‘நீட்'டை எதிர்த்து ஆசிரியர் அய்யா பெரும் பயணம் மேற்கொண்டுள்ளார்
‘நீட்', இந்தி, இந்துராஷ்டிரம், குடியுரிமை என்று அடுக்கடுக்கான மக்கள் விரோத சட்டங்களைத் திணிக்கிறது மோடி ஆட்சி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி முழக்கம்
புதுவை, ஜன.28 ‘நீட்', இந்தித் திணிப்பு, இந்துராஷ்டிரம், குடியுரிமைத் திருத்த சட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று அடுக்கடுக்காக மக்கள் விரோத திட்டங்களை, சட்டங்களை மக்கள்மீது திணிக்கும் மோடி தலைமை யிலான மத்திய பி.ஜே.பி. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட, இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு நாம் தயாராவோம் என்று முழக்கமிட்டார் புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.நாராயணசாமி அவர்கள் .
பிரச்சாரப் பெரும் பயணப் பொதுக்கூட்டம்
27.1.2020 அன்று புதுவையில் நடைபெற்ற ‘நீட்' எதிர்ப்புப் பிரச்சாரப் பெரும் பயணப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.நாராயணசாமி பங்கேற்று உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,
மாண்புமிகு அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களே, மரியாதைக்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.சிவா அவர்களே,
மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் விசுவநாதன் அவர்களே, மரியாதைக்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் அவர்களே, மரியா தைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் அவர்களே, மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொறுப்பாளர் முருகன் அவர்களே, மரியாதைக்குரிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களே, மரியாதைக்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களே, புதுச்சேரி மாநிலத்தின் திராவிடர் கழகப் பொறுப்பாளர் மரியாதைக்குரிய வீரமணி அவர்களே, இங்கே திரளாக வந்திருக்கின்ற மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியினுடைய பொறுப்பாளர்களே, பெரி யோர்களே, தாய்மார்களே, நண்பர்களே!
புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, முதலமைச்சர் நாராயணசாமி பயனாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி. சிறந்த முதலமைச்சராகப் பணியாற்றிவரும் நாராயணசாமி அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் (புதுவை, 27.1.2020).
எனக்கு முன் ஆசிரியர் அய்யா அவர்கள் விளக்க மாக பேசினார்கள். நீட் தேர்வைப்பற்றி இரண்டு கருத்துகளை மட்டும் நான் கூற விரும்புகிறேன்.
நீட் தேர்வை எதிர்த்து புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்!
நீட் தேர்வைக் கொண்டு வரும்பொழுது, புதுச்சேரி மாநிலத்தில் அதனை நாங்கள் எதிர்த்தோம்; சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதனை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்தோம்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, நீட் தேர்வினால், எங்களுடைய பிள்ளைகள் பாதிக்கப்படு வார்கள் என்று சொன்னோம். ஆனால், மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
மத்திய அரசிடமிருந்து
பதில் இல்லை
நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நீட் தேர்வின் கேள்வித் தாள்கள், மத்திய பாடத் திட்டத்தின் அடிப் படையில் தயாரிக்கப்படுகின்றன; நம்முடைய பிள்ளை கள் படிப்பதோ மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப் படையில். கேள்விகளில் முரண்பாடு இருக்கும். ஆகவே, எப்படி நீங்கள் இரண்டையும் ஒன்றாகக் கருத முடியும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினோம். அந்தக் கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து எவ்விதமான பதிலும் வரவில்லை.
இதற்கிடையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள், மாநில அரசைச் சார்ந்தவர்கள் எல்லாம் இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதி கிருபாகரன் வைத்த குட்டு!
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர் களின் முன்னிலையில் அந்த வழக்கு வந்தது.
அந்த வழக்கு விசாரணையின்போது ஆறு கேள்வி களை அவர் கேட்டார்.
எந்த பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேள்வி களை நீங்கள் கேட்கிறீர்கள்?
மத்திய பாடத் திட்டத்தில் கேள்விகள் கேட்கும் பொழுது, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள் எப்படி அதற்குப் பதில் எழுத முடியும்?
மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்பவர்களுக்காக தனியாக கேள்வித்தாள்களை நீங்கள் தயாரிக்க முடியுமா?
அதுமட்டுமல்ல, ஏற்கெனவே அவர்கள் 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை நீட் தேர்வின்போது நீங்கள் பரிசிலிப்பீர்களா?
உச்சநீதிமன்றம்கூட தவறாகப் பயன்படுத்தப்படுகிறது!
இப்படி கேள்விகளை அவர் கேட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் நீட் தேர்வுக்குத் தடை கொடுத்திருந்தார். அவர் கேட்ட கேள்விகள் சிக்கலாக இருக்கவே, அந்த வழக்கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.
உச்சநீதிமன்றத்திற்கு அந்த வழக்குப் போனவுடன், அவசர அவசரமாக உச்சநீதிமன்றம் அந்தத் தடையை ரத்து செய்து, நீட் தேர்வை எழுதலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டார்கள்.
நீதிமன்றம்கூட தவறாகப் பயன்படுத்தப்படுகிறது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசின் ஆட்சியில் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
குறிப்பாக, மாணவர்கள் எந்தப் பாடத் திட்டத்தில் படிக்கிறார்களோ, அந்தப் பாடத் திட்டத்தின் அடிப் படையில்தான் தேர்வு வைக்க முடியும். அதேபோல, மத்திய அரசின் பாடத் திட்டத்தின் பாடங்கள் வேறு; மாநில அரசின் பாடத் திட்டங்கள் என்பது வேறு.
ஆசிரியர் அய்யா மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்!
ஒவ்வொரு மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப் படையில்தான் தேர்வு வைக்கவேண்டுமே தவிர, அகில இந்திய அளவில் ஒரே தேர்வு என்கிற காரணத்தினால், அனிதா போன்றவர்களை நாம் இழந்துவிட்டோம். இதனை வலியுறுத்தித்தான் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பெரும் பயணம் சென்று, மரியாதைக்குரிய ஆசிரியர் அய்யா அவர்கள், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம், மத்தியில் எங்களுடைய ஆட்சி வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று.
அதுமட்டுமல்ல, மொழிக் கொள்கையைப்பற்றி ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. மொழிக் கொள்கையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று சொன்னால், இந்தி இந்த நாட்டினுடைய மொழி; ஆங்கிலம் இணைப்பு மொழி என்று சொன்னார்கள்.
ஆனால், எங்களுடைய அரசைப் பொறுத்தவரையில், அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்தோம்.
அந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் முன்மொழிந் தார்கள்.
மூன்றாவது மொழிக்கு
புதுச்சேரி மாநிலத்தில் இடமில்லை
நமக்கு இருமொழிக் கொள்கை என்று சொன்னால், நம்முடைய தாய்மொழி தமிழ்; இணைப்பு மொழி ஆங்கிலம் தவிர, மூன்றாவது மொழிக்கு இடமில்லை என்று அதையே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்தோம்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், கூட்டத்தைக் கூட்டினார். குறிப்பாக மாநில கல்வி அமைச்சர்களையெல்லாம் அழைத்து, கருத்து கேட்டார். அப்படி கருத்துக் கேட்கும்பொழுது, புதுச்சேரி மாநிலத்தின் சார்பாக, ஒரே ஒரு குறை என்று சொல்லி, எங்களுடைய தாய்மொழி, எங்களுடைய முதல் மொழி, இணைப்பு மொழி ஆங்கிலத்தைத் தவிர, மூன்றாவது மொழிக்கே புதுச்சேரி மாநிலத்தில் இடமில்லை என்று சொன்னோம்.
தமிழகத்தில்
அடிமை ஆட்சி நடைபெறுகிறது
ஆனால், தமிழ்நாட்டிலிருந்து அந்தக் கூட்டத்திற்கு யாருமே செல்லவில்லை. அமைச்சர் செல்லவில்லை, செயலாளர் செல்லவில்லை, தமிழகத்தின் சார்பாக யாரும் பேசவில்லை. அப்படியென்றால், தமிழகத்தில் எப்படி அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்பதை இதிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக, ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் - நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம். நாகப்பட் டினம், காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளான, கடற்கரைப் பகுதி - தரைப்பகுதி இரண்டையும் சேர்த்து, எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை வேதாந்தா நிறுவனத்திற்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அளித்தார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கடிதம் கொடுத்தார்கள், அந்தக் கடிதம் மத்திய அரசாங்கத்திடமிருந்து வந்தது.
எக்காரணத்தைக் கொண்டும், புதுச்சேரி மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கடிதம் எழுதி அனுப்பினோம்.
அதற்குப் பிறகு மாநில அரசினுடைய அனுமதி தேவையேயில்லை. மத்திய அரசு அனுமதி கொடுத்தால் போதுமென்ற சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, மக்களுடைய கருத்துகளை கேட்க வேண்டிய அவசியமில்லை என்று, இப்பொழுது ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, அந்த நிறுவனத் திற்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று கூறியிருக் கிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்
புதுச்சேரி மாநில அரசின் சார்பாக, காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சியின் சார்பாக, மிகத் தெள்ளத் தெளிவாக நாங்கள் கூறியி ருக்கிறோம், ‘‘எங்களுடைய ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்'' என்று சொல்லியிருக்கிறோம்.
இதை சொல்வதற்குக் காரணம், மத்தியில் இருக்கின்ற மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அரசு, தமிழக மக்களையும், புதுச்சேரி மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கிறது. அது எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, மீனவப் பிரச்சினையாக இருந்தாலும், அகழ்வாராய்ச்சி திட்டமாக இருந்தாலும் சரி, ஹைட்ரோ கார்பன் திட்ட மாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக இருந்தாலும் சரி தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்துராஷ்டிரத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்
இப்பொழுது புதிதாக ஒன்றை நுழைத்திருக்கிறார்கள், அது உங்களுக்கும் தெரியும். இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம்; இரண்டாவதாக இந்திய தேசிய குடியுரிமை பதிவேடு, மூன்றாவதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு. இம்மூன்றையும் புதுச்சேரி மாநிலத் தில் அமல்படுத்த மாட்டோம் என்று தெளிவாக நாங்கள் சொல்லியிருக்கிறோம்.
அதற்குக் காரணம், மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க நினைக்கிறீர்கள். இந்தியாவில் இந்துராஷ்டிரத் தைக் கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள். இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று தெளிவாகக் கூறியிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை எடுத் திருக்கிறோம். மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம், ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக் கிறோம். மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பாக, நம்முடைய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அந்த வலி இப்பொழுதுதான் தெரிகிறது. இளைஞர்கள் தெருவில் இறங்கி போராட்டங்களை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள்.
டில்லியில் 45 நாள்கள் பல்லாயிரக்கணக்கான மகளிர்கள் போராட்டம்!
டில்லியில் ஷாஹின் பாக் என்ற இடத்தில், 45 நாள்களாக பல்லாயிரக்கணக்கான மகளிர்கள் அமர்ந்து, இந்தக் குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை நாங்கள் இங்கே இருந்து எழுந்திருக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள்.
மத்திய அரசும், மாநில அரசும், துணை நிலை ஆளு நரும் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்.
அமைதியான முறையில் போராட்டங்களை நடத்து பவர்களை வெளியேற்றுவதற்கு உங்களுக்கு அதிகார மில்லை என்று நீதிமன்றம் சொல்லியது.
மக்கள் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய் கிறார்கள்; தங்களுடைய உரிமைகளைக் கூறுகிறார்கள்.
குறிப்பாக, மதத்தின் பெயரால் எல்லோரையும் பிரித்து, மக்கள் மத்தியில், நாங்கள் இந்துக்களாக இருக் கிறோம் என்று சொல்லி, வாக்குகளைப் பெறுவதற்காக பாரதீய ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
எப்பொழுதெல்லாம் மோடிக்கு சரிவு ஏற்படுகிறதோ,
அப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் முன்னே வந்துவிடும்!
இன்னொன்று, எப்பொழுதெல்லாம் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் நரேந்திர மோடிக்கு சரிவு ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் பாகிஸ்தான் முன்னே வந்துவிடும்.
அதற்காக இந்து என்ற போர்வையில் வருவார்கள். இப்படி மக்களை அய்ந்தாண்டு காலம் ஏமாற்றிவிட்டார் கள். இனிமேல் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. இதனை நாம் மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
இளைஞர் பட்டாளம் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியவுடனேயே, நரேந்திர மோடி அரசுக்கு அங்கே வேலையில்லை என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம்
அதற்காகத்தான் நாங்கள், எங்களுடைய சட்டமன் றத்தில் இது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, கண்டிப்பாக இந்திய குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேட்டினை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று நாங்கள் ஒருமனதாக முடிவு செய்யவிருக்கிறோம்.
ஆனால், பக்கத்தில் உள்ள தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழகத்தை ஆளும் கட்சியினர் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேறியிருக்காது. அவர்கள் ஆதரவாக வாக்களித்ததால், இன்றைக்கு இந்தியாவே பற்றி எரிகிறது; வடகிழக்கு மாநிலம் பற்றி எரிகிறது; உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடக் கிறது; டில்லியில், ராஜஸ்தானில், மத்திய பிரதேசத்தில், கருநாடகத்தில், புதுச்சேரியில், தமிழகத்தில் போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாம் விழிப்போடு இருந்தால்தான்,
இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்
இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் யார் பொறுப்பு என்றால், மத்தியில் ஆட்சியில் செய்யும் நரேந்திர மோடிதான் பொறுப்பு.
ஆகவே, மதச்சார்பற்ற அணிகளான நாம் விழிப் போடு இருந்தால்தான், இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும், அதுதான் மிகவும் முக்கியம்.
இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்
ஏற்கெனவே ஒரு சுதந்திரப் போராட்டத்தை சந்தித் தோம். நரேந்திர மோடி அரசை வீட்டிற்கு அனுப்புவதற்கு, இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.நாராயணசாமி அவர்கள் உரையாற்றினார்.