Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மும்மொழித் திட்டம் இல்லை என்று அறிவிக்காத நிலையில் இந்தத் "திருத்தம்'' என்பது ஏமாற்று வேலை - ஏமாறாதீர்! ஏமாறாதீர்!

$
0
0

"இந்தி கட்டாயமில்லை - திருத்தம்'' என்று குழுவினர் அவசர அவசரமாக அறிவிப்பதன் பின்னணி என்ன?

புதிய கல்வித் திட்டம் என்று கூறி இந்தியை, இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான ஆணையத்தின் கருத்து என்று உலவ விட்ட நிலையில், கடும் எதிர்ப்பு - குறிப்பாக தமிழ்நாட்டில் வெடித்துக் கிளம்பிய சூழலில், இப் பொழுது அவசர அவசரமாக திருத்தம் என்று கூறி, இந்தி கட்டாயமில்லை என்று குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் விரைவாக செய்தி பரவிக் கொண்டு இருக்கிறது; மும்மொழித் திட்டம் கிடையாது என்று அறிவிக்காத நிலை யில், இந்தி கட்டாயம் இல்லை என்கிற இந்தத் திருத்தம் அசல் ஏமாற்று வேலை - தலைவர்களே, பெற்றோர்களே, மாண வர்களே ஏமாறாதீர் என்று  திராவிடர்  கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்தியில் ஆளும் மோடி (பி.ஜே.பி.) அரசின் சார்பில் தமிழ்நாட்டில் சூறாவளி யெனக் கிளம்பியுள்ள இந்தித் திணிப்புக் கான எதிர்ப்பினைச் சமாளிக்க இந்தி கட்டாயமில்லை என குழுவின் சார்பில் திருத்தம்'' என்று ஊடகங்களில் ஒரு செய்தி அவசர அவசரமாகப் பரப்பப்படுகின்றது.

சில முக்கிய கேள்விகள்

நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்:

1. இது கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையிலான கமிட்டியின் அறிக்கை - Draft - வரைவு அறிக்கை. இதற்கு உடன டியான திருத்தத்தை எப்படி அக்குழுவே தர முடியும்?

கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கையின் ஒரு பரிந்துரையை இவ்வளவு விரைவில் மாற்றித் திருத்தம் கூறுவது அரசியல் சட்ட ஆளுமை அம்சப்படி - சட்ட ரீதியாக எப்படி சரியானது ஆகும்?

மக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான அவகாசம் இன்னும் முடியவில்லையே - அதற்குள் குழுவின் பரிந்துரை மாற்றப்பட்ட இந்த அவசரத்திற்கான  பின்னணி என்ன?

திருத்தம் என்னும் தந்திரம்

(2) இந்தத் திருத்தத்திலும்கூட ஒரு தந்திரம் - சூழ்ச்சி ஒளிந்திருப்பதைச் சற்று கூர்மையான பார்வையுடன் நோக்கினால், சில உண்மைகள் புரியும்.

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த அரசின் சார்பில் இருமொழிக் கொள்கை என்ற (Bilingual) ஆட்சியின் கொள்கையாகப் பிரகடனப் படுத்தப்பட்டு - அதாவது மும்மொழித் திட்டம் ஏற்புடைத்தல்ல - தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

மும்மொழிக் கொள்கை கிடையாது என்று கூறவில்லையே!

மீண்டும் மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து, இந்தி மொழி கட்டாயமல்ல; மற்ற மொழிகளைப் படிக்கலாம் என்று இப் போது கூறி, சில காலம் சென்றவுடன், மீண்டும் இந்தியே மூன்றாவது மொழியாக இருக்கலாம் என்று பலரும் விரும்பு கிறார்கள் என்று சாக்குப் போக்கு - தந்திரங்கள் செய்து வெளி வாசல் வழியாக நுழைக்கப்பட முடியாத இந்தியை - சமஸ்கிருதத்தை - கொல்லைப்புற வழியாக நுழைப்பதற்கு இது ஒரு தந்திர சூழ்ச்சி  (Camouflage) முன்னோட்ட முயற்சி யேயாகும்.

மும்மொழித் திட்டம் கிடையாது என்று கூறாத நிலையில், இந்தத் திருத்தம் யாரை ஏமாற்றிட?

ஏமாறாதீர்! ஏமாறாதீர்!!

தமிழ்நாட்டுத் தலைவர்களே, பெற் றோர்களே, மாணவர்களே, ஏமாந்துவிடா தீர்கள். பெரியார் நுண்ணாடியால் பார்த்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

3.6.2019


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles