பாராட்டத்தக்க சமூகநீதிக்கான சட்ட முன்வடிவு
தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு வேண்டாம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!
சென்னை, ஜன.31 மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு கொண்டுவரும் ‘நீட்’ அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழ் நாட்டிற்குத் தேவையில்லை,வேண்டாம் என் பதை வலியுறுத்தும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (31.1.2017) தாக்கல் செய்யப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முன்மொழிந்த சட்ட முன்வடிவு வருமாறு:
மருத்துவ அறிவியல் இளநிலை (எம்.பி. பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ இளநிலை (பி.டி.எஸ்.) படிப்புகளுக்கு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கு வகை செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவு.
இந்திய அரசு, மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு அளவில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் பல் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு, 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ மன்றச் சட்டத்தை (மய்யச் சட்டம் 102/1956) மற்றும் 1948 ஆம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தை (மய்யச் சட்டம் 16/1948) திருத்தம் செய்திருக்கிறது என்பதாலும்,
மற்றும் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களிலிருந்து அதிக அளவில் மாணவர்கள் ஒரே சீரான நுழைவுத் தேர்வில் கலந்துகொள்வார்கள் மற்றும் அவர்களுடைய இருப்பிடத்திலுள்ள பகுதியில் இந்த நுழைவுத் தேர்வை அவர்கள் எழுதுவதற்கு அவர்களை தயார்படுத்திக் கொள்ள கற்பிக்கும் மய்யங்கள் இல்லை என்பதாலும், போதுமான நிதி வசதி இல்லாத காரணத்தினாலும், அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதாலும்,
மற்றும், ஒரே சீரான நுழைவுத் தேர்வு என்பது பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மனச் சுமையை ஏற்படுத்தக் கூடியதாக இருக் கின்ற காரணத்தாலும், இது மாணவர்களின் எதிர் காலத்தை ஒருமுறை மட்டும் எடுக்கக் கூடிய முயற்சியினால் நிர்ணயிப்பதாக இருக்கின்றது என்பதாலும்,
மற்றும் மேல்நிலைக் கல்விக்காக (+2) எழுதப்படும் தேர்வினை, சிறந்த மதிப்பெண் அடிப்படையில்அனுமதிபெறுவது என்பது மாணவர்களுக்குஒருசுமையாகஇருக்கும் பொழுது, அதுவே மேற்படிப்பிற்கும், தொழிற் கல்வி சேர்க்கைக்கும் தகுதித் தேர்வாக செயல்படும் நிலையில், இதன் பிறகு தனியாக நடத்தப்படும் ஒரே சீரான தேர்வு என்பது தேவையற்றது. ஏனெனில், இது மாணவர்களுக்கு கூடுதலான சுமையை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்ப தாலும்,
மற்றும், ஒரே சீரான நுழைவுத் தேர்வின் பாடத் திட்டம், பாடப் பிரிவு மற்றும் அவற்றில் அடங்கியுள்ளவை, மேல்நிலைக் கல்விப் படிப்பிற்காக மய்ய அரசின் மேல்நிலைக் கல்விக்கான மய்ய வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இது தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியத்தினால் வகுத்துரைக்கப்பட்ட பாடத் திட்டத்திலிருந்து வேறுபட்டு இருக்கிறது என்பதாலும்,
தமிழ்நாடுமாநிலத்தில்மாணவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை தீர்க்கும் வகையில், தமிழ்நாடுஅரசு,மருத்துவஅறிவியல்இளநிலை படிப்பு(எம்.பி.பி.எஸ்.)மற்றும்பல்மருத்துவ படிப்புகளில்(பி.டி.எஸ்.)மாணவர்களை சேர்ப்ப தற்கு மாணவர்கள் மேல்நிலை கல்வி (+2) தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதெனவும், இது மாணவர்களின் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக கருதப்படும் என்றும், கொள்கை முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில்தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேர வையினால் சட்டமாக இயற்றப் படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம் என்று அழைக்கப் பெறும்.
(2) இது தமிழ்நாடு அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதி யன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி;
(a) “உரிய அதிகார அமைப்பு என்பது, மருத்துவ அறிவியல் இளநிலை (எம்.பி.பி.எஸ்.)மற்றும் பல் மருத்துவ இளநிலை (பி.டி.எஸ்.) படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒதுக்கீடு செய்வதற்கு, அரசால் அதிகாரமளிக் கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஒரு அதிகாரஅமைப்பு என்று பொருள்படும்.
(b) “அரசு என்பது மாநில அரசு என்று பொருள்படும்.
(c) “அரசு இடங்கள் என்பது,
(I) அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் தவிர, அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ அறிவியல் இளநிலை (எம்.பி. பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ இளநிலை (பி.டி.எஸ்.) படிப்புகளில் உள்ள அனைத்து இடங்களும்;
(II) சிறுபான்மையல்லாத கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒத்திசைவிற்கிணங்க சிறுபான்மை யல்லாத கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ அறி வியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகளில் 65 விழுக்காடு இடங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலுள்ள 50 விழுக்காடு இடங்கள்;
(d) “சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பது, வகுத்துரைக்கப்படக் கூடிய அத்தகைய நிபந்த னைகளுக்கு உட்பட்டு, அரசால் ஏற்பளிக்கப்பட்ட அல்லது விளம்புகை செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள் என்று பொருள்படும்.
(e) மருத்துவ அறிவியல் இளநிலை (எம்.பி. பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப் புகள் (பி.டி.எஸ்.) என்பது, முறையே இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை சிகிச்சை மற்றும் இளநிலை பல் மருத்துவ அறுவை சிகிச்சைப் படிப்புகளின் முதலாமாண்டு படிப்பு என்று பொருள்படும்.
(f) “கல்வி நிறுவனம் என்பது உரிய சட்ட ரீதியான அமைப்பில் மற்றும் பல்கலைக் கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளவற்றால் ஒப்பு தலளிக்கப்பட்டு அல்லது ஏற்பளிக்கப்பட்டு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகளை நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உள்ளடங் கலாக, அது எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும், கல்லூரி அல்லது பள்ளி எதுவும் அல்லது ஒரு நிறுவனம் என்று பொருள்படும்.
(g) “தகுதித் தேர்வு” என்பது தமிழ்நாடு மேல் நிலைக் கல்வி தேர்வு வாரியத்தால் மேல்நிலைக் கல்வி (+2) அளவில் நடத்தப்படும் தேர்வு அல்லது அதற்கு இணையான மத்திய இடைநிலை கல்விக் குழுமம் (சிபிஎஸ்இ) அல்லது பிற மாநிலம் எதனின் வாரியத்தால் அல்லது பிற அதிகார அமைப்பு எதனாலும் நடத்தப்படும் தேர்வு என்று பொருள்படும்.
(h) “தொடர்புடைய பாடங்கள்” என்பது, இளநிலை மருத்துவ அறிவியல் (எம்.பி.பி.எஸ்.)மற்றும் பல் மருத்துவப் (பிடிஎஸ்) படிப்புகளில் சேர்வதற்காக வகுத்துரைக்கப்பட்ட பாடங்கள் என்று பொருள்படும்.
(i) “மாநில வாரியம் என்பது, தமிழ்நாடு மேல் நிலைக் கல்வி தேர்வு வாரியம் என்று பொருள் படும்.
(j) “பல்கலைக்கழகம்“ என்பது, சட்டமன்றப் பேரவையின் சட்டம் ஒன்றினால் நிறுவப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகம் என்று பொருள்படும்.
(k) “இந்தியாவில் குடியிராத இந்தியர்” என்கின்ற சொற்றொடரானது, 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் அதற்குக் குறித்தளிக் கப்பட்டுள்ள பொருளைக் கொண்டி ருக்கும்.
3. பிற சட்டம் அல்லது விதிகள், ஒழுங்கு முறை விதிகள் அல்லது அதன்படி செய்யப்பட்ட துணை விதிகள் எதிலும் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், ஒவ்வொரு அரசு இடத்திற் கான சேர்க்கை, தகுதித் தேர்வுக்குத் தொடர்புடைய பாடங்களில் ஒரு மாணவரால் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில், உரிய அதிகார அமைப்பால் செய்யப்படுதல் வேண்டும்.
4. (1) பல்வேறுபட்ட வாரியங்கள் அல்லது அதிகார அமைப்பால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தொடர்புடைய பாடங்களில், மாணவர்களால் பெறப்பட்ட மதிப்பெண்களை சரிசமமாக்குதல் அடிப்படையில், மாநில வாரியத்தால் நடத்தப் படும் தகுதித் தேர்வில் அதே பாடங்களில் மாண வர்களால் பெறப்பட்ட மதிப்பெண்களுடன் சரிசமமாக்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்- சரிசமமாக்கப்படுதல் முறையின்படி, ஒவ்வொரு பாடத்திலும் பல்வேறுபட்ட வாரியங்களின் முறையில் படித்த மாணவர்களால் பெறப்பட்ட அதிகப்படியான மதிப்பெண்கள் அதே பாடத்தில் மாநில வாரியத்தின் மாணவர்களால் பெறப் பட்ட அதிகப்படியான மதிப்பெண்களுக்கு சரிசமமாக்கப்படுதல் வேண்டும். மற்றும் அந்தப் பாடத்தில் பிற மாணவர்களால் பெறப்பட்ட தொடர்புடைய மதிப்பெண்கள் அதன்படி சரி சமமாக்கப்படுதல் வேண்டும்.
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்- மாநில வாரியத்தின் மாணவரால், வேதியியல் பாடத்தில் எடுக்கப்பட்ட அதிகப் படியான மதிப்பெண்கள் 100-ஆக இருக்கிறதென்றால் மற்றும் அதே பாடத்தில் பிற வாரியம் எதனின் மாணவரால் எடுக்கப்பட்ட அதிகப்படியான மதிப்பெண்கள் 90-ஆக இருக்கிறதென்றால், இரு அதிகப்படியான மதிப்பெண்களும் 100 மதிப்பெண்ணுக்கு சரிசமமாக இருக்கும் என்று கருதப்பட வேண்டும். பிற வாரியத்தின் மாணவரொருவர் வேதியியல் பாடத்தில் 70 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாரென்றால், அதே வாரியத்தில் வேதியியல் பாடத்தில் எடுத்திருக்கும் முதல் மதிப்பெண்
90-ஆக இருக்கும் பொழுது 70 மதிப்பெண்ணானது 77.77 மதிப்பெண்களுக்கு கீழ்க்காணுமாறு கணக்கிடப்பட்டிருப்பது சரிசமமானதாக இருக்கும் என்று கருதப்படும்.
100x70
------------------------------------------ = 77.77%
90
(2) பல்வேறுபட்ட வாரியங்களால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தொடர்புடைய பாடங்களில் மதிப்பெண்கள் சரி சமமாக்கப்பட்டதற்குப் பின்பு பல்வேறுபட்ட வாரியங்களின் தகுதியடைந்துள்ள மாணவர்கள் பொது தகுதிப் பட்டியலுடன் சேர்க்கப்படுதல் வேண்டும்.
(3) பொது தகுதிப் பட்டியலில் ஒரே மாதிரியான மதிப் பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் எடுத்திருக்கின்ற நேர்வில், அத்தகைய மாணவர்களுக்கு இடையிலான சிறப்புத் தரநிலை (inter-se Merit) வகுத்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய முறையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
(4) உரிய அதிகார அமைப்பு, அரசு இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான தரப்பட்டியலைத் தயார் செய்து, ஒருங்கிணைந்த கலந்தாய்வின் (Centralised Counselling) மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
5. அரசு இடத்திற்கான சேர்க்கை, நடைமுறையிலுள்ள சட்டத்தின்படியான ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி செய்யப் படுதல் வேண்டும்.
6. நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளை மீறி செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை எதுவும் செல்லாநிலையதாகும்.
7. (1) இந்தச் சட்டத்தின்படியான வகைமுறைகளை அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளை மீறி செயல்படுபவர் எவராக இருப்பினும், அவர் பத்து இலட்சம் ரூபாய்வரை நீட்டிக்கப்பட லாகும். பணத் தண்டத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(2) அரசு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் மீறி கல்வி நிறுவனம் எதுவும் செயல்பட்டிருக்கிறது என்று மனநிறைவடைகிறதென்றால், அத்தகைய செயல்பாட்டின் அடிப்படையில், அத்தகைய நிறுவனத்தின் இணைப்பை அல்லது ஏற்பளிப்பை திரும்பப் பெறுமாறு, தொடர்புடைய பல்கலைக்கழகத்திற்கு அல்லது சட்டரீதியான அமைப்பிற்கு அல்லது அது பொருத்தமெனக் கருதலாகும். மேற்கொண்டு எடுக்க வேண்டிய பிற நடவடிக்கை எதற்காகவும் பரிந்துரை செய்யலாம்.
8. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணையின்படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதற்காகவும், உரிய அதிகார அமைப்பிற்கு, அரசுக்கு அல்லது அதனுடைய அலுவலர்கள் எவருக்கும் எதிராக உரிமை வழக்கோ, குற்ற வழக்கோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளோ தொடரப்படுதல் கூடாது.
9. அரசு, அவ்வப்போது இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்கு செல்திறம் அளிக்கும் வகையில், அதற்குப் பொருத்தமெனத் தோன்றலாகும் அத்தகைய பணிப்புரைகளைப் பிறப்பிக்கலாம்.
10. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செல்திறம் அளிக்கையில் இடர்ப்பாடு எதுவும் எழுகிறதென்றால், அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஒர் ஆணையின் வாயிலாக இடர்ப்பாட்டினை நீக்குவதற்குத் தேவைப்படக் கூடியதாக அல்லது உகந்ததென அவர்களுக்குத் தோன்று கிறவாறான, இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக-ஆனால், இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்பு அத்தகைய ஆணை எதுவும் செய்யப்படுதலாகாது.
11. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்று வதற்காக விதிகளைச் செய்யலாம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும். மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று வெளிப் படையாக நடைமுறைக்கு வந்திருந்தாலன்றி என்று கூறப்பட்டி ருந்தாலன்றி, அதன் பேரில் அவை அவ்வாறு வெளியிடப்பட்டி ருக்கின்ற அந்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரவேண்டும்.
(b) இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வரும் என்று வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, அதன் பேரில் அவை அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற அந்த நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவை முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அந்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு அந்தக் கூட்டத்தொடரில் அவ்வாறு வைக்கப்படு கிறதென்றால் அல்லது அடுத்தக் கூட்டத்தொடரில் சட்டமன்றப் பேரவை அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாற்றமைவு எதனையும் செய்கிறதென்றால், அல்லது சட்டமன்றப் பேரவை, அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுதலாகாது அல்லது பிறப்பிக்கப் படுதலாகாது என்று முடிவு செய்கிறதென்றால், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை அதன்படி அத்தகைய மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே செல்திறம் பெறும் அல்லது நேர்வுக்கேற்ப செல்திறம் பெறாது போகும். எவ்வாறிருப்பினும் அத்தகைய மாற்றமைவு அல்லது அழித்தறவு எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை ஆகியவை முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந் தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
நோக்க - காரண விளக்கவுரை
தற்பொழுது மருத்துவ அறிவியல் இளநிலை (MBBS) மற்றும் பல் மருத்துவ இளநிலை (BDS) படிப்புகளுக்கான சேர்க்கை, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் கல்வி நிறுவனங்கள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 3/2007) இன் படி மேல்நிலைக் கல்வித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.
2. தற்போது இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு அளவில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங் களுக்கும் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு இந்திய அரசு, 1956-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ மன்றச் சட்டத்தில் (மய்யச் சட்டம் 102/1956) மற்றும் 1948-ஆம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தில் (மய்யச் சட்டம் 16/1948) திருத்தம் செய்திருக்கிறது.
3. தமிழ்நாடு மாநிலத்தில் ஒரே சீரான நுழைவுத் தேர்வை எழுதக் கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப் புறங்களில் இருக்கின்றார்கள் மற்றும் மேற்சொன்ன தேர்வுக்காக அவர்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு, அவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவதற்கு தயார் செய்ய வேண்டியதாயுள்ள அத்தகைய கற்பிக்கும் மய்யங்கள் இல்லாமல் இருக்கின்றது. அத்தகைய பயிற்சியை அளிக்கும் மய்யங்கள் அவர்களுடைய பகுதியில் இல்லாமலி ருக்கின்ற காரணத்தால் அத்தகைய வசதியை அவர்கள் பெற முடியாமல் இருக்கின்றதுமற்றும் போதுமான நிதி வசதியின்றி அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ் கிறார்கள். பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாயுள்ள அனுபவத்தை ஒரே சீரான நுழைவுத் தேர்வு ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதப்பட்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு மேல்நிலைக் கல்வித் (+2) தேர்வு என்பது சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டியதாயுள்ள ஒரு முக்கியமான தேர்வாக இருக்கிறது. இதனடிப்படையில் பார்க்கும்பொழுது ஒரே சீரான நுழைவுத் தேர்வு, மாணவர் களுக்கு ஒரு சுமையாக இருக்கின்றது மற்றும் உயர்கல்வி படிப்புமற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ஏற்பதென்பது அதிகப்படியான சுமையாக இருக்கின்றது. மேலும், பாடத்திட்டம், பாடமுறை மற்றும் ஒரே சீரான நுழைவுத் தேர்வு என்பது மத்திய இடைநிலைக் கல்வி குழுமம் (CBSE), மேல்நிலைக் கல்வி படிப்பிற்காக வகுத் துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கிறது. இது தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியத்தால் வகுத் துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது.
4. தமிழ்நாடு மாநிலத்தில் மாணவர்கள் மேற்சொன்ன சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில், அரசு மேல்நிலைக் கல்வியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ அறிவியல் இளநிலை (MBBS) மற்றும் பல்மருத்துவ இளநிலை படிப்பிற்கான (MDS) சேர்க்கைக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரவேண்டும் என்ற கொள்கை முடிவு ஒன்றை அரசு எடுத்துள்ளது. அதன்படி அரசு, இந்த நோக்கத்திற்காக சட்ட மொன்றை கொண்டு வருவதென முடிவுசெய்துள்ளது.
5. இந்தச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
மரு.சி. விஜயபாஸ்கர்,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்