'
நீட்' விலக்குச் சட்டம் இயற்றப்பட்டும்
அரசு செயல்பாடின்றி இருக்கிறதே! - செய்தியாளர் கேள்வி
ஆட்சியை அசைக்கும் அல்லது ஆட்சியை அமைக்கும்
தமிழர் தலைவர் அளித்த பதில்
சென்னை, ஜூலை 5- தமிழ்நாடு சட்டப் பேரவையில் ‘நீட்’ தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு மசோதாக்கள் இரண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், அவற்றிற்கு ஒப்புதல் பெற்றிட, அரசு செயல்படாமல் இருக்கிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு - “ஆட்சியை அசைக்கும் அல்லது ஆட்சியை அமைக்கும்” என்று பதில் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (4.7.2017) சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்ட நிறைவில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதாவது:
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கின்ற இரண்டு சட்ட வரை வுகளுக்கும் மத்திய அரசு அதனுடைய ஒப்புதலை தரவேண்டும். அதனைப் பெற்றுத் தருவது மாநில அரசினுடைய கடமையாகும். மாநில அரசினுடைய உரி மைகளை, சமூகநீதியைப் பறிக்கக்கூடிய வகையில், இடஒதுக்கீட்டை அறவே பறிக் கக்கூடிய வகையில் மீண்டும் இப்போது அவர்கள் முயற்சி எடுத்திருப்பது, பெரும் பாலான இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களை யெல்லாம், பொதுப்போட்டி என்கிற பெய ரிலே முன்னேறிய சமூகத்தினர் பறிக்கும் வகையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் வைக்கக்கூடிய ஒரு சூழ்ச்சியும் அதிலே அமைந்திருக்கிறது என்பதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக் கின்றன.
12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
இந்த நீட் தேர்வை எதிர்த்து இது வரையில் நாம் போராடிக்கொண்டுவந்து அய்ந்தரை மாதங்களுக்கு முன்னாலே தமிழகத்திலே நிறைவேற்றப்பட்டிருக்கக் கூடிய இரண்டு மசோதாக்கள் - நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்ற அந்த மசோதாக்களுக்கு சட்ட வடிவம் பெற குடியரசுத் தலைவர் ஒப்புத லைப் பெற்றாகவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து உடனடியாக அவர் கள் கூட்டுகின்ற கூட்டத்திலே, நமக்குள்ள உரிமைகளை நாம் நிலைநாட்டவேண்டும். மாநில அரசின் உரிமை அதன்மூலம் நிலைநாட்டப்படுவதோடு சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அழுத்தம் கொடுப்பதற்காக, வரும் 12ஆம் தேதி அன்று மாவட்டத் தலைநகரங்களிலே மாபெரும் ஆர்ப்பாட் டம், போராட்டம், அறப்போர் நடைபெற இருக்கிறது. அதில் பெற்றோர்கள், மாண வர்கள், கலந்து கொள்கின்ற தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அத் துணை பேரும் கலந்துகொண்டு, இந்த கருத்தை வலியுறுத்துவார்கள்.
ஒரு கோடி மாணவர்கள்
அஞ்சலட்டைக் கடிதம்
குடியரசுத் தலைவருக்கு
அதோடு இன்னொரு முடிவு எடுக்கப் பட்டுள்ளது. ஒரு கோடி அஞ்சல் அட்டை களை மாணவர்கள் நீட் தேர்வில் தமிழ கத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என் பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது, அதேபோல், ஒரு கோடி மின்னஞ்சல் மூலமாகவும் வலியுறுத்துவது, தொடர்ந்து இங்கே கலந்துகொண்ட அத்துணை கட்சிகள், இயக்கங்கள், கல்வி இயக்கங்கள், மருத்துவ சங்கங்கள் சார்பா கவும் பொதுமக்களுக்கு விளக்கக்கூடிய அளவிற்கு Ôநீட் தேர்வின் விளைவுகளை யும், பேராபாயங்களையும் பற்றி மாபெரும் மக்கள் பிரச்சார இயக்கத்தையும்Õ தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவெடுத்திருக்கிறோம்.
அவசர நிலை கருதி இந்த இயக்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டங் களை நடத்தியதன் விளைவாக, இதுவரை கேளாக் காதோடு இருந்த மத்திய அரசிலே இப்போதுதான் அவர்கள் இந்த இரண்டு சட்ட வரைவுகள்பற்றி நாங்கள் பரிசீல னைக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வ தற்குத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லுகிற காலக்கட்டத்திலே, தொடர்ந்து அதை வலியுறுத்த வேண்டும். அதை வலி யுறுத்துவதற்கான வலிமையை உண்டாக்கு வதற்கு உடனடியாக தமிழக அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். தேவையானால், அனைத் துக்கட்சிகளையும் அழைத்துக்கொண்டு போய் குடியரசுத் தலைவரை சந்திக்க வேண்டும் என்ற பொதுக்கருத்து இங்கே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, அதையும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங் களிலே தொடர்ந்து நடத்துவோம்.
சலுகையோ - பிச்சையோ அல்ல!
ஆகவே, நீட் தேர்வு சம்மந்தப்பட்ட இடையூறுகள்குறித்து மறுபடியும் தெளி வாக்குகிறோம். ஒன்று விலக்கு அளிப்பது என்பது பிச்சையோ, சலுகையோ மத்திய அரசு கொடுப்பது அல்ல. மாறாக, இந்திய அரசமைப்புச்சட்டத்தில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமையை நாம் வற்புறுத்துவது என்று பொருள். அதை வலியுறுத்தக்கூடிய அளவிலே, தொடர்ந்து போராடிக்கொண்டுவருவதோடு, இரண்டு சட்ட வரைவுகளை இப்போதுதான் குடியரசுத் தலைவர் அசைந்து, ஆய்வு செய்திருக்கிறார்கள். இதில் அழுத்தம் கொடுத்து பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் சமமாக உள்ளது என்பதை நாம் வலியுறுத்தக்கூடிய ஒரு மக்கள் இயக்கம் தொடர்ந்து நடைபெறும்.
திறந்த போட்டி என்றால் என்ன?
அதேபோல, இன்னொரு பெரிய ஆபத்து என்னவென்றால், இப்போது நடந்து முடிந்த தேர்விலே, மாணவர்கள் சேர்க்கையில் எப்படி அவர்கள் முடிவு செய்யப்போகிறார்கள் என்று சொல்லும்போது, மத்திய அரசின் விதிப்படி 27 விழுக்காடு மற்றும் 22.5 விழுக்காடு என்று 49.5 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ்மக்களுக்கு ஒதுக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மற்ற 50.5 விழுக்காடுக்கான இடங்கள் Ôபொதுப்போட்டிÕ என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு, அனைத்து வகுப்பினரும் திறமை அடிப்படையிலே போட்டி போடக்கூடிய Ôதிறந்த போட்டிÕ (Open Competition) என்று இருந்ததை திட்டமிட்டே மற்றவர்கள்(Others) என்று மாற்றி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ்மக்கள் அல்லாதவர்களுக்கு மற்றவர்கள் (Others) என்ற பிரிவின்மூலமாக 50.5 விழுக்காட்டை முன்னேறிய ஜாதியினருக்கு தாரை வார்த்துக்கொடுக்கின்ற, திட்டமிட்ட சமூகநீதிக்கு எதிரான ஒரு சதித்திட்டம் உருவாகியிருக்கிறது.
