Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி வெறும் 1.4 சதவிகிதமே!

$
0
0

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவி ஏமாற்றத்தை அளிக்கிறது

ரயில்வே துறை என்பது சவலைப் பிள்ளையாகி விட்டது!

பழைய கள் - புதிய மொந்தையே மத்திய பட்ஜெட்

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை

மத்திய பி.ஜே.பி. அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பது  ‘பழைய கள் - புதிய  மொந்தை' என்ற நிலையில் தான் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜனவரி  31 ஆம் தேதியோடு

நிதி ஆண்டு முடியும் என்ற ஏற்பாடு- புதிய ஏற்பாடு

இந்த நிதி ஆண்டு என்பது, மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்குமுன் ஏப்ரல் முதல் தொடங்கி மார்ச் 31 வரை முடியும். இப்போது பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசு ஒரு மாற்றம் செய்து பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஒவ்வொரு ஆண்டும் இனி தாக்கல் செய்யப்படும் - ஜனவரி  31 ஆம் தேதியோடு நிதி ஆண்டு முடியும் என்ற ஏற்பாடு புதிய ஏற்பாடு.

மற்றொன்று - பொது பட்ஜெட்டுக்குமுன், ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே சமர்ப்பிப்பார். அதன்மீது ஓரிரு நாள்கள் விவாதம் நடைபெற்று நிறைவேறும் என்ற பழைய ஏற்பாட்டுக்கு விடை கொடுத்து, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே வரவு - செலவுகளும் இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக ஆக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சிறுசிறு ஒப்பனைகள்

இந்த இரண்டும்தான் புதுமையானவை. மற்றவையெல்லாம் பழைய முறைகள்தான் - ஆங்காங்கே சிறுசிறு ஒப்பனைகள்தான்!

பொதுவான ஒரு உண்மை என்னவென்றால், அரசு சம் பளங்கள், கட்டணங்கள், ஓய்வூதியங்கள் இவைகளுக்கு 60 விழுக்காடு செலவினம் - ஆண்டுதோறும் (இவ்வாண்டு 7 ஆவது சம்பளக் கமிஷன் பரிந்துரை தாக்கமும் உண்டு) அதற்குமேல் இராணுவத்துக்கான செலவு, ஆண்டுக்காண்டு பெருத்துக்கொண்டே செல்வது மற்றும் வழமையான செலவினங்கள் என்று ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 85 விழுக்காடு போக, நிதியமைச்சராக உள்ளவர் செய்யும் ஒப்பனை - நிதி ஒதுக்கீடு, அதிரடி அறிவிப்புகள் - மாற்றங்களை இந்த 15 விழுக்காடுகளில்தான் திரும்பத் திரும்பச் செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம் நிதி நிலை தயாரிக்கும் நிதியமைச்சருக்கும், அவரது அமைச்சகத்திற்கும் உண்டு.

நீர்மேல் எழுதிய

எழுத்துக்களாகவே உள்ளன!

இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஏதோ விவசாயி களுக்குப் பெரும் அளவில் வசதி வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறப்பட்டாலும்,

சென்ற ஆண்டு நிதியமைச்சர் அளித்த உறுதிமொழிகளில் ஒன்றான விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாகப் பெருக்குவோம் என்று சொன்னது - இன்னமும் நீர்மேல் எழுதிய எழுத்துக்களாகவே உள்ளது!

விவசாயிகள் கவலையைப் போக்கவோ, தற்கொலைகளைத் தடுக்கவோ, விவசாயிகள் சுயமரியாதையுடன், கவுரவமான வாழ்க்கை வாழவோ வசதி செய்யக்கூடிய திட்டங்கள் ஏதும் இல்லாததால் விவசாயிகள் நம்பிக்கை தவிடு பொடியாகத் தகர்ந்துள்ளதோடு, பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது!

எதிர்கால சமுதாய முன்னேற்றத்திற்கான

முதலீடு பெருகவில்லை

அதுமட்டுமல்ல, கல்விக்கான - சுகாதாரத்திற்கான செலவினம் என்பது ஒரு நாட்டின் வரவு - செலவுத் திட்டத்தில் எதிர்கால சமுதாய முன்னேற்றத்திற்கான முதலீடு  (Social Investment)  அது பெருகவில்லை இந்தப் பட்ஜெட்டில்.

மாறாக, இது 1.4 சதவிகிதத்தைத் தாண்டவில்லை! கல் விக்கு 6 சதவிகிதம் ஒதுக்கப்படல் வேண்டும் என்ற  பல கல்வி அறிஞர்களின் குழு பரிந்துரை இன்னமும் எட்டா இலக்காகவே உள்ளது.

கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றாலும், நடைமுறையில் அதை முதல் பட்டியலாக யூனியன் லிஸ்ட் என்ற மத்திய அரசு பட்டியலில் உள்ளது போன்றே, மாநிலங்களை அறவே புறந்தள்ளி - எவ்வித ஆலோசனைகளையும் செய்யாமல் தன்னிச்சையாக, ‘தானடித்த மூப்பாக’ கல்வித் திட்டங்களை மத்திய அரசு செய்கிறது!

மத்திய அரசே நுழைவுத் தேர்வுகளுக்காகத் தனித் துறையை உருவாக்கி, அரசே நடத்த இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எதைக் காட்டுகிறது?

அது அப்பட்டமான அரசியல் சட்ட மீறல், சட்ட விரோதமும்கூட;

தேர்வுகள் நடத்தும் உரிமை ஆங்காங்குள்ள பல்கலைக் கழகங்களின் உரிமை, பணி, கடமை!

எதற்கு இந்த வீண் வேலை?

அதனை மத்திய அரசோ, மருத்துவக் கவுன்சிலோ மற்ற அமைப்புகளோ நடத்த தற்போது பல்கலைக் கழக சட்டப்படியோ, மத்திய கல்வி உரிமை சட்டப்படியோ எவ்வித உரிமையும் இல்லை. இதற்கென ஏன் தனித் தேர்வு வாரியம்? எதற்கு இந்த வீண் வேலை?

கல்வியை ஒரே இந்திய சீரமைப்புத் தகுதி திறமை  அடிப்படையில் தருகிறோம் என்று கூறி, இந்தியாவை பன்முகம், பல கலாச்சாரம், பன்மொழி என்ற பன்முகத்தினை அழித்து, ஒரே கட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முக்காடு போட்ட முதல் முயற்சி இது.

மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்

இதை மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தாக வேண்டும் - நீதிமன்றங்களில் சட்டப்படி, இப்படி அமைக்க உரிமை இல்லை என்று வழக்குகள் போட்டு சட்ட நிலையைத் தெளிவுபடுத்தவேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பேண - நல்வாழ்வுத் திட்டங்களுக்கான நிதி - அளவு மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது! அம்மக்கள் தொகையைக் கணக்கிட்டு, அவர்களது வாழ்வாதாரம், வளர்ச்சிபற்றி எந்தக் கவலையும் இதில் காட்டப் படவில்லை.

‘மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான’ நிதி ஒதுக்கீடும் பெரும் அளவு போல் பேசப்பட்டாலும், உண்மையில் கூடுதலாக ஒதுக்கியுள்ளது செலவினத்தில் 501 கோடி ரூபாய்தான்.

புதிய வேலை வாய்ப்புகள்பற்றி ஆக்கப்பூர்வமான திட்டங்கள் - அறிவிப்புகள் ஏதுமில்லை.

மாற்றம் மாற்றம் என்பது

வெறும் ஏமாற்றமே!

ரயில்வே பட்ஜெட்டை - பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறு என்று காட்டுவதுபோல, எந்தப் புதியதொரு திட்டங்கள், வளர்ச்சிகள்பற்றி எந்தவித முக்கியத்துவமும் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது! சவலைப்பிள்ளையாக்கப்பட்டு விட்டது.

லாலுபிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, புதிய கூடுதல் கட்டணங்களை விதிக்காமல், ரூ.30,000 கோடி பொது பட்ஜெட்டுக்கு வருவாய் ஈட்டித் தந்ததெல்லாம் வெறும் பழங்கதைதான் போலும்!

இதுபற்றி மறுபரிசீலனைகள் அவசியம் தேவை. மாற்றம் மாற்றம் என்பது வெறும் ஏமாற்றம் என்பதாக முடியலாமா?

எனவே, வழமையான சில வரவேற்பு அம்சங்களைத் தவிர, மற்ற பெரும்பாலானவை ‘பழைய கள், புதிய மொந்தை’ என்பதாகவே இருக்கிறது!

ஏழை விவசாயி, முதுகெலும்பு உடைய பாடுபடும் உழைப்பாளிக்கு முகமலர்ச்சியை, அக மலர்ச்சியை இந்த பட்ஜெட் தருகிறது என்று உறுதியுடன் கூற முடியாத நிலைதான்!

 

கி.வீரமணி
தலைவர்,        திராவிடர் கழகம்.


சென்னை
2.2.2017


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles