சட்டத்தைப் பிறப்பித்தது பிறப்பித்ததுதான் - பின் வாங்க மாட்டோம் என்று
சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் இருந்த இடம் தெரியாமல் போனவர்களே!
வண்ணையில் நடைபெறும் போராட்டக் களத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
சென்னை, மார்ச் 1 இப்பொழுது நடைபெறும் போராட்டம் என்பது மத வெறிக்கும், மனிதநேயத் துக்கும் எதிரான போராட்டமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற் றுக்கு எதிராக டில்லி ஷாஹின் பாக் பகுதியில் முஸ்லிம் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது போல சென்னை பழைய வண்ணையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார்.
கடந்த 14 ஆம் தேதி பழைய வண்ணை ரவுண்டானா அருகில் தொடங்கியது இப்போராட்டம், 16 ஆம் நாளாக அறவழியில் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. இதில் ஜாதி, மத, கட்சிகள் பேதமின்றி பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வந்து, அந்த மூன்று கருப்புச் சட்டங்களைக் குறித்து உரையாற்றிச் சென்றுள்ளனர். 29-2-2020, சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், சென்னை ஷாகின் பாக் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள அப்போராட்டக் களத்திற்கு சென்று உரையாற்றினார்.
அவரது எழுச்சியுரை வருமாறு:
16 ஆம் நாளாக
நடைபெறுகின்ற போராட்டம்
நண்பர்களே, மேடையில் உள்ள அனைத்து சமு தாய, மத மற்றும் இயக்கங்களைச் சார்ந்த சான் றோர்களே, தோழர்களே,
கடந்த 16 நாள்களாக தொடர்ந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு அறவழியிலே போராடிக் கொண்டிருக்கக்கூடிய அருமை இஸ்லாமிய சகோதரிகளே, சகோதர்களே, நண்பர்களே, செய்தியாளர்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா முழுவதும் தொடர்ந்து
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய கணக் கெடுப்பு சட்டம், தேசிய குடிமக்கள் பதிவுச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களும் எதிர்க்கப்படுவது என்பது இருக்கிறதே, ஏற்கெனவே இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, இந்த அறப்போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக்கின்றது. உலக நாடுகளிலே யார் யாருக்கெல்லாம் நியாய உணர்வு இருக்கின்றதோ அவர்களும் இதைக் கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ் நிலையில், ஒன்றைத் தெளிவுபடுத்தவேண்டும்.
இந்தப் போராட்டம் என்பது ஏதோ இஸ்லாமியர் களுக்கும், அரசுக்கும் நடக்கும் போராட்டம் என்று யாரும் சித்தரிக்கவேண்டாம். இன்றைக்கு அதை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிற தோழர்கள் இஸ்லாமியர்களாக இதுபோன்ற இடத்திலே இருக்க லாம். ஆனால், இதற்கு எல்லா மதங்களையும் தாண்டி எல்லோருடைய ஆதரவும் உண்டு என்பதுதான் இந்தியா முழுவதும் நடைபெறக்கூடிய இந்தப் போராட்டத்தினுடைய தத்துவம்.
செய்தியாளர்களாகிய நீங்கள் ஒன்றை கவனித் தீர்களோ இல்லையோ, குறிப்பாக இதுவரையில் பதிவு செய்யவில்லையானால், இந்தப் போராட்டக் களத்திலே ஒன்றை நீங்கள் பதிவு செய்யவேண்டும்.
அந்த இடத்திலே சுவரெழுத்தில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் பதிவு செய்யவேண்டும்.அரசமைப்புச் சட்டத்தினுடைய பீடிகையை தெளிவா கவே எடுத்து எழுதியிருக்கிறார்கள்.
யார் - யாருக்கிடையே
நடைபெறும் போராட்டம் இது?
எனவே, இந்தப் போராட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று சொல் கின்ற நமக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக நடக்கக்கூடிய மோடி அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக நடைபெறக்கூடிய போராட்ட மாகும். ஆர்.எஸ்.எஸ்.சிற்கு எதிரான போராட்டமாகும்.
அவர்கள் அரசமைப்புச் சட்டத் தையே தூக்கி எறிகிறார்கள். அரசமைப் புச் சட்டத்தில் உள்ள பீடிகையில் மிகத் தெளிவாக அய்ந்து செய்திகள் சொல் லப்பட்டு இருக்கின்றன. அந்த அய்ந்து செய்திகளும் மிக முக்கியமானது.
Sovereign, Socialist, Secular and Democratic Republic என்ற அய்ந்து அம்சங்கள்.
முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார் பின்மை, ஜனநாயகக் குடியரசு. எனவே, இந்த அம்சங்களுக்கு முற்றிலும் விரோத மாக அந்த மூன்று சட்டங்களும் இருக்கின்றன. எனவே, அரசமைப்புச் சட்டத்தைக் காக்கின்றவர் களுக்கும், அரசமைப்புச் சட்டத்தை உடைக்கின்றவர்களுக்கும் நடைபெறக் கூடிய போராட்டம் இந்தப் போராட்டமாகும். ஜனநாய கத்திற்கும், பாசிசத்திற்கும் நடைபெறக் கூடிய போராட்டம், இந்தப் போராட்டம்.
போராட்டங்களைத்
தூண்டிவிடுபவர்கள் யார் தெரியுமா?
எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டி விடுகிறார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். தூண்டி விடுகிறவர்களை தெளிவாக நாம் அடையாளம் கண்டு சொன்னால், அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த சட்டத்தை, அரசமைப்புச் சட்டத்தை மீறி கொண்டு வந்த பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும், அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களும்தான், இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டவர்கள் என்பதுதான் உண்மையானது. இந்தப் போராட்டம் ஏன் தேவைப் பட்டது? இவர்களுக்கெல்லாம் வேலையில்லையா? அல்லது இங்கே வந்து சும்மா அமர்ந்திருக்கிறார்களா?
அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக் கட்டுமானத்தை உடைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது!
நேற்றுகூட செய்தியாளர்கள் பேட்டியின்பொழுது, ‘‘இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள் யாரும் பாதிக் கப்படமாட்டார்களே'' என்று கேள்வி கேட்டார்கள்.
பக்ருதீன் அலி அகமது விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா? என்று கேட்டேன்.
அவருடைய சொந்தக்காரருக்கு அசாமில் பட்டியலில் இடமில்லை. இதுதான் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் நடக்கும் என்றேன்.
அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டு மானத்தை உடைப்பதற்கு எந்தக் கட்சி அரசாங்கத் திற்கும், அவர்கள் எவ்வளவுதான் அதிகாரம் வைத்தி ருந்தாலும், அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.
எனவே, அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக் கட்டுமானத்தை உடைப்பதுதான் சி.ஏ.ஏ. என்று சொல் வதும், என்.பி.ஆர். என்று சொல்வதும், என்.ஆர்.சி. என்று சொல்லும் மூன்று சட்டங்களும்.
பொய்யான தகவலை சொல்லுகிறார்கள்
எனவேதான், இந்தப் போராட்டம், அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும், அதனை நிலை நிறுத்தவேண்டும் என்று சொல்லுகின்ற சக்திகளுக்கும், அதாவது முற்போக்கு சக்திகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் உள்ள கடமை
‘‘முஸ்லிம்கள் பாதிக்கப்படமாட்டார்கள்; இங் குள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்’’ என்று ஒரு பொய்யான தகவலை சொல்லுகிறார்கள். இப்படி சொல்லுகின்ற யாராவது நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தைப் படித்தார்களா? அப்படி படித்திருந் தால், அவர்களுக்குத் தெளிவாக விளங்கியிருக்கும்.
மத அடிப்படையில், இந்திய அரசமைப்புச் சட்டத் தில், 2 ஆவது பாகத்தில், குடியுரிமை பகுதி என்ற பகுதி யில் இருக்கக்கூடிய எந்தப் பகுதியிலாவது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை நிர்ணயிக்கப் பட்டு இருக்கிறதா? என்பதற்கு பதில் சொல்லட்டும்.
