திருமருகல், ஆக.21 காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தலைவரை, பொறுப்பாளர்களை மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (20.8.2016) திருமருகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடையே அவர் அளித்த பேட்டி வருமாறு:
செய்தியாளர்: கருநாடக அரசு தண்ணீர் குறைவாக இருக்கிறது, அதனால், தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். கருநாடகாவின் முதல்வர் சித்தாராமையாவின் கருத்து பற்றி...?
தமிழர் தலைவர்: அதாவது அடிப்படையான கோளாறு, ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இருக்கிறது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று. இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுதான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமே அவர்கள் சில அதிகாரிகளை நியமனம் செய்திருக்கிறார்கள். மற்றபடி நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்று சொன்னார்கள், அரசியல் காரணங்களுக்காக கருநாடகாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான எண்ணம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
நம்முடைய பணி வழக்கு போடுவது மட்டுமல்ல, முதலில் தேவை என்னவென்றால், காவிரி மேலாண்மை வாரியத்துக்குரிய தலைவர் மற்ற பொறுப்பாளர்களைப் போட்டால், இந்தப்பிரச்சினை உச்சநீதி மன்றத்திற்குப் போகவேண்டிய அவசியமில்லை. காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை அவர்களே பார்த்து முடிவு செய்வார்கள். தமிழகத்தினுடைய நிலை பரிதாபமாக இருக்கிறது.
ஆந்திராவிலே பாலாற்றிலே தடுப்பணை கட்டுகிறார்கள். நாம் ஏமாளியாக இருக்கிறோம். அதேமாதிரி கேரளத்திலே முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தக்கூடாது என்கிறான், நம்முடைய அதிகாரிகளை உள்ளே விடமாட்டேன் என்கிறான்.
எனவே, சுற்று வட்டாரத்தில் இருக்கிற மாநிலங்களுடன் சுமுக உறவும் இல்லை, தமிழர்களுக்கு விழிப்பும் இல்லை. சம்பாவைப் பயிரிடும் போது மட்டும் போராட்டம், அதற்கு உடனே கட்சிகள் எல்லாம் உடனே போராடுவது என்றுதான் இருக்கிறது.
கேரளத்திலேயும், கருநாடகத்திலேயும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அங்கே எல்லாரும் கூட்டுகிறார்கள். தமிழகத்திலே அப்படி ஓர் எண்ணம் இருக்கவேண்டும் என்கிற சிந்தனையே இல்லாமல் ஓர் அரசு நடந்துகொண்டிருக்கிறது. இவையெல்லாம் பிரச்சினைக்கு காரணம்.
முதலில் வழக்கு போடும்போது தண்ணீர் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், அதை முடிவு செய்யவேண்டியது கரு நாடகம் அல்ல. காவிரி நீரில் நமக்கு வரவேண்டிய தண்ணீர் பாக்கியை, நம்முடைய உரிமையைத்தான் கேட்கிறோம்.
முதலில் நாம் எல்லோரும் சேர்ந்து வலியுறுத்த வேண்டிய விஷயம் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று தீர்ப்பு வந்து 3, 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. மத்திய அரசு நீங்கள் உடனே மேலாண்மை வாரியத் தலைவரை, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையின் அடிப்படையே அதுதான்.. கோளாறுக்கு அடிப்படையைப் பார்க்க வேண்டும். தலைவலிக்கு ஆஸ்பிரின் சாப்பிட்டால் போதாது, தலைவலி ஏன் வருகிறது என்று பார்க்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.
செய்தியாளர்: சட்டசபை நிகழ்வுகளைப்பற்றி...?
தமிழர் தலைவர்: சட்டசபைதான் இப்போது நல்ல வேடிக்கையான சபையாக இருக்கிறதே!
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
↧
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்
↧