மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்!
‘‘நான் சிவபெருமான் அவதாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன்'' என்று இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ள நித்தியா னந்தாக்கள்; மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யத் தவறக்கூடாது; ஜாதி இல்லாத நாடும், சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘அய்-டெக்' கருவிகளின் துணையோடு பலவித ‘‘லீலைகள்''
திருவண்ணாமலையில் படித்து, பட்ட தாரியான ஒரு இளைஞன் வேலை கிட்டாமல் அலைந்த நிலையில், பலவிதமாக யோசித்த நிலையில், மடங்கள் நிறைந்த அந்த ஊரில் - இந்த மட வியாபாரம் - நல்ல பக்தி வியாபாரமே செழிக்கும் வாணிபம் என்பதை எப்படியோ ஆழ மாக உணர்ந்துகொண்டு - திருவண்ணா மலையிலே சாமியார்களுக்குப் பஞ்சமில்லாத காரணத்தால் - கடைசியில் ஆங்காங்கே ஓடி, ஒரு ‘ஆசிரமத்தை'யும், சீட கோடிகளையும், பக்தைகளையும், பக்தர்களையும் உருவாக்கியதோடு, பல மொழி கற்றவர்களை அழைத்து, நவீன தொழில்முனைவோரின் உத்திகளையும், ‘அய்-டெக்' கருவிகளின் துணையோடு, அபார விளம்பரங்களைச் செய்து, நல்ல பக்தி வியாபாரத்தினை லாபகரமாகச் செய்து, அதற்கே உரிய மோசடிகளையும், மொள்ளமாரித்தனம், அவதார வேஷம் முதலிய பலவித ‘‘லீலைகளையும்'' செய்து, ஏராளமான பணம் சம்பாதித்த தோடு, பல குறுக்கு வழிகளில் காலி களுக்குக் காவி உடை தரிக்கச் செய்து, புதுப்புது ஆக்கிரமிப்புகளையும், பாலின வன்கொடுமைகளையும் செய்ததால் குற்றவாளியானார்.
கிரிமினல் குற்றங்களுக்காக
நாட்டை விட்டே தப்பினார்
மதுரை ஆதீனகர்த்தர் நாக்கில் தேன் தடவி, அவரை ஏமாற்றி அம்மடத்தின் இளைய பட்டமாகி, பிறகு அவரையே வெளியேற்றிட முயன்றவுடன், அவர் விழித்துக்கொண்டதாலும், சட்டம், அரசு அவர் பக்கம் நின்றதாலும் ஒருவழியாக அங்கே இருந்து விரட்டப்பட்டு, கருநாட கத்தில் மடம், திருவண்ணாமலையில் - மலையின் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி, பிறகு எப்படியோ குஜராத் வரை சென்று மடங்கட்டி, அங்கேயும் பெண் களையும், சிறார்களையும் கடத்தி, பிறகு பலவிதமான கிரிமினல் குற்றங்களின் காரணமாக சிக்க நேரிடும் என்ற அச்சத் தினால் நாட்டை விட்டே அந்தத் தீவிற்கு தப்பி ஓடிவிட் டார்.
இப்போது அவர் தேடப்படும் கிரிமி னல் குற்றவாளி - Proclaimed Offender போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்!
இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ளார்!
நம் நாட்டு காவல்துறையின் அல்லது வெளியுறவுத் துறை போன்ற துறையின் அதிகாரிகளின், அதிகார வர்க்கத்தின் துணையோ இல்லாமல் அவர் எப்படி தப்பித்து வெளிநாட்டில் ஒரு தீவையே எப்படி விலைக்கு வாங்கியுள்ளார்? அந்தத் தீவிற்குக் கைலாயம் என்றும் பெயரிட்டு, ‘‘இந்து நாடாக'' அதை அறிவித்து, ‘‘இங்கே வாருங்கள், நான் சிவபெருமான் அவதாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன்'' என்று நாளேடு களில் செய்தியை இணையத்தின்மூலம் அவரே வெளியிட்டுப் பரப்பி, இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள் ளார்!
அன்றைய காங்கிரசு கட்சியைக் கேள்வி கேட்ட பா.ஜ.க.வின் இன்றைய நிலை என்ன?
‘‘விஜய் மல்லய்யா என்ற வங்கி மோசடி மன்னனை எப்படி வெளியேற விட்டீர்கள்'' என்று காங்கிரசைப் பார்த்துக் கேள்வி கேட்ட அன்றைய எதிர்க்கட்சி பா.ஜ.க. இன்றைக்கு மத்தியில் ஆட்சி நடத்துகிறது.
வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி, நீரவ்மோடி, பா.ஜ.க. ஆட்சியில் எப்படி வெளிநாட்டிற்குத் தப்பினார் என்ற கேள் விக்கே விடை இன்னும் கிடைக்காத நிலையில், அடுத்து நித்தியானந்தா என்ற பெயரில் ஒரு காவி மோசடிப் பேர்வழி - கிரிமினல் குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு ஆளான கடைந்தெடுத்த நபர் எப்படித் தப்பினார் - வெளியேறினார்? அதுவும் வெளிநாட்டில் தீவு ஒன்றையே விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர் எப்படிப் பணம் சேர்த்தார்?
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ப.சிதம் பரங்கள்மீது பாயும் சட்டங்கள் இந்த நித்தி யானந்தாக்களின் இத்தகைய சாலோப, சாமீப, சாரூப, சாயுச்சிய பக்தி ராஜ் ஜியத்தை எப்படி அனுமதிக்கின்றன?
மத்திய அரசின் உள்துறைக்கே அவர் போன்ற ஆசாமிகள் சவால் விடுகிறார் களே, அதற்குரிய கடும் எதிர்நடவடிக் கைகள்தான் என்ன?
தனி ஹிந்து நாடாம்; இவர் குடியுரிமை வழங்குகிறாராம்; வாருங்கள் என்ற அழைப்பு விடுத்து பகிரங்கமாக ஏடுகளுக் குப் பேட்டி தருகிறாராம். இவைகளை எப்படி மத்திய அரசு சகித்துக் கொண்டுள் ளது?
மோசடி மன்னர்களான சாமியார்களுக்கு தனிச் சிறைச்சாலை தேவை!
இத்தகைய கிரிமினல் மோசடி மன்னர் களான சாமியார்கள் - பாபா ஆசாராம், இப்படிப் பலரும் சிறையில் உள்ள நிலை யில், இவர்களுக்கென திகார் போன்று ஒரு தனிச்சிறைச்சாலையே தேவை என் னும் அளவுக்கு நாளும் குற்றங்களை தேசிய அளவில் நடத்தி வருவதோடு, சர்வதேச அளவுக்கும் சென்றுள்ளார்களே!
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்!
இதுபோன்ற மோசடி தனி நாடு உருவாக்கும் நாடோடிகளைக் கண்டு, அவர்கள்மீது என்ன தீவிர நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டுள்ளது?
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை அரசின் கவனத் திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதும் முக்கியம்!
ஹிந்து நாடு என்பதால் மென்மையான நடவடிக்கையா?
ஜாதி இல்லாத நாடும்; சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடு
மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யத் தவறக்கூடாது!
ஜாதி இல்லாத நாடும்
சாமியார்கள் அற்ற நாடும்தான் சரியான நாடாகும்.
இந்த நித்தியானந்தாக்களை விட்டு விட்டால், நாட்டில் மேலும் பல நித்தி யானந்தாக்கள் உருவாகக்கூடிய அபாய மும் உண்டு, மறவாதீர்!
உடனடியாக மேல் நடவடிக்கைகள் மூலமாக இந்தக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படவேண்டும்!
பெண்ணினம் - பாதுகாப்படையட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
7.12.2019