நீதிக்கட்சியின் சமூகநீதியை வீழ்த்தும் மனுதர்ம ஆட்சி இப்பொழுது!
இதனை ஒழிப்பது காலத்தின் கட்டாயம் - ஆயத்தமாவீர் இளைஞர்களே!
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட சமூகநீதிக் கொள்கையால் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்ற பலன்களை, நலன்களை, ஒழித்துக்கட்டிட - மீண்டும் மனுதர்ம ஆட்சி இப்பொழுது; இதனை ஒழித்திட ஆயத்தமாவீர்! அணிதிரள்வீர்!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
இன்று (நவம்பர் 20 ஆம் தேதி) - மிக முக்கியமான ,வரலாற்றில் திருப்பம் ஏற் படுத்திய நாள் ஆகும்.
ஆம்; திராவிடர் இயக்கமான தென் னிந்தியர் நல உரிமைச் சங்கம் - பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகும். (20.11.1916)
நீதிக்கட்சியின் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று!
இன்று அவ்வியக்கத்தின் (103 ஆண்டு கள் நிறைவுற்று) 104 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்றாலும், திராவிடர் கல்வி வள்ளல் டாக்டர் சி.நடேசனார் போன்ற முன் னோடிகளின் பெருமுயற்சியால் சென்னை திருவல்லிக்கேணியில் ‘திராவிடர் இல்லம்' என்ற ஒன்றைத் தொடங்கி (1916, ஜூன்) பார்ப் பனரல்லாத மாண வர்கள் அதில் தங்கிப் படித்துப் பட்டம் பெற்று, பிறகு அரசியல் மற்றும் கல்வித் துறைகளில் நட்சத்திரங் களாக அவர்கள் ஜொலித்தனர்.
அந்த கல்விக் கண் அளித்த கருணைக் கடலின் தொலைநோக்கு காரணமாகவே ‘சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது' என்ற மனுதர்ம சமுதாயத்தின் கொடு மையை மாற்றிய காலகட்டம் அமைந்தது.
ஆர்.கே.சண்முகம் போன்றோர்
தங்கிப் படித்த இல்லம்
உலகின் தலைசிறந்த நிதி வல்லுநர் என்று கனடாவின் ஆட்டவா மாநாட்டில் உலகம் வியந்து பாராட்டப்பட்டவர், 1947 இல் ‘‘சுதந்திர ஆட்சி'' அமைத்தாரே பண்டித ஜவகர்லால் நேரு - அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரியவர் ஆர்.கே.சண்முகம் - நடேசனாரின் விடுதி யில்தான் தங்கி, சாப்பிட்டு, தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் படித்தவர்.
பிற்காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி களாக வந்த எஸ்.சுப்பிரமணியன், அதேபோல துணைவேந்தராக வந்த டி.எம்.நாராயணசாமி போன்றோர் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்.
பார்ப்பனரல்லாதார்
கொள்கை அறிக்கை
அக்காலத்தில் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராயரும், பிரபல காது மூக்குத் தொண்டை நிபுணர் தரவாட் மாதவன் நாயர் என்ற டி.எம்.நாயரும் இணைந்து, திராவிடர் தம் உரிமைச் சாசனம் - மாக்ன கார்ட்டா (Magna Carta - இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட உரிமைச் சாசன பட்டயம்) போன்ற ‘‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto) என்பதை வெளியிட்டனர்.
அந்த முதல் முழக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களை அண்மையில் 2019 செப் டம்பர் 21, 22 இல் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பும் - அமெரிக்க மனிதநேய சங்கமும் கூட்டாக நடத்திய பெரியார் சுயமரியாதை மாநாட்டிலும் - புரட்டிக் காட்டி புகழ்பெற்ற ஒன்றாகும்!
தி.க., தி.மு.க., ம.தி.மு.க. -
நீதிக்கட்சியின் தொடர்ச்சியே!
இன்றைய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புகள் அதன் பரிணாம வளர்ச்சி. அண்ணா பெயரில் அமைந்த அ.இ. அ.தி.மு.க.வின் நிலை திசை மாற்றம், தடுமாற்றம் என்பதால், நாம் இந்தப் பட்டியலில் சேர்க்க இயலாத நிலை - என்ன செய்வது?
முதலமைச்சர் அண்ணா கூறியது என்ன?
அறிஞர் அண்ணா அவர்கள் 1967 இல் எதிர்பாராத பெரு அரசியல் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, சென் னையில் செய்தியாளர்கள் அண்ணா விடம் கேட்டனர். 1957 இல் தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவு செய்து 1967 இல் 10 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த ரகசியம் - பலம் என்னவென்று கேட்டு, வாழ்த்துத் தெரிவித்தபோது, அறிஞர் அண்ணா அவர்கள் மிகுந்த தன்னடக் கத்துடன் சொன்னார்: ‘‘10 ஆண்டு அல்ல, இது எனது பாட்டனார் நீதிக்கட்சியின் தொடர் வெற்றி - 50 ஆண்டுகால அரசி யல் போராட்டத்தின் வெற்றி'' என்றார்!
பார்ப்பன வெறியரான சத்தியமூர்த்தி அய்யர்கள் நீதிக்கட்சி 1938 இல் தோற்ற வுடன், ‘‘500 அடி ஆழத்தில் நீதிக்கட்சி யைப் புதைத்துவிட்டோம்'' என்று கூறிய தற்குப் பதிலடியாகவே இப்படி சொன் னார்.
நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றினார் தந்தை பெரியார்
தந்தை பெரியார் நீதிக்கட்சிக்கு 1938 இல் தலைமை ஏற்று, அதனை மக்கள் இயக்கமாகவே 6 ஆண்டுகளில் - 1944 இல் சேலம் மாகாண மாநாட்டில் திராவிடர் கழகமாக மாற்றினார். பெருமை மிக்க திராவிடர் இனம் ஏன், ‘‘பார்ப்பனரல் லாதார்'' என்ற எதிர்மறைப் பெயரைத் தாங்கி நிற்கவேண்டும்? ஆக்கபூர்வ வரலாறு முன்னிருந்தே உள்ளதே!
‘திராவிடர் இல்லம்'
‘திராவிடன்' நாளேடு
‘திராவிடன்' அச்சகம்
இப்படி இருக்க ‘பார்ப்பனரல்லாதார்' என்பது ஆரியத்திடமிருந்து மொழி, கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவை களில் மாறுபட்டது என்பதற்கு வரலாறு அளித்த பெயர் ‘‘திராவிடன்'' என்பது என்று கூறி, திராவிடர் கழகமாக - இந்த ‘சூத்திர, பஞ்சமர்' இயக்கத்தை திராவிடர் எழுச்சி இயக்கமாக்கிக் காட்டி பெரு வெற்றி பெற்றார்!
சமஸ்கிருதம் படித்திருந்தால்தான்
டாக்டர் என்ற நிலை!
நீதிக்கட்சி ஆட்சியின் நிகரற்ற வர லாற்று அரசியல் சாதனைகள் - இன்றும் என்றும் அரசியலில் தகத்தகாய ஒளி வீசி நிற்கின்றன!
முன்னேறிய அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகள் கூட பெண்களுக்கு வாக்குரிமை தராத காலத்தில், இந்தியா வில் முதன்முதலாக வாக்குரிமை தந்தது நீதிக்கட்சி ஆட்சியே! (1921) - இந்த வரலாறு தெரியவேண்டும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு.
சமஸ்கிருதம் பயின்று தேர்வு பெற்றால் தான் டாக்டர்களாக வர முடியும் என்பதை மாற்றி, ஒடுக்கப்பட்டோர் அனைவரும் டாக்டர்களாக வரும் வழிவகை செய்தது நீதிக்கட்சி - திராவிடர் ஆட்சியாகும்.
‘‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' இதுபோல எத்தனை எத்தனையோ!
மீண்டும் மனுதர்மம் - ஒழித்திடுவோம் - ஆயத்தமாவீர்!
இன்று மீண்டும் மனுதர்ம யுகத்தைக் கொண்டுவர மத்தியில் உள்ள காவி ஆட்சி துடியாய்த் துடிக்கிறது. நீட் தேர்வு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு - அதற்கடுத்து கல்லூரி, பல்கலைக் கழகத்தில் சேர, பட்டப் படிப்புக்குமுன் நுழைவுத் தேர்வு - ‘நீட்' தேர்வில் வெற்றி பெற்று டாக்டரானாலும், நெக்ஸ்ட் தேர்வு எழுதவேண்டும்.
எல்லாம் கார்ப்பரேட் வியாபாரிகளும், பூணூல் கூட்டமும் கூட்டாகச் சேர்ந்து நம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சி.
எனவே, சூளுரைப்போம்! இவை களை ஒழிப்பது காலத்தின் கட்டாயம்; ஞாலத்தின் தேவையும்கூட!
ஆயத்தமாவீர், அறப்போராட்டத் திற்கு!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.11.2019