‘நீட்’ தேர்வு எதிர்ப்புச் சட்டத்துக்குப் பாராட்டு!
தேசிய புதிய கல்வியையும் எதிர்க்கவேண்டும்!
தமிழர் தலைவர் வலியுறுத்தினார்
சென்னை, பிப்.1 தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று (31.1.2017) மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாட்டுக்குக் கேடாக மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் பல பிரச்சினைகள்பற்றி எடுத்துக் கூறினார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களையும் பாதிக்கச் செய்யும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ எனும் அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி வலியுறுத்தியும் வந்துள்ளது. போராட்டங்களையும் நடத்தியுள்ளது. 69 சதவிகிதத்தை எந்த அடிப்படையில் காப் பாற்றினோமோ அந்த அடிப்படையிலேயே ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்குப் பெற்றிட ஆவன செய்யவேண்டும் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த வகையில் தம் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளார். அனைத்துக் கட்சிகளும் (பி.ஜே.பி.யைத் தவிர) இதற்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கின்றன.
அ.இ.அ.தி.மு.க. அரசும், ஆளுநர் உரையில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது. அந்த அடிப்படையில், ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரியும், ‘நீட்’ தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நேற்று தாக்கல் செய்யப்பட்டதற்காக தமிழக அரசையும், முதலமைச்சரையும் பாராட்டி, வாழ்த்துகளையும் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.
உச்சநீதிமன்றத்தில் தொலைநோக்கோடு சட்டப் பாதுகாப்புக்காக ‘‘கேவியட்’’ மனுவைத் தாக்கல் செய்வது அவசியம் என்றும் கழகத் தலைவர் கூறினார்.
தேசிய புதிய கல்வியும் வேண்டாம்!
அதேபோல, தேசிய புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரால் மத்திய அரசு திணிக்கவுள்ள கல்வித் திட்டமானது, பழைய குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்புதான்; இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு இது வழி செய்கிறது. இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல - உகந்ததும் அல்ல.
துணைவேந்தர்களைக்கூட மத்திய அரசே அறிவிக்கும் என்பதெல்லாம் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டுக்கு என்று சமூகநீதியில் தனித்துவம் உண்டு. குறிப்பாக, திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை இது. சமூகநீதி தொடர்பான ஆபத்து வந்தபோதெல்லாம் தமிழ்நாடுதான் முதல் எதிர்ப்புக் குரலைக் கொடுத்து வந்து வெற்றியும் பெற்று வந்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. அரசும் அந்த வகையில் செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.
‘நீட்’டை எதிர்ப்பது போலவே, தேசிய புதிய கல்வியையும் எதிர்க்கும் கருத்தை அரசு கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும். அடிப்படையில் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு நெருக்கடி நிலை காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டதால், மாநிலக் கல்வி உரிமைகளிலும் மத்திய அரசு தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. ‘நீட்’ புதிய கல்வி - என்பதெல்லாம் இந்த வகையைச் சேர்ந்ததே!
மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மற்ற மாநில முதல்வர்களையும் அழைத்து தமிழக அரசு தமிழ்நாட்டில் ஒரு மாநாட்டுக்கு வழி செய்வதுகூட நல்ல பலன்களை அதிகரிக்கும் என்று முதல்வரிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.
ஜல்லிக்கட்டுத் தொடர்பான சட்டத்தை அ.தி.மு.க. அரசு இயற்றியதற்காகவும் அ.தி.மு.க. அரசைப் பாராட்டினார்.
மேற்கண்டவாறு கழகத் தலைவர் கூறியவற்றையெல்லாம் முதலமைச்சர் பொறுமையாகவும், ஆர்வமாகவும் கேட்டுக்கொண்டு, சமூகநீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. அரசு உறுதியாக நிற்கும்; தங்கள் ஆலோசனைகளைத் தாராளமாகச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
தந்தை பெரியார் நூல்களை முதலமைச்சருக்குக் கழகத் தலைவர் அளித்து, சால்வை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.