கடல் இல்லா வேலூர் கருங்கடலாகட்டும்!
தமிழர் தலைவர் அழைக்கிறார் வாரீர்! வாரீர்!!
அன்னை மணியம்மையார் பிறந்த அதே வேலூரில் அவர்களுக்கு நூற்றாண்டுப் பெரு விழா! கடல் இல்லா வேலூர் கருங்கடலாக மாறிட வாரீர்! வாரீர்!! என்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அன்பழைப்பு அறிக்கை வருமாறு:
வருகிற 10 ஆம் தேதி, அன்னை ஈ.வெ.ரா.மணியம் மையாரின் நூற்றாண்டு தொடக்க விழா - அவர் பிறந்த வேலூர் மாநகரில் வெகு சீரும் சிறப்புடனும் கொண்டாடிட நமது மாநில அமைப்பாளர்களும், வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய கழக மாவட்டப் பொறுப்பாளர்களும், ஆதரவாளர்களும், பகுத்தறிவாளர்களும், பெரியார் மருத்துவ அணியின் முக்கிய பொறுப்பாளர்களும் ஓரணியில் திரண்டு பம்பரமாய்ச் சுழன்று சுழன்று - வெகு குறுகிய காலத்தில் மிகப்பெரிய விழாவை, வரலாறு படைக்கவிருக்கும் முயற்சிகளில் இறங்கி, கடுமையாக உழைத்து வருகின்றனர்!
பொதுமக்கள் ஆதரவும், அனைத்துக் கட்சித் தோழர்களின் ஊக்கமும், உற்சாகமும், ஒத்துழைப்பும் நமக்கு; விழாவை நடத்திட எவ்வளவு எத்தகைய ஆதரவு பெருகுகிறது நமக்கு - முக்கிய அரசியல் திருப்பம் ஏற்படவிருக்கும் காலகட்டத்தில் என்று அறிய அறிய நமது மகிழ்ச்சியும், உவகையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொங்கி வழி வதாக உள்ளது!
வேலூர் தந்த வீரத்தாய்க்கு வேலூரில் விழா!
வேலூர் தந்த வீரத்தாய், விவேகத்தாய், தியாகத்தாய், திராவிடத்தைக் காத்த தீரம் மிக்கத் தாய் - அசைக்க முடியாத கொள்கையால், ஒப்புவமை காட்ட இயலாத தொண்டறத்தின் ஊருணியான வெற்றித்தாயின் நூற்றாண்டு விழா - அந்த மாநகரத்தில் தகத்தகாய ஒளியுடன் 10 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. மாலை நேர அந்த மாநாடு - கொண்டாட்டம் ஒரு மகத்தான பல்கலைக் கழக வகுப்பறைபோல நடந்து, ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கும், பெண்ணடிமை அழிப்பிற்கும், சமுகநீதி செழிப்பிற்கும் உரிய விளைச்சலாய் எங்கும் பசுமையுடன் காட்சியளிக்கும் பயிர்போல, கொள்கை உழவர்களாகிய நம்மை உவகைப் பெருங்கடலில் தள்ளுவதாக அமையும்!
அவரது சொந்த நிலத்தை - வேலூர் அருகே உள்ள லத்தேரி என்னும் ஊரின் அரசு பள்ளிக்கே இலவசமாய்த் தந்த - விளம்பரம் தேடாத வீராங்கனை நம் புறநானூற்று வீரத் தாய்!
தந்தைக்குத் தாயாய் - செவிலியாய் - மருத்துவராய் இருந்த அன்னை!
நம் ஆசானுக்கு சட்டப்படி இணையராகி, நடை முறை வாழ்வில் தாயாய், செவிலியாய், மருத்துவராகி, 95 ஆண்டுகாலம் அய்யாவை வாழ வைத்து, அவர் கண்ட நாத்திக - பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்திற்கும், திராவிடர் கழகத்திற்கும் தலைமை தாங்கி, உடல் நலிந்தாலும், உள்ளம் நலியாத வளமைமிக்கவராய் போராட்டக் களத்தில் நின்ற நம் அன்னைக்கு நாம் நன்றி காட்ட, வீர வணக்கம் செலுத்த குடும்பம் குடும் பமாய் வேலூரில் விழாக் கோலத்தோடு திரண்டு வர வேண்டாமா?
நம் இன எதிரிகள் துப்பாக்கி ஏந்துவார்களாம்!
கடந்த 23, 24 ஆகிய நாள்களில் தஞ்சையில் சந்தித்தோம். எத்துணை மகிழ்ச்சிக் கடலின் குளிப்புகள்! சென்ற திங்கள் திருவிழா முடிந்தது - சிறப்பாக இந்த மாதப் பெருவிழா வேலூரில் மீண்டும் வரலாறு படைக்க வேண்டாமா?
அதுவும் நம் இன எதிரிகள் எம்மைக் குறி வைத்து புல் ஏந்தும் கைகள் துப்பாக்கி ஏந்துவோம்'' என்று போலித் துணிவுடன், காலிக் காவி முடிவுடன் எழுதும் நேரத்தில் அதனை எதிர்கொள்ள இயற்கையாக அமைந்த வேலூர் அன்னையார் நூற்றாண்டு விழா வைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கில் கூடி, "இதோ எங்கள் எழுச்சி இதுதான்; ஆரியமே உனக்குத் தகுந்த பதிலடி'' என்று காட்டவேண்டாமா?
1946 இல் சேலத்தில் பார்ப்பனர்களின் சவாலும் - தந்தை பெரியாரின் பதிலடியும்!
1946 ஆம் ஆண்டில் சேலத்தில் பிராமணர்கள் மாநாட்டில் புல் ஏந்தும் கைகளில் வாளேந்துவோம்'' என்று கூறியபோது, தந்தை பெரியார் கேட்டாரே (அப்போது) புல் ஏந்துபவனே வாள் ஏந்தினால், பரம்பரை பரம்பரையாக வாளேந்துபவன் கைகள் என்ன ஏந்தும்?''
விரல் உரல் ஆனால்,
உரல் என்னவாகும்?'' என்று முழங்கினாரே!
களப் போராளிகளான கருஞ்சட்டைக் குடும்பங்கள் கடலில்லா வேலூரில் கருங்கடலாய்ப் பொங்க வேண்டாமா?
சந்திப்போமா, சந்திப்போமா!
சந்திப்போமா, சரித்திரம் படைக்க? சந்திப்போமா, ஆரியத்தின் ஆணவத்தை அடக்க?
சந்திப்போமா, மகளிர்தம் விலங்கொடிக்க?
சந்திப்போமா, புது யுகத்தினைப் பூபாளம் பாட?
திராவிடத்துத் தீரர்களே, வீரர்களே, வீராங்கனை களே, வேலூர் அழைக்கிறது; விரைந்து வந்து கூடுங்கள் மார்ச் 10 இல்!
நம் கொள்கைக் குடும்பத்து உறவுகளைக் காண எம் கண்கள் தேடுகின்றன, தவறாமல் வாருங்கள் குடும்பம் குடும்பாய்!
அன்னையாரின் தொண்டறத்தின் வெற்றிக் கதிர் - அவர் பிறந்த வேலூர் மண்ணிலிருந்து அகிலத்திற்குப் பாயட்டும்!
மார்ச் இது! எனவே, மார்ச்! மார்ச்!! என தோழர்களே, வாரீர்! வாரீர்!! வாரீர்!!
உங்கள் தோழன், தொண்டன்
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
5.3.2019