இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறித்தவர்கள் இந்துக்கள்தானாம்!
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அரசமைப்பு சட்ட விரோதப் பேச்சு
இந்த ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிய
மதசார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை
ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத் இந்தியாவில் வாழும் வேறு மதத்தவர்கள்கூட இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமான இந்த மதவாதப் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய மத சார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வடநாட்டில் 'பேட்டூல்' என்ற ஊரில் பேசிய ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரின் தலைவரான மோகன்பாகவத் பேசி யுள்ளதாவது:
இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தானாம்!
"இந்துஸ்தான் என்ற இந்த நாட்டில் வாழும் அனைவருமே ஹிந்துக்கள்தான்.
எப்படி பிரிட்டனில் உள்ளவர்கள் பிரிட்டிஷ்காரர்களோ, அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்களோ அதுபோலவே இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களும்கூட ஹிந்துக்கள்தான்.
மத - நம்பிக்கை - அடிப்படையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்றாலும் நாட்டு அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள்தான்" என்று கூறியுள்ளார் - மோகன் பாகவத்
கோல்வால்கர் என்ன கூறுகிறார்?
இது இவராகக் கூறுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கக் கர்த்தாவாகிய ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவர் ஆன கோல்வால்கரின் விளக்கம்தான் இது!
இங்கே வாழும் முஸ்லீம்கள், கிறித்துவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதோடு, இராமனையும், கிருஷ்ணனையும் அவர்கள் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.(ஆதாரம்: Bunch of Thoughts - 'ஞானகங்கை' நூல்)
"ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, ஹிந்து சமயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப்போற்றி, ஹிந்து இனம், அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதாவது அவர்கள் இந்நாடு, அதனுடைய பழமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மையினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும் நீக்கிவிட்டு உறுதியான எண்ணத்துடன் அன்பையும், பக்தியையும் அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் அவர்கள் அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்விதம் இருக்க அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதனையோ அல்லது பிரஜா உரிமையினையோ கூட அடைய அருகதையற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும். இவ் வழியினைத் தவிர அவர்கள் பின்பற்றுவதற்கு வேறு வழியே கிடையாது." (We or Our Nation Hood Defined) என்று கூறியுள்ளார்.
அதில் ஒரு பகுதியை மறைத்து விட்டு மீண்டும் அதனைப் புதுப்பிக்கிறார் மோகன்பகவத் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் .
"ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்." (தினமணி 16.10.2000)
இவ்வாறு கூறியவர் மேனாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதே!
இந்தியா - அரசியல் சட்டப்படி ஒரு மதச் சார்பற்ற நாடு; Secular State) இந்தியாவின் குடிமகன் இந்தியன் என்று அழைக்கப்படுவதே இன்றுள்ள நடைமுறை வழமையாகவும் உள்ளது. அதில் பன்மதத்தவர், பல இனத்தவர், பல மொழியினர், பல பண்பாட்டுக்கு உரியவர்கள் உண்டு.
மனுதர்மத்தில் திராவிடம்
ஏன் இவர்கள் கொண்டாடும் - இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக இடம் பெற வைக்க விரும்புகிற மனுதர்ம சாஸ்திரத்தில்கூட,
மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் சுலோகம் 44-இல்
"பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்
காம்போசம் யவ நம் சகம் பாரதம்
பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்"
(வங்கம், புந்தேல்கண்ட்(உத்திரப்பிரதேசம், பிகார்), திராவிடம், கம்போடியா, பாலி, யவனம், சீனம், கிராதம் (ஆப்கான்), தக்கானம் இப்பிரதேசங்களை உள்ளடக்கியவர்கள், பாரத தேசத்தவர்கள் அனைவரும் சூத்திரர்களாகிவிட்டனர்.)
"திராவிடம்" என்பது மனுதர்மத்திலேயே இடம் பெற்றுள்ளதே!
இந்தியாவின் பல நாடுகளின் உள்ள டக்கமே இந்தியா என்பதற்கு மனுதர்ம சாஸ்திரமே தக்க சான்று அல்லவா!
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் பேச்சில் புதைந்துள்ள மாபெரும் ஆபத்து இது ஹிந்து ராஷ்டிரம் -ஹிந்து நாடுதான் என்ற பிரகடனம் ஒளிந்து தலையை மெல்ல எட்டிப் பார்த்து, 'நாடி'ப் பார்க்கிறது
செக்யூலர் இந்தியா அல்ல இது என்று மறுக்கும் ஹிந்துத்துவ ஆணவம்தானே இது!
இந்து என்று ஒப்பவில்லையென்றால்
குடியுரிமை கூட கிடையாதாம்!
கோல்வால்கர் கூறியபடி கிறித்தவர்கள் இராமனை வணங்க வேண்டும். இஸ்லாமி யர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும், இன்றேல் அவர்களுக்கு ஹிந்து நாடாகிய இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை என்பது தான் இப்போது ஒத்திகையாகக் களத்திற்கு வந்துள்ளது. எனவே, இந்த விஷமத்தை முளையிலேயே வேரோடும், வேரடி மண்ணோடும் கிள்ளி எறிய வேண்டும்!
மதசார்பற்ற சக்திகளே கிளர்ந்தெழுக!
இது ஹிந்துஸ்தான் அல்ல; இந்தியா.. இந்தியா.. இந்தியா...
நாட்டில் உள்ள அனைத்து மதச் சார்பற்ற முற்போக்கு சக்திகள், கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ஓரணியில், ஓர் குரலில் இந்த மாபெரும் ஆபத்தினைக் கண்டித்து பெரு முழக்கம் பெருந்திரள் அணியாக எழ வேண்டும்! எழ வேண்டும்!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
9-2-2017