வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத கல்விக்கான ஏற்பாடுகளை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்க பரிந்துரைக் கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. இந்த வரைவு தயாரிக்கும் பணி முடிந்து 31.5.2019 அன்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க https:\\mhrd.gov.in என்ற இணையதளத்தில் புதிய கல்விக் கொள் கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள புதிய கல்விக் கொள்கை நடை முறைப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியா? சமஸ்கிருதமா?
மும்மொழிக் கல்விக் கொள்கையானது தாய் மொழியுடன் இணைப்பு மொழியாக ஆங்கிலம், அவற்றுடன் வேறொரு மொழி யாக இந்தி இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித் தேர்வு மாநிலங்களின் அடிப் படையில் இருக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் - எடுத்துக் காட்டாக தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில் மூன் றாவது மொழி என்ன என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறப் பட்டுள்ளது. ஆனால் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழி இந்தியாக மட்டும்தான் கட்டாயமாக இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளதானது இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத - குறிப்பாக தமிழ் நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது. சமஸ்கிருதத்தை உயர்நிலைக் கல்வி நிறுவனங்கள் வரை பயிற்றுவிக்க வேண்டும் என்பதெல்லாம் பார்ப்பனீயக் கலாச்சாரத் தையும், ஆர்.எஸ்.எஸ். - பிஜேபியின் அடிப் படை நோக்கமான இந்துத்துவாவையும் கல்வி மூலம் திணிக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியான ஏற்பாடாகும்.
யோகாவும் பாடமாம்
அதேபோல் நீர்மேலாண்மை, யோகா ஆகியவற்றையும் பாடமாக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து பொது மக்கள் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு தனது இரண்டாம் பயணத்தின் தொடக்கத்திலேயே இந்தி பேசாத மாநிலங்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.
இரு மொழி மட்டுமே தமிழ்நாட்டில்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும் தான் - இரு மொழிக் கொள்கைதான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்டமே இயற்றப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மத்திய பிஜேபி ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.
தமிழ்நாடு முதல் அமைச்சரும், கல்வி அமைச்சரும் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இங்கு இருமொழிதான், மூன்றாவது மொழிக்கு - இந்திக்கு இடமில்லை என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதில் உறுதியாக இருக்க வேண்டும் . மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு வழக்கம் போல அடி பணிந்து விடக் கூடாது என்பதே நமது அழுத்தமான வலியுறுத்தலாகும்.
கி. வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
2.6.2019