ஆனால், முதல் முறையாக, மதத்தை அடிப்படை யாகக் கொண்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வெளியே வரக்கூடியவர்கள் - நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திலே, மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து, இஸ்லாமியர்களைப் புறந்தள்ளவேண்டுமாம். மத அடிப் படையில், இதுவரையில், குடியுரிமை நிர்ணயிக்கப்பட்ட துண்டா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
‘கரோனா வைரசை’ விட மிக மோசமானது
இந்த மூன்று சட்டங்களும்!
இந்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சொன்னார்கள்.
சீனாவில்தான் கரோனா வைரசின் தாக்கம் இருக் கிறது. ஆனால், உலக நாடுகள் ஏன் அதனைக் கண்டு அஞ்சுகின்றன? முன்னேற்பாடுகளை ஏன் செய்கி ன்றன? பரவாயில்லை, கரோனா வைரஸ் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா இருப்பார்களா?
கரோனா வைரசைவிட, இந்த மூன்று சட்டம் என் கின்ற வைரஸ் இருக்கிறதே, இது பல தலைமுறைகளை அழிக்கக் கூடியது. கரோனா வைரஸ் தாக்கியவரை மட்டும்தான் அழிக்கும். ஆனால், அந்த மூன்று சட்டங் கள் பல தலைமுறைகளை அழிக்கக்கூடியது. எனவே தான், இந்தப் போராட்டம் இயல்பாக மக்களால் நடத் தப்படக்கூடிய போராட்டமாக இருக்கிறது.
இங்கே மத அடிப்படைக்கே பிரச்சினையில்லை. இது மனித உரிமை பிரச்சினை - அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற பிரச்சினை - ஜனநாயகத் தைக் காக்கின்ற பிரச்சினை - பாசிசத்தை எதிர்க்கின்ற பிரச்சினை - எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற பிரச்சினை.
63 சதவிகித மக்கள் இவர்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறார்கள்
எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது, அந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்வதற்கு, உங்க ளுக்கு ஜனநாயகப்படி உரிமையில்லை.
மத்தியில் இவர்கள் மிருகப்பலம் பெற்று இருக்கிறார் களே, 37 சதவிகிதம்தான் அவர்களுக்கு ஆதரவு. மீதி யுள்ள 63 சதவிகித மக்கள் இவர்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறார்கள்.
எனவே, அவர்களுடைய பிரதிநிதிகளாக, அவர்களு டைய வாக்குகளை வாங்கியவர்களாக இவர்கள் இல்லை. எனவே நாங்கள் பெரும்பான்மையாக முடிவு செய்து விட்டோமேயானால், பின்வாங்க மாட்டோம் என்று சொல்லவேண்டாம்.
அடுத்தபடியாக, இது உங்களுடைய போராட்டம் என்று, நான் இஸ்லாமிய சகோதரர்களைப் பார்த்து நான் சொல்லமாட்டேன். இது நம்முடைய போராட்டம் என்பதுதான் மிக முக்கியமான அடிப்படை.
இது அனைத்து மக்களுக்காகவும் நடைபெறக்கூடிய போராட்டம்.
பூட்டான் நாட்டில் இருந்து வருகின்ற கிறித்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதேபோன்று, இலங்கை தமிழர் களுக்கே இடமில்லை என்கிறார்கள். அவர்களும் இந் துக்கள்தான்.
இந்து நாடு என்று அழைக்கப்பட்ட நேபாளத்திலிருந்து வரக்கூடியவர்களுக்கு இடம் கிடையாதாம்.
ஆகவேதான், இதுவரையில் உலக அளவில்கூட அகதிகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு குடி பெயருகின்றபொழுது, அவர்களை மத ரீதியாகப் பார்த்ததில்லை. அவர்களை மத ரீதியாகப் பார்த்தால், அது மிகத் தவறான ஒரு கண்ணோட்டமாகும்.
