தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல - சரியான நேரத்தில் இருவருக்கும் பாடம் போதிப்பார்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
அண்ணா தி.மு.க. என்ற பெயரில் இயங்கும் ஓர் அரசு பி.ஜே.பி.யின் பொம்மையாக செயல் படுவது வெட்கக்கேடு! தமிழ்நாட்டு மக்கள் இதற் கான பாடத்தினை இரு தரப்பாருக்கும் புகட்டு வார்கள் என்பதில் அய்யமில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்பு கடந்த 6, 7 மாதங்களாக தமிழ்நாட்டு அரசியல் - குறிப்பாக ஆளுங்கட்சியினர் நடத்தும் அலங்கோல அரசியல், அப்பட்டமான பதவி வெறிக் கூத்து, டில்லி சரணாகதி படலம், மாநில உரிமைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம், மீனவர்களின் வாழ்வாதாரம், மருத் துவம் போன்ற படிப்பிற்கு - கிராமப்புற பிள்ளைகளும், முதல் தலைமுறையினரும் வாய்ப்பு மறுக்கப்படும் பச்சையான உரிமை பறிப்புகள் தொடர்கதையாக உள்ளன.
அ.தி.மு.க. அரசை
மிரட்டும் பா.ஜ.க.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, தமிழக அமைச்சர்களை மிரட்டி தங்களுக்கு எப்போதும் சலாம் போட வைத்து, சரணாகதிப் படலத்தை நாளும் பெருக்கிக் கொண்டே போகிறது; தமிழ்நாடு இவ்வளவு கேவலமாகவா போகவேண்டும் என்று வெளிநாட்டவர்கள், வெளி மாநிலத்தவர்கள் உள்பட பலரும் கேலியும், கிண்டலும், பரிகாசமும் செய்யும் பரிதாப நிலை நீடிப்பது மகாவெட்கக்கேடு அல்லவா!
எந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு இந்த அளவு வஞ்சித்த வரலாறு இதற்குமுன்பு எப்போதுமே இருந்ததில்லை.
பொதுநிலையாளர்கள்
எழுப்பும் கேள்வி!
என்றாலும், முதுகெலும்பில்லா முதலமைச்சர் - தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல தமிழக ஆளுங்கட்சியை கொத்தடிமைகள்போல நடத்துவதும், அதற்கு அடிபணிவதும் தலைக்குனிவு அல்லவா? முன்பு ஜெயலலிதா காலத்தில் இருந்த வாய்மூடிகள், ஒவ்வொருவரும் இப்போது தனித்தனி ஆவர்த்தனம், பேட்டிகள் தருகின்றனர்; ஆளுங் கட்சியில் மூன்று அல்லது நான்கு அணிகள் எனப் பிளவு! அதிகாரிகள் இந்த நிலையைப் பயன்படுத்திக் குளிர்காய்வது - இதுதானே இப்போது நடக்கிறது!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இவ்வளவு பெரிய அவமானத்திற்கு ஆளாகலாமா என்றே பொது நிலையாளர்கள் கேள்வி எழுப்பும் நிலை உள்ளது!
ஆளும் கட்சி தரப்பிலிருந்தே குற்றச்சாட்டுகள்!
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக புகார் படலங் களும், குற்றச்சாட்டுகளும் - எதிர்க்கட்சிகளால்கூட அல்ல - ஆளும் அ.தி.மு.க. கட்சிக்காரர்களின் தரப்பிலிருந்தே கிளப்பப்படுவது வியப்பாகவும், வேடிக்கையாகவும், விபரீதமாகவும் உள்ளன!
அமைச்சர்கள், அதிகாரிகள்மீது வருமான வரி சோதனைகள் - பல பேரிடம் பல மணிநேரம் - பல நாள் விசாரணை என்றாலும், உடனடியாக எந்த சட்ட நடவடிக்கையும் பாயாத, ‘தலைக்குமேல் தொங்கும் கத்தி’ போல அதனைக் காட்டியே பல அச்சுறுத்தல்கள்!
தங்கள் இஷ்டம்போல ‘‘டில்லி எஜமானர்கள்’’ இவர்களை அரசியல் பொம்மலாட்டத்திற்கும் ஆளாக்கி வேடிக்கை பார்க்கின்றனர்!
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கே பணம்!
ஆளும் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களுக்கே பல கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும், எம்.எல்.ஏ., ஒருவரே வாக்குமூலம் தந்த செய்தி ‘அசிங்கத்திற்குப் பொட்டு வைத்த’ அவலம்போல நாறுகிறதே!
இதனை மத்திய அரசின் சி.பி.அய். போன்றவை விசாரிக்க வேண்டாமா? உண்மைக் குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளம் காட்டி, தமிழக அரசியலை - பொதுவாழ்க்கையை தூய்மைப்படுத்த வேண் டாமா?
‘புனித’ கங்கை
சாக்கடையானது ஏன்?
‘புனித கங்கை’ என்று அழைக்கப்படுவது அழுக்கு களும், மாசுகளுமாக ஆனது எப்படி? சாக்கடை யாகவே ஆனது ஏன்? அதனைத் தூய்மைப்படுத்தும் திட்டமாம் - அதற்கென ஒரு அமைச்சராம் - அவரே குற்றவாளிக் கூண்டில் உள்ள மற்றொரு ‘போனஸ்’ அவலம்!!
அதுபோல, தமிழ்நாட்டு அரசினை இப்படியே பொம்மலாட்டக் கூத்தாக்கி நடத்துவது நீடிப்பதா?
இப்படி செய்தால்தான் பா.ஜ.க.விற்கு கொல்லைப் புறக் கதவு எப்போதும் - இப்போது உள்ளதுபோல் திறந்தே கிடக்கும் என்ற திட்டமா?
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல! நிச்சயம் இதற்குரிய பாடத்தை விரைவில் - வாய்ப்பு ஏற்படும் போது இருதரப்பினருக்கும் புகட்டவே செய்வார்கள்.
ஏ, தாழ்ந்த தமிழகமே, அரசியல் இப்படியா எளிதில் சுத்தப்படுத்த முடியாத சாக்கடையாக ஆக வேண்டும்?
மகாவெட்கம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.