திருச்சியில் பிப்.21 இல் கூடும் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அறிவிப்பு வெளிவரும்
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
காஞ்சிபுரம், ஜன.29 இந்த ஆண்டே ‘நீட்' தேர்வை கைவிடாவிட்டால், வருகின்ற பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ ஒரு பெரிய போராட்டத்தை- சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிடர் கழகம் ஒத்தக் கட்சிகளையும் இணைத்து நடத்தவிருக்கிறது. திராவிடர் கழகப் பொதுக்குழு பிப்ரவரி 21 ஆம் தேதி கூடவிருக்கிறது; அதில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று (28.1.2020) காஞ்சிபுரம் வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
பெரியார் அனைவருக்கும் உரியார் என்ற அளவிலே கண்டித்திருப்பது வரவேற்கத்தகுந்தது
செய்தியாளர்: காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக் கிறார்கள்; பா.ம.க. பிரமுகர் கைது என்ற செய்தி வந்திருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: குற்றவாளி எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல; எவ்வளவு தவறான ஒரு செயலை செய்திருக்கிறார் என்பதற்கு சட்டம் தன்னு டைய கடமையை தயவு தாட்சயண்யமின்றி செய்ய வேண்டும். இதில் கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல் காவல்துறை நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆகவே, இதில் கட்சிக் கண்ணோட்டம் இல்லை. எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், பெரியார் அனைவருக்கும் உரியார் என்ற அளவிலே அனைவரும் அதனைக் கண்டித்திருப்பது வரவேற்கத்தகுந்தது.
கண்டித்திருப்பவர்கள் உண்மையாகவே கண்டித் திருக்கிறார்கள் என்றால், உண்மையாகவே குற்றவாளி களைத் தண்டிக்கவேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது.
இதைவிட ஒரு கொடுமை என்னவென்றால், எங்கள் கழகத்தவர்கள்மீதே அந்தப் பழியை போடலாம் என்று நினைத்திருப்பது மிக மிகக் கேவலமான ஒன்று.
சிலையை அவர்கள் சேதப்படுத்தியதைவிட, இது கொடுமையான ஒரு உணர்வு. இந்த உணர்வு இருக்கிறது என்று சொன்னாலே, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
கடைசியாக ஒன்றை சொல்லுகிறோம், பெரியார் சிலையில் கை வைத்தால், அவர்கள் மின்சாரத்தில் கை வைத்திருப்பதாகத்தான் பொருள்.
எதிர்ப்புகள் அவருடைய வயலுக்கு உரமாகும்; கொள்கைப் பயிர் வளமாக செழிக்கும்!
உடனடி விளைவுகள் தெரியாது. எப்பொழுதுமே அதனுடைய விளைவுகளை அவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.
எங்களைப் பொருத்தவரையில் பெரியார் காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்திப்பது என்பது, அய்யா காலத்திலிருந்தே சாதாரணம்.
எனவே, எதிர்ப்புகள் அவருடைய வயலுக்கு உரமாகும்; கொள்கைப் பயிர் வளமாக செழிக்கும்.
‘நீட்' தேர்வின்மூலமாக மாநில அரசுகளுடைய உரிமையைப் பறித்து பல பேருடைய உயிரிழப்புக்குக் காரணமான செய்தி உலகறிந்த ஒன்று. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு, அடுத்து இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போடுவதைப்போல, மாநில அரசின் உரிமையைப் பறிப்பதற்கு, பொது சுகாதாரம், மருத்துவமனைகள் இவைகளை மாநிலப் பட்டியலி லிருந்து ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரண்ட் பட்டியலுக்கு நாங்கள் எடுத்துச் செல்லப்போகிறோம், அது நிதிக் கமிஷன் பரிந்துரை என்றாக்கி இருக்கிறார்கள்.
இதுபோன்று வருமானால், மிகப்பெரிய ஆபத்து. நம்முடைய மருத்துவர்களின் வாய்ப்புகள் பறிபோவ தோடு முழுக்க முழுக்க இங்கே நடைபெறுகின்ற மருத் துவர்கள் நியமனம் எல்லாம், மத்திய அரசிடமிருந்துதான் வரும்.
மாநில அரசும்- மாநில தலைவர்களும்
தயாராக இருக்கவேண்டும்
ஒத்திசைவு பட்டியல் என்றால், மாநில அரசுக்கும் உரிமை இருக்கிறது என்று சொல்வது, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இதுபோன்றதுதான் நீட் தேர்வும். ஆனால், அதிலிருந்து விதிவிலக்குக் கொடுக்கமாட்டோம் என்று சொல்லி, மாநிலங்களுக்கு அதிகாரமே இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.
இங்கே இருக்கிற டாக்டருக்கு அசாம் மாநிலத்தில் போஸ்டிங் போடுவார்கள். கவுகாத்தியில் போஸ்டிங் போடுவார்கள். அந்த மாநிலத்தில் இருக்கும் மருத்து வரைக் கொண்டு வந்து இங்கே பணியில் அமர்த்து வார்கள். இதுபோன்ற நிலை வந்தால், மொழி தெரியாது. நோயாளிகள் அந்த மருத்துவர்களிடம் சொல்லும் பிரச்சினைகளைப்பற்றி அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை.
இதுபோன்ற நிலை உருவாவதற்குமுன் தடுத்தாக வேண்டும். மாநில அரசு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத் தைக் கொண்டு வரவேண்டும். எதிர்க்கட்சிகள் உள்பட இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த ஆபத்து கத்தி மேலே தொங்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்து. ஒவ்வொரு முறையும் மாநில அரசுகளுடைய உரிமைப் பறிப்புதான், மத்திய அரசின் பணியாக இருக்கின்றது. இதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டு தடுக்கின்ற முயற்சியில் மாநில அரசும் சரி, மாநில தலைவர்களும் தயாராக இருக்கவேண்டும்.
திராவிடர் கழகப் பொதுக்குழுவில்
போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்!
‘நீட்' தேர்வு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கைவிடவேண்டும். அரசு. தேவையில் லாமல் சிறு பிள்ளைகள் இடைநிற்றலுக்கு வழி செய்யக் கூடிய இந்த ஆபத்தான வழிமுறை, பிள்ளைகள் மத்தியில் ஒரு மனச்சுமையை ஏற்படுத்தக்கூடியதை கைவிடவேண்டும். இந்த ஆண்டே அதனை கைவிடா விட்டால், வருகின்ற பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ ஒரு பெரிய போராட் டத்தை- சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிடர் கழகம் ஒத்தக் கட்சிகளையும் இணைத்து நடத்தவிருக் கிறது என்பதை நான் பொதுக்கூட்டத்தில் அறிவித்தேன்.
எங்களுடைய பொதுக்குழு திருச்சியில் பிப்ரவரி 21 ஆம் தேதி கூடவிருக்கிறது; அதில் இதற்கான அறிவிப்பு வெளிவரும்.
நீதிமன்றத்தில் சந்திப்போம்!
செய்தியாளர்: பட்டியலினத்தவர் ஆணையத்தைக் கலைக்கவேண்டும் என்று சொல்லி, ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கிறதே, இது சம்பந்தமாக திராவிடர் கழகம் சார்பில் போராட்டங்கள் அறிவிக் கப்படுமா?
தமிழர் தலைவர்: போராட்டங்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகும். பட்டியல் இனத்தவர் - ஷெட்யூல்டு காஸ்ட் என்று சொல்லக்கூடியவர்களுடைய உரிமை என்பது, அது அரசமைப்புச் சட்டம் வகுத்திருக்கின்ற உரிமையாகும்.
எனவே, அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக் கட்டுமானத்தைத் தகர்க்க இவர்களுக்கு உரிமையில்லை. நீதிமன்றத்தில் முதலில் அதனை திராவிடர் கழகம் சந்திக்கும்.
- இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.