிகாரம் இவற்றில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் தந்தை பெரியாரிடம் அறவே இல்லை. ஆட்சியில் உள்ளோருக்கு அழுத்தம் அளித்து, மக்களிடம் தனது கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டி, அதன் மூலம் ஆட்சியில் உள்ளோரை சமூகநீதித் தளத்தில் நெறிப்படுத்துவதை தந்தை பெரியார் தமக்கான அணுகுமுறையாகக் கடைப்பிடித்து வந்தார். இன்றளவும் அவர் ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம், பின்னாளில் நீதிக்கட்சியையும் சேர்த்துக் கொண்டு, 1944இல் "திராவிடர் கழகமாக" இன்றுள்ள அமைப்பு அடையாளத்துக்கு வந்தது.

முதல் அரசமைப்புத் திருத்தச் சட்டம்


டில்லியில் தமிழர் தலைவர் அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, ரவிவர்மகுமார், கோ. கருணாநிதி மற்றும் வழக்குரைஞர்கள் சந்தித்தனர். கழகப் பொருளாளர் வீ. குமரேசன் உடனுள்ளார். (4.2.2019)

'நாடு அரசியல் விடுதலை பெற்று கல்வி, வேலை வாய்ப்புகளில் சமத்துவ நிலை வர வேண்டும்' என்ற இயக்கத்தில் நடைமுறையில் இருந்து வந்த "வகுப்புரிமை ஆணை" செல்லாது; அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத் தப்படும் 'பாகுபாடுபடுத்தல் கூடாது' எனும் நெறிக்குப் புறம்பானது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. உடனே, அன்றைய சென்னை மாகாணத்தில் - கேரளா, கருநாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா ஆகியவற்றில் சில பகுதிகளை  உள்ளடக்கிய தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, மாபெரும் போராட்டம் நடத்தி, மத்தியில் ஆட்சி புரிந்தவர்களின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தின் மூலம் 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்" என்பது 'இடஒதுக்கீடு' எனும் நிலையில் தொடர்ந்திட முடிந்தது. விடுதலை பெற்ற இந்தியா முழுமைக்கும் 'இடஒதுக்கீடு' நடைமுறையில் வர வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட முதல் திருத்த விதிகள் தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் மூலமாகத்தான் ஏற்பட்டது. தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது இயக்கம், ஒடுக்கப்பட்ட வகுப்பினரான பிற்படுத்தப்பட் டோருக்கு 'இடஒதுக்கீடு' நாடு தழுவிய அளவில் மத்திய அரசுப் பணியில் கிடைப்பதற்கு வழி அமைத்தது. மண்டல் குழு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அதனைத் தூசு தட்டி வி.பி. சிங் பிரதமராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு முதல் முறையாக நாடு தழுவிய அளவில் மத்திய அரசுத் துறைகளில் கிடைத்திட 'திராவிடர் கழகம்' எடுத்த முயற்சிகள் பெரிதும் காரணமாக அமைந்தது. 'தந்தைபெரியாரின் சமூகநீதிக் கொள்கைகள்' நடைமுறைக்கு வருகின்றது என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் பிரகடனம் செய்தார்.  சமத்துவம் என்பது கல்வி, வேலை வாய்ப்புகளில் மட்டுமல்ல, தனி மனித கொள்கைகளிலும், சமுதாய நிகழ்ச்சிகளிலும் ஏற்பட வேண்டும் என சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்தினை தந்தை பெரியார் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்.

