மாநில அரசுப் பணியாளர்களுக்கும் தேசிய தேர்வா?
மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான தேசிய தேர்வு என்பது மாநில உரிமையைப் பறிக்கும் கண்ணிவெடியே - ‘நீட்'டினால் ஏற்பட்ட இழப்புப் போதாதா? அண்ணாவின் பெயரால் கட்சியும், ஆட்சியும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இதில் எச்சரிக்கையாக இல்லையானால், ‘பிரளயம்' ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீஸ், குரூப் ‘ஏ' மற்றும் குருப் ‘பி' பணியிடங்களுக்கான தேர்வினை நடத்தி வருகிறது.
எஸ்.எஸ்.சி. எனப்படும் (Staff Selection Commission) மத்திய அரசுக்கான குரூப் ‘பி' பணியிடங்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வினை நடத்தி வருகிறது.
மாநிலத்தில் மாநில அரசால் மாநில தேர்வு ஆணையத்தால் (TNPSC) மாநில அரசு பணியாளர்களுக்காகத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
எல்லாம் ‘ஒரே' ‘ஒரே' இராகம்தானா?
மத்திய பணியாளர் நலத்துறை அமைச் சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியிடங்களுக்கும் - மாநில அரசுக்கான பணியிடங்களுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே பொதுத் தகுதித் தேர்வு நடத்தும் யோசனையைத் தெரிவித்துள்ளது.
மத்தியில் பி.ஜே.பி. தலைமையிலான அரசின் கொள்கை என்பது ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே ரேசன் முறை என்று எல்லாம் ‘ஒரே' ‘ஒரே' பாட்டுதான்.
மாநிலங்களே கூடாது என்பதுதான் பி.ஜே.பி., சங் பரிவார்களின் கொள்கையாகும்.
இப்பொழுது ஒவ்வொன்றாக மாநில அரசுகளின் உரிமைகளையும் விழுங்கும் வேலையில் பி.ஜே.பி. அரசு இறங்கி விட்டதாகவே தெரிகிறது.
மாநில அரசுக்கு
என்னதான் உரிமை?
தங்கள் தங்கள் மாநிலத்துக்குத் தேவை யான பணியாளர்களைத் தேர்வு செய்யும் உரிமைகூட மாநில அரசுகளுக்குக் கிடை யாதா?
இத்துடன் தேசிய அளவில் மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத் தரவரிசை தயாரிக் கப்படுமாம்.
இதன் பொருள் தமிழகத்தின் நிர்வாகத்தில் பீகார்காரரும், உ.பி.காரரும் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். ஏனெனில், எந்த மொழியிலும் எழுதலாம் என்கிறபோது, தமிழ் தெரியாத பீகார், உ.பி., ம.பி. அலுவலர்களிடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழை மட்டுமே பேசத் தெரிந்த பொதுமக்கள் அவதிப்பட வேண்டியதுதான்.
இதன் நோக்கம் மாநிலத்திற்கான தனித் தன்மையையும், கலாச்சாரத்தையும் நாசப் படுத்துவதுதான்.
இதன் பின்னணியில் பார்ப்பனிய பெருஞ்சதித் திட்டம் முக்காடு போட்டு உட்கார்ந்து இருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக் காலகட்டத்தில் தேசியம் என்ற போர்வையில் குப்தர்கால ஆட்சியை - மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத் திட்டமிட்டு விட்டார்கள்.
குப்தர் கால ஆட்சியை இவர்கள் பொற் காலம் என்று சொல்லுவதில்லையா? அது ஒரு பார்ப்பனத் தர்பாரே!
மாநில அளவில் மருத்துவக் கல்லூரிகளுக் கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதை மாற்றி, தேசிய அளவில் ‘நீட்' என்னும் தேசிய நுழைவுத் தேர்வை நடத்தியதால் ஏற்பட்ட கடும் இழப்பிலிருந்து மீள முடியாமல் மாநில மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். இது போதாது என்று இப்பொழுது, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதைபோல - மாநில அரசுப் பணி களிலும் தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டிட வஞ்சகக் கத்தியைத் தீட்டுகிறது.
கருத்துக் கணிப்பு என்பது
ஏமாற்று வேலையே!
மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப் படுமாம். மற்றவர்களும் கருத்துகளைக் கூறலாமாம். ‘நீட்' மற்றும் தேசிய கல்விக் கொள்கைமீது கேட்கப்பட்ட கருத்துகள்பற்றி வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை.
பார்ப்பன ஆட்சியின் ‘கண்ணி'வெடிகள்!
அந்த நிலைதான் இதற்கும் ஏற்படும். சமூகநீதியை ஒழித்துக்கட்ட ஒவ்வொரு கட் டத்திலும் மத்திய பா.ஜ.க. என்னும் பார்ப்பன ஆட்சி கண்ணிவெடிகளை வைத்துக் கொண்டே வருகிறது.
தமிழ்நாடு அரசு இதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மத்திய அரசின் அச்சுறுத் தலுக்கோ கூட்டணி ‘தர்மத்துக்கோ' அடி பணிந்து போய்விடுமாயின் அதைவிடத் தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
அண்ணாவின் பெயரில் உள்ள ஆட்சியின் கவனத்துக்கு...
மாநில உரிமைகளுக்காக மாநிலங்களவை யில் தனது முதல் உரையிலேயே அழுத்த மாகக் குரல் கொடுத்தவர் அறிஞர் அண்ணா - அதனை மறந்துவிடக் கூடாது.
நாட்டுப் பிரிவினையைக் கைவிடும்போது கூட பிரிவினைக்கான காரணங்கள் அப் படியே உள்ளன என்று அழுத்தமாகச் சுட்டிக் காட்டத் தவறவில்லை அறிஞர் அண்ணா.
‘நீட்' தேர்விலிருந்து விலக்குக் கோரி இரு மசோதாக்களை நிறைவேற்றியும் அதன் முடிவில் கோட்டை விட்டதுபோல, இதிலும் நடந்துகொண்டால், தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இது சமூகநீதி மண் - 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றிய மண்.
மண்டல் குழுப் பரிந்துரைகள் செயல் படுத்தப்பட போராடி வெற்றி பெற்ற மண்.
சமூகநீதிக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமான மண்.
பிரளயம் ஏற்படும் - எச்சரிக்கை!
இதில் எந்த இடத்திலாவது, எந்த வகை யிலாவது அ.தி.மு.க. அரசு, மத்திய அரசின் சூழ்ச்சிக்குப் பலியாகுமானால், பெரிய பிரளயம் ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு ஆண்டு வருமான வரம்பு நிர்ணயித்ததன் பலனை முதலமைச்சர் எம்.ஜி.ஆரே அனுபவிக்க வில்லையா? மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியைக் கண்ட பழைய வரலாற்றை எல்லாம் மறந்து விடக் கூடாது! கூடாது!!
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6.12.2019