தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். அதனை மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம்.எஸ்.முரளிதரன் அவர்கள் கூறியிருக்கிறார்.
நீதிபதி அவர்கள் அந்தப் பாடல் எத்தகையது? எந்தப் பின்னணியைக் கொண்டது என்பதை அறிந்திருந்தால் இத்தகைய ஆணையைப் பிறப்பித்திருக்க மாட்டார். மேலும் வழக்குக்குச் சம்பந்தமில்லாமல் இந்தக் கருத்தைத் திணிப்பது ஏன் என்றும் விளங்கவில்லை.
ஆனந்தமடம் நாவலில்....
வங்காளத்தைச் சேர்ந்த பக்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட 'ஆனந்தமடம்' எனும் நாவலில் இடம் பெற்றதுதான் இந்த வந்தே மாதரம் பாடலாகும். இந்தப் பாடலில் இந்து மதத்தில் முப்பெரும் தேவிகளாகக் கூறப்படும் பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் கடவுள்கள் துதிக்கப்படுகின்றனர்.
முஸ்லிம்கள் இந்துமதக் கடவுள்களை வணங்க வேண்டுமா?
அல்லாவைத் தவிர வேறு கடவுள்களை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்கள் இதனை ஏற்கவில்லை. கடுமையாகவே எதிர்த்தனர். ஆனந்த மடம் நாவலின் கதையம்சமும், உரையாடலும் இஸ்லாமியர்களை இழித்துப்பேசி அவர்களை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும் என்பதாகும்.
நாவலின் நாயகன் பலாநந்தனுக்கும், அவன் நண்பனுக்கும் இடையே நடைபெறும் உரையாடலில் காணப்படுவது என்ன?
முஸ்லிம்கள் மீது தாக்குதல்
“நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்குக்கூட ஆபத்து வந்துவிட்டது. இந்த முஸ்லீம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது”
ஆனந்த மடம் நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி இப்படிச் சொல்லுகிறது.
‘திடீரென ஒரு முழக்கம்’, ‘முஸ்லிம்களைக் கொல்லு- கொல்லு!’ என ஒரே ஆர்ப்பரிப்பு, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் என்னும் அந்தப் பாடல் ஓங்கிய குரலில் வெறியூட்டும் வகையில் பாடப்படுகிறது.
இந்தப் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வங்கப்பெருமக்களான எம்.என்.ராய், இரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் முதலியோர் முஸ்லிம் வெறுப்பை அடிநாதமாகக் கொண்டே வந்தே மாதரம் பாடலை அனுமதிக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்கள்.
ராஜாஜி என்ன செய்தார்-?
1937ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆட்சிப் பொறுப்பில் திரு.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இருந்தபோது சட்டமன்றம் தொடங்கும்போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அப்போது சபாநாயகராக இருந்தவர் புலுசு சாம்பமூர்த்தி என்பவர், சட்டை அணியாதவர் அவர்!
சட்டமன்றம் தொடங்கும் முன் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டுமென்பது அவரின் கருத்தும், விருப்பமுமாகும். முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இந்த நிலையில் முதல் அமைச்சர் ராஜாஜி குறுக்கிட்டு ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார்.
“சபை தொடங்கும் நேரம் காலை 11 மணி. இதற்கு முன்னதாகவே வந்தே மாதரம் பாடலைப்பாடிவிடலாம்; விரும்புகிற உறுப்பினர்கள் பாடலில் பங்கேற்கலாம். விரும்பாதவர்கள் பங்கேற்க வேண்டாம். அவர்கள் சபை தொடங்கும் நேரத்திற்கு வந்தால் போதும்” என்பதுதான் அவரின் யோசனை.
இதிலும் திருப்தி இல்லையென்றால் வந்தே மாதரம் தவிர, மற்ற மதங்களில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களையும் சேர்த்துப் பாடலாம்! என்று சொன்னார்.
இந்துமதத்தைச் சேர்ந்த கடவுள்களை முன்னிறுத்துகிற பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் முஸ்லிம்கள்.
மதச்சார்பின்மைக்கு
எதிரானது
வரலாறு இவ்வாறு இருக்க, உயர்நீதிமன்ற நீதிபதி வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பது - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமானது - முஸ்லிம்களை சங்கடப்படுத்தக்கூடியதே!
எனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த, பிறப்பித்த ஆணை பின் வாங்கப்பட வேண்டும்.
தேவை மறுபரிசீலனை!
ஏற்கெனவே மதவாதம் தலை தெறித்து நிற்கும் ஒரு காலகட்டத்தில் இந்த வந்தே மாதரம் பாடல் மூலம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது உகந்ததுதானா?- நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யட்டும்!
சென்னை (கி.வீரமணி)
26-7-2017 தலைவர், திராவிடர் கழகம்