திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா?
செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது
திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தொல்பொருள் ஆய்வுகளை முடக்கிவிடும் பி.ஜே.பி. அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
1. மதுரையில் சென்னை உயர்நீதிமன்றப் பிரிவில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு 12.2.2019 அன்று ஒரு வழக்கில், தமிழர்தம் நாகரிகம், பண்பாடு அறிவது முக்கியம்; இதில் மத்திய அரசு காலந்தாழ்த்துவது ஏற் புடையதல்ல.
தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்படும் தொல்லியல் ஆய்வுகள்!
2. கீழடி ஆய்விலும் அதிகாரி இடம் மாற்றம் எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
3. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடத்தப்பட்டதே அதன் முடிவு என்னவாயிற்று? அந்த அகழாய்வு அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்க வில்லை?
4. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளையில் அகழாய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதில் அளிக்கவேண்டும்; தவறும் பட்சத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.
சிவகங்கை மாவட்ட கீழடி ஆய்வுகள் - திராவிட நாகரிகமான மொகஞ்சதாரோ, ஹரப்பாவிற்கும்கூட முந் தையதாக இருக்கக்கூடியதாகவும், மதுரை மாவட்டத் திலும்கூட பரந்துபட்ட பழம்பெரும் சின்னங்கள் ஆய்வில் கிடைக்கவிருக்கிறது என்பது போன்ற ஆய்வுத் தகவல்கள் முன்பு வந்த காரணத்தால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான மோடி ஆட்சி இதில் போதிய அக்கறை காட்டாதது மட்டுமல்ல; மேற்கொண்டு ஆய்வு நடத்தாமல் மூடி, ஒரு இறுதி நிலைக்குக் கொண்டு வரத் துடியாய்த் துடிக்கின்ற அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றியதோடு, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் எவ்வளவு இதற்குக் குழிவெட்ட முடியுமோ அவ்வளவும் செய்து வருகிறார்.
அண்ணா தி.மு.க. அரசு - மாநில அரசு - தாங்கள் ஆய்வைத் தொடர்வோம் என்று கூறியது; ஆனால், நடைமுறையில் அது விரைந்து பின்பற்றியதாகவும் தெரியவில்லை.
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வில் முன்பு இருந்த இரண்டு நீதிபதிகள் கீழடி சென்றுகூட நேரில் பார்த்து உத்தரவே போட்டனர்!
எதற்கும் மத்திய அரசு அசைந்து கொடுக்காமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
நாம் கேட்பது பிச்சையல்ல; சலுகை அல்ல; நமது உரிமையைத் தான் கேட்கிறோம்!
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை களில் ஒன்று இந்த கோரிக்கை.
நம் மொழி, பண்பாடு, நாகரிகத்தைப் பாதுகாத்துக் கொள்வது அடிப்படை உரிமை என்பதை இந்திய அரசியல் சட்டம் 29(1) பிரிவு நமக்கு அளித்துள்ள, எவ ராலும் பறிக்கப்பட முடியாத உரிமையாகும்!
காளையைக் குதிரையாக்கிய பா.ஜ.க. அரசு
திராவிடர்தம் பழைய மொகஞ்சதாரோ, ஹரப்பா கலாச்சார சின்னமான காளை மாட்டையே முன்பு - அமெரிக்காவில் சிலரைப் பிடித்து ஆரியர்களின் குதிரைச் சின்னமாக மாற்றிட முயற்சியைச் செய்து தோல்வி கண்டது வாஜ்பேயி தலைமையில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி என்பது பழைய வரலாறு!
செம்மொழி நிறுவனத்தை சீர்குலைப்பதா?
அதுபோல என்றுமுள தென்தமிழ்' என்ற பெருமைக் குரிய நமது தாய்மொழி தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியை அதிகாரப்பூர்வமான ஆணையாகவே பெற்றார் தமது விடாமுயற்சிமூலம் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது; காங்கிரசு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) அரசு அதனை வழங்கியது!
என்றாலும், தொடர்ந்து மத்திய அரசுகளும், கட்சிக் கண்ணோட்டத்தோடு ஜெயலலிதா அரசும், செம்மொழி நிறுவனத்தை ஒரு செயலற்ற பொம்மைக் காட்சியாகவே ஆக்கி ஒரு கெட்ட மகிழ்ச்சியைப் பெற்று வருவது மகாவெட்கக்கேடு!
