- 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்
- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு
- குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மாநில, மத்திய அரசுகள் பெற்றுத் தர வேண்டும்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில்
ஜூலை 12ஆம் தேதி பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டம்!
ஒரு கோடி மாணவர் அஞ்சலட்டை, மின்னஞ்சல்கள் குடியரசுத் தலைவருக்கு!
திராவிடர் கழகம் கூட்டிய ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, ஜூலை 4 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசு தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 12ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் பெருந் திரள் ஆர்ப்பாட்டம், ஒரு கோடி மாணவர்கள், அஞ்சலட்டை, மின்னஞ்சல்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் சென்னை பெரியார் திடலில், இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (4.7.2017) கூடியது.
கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
எடுத்துக்காட்டாக 2016-2017 ஆம் ஆண்டில் திறந்த போட்டியில் (Unreserved)
நுழைவுத் தேர்வு இன்றி பிளஸ் 2 மதிப்பெண் அடிப் படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அது - காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்களுக்கு நல் வாய்ப்புக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
இந்த வாய்ப்பைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் ‘நீட்' என்னும் நுழைவுத் தேர்வாகும்.
கடந்த 27.3.2017 அன்று இதே பெரியார் திடலில் கூடி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு மதச் சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமை இவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு எச்சரித்தபடியே - நடைபெற்ற ‘நீட்' தேர்வின் முடிவுகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பினைப் பறித்துவிட்டது.
நடந்து முடிந்த ‘நீட்' தேர்வில் தமிழ்நாட்டில் 38.83 விழுக்காடு மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 25 பேர்களில் தமிழ்நாட்டில் ஒருவர்கூட இல்லை என்பது ‘நீட்' தேர்வால் சமூகநீதி பாதிக்கப்படும் என்ற நமது அமைப்பின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக இட ஒதுக்கீட்டில் இதுவரை இல்லாத - இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு (Unreserved) 50.5 சதவிகித இடங்கள் அளிக்கப்பட உள்ளன.
அதிக மதிப்பெண்கள் பெறும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பொதுப் போட்டியில் இனி அவர்களுக்கு இடமில்லை என்று ஆக்கியதன்மூலம் இட ஒதுக்கீடு சட்டப்படி இல்லாத உயர்ஜாதியினருக்கு 50.5 விழுக்காடு இடங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கியிருப்பது சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு மீறலும் மோசடியுமாகும்.
OC என்பது Open Competion என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். Others, Unreserved என்ற குழப்பமான சொற்கள் அகற்றப்பட வேண்டும்.
‘நீட்' தேர்விலும் தகுதியை தேர்வு செய்ய ஒரே மாதிரியான அளவுகோலை மேற்கொள்ளாமல், மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறான கேள்வித் தாள்களைக் கொடுத்துத் தேர்வு எழுதச் செய்தது மாணவர்களின் தகுதியை நிர்ணயம் செய்ய பொது அளவுகோலைக் கடைப்பிடிக்காத பெருங்குற்றமாகும்.
எனவே, நடத்தப்பட்ட ‘நீட்' தேர்வை ஒட்டுமொத்தமாகவே ரத்து செய்துவிட்டு, பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்று இவ்வமைப்பு வலியுறுத்துகிறது.
மாநிலங்களிலிருந்து இளங்கலை மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்புக்கு அளிக்கப்பட்ட 15 விழுக்காடு இடங்களிலும், அதேபோல, 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்ட முதுநிலைக் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி உரித்தான 27 சதவிகித இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை இவ்வமைப்பு கூட்டிக் காட்டி, அவர்களுக்குச் சட்டப்படி உரித்தான 27 விழுக்காடு இடங்களை அளிக்கவேண்டும் என்று மத்திய அரசை இவ்வமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான DM, MCH ஆகியவற்றிற்கான இடங்களை மாநிலத்திலிருந்து மத்திய தொகுப்புக்குக் கொண்டு சென்றது சரியல்ல.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் இந்தச் சிறப்புக் கல்விக்கான 192 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்குக் கொண்டு போவதால், தமிழ்நாடு பெரும் இழப்புக்கு ஆளாகிறது. 2015 முதல் இந்த நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலை மாற்றப்பட்டு 2016 ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டு வந்தத அந்தப் பழைய நிலை தொடரப்பட தேவையான சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று இவ்வமைப்பு மாநில அரசை வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை, முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிட வேண்டும். ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றிட பேரழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இவ்வமைப்பு வலியுறுத்துகிறது.
முதுநிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இதுவரை வழங்கி வந்த நிலையை மாற்றி அவர்களுக்கும் ‘நீட்' தேர்வு என்பது, பல்லாண்டு காலம் கிராமப் பகுதிகளிலும், தொலைதூர கடினமான பகுதிகளிலும் பணியாற்றிவரும் மருத்துவர்களின் சேவையைப் புறக்கணிக்கும் நேர்மையற்ற போக்காகும்.
மாநில அரசுகள் அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப 50 விழுக்காட்டிற்குக் குறைவில்லாமல் அரசு மருத்துவர்களுக்கு டிப்ளமோ, முதுநிலை மருத்துவம், உயர்சிறப்பு மருத்துவம் ஆகிய படிப்புகளில் இட ஒதுக்கீட்டை வழங்கிக் கொள்ளலாம் என்ற வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் அவசரச் சட்டம் மூலம் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசை வலி யுறுத்துகிறது. சட்டத்தை நிறைவேற்றிவிட்டு போதிய அளவுக்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான கருத்தை வலியுறுத்தும் வகையிலும், வெளிப்படுத்தும் தன்மையிலும் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும். அதன்முடிவை குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களையும், குடியரசுத் தலைவரைச் சந்திக்க வைக்க ஆவன செய்யவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இவ்வமைப்பு வலியுறுத்துகிறது.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வை வெளிப்படுத்தக் கூடியது என்பதை மாநில - மத்திய அரசுகள் உணரவேண்டும் என்றும் இவ்வமைப்பு மாநில - மத்திய அரசுகளை வலியுறுத்துகிறது.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் இந்த முடிவுகளை விளக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாநில - மத்திய அரசுகள் விரைந்து செயல்பட்டு, வெகுமக்களின் இந்த சமூகநீதிக் கோரிக்கைக்குச் செயல்வடிவம் - சட்ட வடிவம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் கீழ்க்கண்ட இரு வடிவங்களில் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
1. குடியரசுத் தலைருக்கு ஒரு கோடி மாணவர்கள் அஞ்சல் அட்டைக் கடிதம், ஒரு கோடி மின்னஞ்சல் அனுப்புவது, மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் பிரச்சாரம் மேற்கொள்வது.
2. மாவட்டத் தலைநகரங்களில் மாணவர்கள் பெரு மளவில் பங்கேற்கும் பெருந்திரள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை வரும் ஜூலை 12 ஆம் தேதியன்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.