இதை முறியடிக்க வேண்டும். இதற்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்தையும், விளக்கத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டுதான் அதனை செய்கின்றோம். இதனை விளக்குவது நம்முடைய கடமை. இதிலே எல்லோரும் ஒரே கருத்தோடு, கட்சியில்லை, பேதமில்லை என்கிற அளவில் இதில் அரசியல் அணிக்கு வேலையில்லாமல், முழுக்க, முழுக்க இது ஒரு சமுதாய நல, மாநில உரிமை, சமூகநீதி கூட்டமைப்பு என்ற முறையிலே ஒத்த கருத்தோடு அத்துணை பேரும் 12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலே போராட்டம், ஒரு கோடி அஞ்சலட்டை அறப்போர், அதேபோல மாணவர், பெற்றோர் அனைவரும் கலந்து கொண்டு அழுத்தம் கொடுக்கின்ற மின்னஞ்சல் போராட்டம், அறப்போர் நடத்துவது என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய முடிவு. அடுத்தடுத்த சூழ்நிலைகளுக்கேற்ப, இந்த கூட்டங்கள் அமைக்கப்படும், அதற்கேற்ப முடிவுகளை அறிவிப்போம்.
படிப்புக்காக தேர்வா? தேர்வுக்காகப் படிப்பா?
செய்தியாளர்: மாநில அரசு நீட் தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கப்போவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் நீங்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறீர்களே?
தமிழர் தலைவர்: மாநில அரசு என்பது முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னால் பார்த்தால் நாயக்கர் குதிரை என்கிற மாதிரி இரண்டு வகையான வேடம் போடுகிறார்கள் என்று அதற்கு பொருள். நீட் தேர்வையே நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லும்போது, நீட் தேர்வுக்கு ஏற்ப பாடம் என்பது முரண்பாடானது. இன்னுங்கேட்டால், தத்துவ ரீதியாகவே, கல்வித்திட்டத்துக்கு எதிரான ஓர் அறிவிப்பு அது. பாடத்திட்டத்துக்காகத்தான் தேர்வு, தேர்வுக்காக பாடத்திட்டம் கிடையாது. தலைக்காகத்தான் குல்லா, குல்லாவுக்காக தலை இல்லை. பாடத்திட்டத்துக்காக தேர்வா? தேர்வுக்காக பாடத்திட்டமா? தலைகீழாக சொல்கிறார்கள். அந்த முரண்பாட்டை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எது நமக்கு கூடாது என்று சொல்லிவிட்டோமோ, அதற்கு தகுந்தமாதிரி தயார் செய்கிறோம் என்றால் என்ன பொருள்? இரண்டு வேடம் போடுகிறார்கள். மத்திய அரசுக்கு ஒரு வேடம், மக்களுக்கு இன்னொரு வேடம் என்று இருக்கக்கூடாது. இது கண்டனத்துக்குரியது. அதைக் கைவிட வேண்டும்.
பாடத்திட்டத்துக்கு தேர்வு வரட்டும். தேர்வுக்காக பாடத்திட்டம் வரக்கூடாது.
பிரின்ஸ் கஜேந்திரபாபு பதில்
செய்தியாளர்: சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் தரமாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?
பிரின்சு கஜேந்திரபாபு: அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. சிபிஎஸ்இ பாடத்திட்டம், மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் என்பதுகுறித்து முத்துக்குமரன் ஆணையத்தின் துணைக்குழு ஆய்வு செய்து, ஆய்வின் முடிவில் அது கண்டுபிடித்து கூறியது என்னவென்றால், மாநில பாடத்திட்டம்தான் (எஸ்எஸ்எல்சி) கூடுதலான பாடச்சுமை வைத்திருக்கிறது. நாங்கள் கேட்கிறோம், வேதியியலில் பாடத்திட்டம் குறைவு என்று சொன்னால், வேதியியலில் என்ன இல்லை என்று சொல்ல வருகிறீர்கள்? இயற்பியலில் இல்லை என்று சொன்னால், நியூட்டன் விதி இல்லை என்று சொல்கிறீர்களா? சிபிஎஸ்இ தான் வலிமையானது என்று சொல்வது புரளி. இன்னும் சொல்லப்போனால், சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் ரொம்ப பலவீனமானது. 12 அண்டுகளுக்கு முன்னால் எழுதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம். ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பிக்பாங் கருந்துளை குறித்து சிபிஎஸ்இ பாடத்தில் இருக்கிறதா? மங்கள்யான், சந்திராயன்பற்றி இருக்கிறதா? எதுவுமே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கிடையாது. எதுவுமே இல்லாத சிபிஎஸ்இ தரமானது என்று யார் சொல்வது? சிபிஎஸ்இ போலவே மத்திய அரசின் மற்ற பாடத்திட்டமும் இருக்கிறதே அது தரமில்லாததா?
நாங்கள் கேட்பதெல்லாம், தமிழ்நாடு அரசுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. தமிழ்நாடு அரசினுடைய கல்விக்கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசு இன்றைக்கு 10பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழு தமிழ்நாட்டுக்கென்று ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கும். நீட்டுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை. அது தமிழ்நாடு அரசுக்காக, தமிழ்நாடு மக்களுக்காக உருவாக்கக்கூடிய பாடத்திட்டம். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், நீட்டுக்காக உருவாகிறது என்று சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சி.பி.எஸ்.இயில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றனரா?
தமிழர் தலைவர்: அந்தக் கேள்விக்கு பதிலில் கூடுதலாக இன்னொரு செய்தி, அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதற்கும் மேலே சொல்வதானால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் எல்லோரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்களா? சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அத்துணைபேரும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமே? முதல் 25 பேரில் ஒருவர்கூட இல்லையே! இதில் இருந்து சிபிஎஸ்இ தரமானது என்று கூறுவது மோசடி என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். எனவே, மக்களை ஏமாற்றுவதற்கு திட்டமிட்ட பிரச்சாரத்தை, சிபிஎஸ்இ என்னவோ பிராமணர் மாதிரியும், மாநில பாடத்திட்டம் என்னவோ சூத்திரன்மாதிரியும் இதில் வருணாசிரமத்தை உருவாக்காதீர்கள்.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதுதான் பிரச்சினை
செய்தியாளர்: கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால்தானே இந்த பிரச்சினை?
தமிழர் தலைவர்: ஆமாம். ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் அடுத்த வேலை, இந்தியா முழுவதும் மாநிலப்பட்டியலுக்கே கல்வி வரவேண்டும் என்ற இயக்கத்தை தமிழ்நாட்டில் தொடங்கி இந்தியா முழுவதும் கொண்டு போவது எங்களுடைய அடுத்த வேலைத்திட்டம்.
ஜி.எஸ்.டியும் - ஒரே நாடும்
செய்தியாளர்: நீட், ஜிஎஸ்டி இதுபோன்ற திட்டங்களின்மூலமாக ஒரே நாடு ஒரே கொள்கை என்கிற நோக்கில் மத்திய அரசு செல்கிறதே?
தமிழர் தலைவர்: அது வெளிப்படையானது. கோல்வால்கர்தான் தத்துவகர்த்தா ஆர்.எஸ்.எஸ்-சுக்கு. அவருடைய Bunch of Thoughts
என்ற நூலை ஞானகங்கை என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதிலே ரொம்ப தெளிவாகவே எழுதியிருக்கிறார். மாநிலங்களே இருக்கக்கூடாது. ஒற்றையாட்சிதான் இருக்க வேண்டும்.
There must be Unitary Government; No Fedaral setup
மாகாணங்களே இருக்கக்கூடாது என்கிறார். அதை மனதிலே வைத்துக்கொண்டுதான், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே வரி, கடைசியிலே ஒரே ஆட்சி.
இது எங்கே போகும் என்றால், எல்லோரும் சொல்கின்ற எதேச்சதிகாரம்தான். ஜனநாயகத்துக்கு விடை கொடுத்துவிடுவார்கள்.
அசைக்கும் - அமைக்கும்
செய்தியாளர்: தமிழக சட்டமன்றத்தில் சட்டவரைவு நிறைவேற்றப்பட்டும், அரசு செயல்பாடின்றி இருக்கிறதே? இந்நிலையில் போராட்டம் அறிவித்திருக்கிறீர்களே?
தமிழர் தலைவர்: தமிழக அரசை அசைக்கும். அல்லது தமிழக அரசை அமைக்கும்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.