'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்'

கோயில்களில் உயர்ஜாதியினருள் பார்ப்பனர் மட்டும் அர்ச்சகர் என்பது பாகுபாட்டின் ஒரு அம்சம். மற்ற 'பக்தன் தொட்டால் தீட்டாகிவிடும்' என்ற நிலை சமத்துவத்துக்கு எதிரான நிலை எனக் கருதி, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்' என  அதற்காகப் போராட்டம் நடத்தினார் தந்தை பெரியார். ஆட்சி மாற்றங்கள், அரசு கொண்டு வந்த ஆணை மீது நீதிமன்றத்தில் முறையீடு என பல தடைகளைத் தாண்டி  அண்மையில் நடைமுறைக்கு வந்தது. உரிய ஆகம பயிற்சிபெற்ற பார்ப்பனர் அல்லாதார், சமூகத்தின் ஆயத்தத்தில் உள்ளோர் அர்ச்சகராக கேரளா, தமிழ்நாடு கோயில்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இப்படி சமூக இழிவுகளை தீண்டாமை (Untouchability) பாராமை (Unseeability) பொருண்மை (Unapproachability) என அனைத்துத் தளத்திலும் பாகுபாட்டை ஒழித்திடும் மகத்தான பணியில் அமைந்த முதல் சட்ட வெற்றியினை தந்தை பெரியார் தனது வாழ்நாளிலேயே காண முடிந்தது.

தந்தை பெரியாருக்குக் கிடைத்த சிறப்புகள்

சுயமரியாதை பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி சமுதாயத்தில் ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கு இந்திய அரசு அவரது பிறந்தநாள் நூற்றாண்டில் (1879-1979) சிறப்பு அஞ்சல் தலையினை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. பெரியாரது 125ஆம் பிறந்த நாளில் இந்திய அரசு சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட்டு பெரியார்தம் பெருமைக்குச் சிறப்புச் சேர்த்தது. உலகளவிய பன்னாட்டு அமைப்பினை அய்க்கிய நாடுகள் சங்கத்தின் பிரிவான யுனெஸ்கோ அமைப்பு 1970-இல் தந்தை பெரியார் உயிரோடு இருந்த காலத்திலேயே "தென் ஆசியாவின் சாக்ரடீஸ்' புத்துலக தீர்க்கதரிசி' என விருது வழங்கி கவுரவித்தது.

தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவத்தால் மானுடம் முழுமையும் பயன் பெறும் என்பதை 'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இலக்கியமாக்கினார். இன்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, குவைத், மலேசியா, சிங்கப்பூர், மியான்மா எனப் பல நாடுகளிலும் பெரியாரது சுயமரியாதைத் தத்துவம் பல்கிப் பெருகி போற்றப்பட்டு வருகிறது. 2017இல் ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் அமெரிக்கா - மேரிலெண்ட் மாண்ட்கேரியர் கல்லூரியில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பன்னாட்டு இரண்டாம் மாநாடு நடைபெற உள்ளது.

மனித நேய வரலாற்றில் 21ஆம் நூற்றாண்டும், வரும் நூற்றாண்டுகளும் பெரியாரது சுயமரியாதைத் தத்துவத்தின் பல்வேறு பரிமாணங்களில் பயன்பெற முடியும். பெரியார் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், அவரது சமுதாயப் பணி, இந்நாடு தழுவிய அளவில் நிகழ்ந்திருந்தாலும் அவரது 'சுயமரியாதைத் தத்துவம்" உலகளாவிய அளவில் மானிடரை நெறிப்படுத்த வல்லது. பெரியார் வாழ்க! சுயமரியாதைத் தத்துவம் பரவிடுக! பகுத்தறிவுப் பயன்பாடு செழுமையாக அமைக!

இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் நன்றி நவிலலை சந்தீப் யாதவ் வழங்கினார்.

வருகையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு தமிழர் தலைவர் விளக்கமாக விடை அளித்தார். தமிழர் தலைவரின் கருத்தாழமிக்க 75 நிமிட ஆங்கில உரை, பங்கேற்ற அனைவரது சிந்தனைகளையும் ஈர்த்தது. நிகழ்ச்சி முடிந்த பின்பும் கருத்து விளக்கம் கேட்டு, மாணவர்களும், ஆசிரியர் பெரு மக்களும் தமிழர் தலைவரை சூழ்ந்து கொண்டது உரையின் வீச்சை உணர்த்தியது.

டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய 'சுயமரியாதைத் தத்துவம்' பற்றிய உரை இயக்க வரலாற்றில் சிறப்புக்கு உரியதாக இருந்திடும் தன்மையில் விளங்கியது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles