சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி
சேலம், நவ.5 ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக்கத் துடிக்கும் காவிக் கூட்டம், திருவள்ளுவரைப் பெருமைப்படுத்துவதுபோல ஒரு பக்கம் காட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் சிறுமைப்படுத்துகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (5.11.2019) சேலம் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
தமிழக மக்களுக்கு பெரிய அறைகூவல்
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று நினைக்கிற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., காவி கூட்டம் - இந்த பெரியாரின் மண்ணை மாற்றிட வேண்டும் - பகுத்தறிவு பூமியை மாற்றிடவேண்டும் என்பதற்காகவும், திராவிட இயக்கங்கள் இங்கு சிறப்பான வகையில், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதையொட்டிய முற்போக்குக் கூட்டணி இவை எல்லாம் தமிழகத்தைப் பாதுகாத்து வருகின்றன என்பதை மாற்றுவதற்காக முயற்சிக்கின் றனர். திருவள்ளுவர் சிலையை அவமதிக்கின்ற வகையில் அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந் திருக்கிறார்கள், அதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் உண்மை உருவம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. உள்ளபடியே தமிழக மக்களுக்கு பெரிய அறைகூவல் காத்திருக்கிறது. தமி ழகத்தினுடைய அந்த சோதனையை நாம் வென்றெ டுக்கவேண்டும் என்கிற அந்த உணர்வு இருக்கிறது.
திருவள்ளுவரின் ஒழுக்க நெறி
மனித குலத்திற்கே பொருந்தக் கூடியதாகும்
திருவள்ளுவரைப் பொறுத்தவரையில், அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல. அவர் கூறிய ஒழுக்க நெறி என்பது மனித குலத்திற்கே பொருந்தக் கூடிய ஒன்றாகும்.
திருக்குறள் என்பது
மனிதநேயத்தினுடைய அடிப்படை
அதுமட்டுமல்ல, மிகத் தெளிவான இரண்டு தத் துவங்கள் மிக முக்கியமானவை.
திராவிட இயக்கம் திருவள்ளுவரைத் தூக்கிப் பிடிப்பது, உயர்த்திப் பிடிப்பது என்பது இருக்கிறதே, அது ஏதோ தன்னுடைய கொள்கைக்காக அல்ல. திருக்குறள் என்பது மனிதநேயத்தினுடைய அடிப் படையாகும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்று அறிவுக்கு முதன்மை கொடுத்து, சமத் துவத்திற்கு முதன்மை கொடுத்து,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
என்று சொல்லக்கூடிய அளவிற்கு சமதர்மத்தை நாட்டி, குலதர்மத்தை அழித்த, அதற்கு எதிரான ஒரு தத்துவத்தைப் போதித்த ஒரு அறநூல் வள்ளு வருடைய திருக்குறள்.
மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் சொன் னதைப்போல,
‘‘வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனு நீதி
ஒரு குலத்துக் கொருநீதி”
என்றாரே!
மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று துடிக்கின்ற ஒரு காவிக் கூட்டம்
அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை எடுத்துவிட்டு, மனுதர்மத்தை அரச மைப்புச் சட்டமாக்கவேண்டும் என்று துடிக்கின்ற ஒரு காவிக் கூட்டம், ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்கிற காரணத்தினாலே, எப்படி வேண்டுமானாலும் ஆளலாம்; இங்கே இருக்கிற ஒரு அரசும், அதற்குத் தலையாட்டுகின்ற அரசாகவும், அச்சப்படுகின்ற அரசாகவும், அவர்கள் எழுந்து நில் என்றவுடன், தோப்புக்கரணம் போடக்கூடிய அளவிற்குக் கீழே குனியக்கூடிய அரசாகவும் இருக்கின்ற காரணத் தினால், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒரு கயமைத்தனத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள்.
திருவள்ளுவரே மிக அழகாக சொல்லி இருக்கிறார் இரண்டு குறள்களில்,
ஒன்று,
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பர் யாங்கண்டது இல்.
இரண்டு,
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
அதனால், கும்பிடுகிறான் என்று நினைக்கவேண் டாம். கோட்சேவுக்கே மிகத் தெளிவாக விளக்கம் சொல்லிவிட்டார்.
அப்பேர்ப்பட்ட வள்ளுவருடைய சிலையைக் காவி வண்ணம் அடிப்பது, சாணி அடிப்பது என்பது இருக்கிறதே, இது அவர்களுக்குத்தான் கேடாகும்.
திருவள்ளுவருடைய பெருமையை இனிமேல் யாராலும் குறைத்துவிட முடியாது. அல்லது வள்ளு வரையும் அவமானப்படுத்திவிட முடியாது. அவ மானப்படுத்துவோர்தான் அவமானப்படுவார்கள்.
தந்தை பெரியார் ‘‘மானம் கருதக் கெடும்'' என்ற சொல்லாட்சியைக் கையாள்வார்
வள்ளுவர் மான, அவமானத்தைப்பற்றி சிறப்பான ஒரு குறளில் சொல்லியிருப்பார். அதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘‘மானம் கருதக் கெடும்'' என்ற சொல்லாட்சியைக் கையாள்வார்.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் மான அவமானத்தைப்பற்றி கவலைப்படக்கூடாது.
தனி மனித வாழ்க்கைக்குத்தான் மானம் தேவையே தவிர, பொது நியதிக்கு, பொது அறநெறிக்கு, பொது சமுதாய மாற்றத்திற்கு மானத்தைப் பார்க்கக்கூடாது என்று சொன்னவர் வள்ளுவர். எனவே, அவரை அவமானப்படுத்த யாராலும் முடியாது.
எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு திட்டமோ!
இதனுடைய நோக்கம் என்னவென்றால், தமிழகத் தில், திராவிட இயக்கத்தவர்களும், தமிழ் இன உணர் வாளர்களும் ஆத்திரப்பட்டு கலவரத்தில் ஈடுபட வேண்டும். அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக ஆத்திரப்படக்கூடிய, உணர்ச்சிவயப்படக் கூடிய நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, கோபப்படுத்தப்பட்டு, ஆத்திரமூட்டி, அதன்மூலமாக இந்த இயக்கத்தை அடக்கலாம், ஒடுக்கலாம். அப்போது அவர்கள் இங்கே வரலாம். மற்றவர்களை சிறையில் அடைத்து விட்டு, வசதியாக இங்கே ஒரு தேர்தலை நடத்திவிடலாம் என்பது போன்ற ஒரு நீண்ட காலத் திட்டம் இதற்குப் பின்னணியாக இருக்கிறதோ என்கிற ஒரு அச்சம் இருக்கிறது.
என்றாலும், இவர்கள் வகுக்கின்ற வியூகத்தை யெல்லாம் தாண்டி பெரியார் வெற்றி பெறுவார், அண்ணா வெற்றி பெறுவார், கலைஞர் வெற்றி பெறுவார்.
முதலமைச்சரோ, அமைச்சர்களோ
கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார்களா?
செய்தியாளர்: தமிழக அரசின் நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?{jcomments off}
தமிழர் தலைவர்: இதில் தமிழக அரசின் நடவடிக்கையே இல்லையே! மற்ற பிரச்சினைகளில் உடனடியாக கண்டுபிடிக்கவேண்டும் என்று சொல் கிறவர்கள், இந்தப் பிரச்சினையைக் கண்டித்து முதல மைச்சர் அறிக்கை விட்டிருக்கிறாரா? அமைச்சர்கள் யாராவது கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா?
காவல்துறை அதிகாரிகள், நாங்கள் விசாரணை நடத்துகிறோம், தனிப்படை அமைத்திருக்கிறோம் என்று வழமை போன்று சொல்லிக் கொண்டிருக் கிறார்களே தவிர, வேறு கிடையாது.
அதனைக் கண்டித்து உடனடியாக மற்ற தலை வர்கள் எல்லாம் ஆத்திரப்பட்டு, கண்டனம் தெரிவித் திருக்கிறார்கள். தமிழின உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனை நியாயப்படுத்தி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கள் தொலைக்காட்சி ஊடகங்களில் பேசுகிறார்கள்.
தமிழக அரசினுடைய குறிப்பிட்ட அமைச்சரோ, முதலமைச்சரோ உடனடியாக இதனைக் கண்டித் திருக்க வேண்டாமா? எதிர்ப்பு உணர்வை காட்டியிருக்க வேண்டாமா?
‘‘அண்ணா அரசு'' என்று பெயர் வைத்துக்கொண்டு, அண்ணா வகுத்த நெறியில் போய்க் கொண்டிருக் கிறோம் என்று சொல்கிறவர்கள், இதனை ஏற்றுக் கொள்ளலாமா? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
பெரியாரும், அண்ணாவும்தான், 1948 ஆம் ஆண்டு திருக்குறள் மாநாட்டினை சென்னையில் நடத்தி, அம்மாநாட்டிற்கு அத்துணைத் தமிழறிஞர் களையும் அழைத்து, புலவர்கள் வீட்டு புத்தக அலமாரியில் இருந்த திருக்குறளை பொதுமக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்தவர்கள் அவர்கள்.
வள்ளுவர் வாய்மொழிப்படி நடக்கக்கூடிய ஒரு அரசாங்கம் என்று சொல்கிறார்கள்; இதுவரையில் அவர்கள் வாய் திறக்காதது, வருத்தம் அளிக்கிறது; வேதனைக்குரியது.
இனிமேலாவது அவர்கள் உரிய நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்பதை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள்காட்டியும், தமிழை புகழ்ந்தும் சொல்கிறாரே?
செய்தியாளர்: தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி கள் நடக்கும்பொழுது, மோடி அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், திருக்குறளை மேற்கோள் காட்டியும், தமிழை நேசிப்பதாகவும் அவர் பேசி வருகிறாரே, அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை போன்றதுதான்.
வித்தைகளிலேயே தலைசிறந்த வித்தை மோடி வித்தைதான் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த வித்தையும் அதிலே ஒரு புதிய வித்தையாகும்.
இரட்டை வேடம், இரட்டை நாக்கு,
இரட்டைப் போக்கு
செய்தியாளர்: திடீரென்று திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிக்கும் சர்ச்சையை கொண்டு வருவதற்குக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்?
தமிழர் தலைவர்: தமிழகத்தை வளைத்துப் பார்க்கிறார்கள்; அம்பேத்கரை கபளீகரம் செய்யும் முயற்சியில் ஓரளவு பாதி அளவுக்கு விழுங்கி விட் டார்கள். ஆனால், அம்பேத்கர் அவர்களுக்குள்ளே நுழைய முடியவில்லை என்ற சூழல் ஏற்பட்டு விட்டது.
அதேபோல, அதற்கடுத்து தமிழைக் காட்டி, தமிழ் சிறந்த மொழி என்று சொல்வது எல்லாம் ஏமாற்று வித்தைதான். அதேநேரத்தில், தமிழுக்கு செம்மொழி தகுதியை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் - அரும்பாடுபட்டு.
தமிழுக்கு மட்டுமல்ல, தமிழால் சமஸ்கிருதத்திற்கும் சேர்த்து அந்தத் தகுதியை 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி -மத்தியில் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது, செம்மொழி தகுதியை வாங்கிக் கொடுத்தார்.
மைசூரில் இருந்த செம்மொழி நிறுவனம், கலை ஞரின் அவர்களின் முயற்சியினால், தமிழகத்திற்கு மாற்றப்பட்டது.
இன்றைக்கு அந்த செம்மொழி நிறுவனம் தினக் கூலி நிறுவனமாக இருக்கிறது. தமிழ் தெரிந்தவர்கள் அந்த நிறுவன பொறுப்பில் இல்லை.