பிரதமர் மோடி திடீரென தமிழின் பெருமைபற்றி மங்கி பாத்தில்'' பேசுவார்; தமிழ்நாட்டுக்கு வந்து ஓட்டு வேட்டையாடும்போது தமிழில் சில வாக்கியங்கள் பேசி கைதட்டல் வாங்குவார்!
ஆனால், உண்மையில் மத்திய அரசு நமக்கு - செம்மொழி விஷயத்திலும்கூட வெறுப்புடனும், மாற் றாந்தாய் மனப்பான்மையுடனும்தான் நடந்துகொள்கிறது. இது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல; பூமிப் பந்தில் எங்கும் வாழும் தமிழர்களின் தொடர் கோரிக்கைகளால், செம்மொழி நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்தது; அதனைக் கலைஞர் கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்திற்காகப் பழி தீர்க்கும் நோக்கில், அதனை அலட்சியத்தோடு பார்ப்பது, நடத்துவது மிகமிக கண்டனத்திற்குரியதாகும்!
இதுகுறித்து ஒரு பேட்டியில், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறியுள்ளது மிகவும் சிந்திக்கத்தக்கதோடு, போராடவேண்டிய தேவையையும் வலியுறுத்துவதாகவே உள்ளது!
மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் 2004 ஆம் ஆண்டு தமிழ்மொழி இடமும் பெற்றது!
அப்போதே மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இதனை நிர்வகிக்கும் என்பதால், ஒரு நிரந்தர இயக்குநரை அதிலும் தமிழ்த் தகுதியுள்ள ஒருவரை அமர்த்தாமலும், போதிய அக்கறை காட்டாமலும், முடங்கவே செய்யப்பட்டு வருகிறது!
ஆய்வறிஞர்கள் எங்கே? எங்கே??
(1) செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் முதுநிலை ஆய்வறிஞர் பேராசிரியர் இரா.கோதண்டராமன் கூறும் போது, தொடக்கம் முதல் 14 ஆண்டுகளாக தமிழுக்கே தொடர்பில்லாத அய்.அய்.டி.யின் பொறியியல் பேரா சிரியர்களான 6 பேர் இதுவரை "பொறுப்பு இயக்குநர் களாகவே'' அமர்த்தப்பட்டு, அதனை வளரவிடாமல் பார்த்துக் கொண்ட நிலை!
(2) 16 ஆய்வறிஞர்கள் இருந்த இடத்தில் இப்போது ஒருவர்கூட இல்லை! என்னே கொடுமையே!
(3) 150 நிரந்தர அலுவலர்களுடன் செயல்பட வேண்டிய நிறுவனத்தில் வெறும் 40 பேர்கள், அதுவும் தொகுப்பூதியப் பணியில் உள்ளனர்!
நிதி உதவி குறைப்பு!
(4) மத்திய நிதி ரூ.25 கோடியிலிருந்து ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டது.
(5) அய்ந்தாண்டுத் திட்டத்தின்கீழ் ரூ.74.5 கோடி பெற்ற நிறுவனத்தால், இப்போது ரூ.3.5 கோடி மட்டுமே பெற முடிகிறது.
(6) தற்போது என்.அய்.டி. பதிவாளர் கூடுதல் பொறுப்பு பதிவாளராக 2 ஆண்டுகளாக நீடிக்கும் கொடுமை!
உண்மை தமிழ் இன உணர்வாளர்களை, மொழி ஆர்வலர்களைத் திரட்டி நாம் போராடியாகவேண்டும்!
தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலரும் இதுகுறித்து போதிய கவலை - அக்கறை செலுத்தாதது வேதனைக்குரியது!
மோடி அரசு மீண்டும் வரக்கூடாது என்பதற்கான காரணம் என்ன?
மீண்டும் மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு ஏன் வரக்கூடாது? என்பதற்கு இதனையும் ஒரு பரப்புரைக் களமாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திட வேண்டும்.
செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக பணத்தை - மக்கள் வரிப் பணத்தை செலவழிக்கும் மத்திய அரசு செம்மொழி தமிழைப் புறக்கணிப்பது - அது எம்மொழி என்பதாலா?
மானமும் அறிவும் உள்ள திராவிடர்கள் - தமிழர்கள் சிந்திக்கவேண்டாமா?
செயலாற்றக் களம் காண வேண்டாமா?
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
14.2.2019