தமிழகம், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் முழு வீச்சில் நடைபெறுகிறது
சென்னை, டிச.2 திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரின் பிறந்த நாள் ‘சுயமரியாதை நாளாக' பெரியார் இயக்கத் தோழர்களாலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் உறவுகளாலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று (டிசம்பர் 2) தமிழர் தலைவரின் 87 ஆம் பிறந்த நாள், தந்தை பெரியாரின் சுயமரியாதை- பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மாவட்ட தலை நகரங் களில் ஆங்காங்கே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் சிறப்பாக நடைபெறுகிறது.
87 ஆம் ஆண்டு பிறந்த நாள் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. தந்தை பெரியாரின் மனிதநேய கொள்கைகளைப் போற்றும் வகையில் அமெரிக்க நாட்டு மேரிலாந்து மாநிலத்தில் சில்வர் ஸ்பிரிங் நகரத்தில் மனிதநேய, சுயமரியாதை பன்னாட்டு மாநாடு கடந்த செப்டம்பர் 21, 22, 2019 ஆகிய நாள்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்கா - சிகாகோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யமும், அமெரிக்க மனிதநேய சங்கமும் இணைந்து பன்னாட்டு மாநாட்டை நடத்தின. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தந்தை பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் தமது 77 ஆண்டுகால பொதுவாழ்வில் மனிதநேய சமுதாய மேம்பாட்டு பணி ஆற்றியதைப் பாராட்டி அமெரிக்க மனிதநேய சங்கம் ஆசிரியர் அவர்களுக்கு மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.
தனக்கு வழங்கப்பட்ட விருதினை, தன்னை கொள்கை வயப்படுத்தி ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக மாநாட்டு மேடையிலேயே தமிழர் தலைவர் அறிவித்தார். விருதினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த இயக்கப் பொறுப்பாளர்களுக்கும், கருப்புச் சட்டைத் தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெறும் முதல் இந்தியர் - தமிழர் தலைவர் ஆவார்.
மனிதநேய விருது பெற்ற பெருமையுடன் இயக்கத் தோழர்கள் நடத்திடும் தமிழர் தலைவர் பிறந்த நாள் - இன்று (2.12.2019) நடைபெறும் 87 ஆம் பிறந்த நாள் ஆகும் என்ற சிறப்பும் சேருகிறது.
தமிழர் தலைவர் 87 ஆம் பிறந்த நாள் என்பது பெரியார்தம் தத்துவம் உலகமயமாகி வருகின்றது என்பதை பறை சாற்றும் வகையில், எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும், நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் தமிழர் தலைவரை வாழ்த்தி பிறந்த நாள் செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன.
தமிழர் தலைவர் பிறந்த நாளினையொட்டி குருதிக் கொடை முகாம், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.