செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
மணப்பாறை, நவ.6 நடந்து முடிந்த இரு சட்டப்பேரவை இடைத் தேர்தலின் முடிவை வைத்து, நடக்கப் போவதாகக் கூறிக் கொண்டுள்ள உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவைக் கணிக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (6.11.2019) மணப்பாறைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பேட்டியின் விவரம் வருமாறு:
ஆளும் கட்சிக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கிற உத்வேகத்திற்குக் காரணம் என்ன?
செய்தியாளர்: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? நடைபெறாத இருந்த சூழலில், இரண்டு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றதும், உத்வேகமாக செயல்படுகிறதே அந்தக் கட்சி, அதற்குக் காரணம் என்ன?
தமிழர் தலைவர்: தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கக் கூடியவர்களுக்கு கடைசியாக ஒரு நம்பிக்கை வரும்; அதிகமாக சிரிப்பார்கள்; அதுபோன்ற ஒரு நம்பிக்கையை இரண்டு இடைத்தேர்தல் முடிவுகள் கொடுத்தி ருக்கலாம்.
அப்படியாவது உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடிய துணிச்சல் வந்தால், அது நல்லதுதான். மக்கள் என்ன தீர்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை அப்போது அவர்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
உள்ளாட்சி என்பது உள்ளபடியே நல்லாட்சியாக அமையவேண்டும் என்பதற்கு மக்கள் தீர்ப்பு தெளிவாகக் கொடுப்பார்கள், அந்த நம்பிக்கை இருக்கிறது.
இடைத்தேர்தல்களில் எப்படி வெல்லப்படுகின்றன, வென்றெடுக் கப்படுகின்றது என்பது உலகறிந்த உண்மை. ஆகவே, அதைப்பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை.
ஆளும் கட்சிக்கு இப்போது புது நம்பிக்கை வந்திருக்கிறது என்று நீங்கள் சொல்வதிலிருந்தே, ஏற்கெனவே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இப்போதுதான் நம்பிக்கை புதிதாக வந்திருக்கிறது. அந்த நம்பிக்கை வளரட்டும்; அதன் காரணமாகவாவது ஆண்டுக் கணக்கில் தள்ளித் தள்ளி வைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல், இனிமேலாவது நடந்தால், மக்களுக்கு நல்லது.
ஏனென்றால், அந்தந்த கிராமங்களில் பஞ்சாயத்துத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் தேவை மக்களுடைய நற்பணிகளுக்கு.
உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் எப்படி தீர்ப்பளிப்பார்கள் என்பது தெரிந்துகொள்ள முடியும்.
ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
செய்தியாளர்: தேர்தலைப் பொருத்தவரையில் தேர்தல் ஆணையம்தான் தேர்தலை அறிவிக்கவேண்டும்; ஆனால், நேற்று நடைபெற்ற நாங்குநேரியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இன்னும் 15 நாள்களில் உள் ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு அறிவிப்பு வரும் என்று தெரிவிக்கிறாரே?
தமிழர் தலைவர்: யார், எந்த இடத்திலிருந்து எதைப் பேசவேண்டும் என்பதில் இப்பொழுது அங்கே எந்தக் கட்டுப் பாடும் கிடையாது. ஏற்கெனவே ஜெயலலிதா அம்மையார் இருந்தபொழுது, வாய் திறக்காமல் இருந்தவர்கள் எல்லாம், இப்பொழுது ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், யார் எதை அறிவிப்பது என்பதைப்பற்றி கவலைப்படாமல், சொல்லக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக் கிறார்கள்.
அப்படியாவது அவர் சொல்லக்கூடியது உண்மையாக இருந்தால், அதனை வரவேற்கிறோம். ஏனென்றால், அப்படி யாவது தேர்தல் நடப்பது மிகவும் முக்கியம்.
மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
செய்தியாளர்: உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது நடை பெறும் என்று அவரே அறிவிக்கிறார் என்றால், மாநில தேர்தல் ஆணையத்தை ஆளுங்கட்சி அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா?
தமிழர் தலைவர்: மாநில தேர்தல் ஆணையம் என்பது எங்களுக்குக் கட்டுப்பட்டதுதான் என்று மறைமுகமாக சொல் கிறார் என்பதுதான் அதற்குப் பொருள்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.