ஆகவேதான், இன்றைக்கு நடத்துகின்ற போராட்டம், அறப்போராட்டம் - நியாயத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டம் - நீதியை அடிப்படையாகக் கொண்ட போராட்டமாகும்.
ஒரு நண்பர் இங்கே சொன்னார், நீதிமன்றத்திற்குச் சென்றால், நீதி கிடைக்கும் என்று.
இப்பொழுது நீதிமன்றமே சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. கலவரத்தின்போது 42 பேரின் உயிர் போயிருக்கிறதே என்று கேட்ட நீதிபதி, நடு இரவில் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறார்.
ஏன்? என்று கேட்டால், முன்பே நாங்கள் உத்தரவு போட்டோம் என்கிறார்கள்.
சரி, முன்பே உத்தரவு போட்டிருந்தால், இந்தத் தீர்ப்பு அளித்தவுடன், நடு இரவில் ஏன் மாற்றம் செய்கிறீர்கள்?
எந்த நீதிபதியையாவது, நடு இரவில் மாற்றம் செய் திருக்கிறார்களா? ஆனால், இன்றைக்கு அது நடக்கிறது.
வரலாற்றில் அடையாளம் தெரியாதவர்களாக ஆகிவிடுவார்கள்!
ஆகவே, நண்பர்களே! இந்த சட்டத்தை பின்வாங்க மாட்டோம் என்று சொன்னால், இதுபோன்று சொன்ன வர்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. ஆனால், வரலாற் றில் இன்று அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் அடையாளம் தெரியாதவர்களாகி விட்டார்கள். அதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது. மாநில அரசும் மறந்துவிடக்கூடாது.
‘‘பட்டுக்கோட்டைக்கு வழி எப்படி என்று கேட்டால், கொட்டைப் பாக்கு விலை’’ என்று சொல்வதுபோன்று, இந்த சட்டத்தால், யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று சொன்னார்கள். அப்படி பாதிக்கப்பட்டால், நாங் கள் முன்னால் நிற்போம் என்றார்கள்.
டில்லியில், 42 உயிர்கள் போயிருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின்போது ஒரு சிறு அசம்பாவிதம் உண்டா?
இங்கே இருக்கக்கூடிய சகோதரிகளைப் பாராட்ட வேண்டும்; சகோதரர்களைப் பாராட்டவேண்டும். ஏற்பாட்டாளர்களைப் பாராட்டவேண்டும். சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகும், நடத்தினார்கள்; ஆயிரக்கணக்கானோர் திரண் டிருந்த அந்த முற்றுகைப் போராட்டத்தில், ஒரு சிறு அசம்பாவிதம் உண்டா? கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.
ஆகவே, இது மதப் பிரச்சினையல்ல; இது வெறும் இஸ்லாமியர்களுடைய பிரச்சினையல். இது முழுக்க முழுக்க ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சினையும் அல்ல! அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சினை - எல்லாவற்றையும்விட, மனிதநேயத்தை, மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற பிரச்சினையாகும்.
எனவேதான், அந்த வகையிலே, இவர்களுக்கு ஆறுதல் தருவது என்பது இயல்பானது.
இந்த சட்டத் திருத்தம் வந்தவுடன், முதல் அறிக் கையை, திராவிடர் கழகத்திலிருந்துதான் வந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், அந்த சட்டத்தின் ஆபத்து தெரியாது.
எவ்வளவு காலத்திற்குப் போராடவேண்டும் என் றெல்லாம் கேட்கவேண்டாம். உதாரணத்திற்குச் சொல்கி றேன், பெரியார் வைக்கத்திற்குச் சென்றார். அங்கே இரண்டு ஆண்டுகள் போராட்டம் நடைபெற்ற பிறகே, தெருவில் நடப்பதற்கு உரிமை பெற்றார். ஆகையால், போராட்டத்திற்குக் கால நிர்ணயம் கிடையாது.
வெற்றி பெறுவோம், வெற்றி பெறுகின்ற வரையில், நாங்கள் போராடிக் கொண்டிருப்போம்.
மதத்தின் பேரால் பிரிக்கவேண்டிய அவசியம் கிடையாது
இஸ்லாமியர்கள் வேறு, கிறித்துவர்கள் வேறு, இந்துக்கள் வேறு என்றெல்லாம் மதத்தின் பேரால் பிரிக்கவேண்டிய அவசியம் கிடையாது. எல்லோரும் திராவிடர்கள், எல்லோரும் மனிதர்கள்.
இஸ்லாமியத் தோழர்களைக் குறிப்பிட்டு சொல்லும் பொழுது, ‘‘இஸ்லாம் ஆனவர்கள்’’ என்றுதான் சொல்லு வார்கள். அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அத்தான் என்று அழைத்துத்தான் பழக்கம்.
வடநாட்டில் கலவரம் ஏற்பட்டபொழுதுகூட, தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படவில்லை. ஏனென்றால், இது பெரியார் பூமி, இது சமூகநீதி பூமியாகும்.
காந்தியார் இறந்த பிறகு வடநாட்டில் நடைபெற்ற கலவரத்தின்போது, ரயில்வே நிலையத்தில் தேநீர் விற்றார்கள்; இது இந்து சாயா; முஸ்லிம் சாயா என்றுதான் விற்றார்கள்.
ஆனால், இங்கே ஒருபோதும் இந்து சாயாவும் கிடையாது; முஸ்லிம் சாயாவும் கிடையாது; வெறும் சாயா விற்ற ஒரே மண், இந்தப் பெரியார் மண்தான். ஆகவே, இந்த மண்ணிலிருந்து இவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள் என்றால், அது சாதாரணமானதல்ல.
எனவேதான், இஸ்லாமிய சகோதரர்கள் என்றாலும், அவர்களும் ஒரு பத்து தலைமுறைகளுக்கு முன்பு, அவர்களும் உன்னுடைய இந்து மதத்தைச் சார்ந்தவர் கள்தானே! கிறித்துவ சகோதரர்களானாலும், 15 தலை முறைகளுக்கு முன்பு அவர்களும் உன்னுடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தானே - ஏன் அந்த மதத்தை விட்டுப் போனார்கள்?
யார் அவர்களைக் கட்டிப் பிடித்தார்களோ அங்கே சென்றார்கள்; யார் சமத்துவத்தை சொன்னார்களோ, அங்கே சென்றார்கள். யார் அவர்களை மனிதன் என்று மதித்தார்களோ, அங்கே சென்றார்கள். இவ்வளவுதானே தவிர, இஸ்லாமியர்கள் எல்லாம் அரோபியாவிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவர்களும் அல்ல; கிறித் துவர்கள் எல்லாம் இஸ்ரேலில் இருந்து வந்தவர்களும் அல்ல. இவர்கள் எல்லோரும் எங்கள் சகோதரர்கள்; பிரிக்க முடியாத சகோதரர்கள்; எங்கள் ரத்தத்தின் ரத்தம்; இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
எனவேதான், அவர்களுடைய போராட்டம் வெல்லும்-
வெல்லுகின்ற வரையில், அவர்களுடைய கருத்துகள் செல்லும் -
அது செல்லுகின்ற வரையில், நிச்சயமாக அவர்க ளுடன் நாங்கள் இருப்போம்.
நாளுக்கு நாள் இது வளருமே தவிர, இது குறையாது!
இது அவர்களுடைய போராட்டம் என்று நாங்கள் பிரித்துப் பார்க்கமாட்டோம்; இது நம்முடைய போராட் டம் - ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற போராட்டம் - பாசிசத்தை எதிர்க்கின்ற போராட்டம் - இது சர்வாதி காரத்தை எதிர்க்கின்ற போராட்டம் - அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற போராட்டம் - இந்தப் போராட்டம் எவ்வளவு காலம் நீடித்தாலும், நாளுக்கு நாள் இது வளருமே தவிர, இது குறையாது.
