Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஜாவடேகருக்கு மறுப்பு 'நீட்' தேர்வு அறவே கூடாது என்பதுதான் முக்கியம் தமிழர் தலைவர் கருத்து

$
0
0

புதுச்சேரி, ஜூலை 24 'நீட்' நுழைவு தேர்வு அறவே கூடாது என்பதுதான் முக்கியம் என மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஜாவடேகருக்கு மறுப்பு தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
புதுவையில் நேற்று (23.7.2017) மாலை நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

கல்வியில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் சொல்லிக்கொண்டு வருகிறோம். 95 விழுக்காட்டினர் மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தின்கீழ் படிக்கிறார்கள். இந்திய அரசமைப்புச்சட்டத்தில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் அதிகாரம் குறித்து மூன்று வகையான பட்டியல்கள் உள்ளன. மாநிலப் பட்டியல் (ஷிtணீtமீ லிவீst), மத்திய பட்டியல் (ஹிஸீவீஷீஸீ லிவீst), மூன்றாவது   ஒப்புதல் பெறப்பட வேண்டிய பட்டியல் (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt லிவீst) என்பதை தவறாக பொதுப்பட்டியல் என்று மொழிபெயர்க்கிறார்கள். மூன்றாவது பட்டியலில் மாநில அரசுக்குத்தான் முழு அதிகாரம் உண்டு. அதில் மத்தியஅரசு தீர்மானத்தை செய்ய வேண்டுமானால், மாநில அரசுகளுடைய ஒப்புதலைப் பெறவேண்டும்.

உரிமையைத் தானே கேட்கிறோம்!

நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட நேரத்திலே நாடாளு மன்றத்திலே ஒரு நிலைக்குழு பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துரை என்னவென்றால், எந்த மாநிலம் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறதோ, அந்த விலக்கை அந்த மாநிலம் பெறுவதற்கு முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளது. எனவே, புதுவையோ, தமிழ் நாடோ, இன்னொரு மாநிலமோ நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறோம் என்றால், மத்திய அரசைப்பார்த்து பிச்சை கேட் கவில்லை. சலுகை கேட்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கிற உரிமைப்படி கேட்கின்றோம்.

எனவே, உரிமையை மறுக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அனுப்பி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஒருமித்த குரலில் கூறியுள்ளார்கள். இதற்குள் இரண்டு முதலமைச்சர்கள் மாறிவிட்டார்கள்.  குடியரசுத் தலைவரும் மாறிவிட்டார். இந்த நிலையில் செய்தியாளர்கள் மத்திய இணையமைச்சரான அம்மையாரிடம் கேட்கும்போது, அந்த கோப்புகள் எங்கே இருக்கின்றது என்று தெரியவில்லை. இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். இதுதான் மோடி அரசாங்கத்தினுடைய, ஆட்சியினுடைய யோக்கி யதையா? உங்களுக்கு இது கேவலமாக இல்லையா?

மாநில அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்கள்குறித்து மத்திய அமைச்சரிடம் கேட்டால்,  அதுவும் தமிழ்நாட்டுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டால், அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால், இதுதான் உங்களின் நிர்வாகத்தின் யோக்கியதையா?

வேறுபாடு எப்படி வந்தது?

புதுவை மாநில அரசிடம் அப்படி நடக்க முடியாது. முதல்வர் அந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பார். தமிழ் நாட்டிலிருந்து டில்லிக்கு 5 அமைச்சர்கள் செல்கிறார்கள் என்றால், அங்கே நடந்ததென்ன? வலியுறுத்துகிறார்களா? ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று முதுகெலும்போடு சொல்லு கின்ற எண்ணம் வரவேண்டாமா?

நீதிமன்றத்துக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பல நிறைய வழக்குகள் சென்றன. சென்னை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு குறித்து ஆறுகேள்விகளைக் கேட்டது. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? சிபிஎஸ்இயைப்பார்த்து பதில் சொல்லுங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாதன் காரணம் என்ன? சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன? கல்வித் தரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையில் கல்வித்தரம் வேறுபடும்போது, அனைவரும் சிபிஎஸ்இ தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்? மாநில மொழிகளில் உள்ள வினாத்தாள்களுக்கும், இந்தி, ஆங்கில மொழிகளில் உள்ள வினாத்தாள்களுக்கும் வேறுபாடு எப்படி வந்தது? என்று நீதிபதிகள் வினா எழுப்பினார்கள்.

இதற்கு பதிலே சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்துக்கு போனார்கள். அங்கே என்ன சொல்லிவிட்டார்கள் என்றால், உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம், உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்றார்கள்.

பல கேள்வித்தாள்கள் - அமைச்சர் ஒப்புதல்

ஆகவே, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலே வரவில்லை. இது அநீதி. ஆனால், தந்தை பெரியார் அடிக்கடி சொல்வதுபோல், இன்றைக்கு பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. என்னவென்றால், பிரகாஷ் ஜாவடேகர் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார்; என்ன தெரியுமா? யுபிஎஸ்சி கேள்வியை மொழிபெயர்த்தால் அதே கேள்விதானே மொழிபெயர்ப்பில் இருக்க வேண்டும்? ஆனால், கேரளாவுக்கு ஒரு கேள்வி, தமிழ்நாட்டுக்கு ஒரு கேள்வி, குஜராத்துக்கு இன்னொரு மாதிரியான கேள்வி என்று மாநிலத்துக்கு மாநிலம் கேள்விகள் எப்படி மாறும்? அப்படியானால், ஒரே மாதிரியான தேர்வாக எப்படி அமைய முடியும்? இதை அமைச்சர் ஒப்புக் கொண்டி ருக்கிறார். எனக்கு இப்போதுதான் புரிந்துள்ளது. கேள்வித் தாள்களெல்லாம் தவறாக ஆங்காங்கே பல கேள்வித் தாள்களாக வந்திருக்கின்றன. இனி ஒரே மாதிரி    வினாத்தாள் வழங்கப் படும். என்கிறார். அப்படியானால், புதுவை மாநில சமூக நீதி மாநாட்டின் வாயிலாக மத்திய அரசுக்கு நாங்கள் வைக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய கோரிக்கை என்ன தெரியுமா? நடந்த நீட் தேர்வை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.  நீட் தேர்வு அறவே கூடாது.  எங்கள்  லட்சக்கணக்கான பிள்ளை களின் வாழ்வோடு விளையாடாதீர்கள்.

ரிக்ஷாக்காரர் பிள்ளை  கட் ஆஃப் மார்க் 190 வாங்கிவிட்ட பின்னர், "என்னுடைய மருத்துவராகின்ற கனவு, மருத்துவ ராகவேண்டும் என்று ஆசைப்பட்டேனே,  நீட்டில் 60 மதிப்பெண்கள்கூட பெறமுடியவில்லையே" என்று சொல்லியிருக்கிறதே? ஏன்? என்ன காரணம்? குஜராத் கேள்வியை இங்கே வைத்திருந்தால், எங்கள் பிள்ளைகள் தேர்ச்சி பெற்றிருப் பார்களே, இதைக் கேட்கத்தான் சமூகநீதி மாநாடு.  எங்கே சமூக அநீதி இருக்கிறதோ, அங்கே சமூக நீதி வேண்டும் என்ற குரல் பிறக்கும். 'நீட்' நிரந்தரமாகவே கூடாது - கூடவே கூடாது என்பதுதான் சமூகநீதியாளர்களின் நிலைப்பாடு.

சாமியாரிடம் போகாத ஆட்சி

புதுவை மாநிலத்தில் உள்ள இந்த அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசு - திமுக இணைந்த ஓர் அரசாகும்.

புதுவை மாநிலத்தில் நீண்ட காலத்துக்குப்பின்னாலே ஒரு நல்ல ஆட்சி அமைந்திருக்கிறது. சாமியாருகிட்டே போகாத ஆட்சி.

அதிகமாக எங்கே போவார் என்றால், அவருடைய தலைவர் சோனியா காந்தியிடம் செல்வார். ராகுல் காந்தியிடம் சென்று கேட்பார்.

அங்கே சாமியார் இருக்கிறாரா, இங்கே சாமியார் இருக்கிறாரா என்று தேடாத, இந்த (நாராயண) சாமி, சரியான சாமி. மிகச்சரியானது. அப்பேற்பட்ட இவரிடம் வந்து அசைத்துவிடலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

கொல்லைப்புற வழியாக கொண்டுவந்து, தேர்தலிலே தோற்றவர்களையெல்லாம் கொண்டு வந்து  நியமனம்  செய்து, அதிகாரமே இல்லாதநிலையில் அதைச் செய்து, இதை அசைக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

தமிழ்நாட்டில் காலூன்ற முடியாதவர்கள் எல்லாம் இப்போது குறுக்கு வழியில் அங்கே ஜெராக்ஸ் ஆட்சி நடத்துகிறார்கள்.

புதுவையில் வேறு விதமாக கொல்லைப்புறமாக மூன்று பேரை நியமித்து, மாற்றிவிடலாம் என்று பார்க்காதீர்கள்.

நடக்காது. நடக்க விட மாட்டோம். மக்கள் திரளுவோம். மக்களைத் திரட்டுவோம்.

நெருக்கடி போட்டவரும், அனுபவித்தவரும் அருகருகே

காங்கிரசுக்கு எவ்வளவு பெரிய வரலாறு, திமுகவுக்கு எவ்வளவு பெரிய வரலாறு, எவ்வளவு போராட்டங்கள், எவ்வளவு வியர்வைக்கடல்? எவ்வளவு ரத்தக் கடல்? இது அத்துணையையும் சந்தித்தவர்கள், சிறைச்சாலை, நெருக்கடி காலம் எல்லாவற்றையும் சந்தித்தவர்கள்.

இப்போது எப்பேர்ப்பட்ட மாறுதல் வந்திருக்கிறது என்றால், நெருக்கடி போட்டவரும் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார், நெருக்கடியிலே அவதிப்பட்டவரும் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார். இரண்டு பேரையும் மதசார்பின்மை ஒன்றாக இணைத்திருக்கிறது.

இரண்டு பேரையுமே சோஷலிசம் ஒன்றாக இணைத்திருக்கிறது.

அப்பேர்ப்பட்ட இந்த காலகட்டத்திலே, மிஸ்டு கால் கொடுங்க, கட்சியை வளருங்கள் என்று கூறுகின்ற மிஸ்டு கால் கட்சிக்காரர்கள், சொந்தக்கால் உள்ளவர்களிடம் வந்து தகராறு செய்யலாமா?

உனக்கு சொந்த காலே கிடையாது. வியாபாரம் செய்பவன் மிஸ்டு கால் என்கிறான் என்றால், ஒரு கட்சியை வளர்ப்பவன் மிஸ்டு கால் கொடுப்பானா?

சொந்த கால்கள் உள்ள நாராயணசாமிகளை ஆட்டலாம், அவர் அமைச்சரவையை அசைக்கலாம்  என்று நினைக்காதீர்கள்.
அரசமைப்புச் சட்டம் 163....

அம்மையார் அவர்களே, துணைநிலை ஆளுநர் அவர்களே, அரசமைப்புச்சட்டம் 163இல் ஆளுநர்குறித்து கூறப்பட்டுள்ளது.

அவர்களை மதிக்கிறார்கள். ஒரு பெண்மணி வந்திருக்கிறார். அவரும் தோற்றுப்போய் இங்கு வந்தார். தோற்றுப்போகிறவர்களுக்கெல்லாம் பதவி கொடுப்பதற்குத்தான் ஆளுநர் பதவியே இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, அந்த அரசினுடைய மரியாதையை காப்பாற்ற வேண்டியவர் துணை நிலை ஆளுநர் அல்லவா? நல்ல உறவு இருக்க வேண்டாமா? உங்களை மதிக்கிறார்கள். தயவுசெய்து போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிக்காதீர்கள்.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிகாரிகள் ராஜ்யமாக இருக்கக்கூடாது. இது ஒரு கட்சிக்காக அல்ல, ஏதோ அந்த அம்மையாருக்கும், நாராயணசாமிக்கும் இடையிலான போட்டி அல்ல. மாறாக, ஜனநாயகத்துக்கும், மறைமுகமான எதேச்சதிகாரத்தை இங்கே கொண்டுவந்து நடத்தலாம் என்று சொன்னால், ஜனநாயகத்தின்பால் நிற்பதற்கு இந்த மக்களை தயாரிப்போம்.

ஜனநாயகம் என்பது பொதுநலம். அதிகாரிகளுக்கு ரொம்ப சங்கடம்.

புதுவை மாநிலத்துக்கு நீண்ட காலத்துக்குப்பிறகு ஒரு நல்லாட்சி இருக்கிறது. அது சிறப்பான ஆட்சியாக, ஜனநாயக ஆட்சியாக, மதசார்பின்மை ஆட்சியாக, சமதர்ம ஆட்சியாக, குலதர்மத்துக்கு இடமில்லாத ஆட்சியாக, பெண்ணுரிமையைப் பாதுகாக்கின்ற ஆட்சியாக, இந்த மண்ணுரிமையைப் பாதுகாக்கின்ற ஆட்சியாக இருக்க வேண்டும்.

நிரந்தரத் தீர்வு தேவை. புதுவைக்கு மாநில அந்தஸ்து   என்பதுதான் நிரந்தரமான ஒரே தீர்வு. அதற்கு காரைக்கால் பகுதியாக இருந்தாலும், புதுவைப்பகுதியாக இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து நீங்கள் போராடுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு துணை நிற்கும்.  தமிழ்நாடு துணை நிற்கும். ஜனநாயகம் துணைநிற்கும்.  மதச்சார்பின்மை துணை நிற்கும். நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறது. நீதி உங்கள் பக்கம் இருக்கிறது. நேர்மை உங்கள் பக்கம் இருக்கிறது. எனவே இந்த சமூக நீதி மாநாட்டினுடைய செய்தி இதுதான்.

வணக்கம்.  வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார்.

படம் 1) சமூகநீதி மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி அவர்களை வரவேற்று தமிழர் தலைவர்  கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். படம் 2) 'நீட்' எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வரும் தமிழர் தலைவரை பாராட்டி புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு வே. நாராயணசாமி பயனாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். (புதுச்சேரி 23.7.2017)



Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles