தமிழர் தலைவர் கி. வீரமணி கண்டனம்
தமிழகமெங்கும் இன்று (27.7.2017) மாலை அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் "நீட்" எதிர்ப்பு மனித சங்கிலி" போராட்டத்தை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அடுத்த எருமைப்பட்டியில் திமுக சார்பில் தூர்வாரப்பட்டுள்ள கட்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நடு வழியிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இன்று (27.7.2017) மாலை தமிழகமெங்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் மக்களின் பேராதரவோடு "நீட் எதிர்ப்பு மனித சங்கிலி" நடைபெறவுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. திமுக சார்பில் தூர்வாரப்பட்ட ஏரியைப் பார்வையிடுவதற்கு அக் கட்சியின் செயல் தலைவர் என்ற முறையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவருக்குக் கடமையும் உரிமையும் உள்ளது.
நீட் தேர்வு விலக்குப் பிரச்சினையிலும் தமிழ்நாடு அரசுக்கு உண்மையில் அக்கறை இருப்பதாக இதுவரை சொல்லிவந்துள்ளது. அதன்படி பார்க்கும் போது இந்த நீட் தேர்வு தொடர்பான மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். அதன்மூலம் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மேலும் வலிமையாக தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பினை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கவேண்டும்.
அதற்கு மாறாக மனித சங்கிலியைத் தடை செய்வது தமிழ்நாடு அரசுக்கு இப்பிரச்சினையில் உள்ள அக் கறையை சந்தேகப்படும்படி செய்கிறது. தமிழ்நாடு அரசு, தளபதி மு.க.ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்து, மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
முகாம்: கொலோன், ஜெர்மனி தலைவர்
27-7-2017 திராவிடர் கழகம்