* குலக் கல்வி, குருகுலக் கல்வியாக திணிக்கப்பட உள்ளது
* சமஸ்கிருதம்தான் இந்திய மொழிக்கெல்லாம் தாய்மொழியாம்!
ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்தின் இரண்டாவது இடத்தில் இருக்கும் சுரேஷ் பையாஜி ஜோஷி என்பவர் குருகுலக் கல்வித் திட்டம் கொண்டு வருவது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில் புதைந்து இருக்கும் குலக்கல்வித் திட்டத்தையும், சமஸ்கிருதத் திணிப் பையும், இவற்றின்மூலம் பஞ்சமர், சூத்திரர், பெண்களின் கல்விக் கண் களைக் குத்தும் சதி இருப்பதையும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்றைய (11.2.2020) ‘இந்து' ஆங்கில நாளேட்டில் (10 ஆம் பக்கத்தில்) ஒரு முக்கிய செய்தி - ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தின் தலைவருக்கு அடுத்த முக்கிய பொறுப் பில் இரண்டாம் நிலையில் (Second in Command) உள்ளவரான ‘‘பையாஜி ஜோஷி'' என்பவர் ‘இந்துத்துவா'வை மேலும் கட்டமைக்க எவ்வித முயற்சி யெல்லாம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வற்புறுத்திய கருத்தைப்பற்றி (அது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுவோம்) விளக்கியுள்ளதில், இன்றைய மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசுக்கு இரண்டு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்!
‘‘1. மீண்டும் குருகுலக் கல்வி முறையைப் புதுப்பித்தல் மிகவும் அவசியம்.
2. பள்ளிக்கல்வியின் முக்கிய பகுதியாக சமஸ்கிருதம் நடைமுறைப்படுத்தப்படல் கட்டாயமாகும்; (Gurukul System must be Revived) காரணம் சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி ஆகும். நீங்கள் இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சமஸ்கிருதம் இல்லாமல் - படிக்காமல் - இந்தியாவைப் புரிந்துகொள்ளவே முடியாது!''
இந்தக் கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரே மத்திய கல்வித் துறையான - மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்து அதற்கான தொடக்கப் பணிகளை நடத்தி வருகிறார்!
குருகுலக் கல்வி எப்படி இருக்கும்?
குருகுலக் கல்வி முறை என்பது எப்படி இருக்கும் என்பதை ஓரிராண்டுக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் முக்கிய தலைவர்களும் (மோகன் பாகவத்) கூறி யுள்ளதை அவர்களது அதிகாரபூர்வ வார ஏடான ‘ஆர்கனைசர்' என்ற ஆங்கில ஏடு வெளியிட்டதைச் சுட்டி, இந்த ஆபத்து கல்வி முறையில் விதைக்கப்பட்டு முளை விடத் தயாராகிறது என்பதை நாட்டோருக்கு எச்சரித்தோம்.
இப்போது முளைத்துக் கிளைக்க ஆயத்தமாகி விட்டது; (அதற்கு வாய்ப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. மிருக பலத்தை நாடாளுமன்ற மக்களவையில் பெற் றுள்ளது).
மனுதர்மமும், அதன் பண்பாட்டு ஆயுத மான சமஸ்கிருதம் என்ற வடமொழியும் - மீண்டும் கல்வித் துறையை கபளீகரம் செய்ய திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன!
குருகுலக் கல்வித் திட்டம்பற்றி அவர் கள் தந்த விளக்கப்படி, அவர்களே பள்ளிக் கல்வி - அங்கு சொல்லிக் கொடுக்கப்படும் ஆசிரியர்களே தேவைப்படாமல், வெளி யில் உள்ள ஒருவரிடம் அவர்கள் குறிப் பிடும் குருகுலக் கல்வியை கற்று முடித்து விட்டோம் என்று அவர்களே சான்றிதழ் வழங்கி, பல்கலைக் கழகங்களில் எம்.ஏ., பட்டத்தைக்கூட எளிதில் விரைந்து பெற்று விடலாம்!
இதுபற்றி முன்பே வெளிவந்த தகவல் களை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளுதல் முக்கியம்.
பெற்றோர்களே எச்சரிக்கை!
புதிய மத்திய கல்விக் கொள்கை என்ற குலதர்மக் கல்வித் திட்டம் - குருகுலக் கல்விக் கொள்கை அறிக்கை 2019-லேயே தேசிய அளவில் (இந்தியாவில்) வாழும் 125 கோடி மக்கள் தொகையில் சமஸ்கிருத மொழி என்ற வட ஆரிய மொழியைப் பேசுவோர் தொகை - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையின் 22 மொழிகளிலேயே மிகமிகக் குறைவு என்பது (14 ஆயிரத்து 135 பேர்) மறுக்க முடியாத உண்மையாகும். ஆர்.எஸ்.எஸ். செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி கூற்றுப்படி, 125 கோடி இந்திய மக்கள் தொகையில் சமஸ்கிருதம் அறிந்த இந்த சில ஆயிரம் பேர்களைத் தவிர, அத்தனைப் பேரும் (வெளிநாட்டவர்களை விட்டுத் தள்ளுங்கள்) இந்தியாவையே இதுவரை ‘‘புரிந்துகொள்ளாதவர்களாகவே'' வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போலும்! எவ்வளவு நுட்பமான அறிவின் உச்ச ‘பிரகஸ்பதிகள்' இவர்கள்!
சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அத்தனைக்கும் தாய்மொழி என்ற கூற்றே ஏற்றுக் கொள்ளத்தக்கதா?
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் கல்வி வாழ்வு இனி வருங்காலத்தில் மிகப்பெரிய இருண்ட காலமாக ஆகப் போகிறது! குலதர்மக் கல்வி, குருகுலக் கல்வியாக ‘‘புதிய அவதாரம்'' எடுத்து, ‘‘பஞ்சம, சூத்திர, பெண்கள்'' என்ற கீழ்ப்படி நிலையினரின் கண்களைக் குத்திட, கல்வித் துறையில் ‘கண்ணிவெடிகள்' புதைக்கப் பட்டு அந்தப் பாதையில் நமது இளைய தலைமுறையை நடந்து வாருங்கள் என்று இதன்மூலம் கூறப்படுகிறது!
ராஜாராம் மோகன்ராய் எழுதிய கடிதம்
பிரிட்டிஷ்காரர்கள் முதன்முதலில் வங்காளத்தில், சமஸ்கிருதக் கல்வியைப் புகுத்த முயன்றபோது 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் - ராஜாராம் மோகன் ராய் அவர்கள் (அவரே ஒரு பார்ப்பன உயர்ஜாதிக்காரர் என்பதையும் நினைவிற் கொள்க) அன்றைய கவர்னர் ஜெனரலுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘‘இந்த நாட்டு மக்களை அறியாமை இருளில் ஆழ்ந்து கிடக்கச் செய்வது பிரிட்டிஷ் சட்ட மன்றத்தின் நோக்கமாக இருக்குமானால், சமஸ்கிருத கல்வி முறையே அதற்குப் போதுமானதாகும்'' என்று ஓங்கி மண்டையிலடித்த மாதிரி கூறியுள்ளார். (அக்கடிதம் தனியே பிறிதோர் இடத்தில் காண்க).
மக்களிடம் விளக்கவேண்டிய தருணம்!
சமஸ்கிருதக் கல்விக்கு எதிர்ப்பு - வங்கத்து சீர்திருத்த மேதையின் எதிர்ப்பு சரியாக 197 ஆண்டுகளுக்கு முன்பே என்கிறபோது, மீண்டும் அறியாமை இருட்டில் நாட்டை அழைத்துச் செல்ல விரிக்கப்படும் சிவப்புக் கம்பளம்தான் மத்திய வருணாசிரம வடமொழித் திணிப்புக் கல்வி கொள்கை என்பதை, பெற்றோர்களே, கல்வியாளர்களே, நடு நிலையாளர்களே, முற்போக்குச் சிந்தனை யாளர்களே, புரிந்து, மக்களிடம் விளக்கிட ஆயத்தமாகுங்கள்!
கொள்ளிக்கட்டைகளை எடுத்து எந்த புத்திசாலியும் தலையைச் சொறிந்துகொள்ள மாட்டார்கள் என்பது உறுதி! உறுதி!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.2.2020