காவிரி நீர்ப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை, பிப்.22 காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகம் எடுக்கவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (22.2.2018) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10 ஆவது மாடி கூட்ட அரங்கில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில், திராவிடர் கழகம், திராவிட முன்னேற் றக் கழகம், காங்கிரசு, கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 39 கட்சிகளும், 14 விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறப்பித்த தீர்ப்பினை எதிர்த்து, கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கெனவே தமிழகத்திற்கு வழங்க உத்தர விட்டு இருந்த தண்ணீரின் அளவில், 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டது. இது தமிழக விவசாயிகளின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருந்தத்தக்கது, ஏமாற்றம் அளிக்கக்கூடியதே, தமிழ்நாட்டின் உரிமையை மீட்க, தமிழக அரசு உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், மற்றும் காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து உடனடியாக தமி ழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. தீர்ப்பில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அத்துடன் காவிரி நீர்ப் பிரச்சினையில், தமிழ்நாட் டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலை வர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏது வாகவும் பிப்ரவரி 22 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.
இந்தக்கூட்டத்துக்குஅரசியல்கட்சிகளுக்குமட்டு மல்லாமல், விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அரசியல் கட்சி சார்பில் பிரதிநிதி களுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் தலா ஒருவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று (22.2.2018) காலை 10.30 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில், தமிழக துணை முதலமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், மற்றும் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன், திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரை.முருகன், தமிழகக் காங்கிரசு கட்சித் தலைவர் திருநாவுக்கரசர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன்,
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யா,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இரவிக்குமார்,
தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன்,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சுதீஷ்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், காதர் மொய்தீன்,
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஜவாஹி ருல்லா,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில், தமிமுன் அன்சாரி
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வேல் முருகன்,
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் கிருஷ் ணசாமி,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் தனியரசு,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈஸ்வரன்,
இந்திய குடியரசு கட்சியின் சார்பில் செ.கு.தமிழரசன்
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் இல.கணேசன் எம்பி., தமிழிசை சவுந்தரராசன்,
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட 39 அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும்,
14 விவசாய சங்கங்களின் சார்பில், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்ட 14 விவசாய சங்கத் தலைவர்களும் அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்து களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காவிரி நீரை பெறுவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் பழனிசாமி
கருநாடகத்தின் சுயநலம்தான் காவிரிப் பிரச்சினை உருவானதற்குக் காரணம் என்றும், இன்றுவரையில் அந்த சுயநலப் போக்கை கருநாடகம் கைவிடவில்லை என்றும், விதிகளை மீறி கருநாடகம் அணைகளை கட்டுகிறது என்றும், காவிரி பிரச்சினையில் தமிழகத் தின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும்
இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும் என்றார்.
மேலும், உச்சநீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், நீர்ப்பாசனத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் உரிமைகளுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. துணை நிற்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தவேண்டும்: மார்க்சிஸ்ட்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, 24 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் அனைவரும் கூறிய கருத்துகளை தொகுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மறுசீராய்வு செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வது மற்றும் தலைநகர் டில்லிக்குச் சென்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரை சந்திப்பது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது