மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம்!
புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி
புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்; மக்களின் உரிமைகளுக்காக புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு அறவழிப்பட்ட ஆத ரவை தெரிவிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நேற்று (16.2.2019) மாலை புதுச்சேரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
ஆட்சிக்கு முட்டுக்கட்டைப் போடுவது ஆளுநரின் வேலையல்ல!
புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள் ஆகியவர்களின் மக்களாட்சியில், மக்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மக்களாட்சியின் முறைப்படி ஆட்சி நடத்திக்கொண்டு வருகின்ற காலகட்டத்தில், இங்கே இருக்கக்கூடிய மேதகு லெப்டினன்ட் கவர்னர் என்று சொல்லக்கூடிய புதுவை ஆளுநர், ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ஆளுநர் வேலையல்ல.
கட்சிக் கண்ணோட்டத்தோடு, அரசியல் பார்வையோடு...
ஆளுநர் - முதல்வர் உறவு என்பது கணவன் - மனைவி உறவு போன்று இருக்கவேண்டிய ஒன்றாகும். மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகத்தான் இரு பதவிகளும் இருக்கின்றன. ஆனால், இங்கே திட்டமிட்டே, வேறொரு கட்சியைச் சார்ந்த ஒரு முதல்வர் வந்திருக்கிறார் என்று, கட்சிக் கண்ணோட்டத்தோடு, அரசியல் பார்வையோடு ஆரம்பக் காலத்திலிருந்தே, இந்த மக்கள் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்; இது முதல்வருக்கு எதிராகவோ, அமைச்சர்களுக்கு எதிராகவோ ஆளுநர் நடந்துகொள்கிறார் என்று பொருளல்ல; அதனுடைய விளைவு என்பது மக்களுக்கு எதிராக. எனவே,இப்பொழுதுமுதல்வரும்,மக்களும்போரா டுவது என்பது மக்களுக்காக. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; நிதி கிடைக்கவேண்டும்; அவர்களுடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்பதற்காக நடைபெறக் கூடிய, அரசியல் சட்ட ரீதியான போராட்டமாகும்.
மிக அசாதாரணமானதாக இருக்கிறதே, ஆளுநர் மாளிகைக்குமுன் முதல்வரும், அமைச்சர்களும் போராட் டம் நடத்துகிறார்களே, பல ஊர்களிலும் அப்போராட்டம் தொடர்கிறதே என்று நீங்கள் எல்லாம் கேட்கலாம். அசாதாரண சூழ்நிலை ஏற்படும்பொழுது, அசாதாரண பரிகாரம் அதற்குத் தேவை. அதுதான் இங்கே ஏற்பட்டு இருக்கிறது.
ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்
எனவேதான், உடனடியாக இந்தப் பிரச்சினையை வளர விட்டுக் கொண்டிருக்கக்கூடாது. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர்தான் முதலமைச்சர். ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; இந்த மாநிலத்திற்கு டில்லியால் அனுப்பப்பட்டவர். ஆகவே தான், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
எனவே, உண்மையான அதிகாரம் மக்களுடைய பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. எனவேதான், 39 கோரிக் கைகளை இங்கே வைத்திருக்கிறார்கள். ஆளுநர் அவர்கள் அந்தக் கோப்புகளில் கையெழுத்துப் போடுவதில்லை.
வேறொரு நிலையில் நான் கேள்விப்பட்டேன், தொலைக்காட்சியின்மூலமாக நேரிலும் பார்த்துக் கொண் டிருந்தேன். ஆளுநராக இருக்கக்கூடியவர், இல்லை, முடியாது என்று சொல்லாமல், திரும்பத் திரும்ப அந்தக் கோப்புகளைத் திருப்பி அனுப்புவது என்பது - இல்லாத ஊருக்கு வழி சொல்வது போன்றதும்; புரியாத பாஷையில், தெரியாத மனிதன் பேசுவது போன்றதுமாகும். இது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
பாதிக்கப்படுவது மக்கள்தான்!
இல்லையானால், இதற்கு ஆதரவு என்பது புதுவையில் மட்டும் இருக்காது; தமிழ்நாட்டிலும் சேர்ந்து ஆதரவை உருவாக்கக்கூடிய நிலையை எங்களைப் போன்றவர்கள் எந்தவிதப் பிரதிநிதிபலனும் இல்லாமல் ஏற்படுத்துவோம். இங்கே ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும்; இது பாசிச ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இவர்களுடைய பணி மக்களுக்காகத் தொண்டு செய்வதுதான். அவர்களுடைய பணிகள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அரிசி கிடைப்பதோ, இலவசமாகப் பொருள்களைப் பெறுவதோ, அல்லது ஏற்கெனவே ஒரு கட்சித் தேர்தல் அறிக்கையில் சொல்லி, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும்பொழுது, அவர்கள் அத்துணை பேரும் இன்றைக்குப் போராடக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
அண்ணா - கலைஞர் ஆகியோரின் கருத்து
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், வாதாட வேண்டிய அளவிற்கு வாதாடிப் பார்ப்போம்; அப்படி இல்லையானால், அதற்கு அடுத்த கட்டம் போராடிப் பார்க்கவேண்டும்'' என்று சொன்னார்.
அதேபோன்று, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சொல்லும்பொழுது, உறவுக்குக் கை கொடுப்போம்; உரி மைக்குக் குரல் கொடுப்போம்'' என்று மிகத் தெளிவாக சொன்னார்.
இதுதான் ஒரு ஆட்சியினுடைய, மத்திய - மாநில ஆட்சிகளின் உறவு முறை. அப்படி இருக்கும்பொழுது, உறவுக்குக் கைகொடுக்க என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள்.
உரிமைக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்
முதலமைச்சர் அவர்கள் டில்லிக்குச் சென்றாலும், இங்கே இருந்தாலும், உறவுக்குக் கைகொடுப்பதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அது பயன் படவில்லை என்கிறபொழுதுதான், இப்பொழுது உரி மைக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனவே, இந்த உரிமைப் போரில் அவர்கள் வெல் வார்கள்; வெல்லவேண்டும்; இது மக்கள் கிளர்ச்சி என்பதற்காக, எங்களுடைய விருப்பத்தைத் தெரிவிப்ப தோடு, இதற்கு அறவழிப்பட்ட ஆதரவை, ஒரு இயக்கம், கட்சி என்ற சார்பில் அல்ல, தமிழ்நாட்டு மக்கள், ஜனநாயகத்தை விரும்பக்கூடிய அத்துணை பேரும், மக்களுடைய உரிமைகளுக்காக போராடியக்கூடிய, மனித உரிமைக் காவலர்கள், போராளிகள் என்ற முறையில், இவர்கள் போராடுவது சமூகநீதியின் இன்னொரு அம்சம் இது. ஆகவே, அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறோம், விரும்புகிறோம்.
அறவழிப்பட்ட ஆதரவு
அறவழிப்பட்ட ஆதரவையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். தேவையானால், தமிழ்நாட்டிலும் இதற்கு ஒரு அறவழிப்பட்ட ஆதரவை நாங்கள் தெரிவிப் போம் என்பதை இங்கே உங்கள் முன்னால் அறிவிக் கின்றோம்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.