செம்மொழிக்குரிய பரிசாக, தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 5 கோடி ரூபாயைக் கொடுத்தார் கலைஞர் அவர்கள். அந்தப் பரிசுக்குரியவர்கள் - விருதுக்குரியவர்கள் யார் என்று ஆண்டுதோறும் அறிவிக்கப்படவேண்டும். அதனையும் அறிவிக்க வில்லை.
இதையெல்லாம் செய்யாமல், தமிழ் வாழ்க என்று சொல்வதிலே என்ன பயன் இருக்கிறது? பாரத் மாதாகீ ஜே என்று சொல்வதைப்போலத்தான் இருக்கிறதே தவிர, அதனால் பயன் ஒன்றும் இல்லை.
எனவேதான், இரட்டை வேடம், இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு. இதற்கு எடுத்துக்காட்டாகும்.
தொடக்கத்திலேயே
நீட் தேர்வை எதிர்த்தவர்கள் நாங்கள்!
செய்தியாளர்: நீட் தேர்வு மய்யங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்திருக்கின்றனர்; 3081 உள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில், வெறும் 48 பேர் மட்டும்தான் ஏழை மாணவர்கள் தேர்வாகி இருக்கிறார்களே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: நாங்கள் தொடக்கத்திலிருந்தே சரியாகத்தான் பார்த்தோம்.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகம், முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து நீட் தேர்வை எதிர்த்து மாநாடுகள் எல்லாம் நடத்தின.
வெளியில் இருந்து வந்த ஒரு கல்வி அறிஞர் சொன்னார், ‘‘நீட் தேர்வைப்பற்றி சரியான புரிதலோடு தமிழ்நாடு மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறது'' என்று சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், ஆரம்பத்திலிருந்து நீட் தேர்வி லிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று சொன்னோம். ஏனென்றால், சட்டத்தில் இருக்கிற உரிமை அது. அது பிச்சையல்ல, சலுகையல்ல.
அதற்காகத் தீர்மானம் கொண்டு வந்து எதிர்க் கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் முழுமை யாக அதனை வரவேற்றார். சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன.
எத்தனை ஆண்டுகள் அந்த மசோதாக்கள் ஊறுகாய் ஜாடியில் ஊறியது? பிறகு எப்படி அது மறுக்கப்பட்டது என்பதை இதுவரையில் சொல்லாமல்,
நீதிமன்றத்திலே வழக்குப் போட்ட பின்பு, அந்தத் தகவலை நீதிமன்றத்தில் ஆட்சியாளர்கள் சொன் னார்கள் என்பது மிகப்பெரிய கேடாகும். மக்களின் மறதியை வைத்துக்கொண்டு, அரசியல் நடத்தக் கூடாது.
இரண்டு நீதிபதிகளின் பொறுப்பான கேள்வி
இப்போது மீண்டும் நேற்று இரண்டு நீதிபதிகள் பொறுப்பான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்கள். பாராட்டவேண்டிய செய்தி அது.
ஏழை, எளிய மாணவர்களுக்கோ அல்லது ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கோ பயன்படாத நீட் தேர்வு எதற்கு? ஏன் அந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது? என்று கேட்டுள்ளனர்.
எதை திராவிட இயக்கம் சொன்னதோ, எதை முற்போக்கு இயக்கங்கள் தமிழ்நாட்டில் எதிர்த்ததோ, எதற்காக அனிதாக்களும், சுபசிறீக்களும் பலியா னார்களோ, இன்றைக்கு அதே கருத்தை இப்போது சொல்கிறார்கள்.
இன்னும் காலம்தாழ்ந்து விடவில்லை. தமிழக அரசுக்கு வேண்டுகோள் என்னவென்றால், சட்டமன் றம் விரைவில் கூடவிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கும், ஆளும் கட்சிக்கும் இந்தப் பிரச்சினையில் மாறுபட்ட கருத்துகள் கிடையாது.
இத்தனைக் கொலைகள், இத்தனை ஊழல்கள், முதலாளிகள் கொழுத்த லாபம் சம்பாதிப்பு இவை அத்தனைக்கும்தான் நீட் தேர்வு பயன்பட்டு இருக் கிறது என்பதை வைத்துக்கொண்டு, மீண்டும் தமிழ கத்திற்காகவது குறைந்தபட்சம் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதை மறுபடியும் அதே மசோதாவை அவர்கள் நிறைவேற்றவேண்டும். தீர்மானமாக நிறைவேற்றவேண்டும்.
தமிழகத்தில் இருக்கிற அத்துணை நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி வேறுபாடின்றி, குடியரசுத் தலைவர், பிரதமர் முதற்கொண்டு பார்த்து நீட் தேர் விலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரவேண்டும்.
தமிழகம் தனித்தன்மை வாய்ந்ததுதான்
தமிழகம் தனித்தன்மை வாய்ந்தது என்று நம்மு டைய பிரதமர்கூட சொல்லியிருக்கிறார். எந்த அர்த் தத்தில் அவர் சொன்னாலும், தமிழகம் தனித்தன்மை வாய்ந்ததுதான்.
ஆகவே, உயர்நீதிமன்றத்தினுடைய இரண்டு பேர் அமர்வு என்பது கிட்டத்தட்ட உச்சநீதிமன்றத்திற்கு சமமான ஒரு தகுதி உள்ளதுதான்.
அப்படி ஒரு சூழலில், நீட் தேர்விலிருந்து தமிழ கத்திற்கு விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். அதை திராவிடர் கழகம் அடுத்த வேலை திட்டமாக எடுத்துக்கொண்டு, நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்ற கிளர்ச்சியை நாங்கள் தொடங்கவிருக்கிறோம். ஒத்தக் கருத்துள்ள அத்துணைப் பேரும் வரவேண்டும். நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்களின் பெற்றோர்கள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள்.
இன்னொன்றைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். கலைஞர் அவர்களுடைய முயற்சியினால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்ததினால், ஏற்கெ னவே மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களே கிடையாது. இது தமிழகத்திற்குத்தான் அந்த பெருமை உண்டு.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது மட்டுமல்ல. சேலத்தில், நம்முடைய வீரபாண்டியார் அவர்களு டைய முயற்சியினால், திருச்சிக்குப் போவது என்ற நிலை இருந்தபோது, மோகன் குமாரமங்கலம் பெயரில் சேலத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப் பட்டது.
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததுபோல...
அப்படியெல்லாம் போராடி வந்த மருத்துவக் கல்லூரியில், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்ததுபோல, தமிழர்களே அங்கே இல்லை. வரி கட்டுவது நாம்; கட்டடம் கட்டியது நாம்; அங்கே படிப்பவர்கள் இப்பொழுது யார் என்றால், வடநாட்டு மாணவர்கள்தான்.
நிலைமை இப்படி இருக்கையில், நம்முடைய மருத்துவத் துறை அமைச்சர் சொல்கிறார், ஆறு புதிய மருத்துவ கல்லூரிகள் வரவிருக்கின்றன என்கிறார்.
மகிழ்ச்சிதான். அந்த ஆறு மருத்துவக் கல்லூரிகள் யாருக்குப் பயன்படப் போகின்றன? நம்முடைய வரிப் பணத்தில், நாம் சமைத்து வைத்த சாப்பாட்டை, பசி யேப்பக்காரர் காத்துக் கொண்டிருக்க, புளியேப்பக் காரர் வந்து சாப்பிட்டுவிட்டுப்போகிற கதைதான் நடைபெறுகிறது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனைகள் இரட்டை இலக்கில் அதாவது 10-க்கும் மேலே இருக் கக்கூடிய தகுதி தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது.
இவை அத்தனையும், தமிழர்களுக்கோ, தமிழ்ப் பிள்ளைகளுக்கோ, திராவிடப்பிள்ளைகளுக்கோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கோ, பிற்படுத்தப்பட்டவர் களுக்கோ, தமிழ் மண்ணைச் சார்ந்தவர்களுக்கோ பயன்படாத ஒரு சூழல் இருக்கின்றன. இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
எங்களுடைய பணி அரசியல் பணியல்ல;
சமூகப் பணி
இதில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், எங்களு டைய பணி அரசியல் பணியல்ல; சமூகப் பணி. அதேநேரத்தில், ஒத்தக் கருத்துள்ளவர்களையெல் லாம் இணைத்து, போராட்டக் களத்திலே கொண்டு வரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவோம். அப்படி செய்தால், அதனுடைய பலன் எப்படி இருக்கும் என்பதை, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் நீங்கள் பார்த்தீர்கள்.
மீண்டும் அந்த சக்கரம் சுழலும், திரும்பும்.
பொள்ளாச்சி சம்பவக் குற்றவாளிகள்மீதான குண்டர் சட்டம் ரத்து?
செய்தியாளர்: பொள்ளாச்சி நடைபெற்ற சம்பவத் தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்மீது போடப் பட்ட குண்டர் சட்டம் போதிய ஆதாரம் தாக்கல் செய்யவில்லை என்று ரத்து செய்யப்பட்டு இருக் கிறதே?
தமிழர் தலைவர்: அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட வர்களுடைய செல்வாக்கு மிகுந்தவர்களின் பிள்ளை கள் யார் யார் என்று பார்த்தாலே, ஆவணங்கள் காணாமல் போகும்; ஆவணங்கள் வராமல் தங்கிவிடும், இதுதான் உண்மை.
சேலம் பல்கலைக் கழகத்தைக் கண்டித்து மிகப்பெரிய போராட்ட அறிவிப்பு வரும்!
செய்தியாளர்: பெரியார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் விநாயகர் உருவம், ஸ்வஸ்திக் உருவம், ஓம் உருவம் சீரியல் லைட் போடப்பட்ட தைப்பற்றி...?
தமிழர் தலைவர்: அதைப்பற்றி நான் ஏற்கெனவே ஒரு அறிக்கை எழுதியிருக்கிறேன். சேலத்தைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். அந்தத் துணைவேந்தர் எல்லாவற்றிற் கும் தலையாட்டிக் கொண்டிருக்கிறார். அவர் துணைவேந்தரா? அல்லது பி.ஜே.பி.யைச் சார்ந்த நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்பதில் மிகப்பிரபல மான ஒருவர் துணைவேந்தரா? என்று புரியவில்லை.
அவர் நுழைந்தால், துணை வேந்தரின் அறைக் கதவு திறக்கிறது; யாருக்கு வேண்டுமானாலும் அவரு டைய அறைக் கதவை திறப்பாரா துணைவேந்தர்.
அதற்கான போராட்டம் நடைபெறும். அந்த அறிவிப்பை விரைவில் அறிவிப்போம்.
எப்படி நாம் சேலம் உருக்காலைக்காக தொடர்ந்து போராடவேண்டி இருக்கிறதோ - வீரபாண்டியா ருடைய முயற்சியில், கலைஞர் அவர்களுடைய முயற்சியில் சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் ஏற்பட்டது.
பெரியார் பல்கலைக் கழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நரியார் பல்கலைக் கழகமாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. அதற்கு நாங்கள் விடமாட்டோம்.
ஏழு பேர் விடுதலைபற்றி...?
செய்தியாளர்: ஏழு பேர் விடுதலைபற்றி...?
தமிழர் தலைவர்: ஏழு பேர் விடுதலையை என்றைக்கும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். அதற்கு எதிராக பல சக்திகள் இன்றைக்குத் திரளுகின்றன. மீண்டும் ரிட் போடவேண்டும். மறுபடியும் தீர்மானத்தை நிறைவேற்றினால், ஆளுநர் அதற்குத் தெளிவாக உத்தரவு போடவேண்டும். ஆனால், அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்றாலும், இவர்களே பல அதிகாரங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள், இது தான் உண்மை.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.