உயர்ஜாதி-பார்ப்பனியத் தொல்லை - ஜாதிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி அதனால் ஏற்படும் என்றால்
புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி
புதுச்சேரி, மார்ச் 4 இந்த நாட்டிலேயே அதிகத் தொல்லை - உயர்ஜாதி, பார்ப்பனியத் தொல்லைதான் - ஜாதிக் கொடுமைதான் - வருணாசிரம தர்மம்தான். நான் அதற்குப் பலியானால், அதற்கொரு முற்றுப்புள்ளி வரும் என்ற நிலை இருந்தால், அதற்கு ஒருமுறை அல்ல, பலமுறை வேண்டுமானால் சுட்டுக் கொல்லட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
நேற்று (3.3.2019) மாலை புதுச்சேரிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
ஒருமுறை அல்ல, பலமுறை சுட்டுக்
கொல்லப்படுவதை விரும்புகிறேன்!
செய்தியாளர்: தனியார் நாளிதழில் உங்களைப்பற்றி ஒரு கருத்து வந்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: என்னவென்று வெளியிட்டிருக் கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள். செய்தியாளர் நண்பர், சொல்வதற்குச் சங்கடப்பட்டு கேட்கிறார்.
இன்றைக்கு வெளிவந்த தினமலர்' வார ஏட்டில் கேள்வி -பதில் பகுதியில் உள்ளதை நான் அப்படியே படிக்கிறேன், கேளுங்கள்.
கே.வெங்கட்ராமன், தென்காசி
தன்னைத் தானே, தமிழர் தலைவர்'
எனக் கூறிக் கொள்ளும், தி.க. தலைவர்,
வீரமணி, இந்து மதத்தில் உள்ள, ஒரு
ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும்,
மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற
ஜாதிக்காரர்களைப்பற்றி, வாய் திறப்ப
தில்லையே... இது ஏன்?
இவர் திட்டும் ஜாதியினர், கம்போ, தடியோ கையில் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம்தான்!
அதே ஜாதிக்காரரான, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்குமுன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார, கலெக்டரை சுட்டுக் கொன்று, தானும் சுட்டு செத்தான், இதே ஜாதிக்காரன்.
இப்போது, தேர்தல்கள் நெருங்குகின்றன... இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்று கூடி, பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.
அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த, வெறிகொண்ட இளைஞன் ஒருவன், இவர் களை, கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டு விட்டால்...
எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தினமலரில்' எழுதப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், என்னை சுட்டுக் கொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள்.
காந்தியாருக்கு ஒரு கோட்சே போன்று, ஆஷ் துரைக்கு ஒரு வாஞ்சிநாதன் என்கிற பார்ப்பான் வந்ததுபோன்று, வீரமணியை சுட்டுக் கொல்லவேண்டும் என்று சொல் கிறார்கள். அதை எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக தேர்தலுக்கு முன்பே செய்தார்கள் என்றால், நன்றியோடு இருப் பேன். ஏனென்றால், நான் பெரியார் தொண்டன்.
பெரியார் அவர்கள் சொல்வார்,
உயிர் போகும்போது, நோயினாலோ, விபத்தினாலோ போகக்கூடாது. ஒரு இலட்சியத்திற்காக உயிர் போனால், அந்த இலட்சியம் விரைவில் நிறைவேறும். இந்த நாட்டி லேயே அதிகத் தொல்லை - உயர்ஜாதி, பார்ப்பனியத் தொல்லைதான்.
உயர்ஜாதித் தன்மை, வேற்றுமைதான் - ஜாதிக் கொடுமைதான் - வருணாசிரம தர்மம்தான்.
நான் அதற்குப் பலியானால், அதற்கு முடிவான ஒரு முற்றுப்புள்ளி வரும் என்ற நிலை வருமல்லவா, அதனால், அதற்கு ஒருமுறை அல்ல, பலமுறை சுட்டுக் கொல்லப்படுவதை விரும்புகிறேன்.
ஒரு விரல் புரட்சியின்மூலம்
நல்ல மாற்றம் ஏற்படும்!
செய்தியாளர்: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிகள் கொள்கைக்கான அடிப்படையில் கூடு கின்றனவா?
தமிழர் தலைவர்: ஒரு சிறிய எழுத்துத் திருத்தம்; கொள்கை என்பதை கொள்ளை என்று மாற்றிக் கொள் ளுங்கள். கொள்கையற்ற, கொள்ளைக்கான, லட்சியமற்ற கூட்டணி.
இதை நாங்கள் சொல்லவில்லை; அவர்களே சொல்கிறார்கள். கொள்கை வேறு; கூட்டணி வேறு என்று அவர்களே ஒப்புக்கொண்டார்கள்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், கொள்கையே இல்லாதவர்கள் கொள்கையைப்பற்றி பேசக்கூடாது.
காலையில் ஒரு கொள்கை; மதியம் ஒரு கொள்கை; இரவு ஒரு கொள்கை. நாளைக்குக் காலையில் எந்தக் கொள்கை என்றே அவருக்கே தெரியாது என்கிற ஒரு கொள்கை.
ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்கள் அதற்கு நல்ல தீர்ப்பளிப்பார்கள். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளம் காட்டவேண்டிய அவசியமில்லாமல், எல்லோரும் ஒன்று சேர்கிறார்களே, அது மக்களுக்குப் பொத்தானை அழுத்துவதற்கு மிகவும் வசதி. ஒரு விரல் புரட்சிக்கு மிகவும் நல்லது.
தனித்தனியே போர்க்களங்களை அமைத்துக் கொண்டிருப்பதைவிட, ஒன்றுபட்ட எதிரிகள் ஒன்று சேர்ந்தால், எல்லோரையும் சேர்த்து ஒரு அழுத்து அழுத்து. அழுத்து என்றால், வேறொன்றும் இல்லை; பொத்தானை அழுத்துகின்ற புரட்சி. ஒரு விரல் புரட்சி - அதன் காரணமாக அரசியலிலே ஒரு புரட்சி ஏற்படும்.
அந்தப் புரட்சியின் மூலமாக ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்பதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். ஒவ்வொரு கட்சிக்காரர்களும் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் வேரூன்றுவதற்கு உழைத்தவர் சி.மு.சிவம்
காரைக்கால் பகுதியில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக, திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் வேரூன்றுவதற்கு உழைத்த சி.மு.சிவம் அவர்களுடைய நூற்றாண்டு விழா.
புதுவையைப் பொறுத்தவரையில் இரண்டு சிவம்கள். ஒருவர் காரை சிவம்; மற்றொருவர் புதுவை சிவம்; இரண்டு சிவம்களும் ஈரோட்டிற்கு வந்து சேர்ந்தன. அதனுடைய விளைவாகத்தான், ஒரு பகுத்தறிவுப் பாசறையை இங்கே உருவாக்கியவர்கள். அதனுடைய விளைவாக, மிகப்பெரிய அளவிற்கு, திராவிட இன உணர்வும், சமுகநீதிக் கொள்கையும் புதுச்சேரி மாநிலத்தில் உருவாக்குவதற்குப் பாடுபட் டார்கள். காரை சிவம் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி அவர்களும், மாண்புமிகு அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களும் அந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளரும், நம்முடைய தோழருமான சிவா அவர்களும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய தோன்றாத் தலைவரும், சமுகநீதி இயக்கத் தலைவருமான தோழர் விசுவநாதன் அவர்களுடைய தலைமையில் இன்றைக்கு இங்கே நடைபெறுகின்ற விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கின்றோம்.
புதுவையில் முதலமைச்சர் உள்பட போராடியது மாநில உரிமைகளுக்காகத்தான்!
மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஏனென்றால், மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பண வெறி சக்திகள், பதவி வெறி சக்திகள் ஒன்றாக இணைந்து, கொள்கைக்கும், கூட்டணிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், புதுவை மாநிலம் அதனுடைய பொறுப்பை உணர்ந்து, மாநில உரிமைகளுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் போராடவேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லக் கூடிய மிக முக்கியமான மாநாடாக, கொள்கை மாநாடாக இந்த மாநாடு நடை பெற்றிருக்கிறது. அதற்காக இங்கே வந்திருக்கின்றோம். அவர் பெயரில் ஒரு மலரை வெளியிட்டிருக்கிறார்கள்; அதனை நான் வெளியிட்டு, முதல்வரிடம் கொடுத்திருக்கின்றோம். முதலமைச்சர் அவர்கள் இங்கே தெளிவாகவே சொன்னதைப்போல, இந்தப் போராட்டம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கிடையில் நடப்பதல்ல; புதுவை அரசாங்கத்தினுடைய முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் போராடியது என்பது மாநில உரிமைகளுக்காகத்தான்.
திருப்பம் தரும் மாநாடு
இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை, மிக முக்கியமான ஒரு அடிப்படையான தேவை என்னவென்றால், மாநிலத்திற்கென்று தனியே ஒரு மாநில அந்தஸ்து உருவாக்கப்படவேண்டும். அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும். நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் முடிந்தவுடன், புதிய ஆட்சி அமையவிருக்கிறது. அந்த ஆட்சி அமையும்போது, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி இப்படி எல்லா முற்போக்கு இயக்கங்களும் ஒன்றாக சேர்ந்து, மத்தியில் ஆட்சி அமைக்கும்பொழுது, இதுபோன்ற மாநில சுயாட்சி நிச்சயமாகக் கவனிக்கப்படும் என்று ஏற்கெனவே ராகுல் காந்தி அவர்களும் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இது ஒரு நல்ல திருப்பமான நேரத்தில், இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கே வந்திருக்கின்றோம்.
இது எங்களை கொள்கை ரீதியாக ஒன்றுபடுத்தி இருக்கக்கூடிய மிக முக்கியமான பொதுப் பிரச் சினை. புதுச்சேரி மக்களுக்காக மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும்கூட, நீட் போன்ற பிரச்சினை, மாநில உரிமைகள், கல்வி உரிமைகளைப் பறிக்கக்கூடிய அளவில் இருந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த மாநாடு ஒரு திருப்பம் தரும் மாநாடாகும்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.