எனவேதான், இந்த சுவரெழுத்தைப் படிக்கத் தவறி யவர்கள், வரலாற்றில் குப்பைத் தொட்டியில் விழுவார் கள் என்பது மிக முக்கியம். அதனை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி, உங்களுக்கு அற வழிப்பட்ட ஆதரவை சொல்லுவதற்கும், உங்களோடு நாங்கள் - எங்களோடு நீங்கள் - எல்லோரும் நாம் என்ற உணர்வோடு இங்கே போராடுவோம் என்று கூறி,
தாய்மார்கள், சகோதரர்கள், பெரியோர்கள் அத் துணை பேருக்கும், ஒத்துழைக்கின்ற ஊடக நண்பர் களுக்கும் நன்றி சொல்லி, விடைபெறுகிறேன்.
வாழ் க பெரியார்!
வளர்க மனிதநேயம்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தெருவில் இறங்கிச்சென்று
கரோனா வைரசை விட கொடுமையானது இந்தக் கருப்புச் சட்டங்கள் என்று கூறியபோது மக்கள் மிகுந்த உணர்வுவயப்பட்டு கைதட்டினர். அவரது பேச்சு ஓய்ந்து போயிருந்த மக்களிடம் மிகுந்த உற்சா கத்தை ஊட்டியது. பேசி முடிந்ததும் போராட்டத்தைத் தொடரும் வண்ணம் ஆசிரியர் தொடர் முழக்கங்களை எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத பொது மக்கள் உற்சாகத்துடனும் மிகுந்த வீரியத்துடனும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த போராட்டப்பகுதியே சிறிது நேரம் எழுச்சியூட்டக் கூடியதாக இருந்தது.
அதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மேடையிலிருந்து கீழே இறங்கி, பெண்கள் அமர்ந்திருந்த தெருவில் இறங்கிச்சென்று அவர்களை நேரிடையா கச் சந்தித்து வாழ்த்தினார். கீழே அமர்ந்திருந்த பெண்களும், சிறுவர்களும் ஆச்சரியத்துடன் ஆசிரி யரை மிகுந்த மதிப்புடன் வரவேற்று உணர்வுப் பெருக்கோடு கைகொடுத்து மகிழ்ந்தனர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னெரசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திருவொற்றி யூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர் புது வண்ணை மணிவண்ணன், ஆவடி மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல், செம்பி யம் கோபாலக் கிருஷ்ணன் மற்றும் இளைஞரணி தோழர்கள்: கே.என். மகேஷ்வரன், சு.விமல்ராஜ், க.கலைமணி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
முழக்கமிட்டார் தமிழர் தலைவர்
மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காப்பாற்றுவோம்!
காப்பாற்றுவோம், காப்பாற்றுவோம்
மதச்சார்பின்மையை காப்பாற்றுவோம்!
ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்!
குடியுரிமையைக் காப்பாற்றுவோம்!
நுழைக்காதே, நுழைக்காதே!
மதவெறியை நுழைக்காதே!
மதவெறியை மாய்த்து
மனிதநேயத்தைக் காப்பாற்றுவோம்!
மனிதநேயத்திற்குப் போராடுவோம்!
அரசமைப்புச் சட்டத்தை நொறுக்காதே!
அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை
நொறுக்காதே, நொறுக்காதே!
அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற படைக்கும் -முறிக்கின்ற எதிரிகளுக்கும்
போராட்டம்தான் வண்ணாரப்பேட்டை -
போராட்டம்தான் டில்லி -
போராட்டம்தான் இந்தியத் திருநாடு -
இது பெரியார் மண் -
இது அம்பேத்கர் மண் -
இது சமூகநீதி மண் -
ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!
ஒன்றுபடுவோம் - வென்றுவிடுவோம்!
-போராட்டக் களத்தில் கழகத் தலைவரே முழக்கமிட மக்களும் சேர்ந்து குரல் கொடுத்த அந்தத் தருணம் உணர்ச்சியின் எழுச்சி!