மக்கள் தொகையில் சில ஆயிரம் பேர்களே பேசும் செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு செம்மொழி தமி ழைவிட 22 மடங்குத் தொகையை மத்திய அரசு வாரி இறைத்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
பன்மொழி, பல கலாச்சாரம், பல மதங்கள் என்றுள்ள இந்திய நாட்டில், ஒரே மொழி - சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம் - இந்துத்துவா ஆரிய சனாதனக் கலாச் சாரம், ஒரே மதம் - இந்து மதம் என்று அந்நியர் தந்த பெயரால் இயங்கும் ஆரிய சனாதன வருணாசிரம மதமே இந்து மதம்!
இதனை நடைமுறைப்படுத்துவதை நாளும் வேக வேகமாக மத்திய பா.ஜ.க. அரசு, தனக்குக் கிடைத்துள்ள நாடாளு மன்ற மிருக பலத்தைப் பயன்படுத்தி, பல சட்டங்களை வேக வேகமாக - ஜனநாயக விரோதமாக - மக்கள் விரோதமாக செயல் படுத்தி வருகிறது!
செத்த சமஸ்கிருதத்துக்கு பணத்தை வாரி இறைப்பதா?
‘செத்தமொழி'யான - வடமொழியான சமஸ்கிருதம் - உலகில் பேச்சு வழக்கில் எங்கும் இல்லாத புரோகித மொழியாகும் - தமிழ்போல் மூத்த மொழியும்கூட அல்ல.
பிராக்கிருதம், பாலி போன்றவை களுக்குப் பிறகு கூட்டுக் கலவையாக உருவாக்கப்பட்ட மொழி என்பதே - மொழி ஆய்வு வல்லுநர்கள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
‘சமஸ்த்+கிருதம்' என்றால், ‘நன்றாக செய்யப்பட்டது' என்ற பொருளைக் கொண்டதேயாகும்.
125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட (8 ஆவது அட்ட வணை) 22 மொழிகளில் வெகு வெகுக் குறைவான பேர்களே, 14,135 பேர்களே பேசும் மொழிதான் இது!
இதற்கு மற்ற செம்மொழிகளைவிட தமிழ் செம்மொழியைவிட, மற்ற செம் மொழிகளாக அறிவிக்கப்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா மொழி களைவிட, ஓரவஞ்சனைபோல, மக்கள் வரிப் பணத்தை எடுத்து, சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கே செலவிடும் அநீதி! அதுவும் 22 மடங்கா?
புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தரப்பட்டவை!
சமஸ்கிருதத்துக்கு செம்மொழி தகுதி கிடைத்தது எப்படி?
உலகின் பற்பல நாடுகளிலும் செம் மொழி தமிழ் சுமார் 10 கோடி மக்கள் பேசும், எழுதப்படும் உயர்தனி செம் மொழி.
சமஸ்கிருதத்திற்கு - செம்மொழித் தகுதி இந்திய அரசுமூலம் கிடைத்தது எப்படி? யாரால் கிடைத்தது? முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றதையொட்டியே சமஸ் கிருதத்திற்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதுதான் உண்மை.
என்றாலும், இது ‘‘தேவ பாஷையாம்'' - ‘‘தமிழ் நீஷபாஷையாம்!''
கடவுளுக்கு உகந்த மொழி - ஆர்.எஸ்.எஸ். தாங்கிப் பிடிக்கும் மொழி - ஆரிய மொழியான சமஸ்கிருதமாம்!
அதற்கு இப்படி அரசு பணம் - மக்கள் வரிப் பணம் தாரை வார்க்கப்படுவதா?
தமிழைவிட ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல 22 மடங்கு கூடுதலாகவா?
கடந்த பல ஆண்டுகளாக செம்மொழி தமிழை அழிப்பதுதான் முதல் வேலையா?
வாய்ப்பொத்தி கிடப்பதா தமிழ்நாடு அரசு?
தமிழ்நாடு அரசும் வாய்ப் பொத்தி, கைகட்டி வேடிக்கைப் பார்க்கலாமா? என்னே கொடுமை! முதலமைச்சர்தானே செம்மொழி நிறுவனத்தின் தலைவர்!
பா.ஜ.க.வின் பிரதமர் மோடி, தமிழ் ஒப்பனை, தமிழ்பற்றி சில நேரங்களில் குரல் கொடுத்து தமிழ்நாட்டு வாக்காளர் களை ஏமாற்ற நினைக்கிறார். முகமூடிகளை அவர்களே கழற்றிக் காட்டுகிறார்கள் இதன்மூலம்.
காவிகளின் தமிழ் வேடம் கலைகிறது!
புரிந்துகொள்ளுங்கள், புத்தியுள்ள மக்களே!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.2.2020