Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும்

$
0
0

4 ஆண்டு  பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகளா - வேதனைகளா?

2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் சாதனைகள் அல்ல - வேதனைகள்தான்! இந்த ஆட்சியை விரட்டிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி இன்றுடன் 4 ஆண்டுகால ஆட்சியைப் பூர்த்தி செய்துள்ளது!

மக்கள் வரிப் பணத்தில் பிரபல நாளேடுகளுக்கும், அவர்களுக்கு வேண்டிய ஊடகங்களுக்கும் முழு பக்க விளம்பரங்கள், வெளிச்சங்களுக்குப் பஞ்சமே இல்லை. அவைகளுக்குத் ‘‘தீனி'' போடுகிறது.

‘சப்கே சாத், சப்கா விகாஸ்' என்று தனது இந்தி மொழியில் தனது ஆட்சி நாட்டையே வளர்ச்சிப் பாதைக்குச்  இட்டுச் சென்று வாகை சூடும் என்று வாய்நீளம் காட்டி, இணைய இளைஞர்களையும் - 18 வயது இளைஞர்களையும்  ஏமாற்றி வாக்கு வாங்கி பதவிக்கு மிகப்பெரும்பான்மையுடன் வந்தாரே! சொன்னபடி நடந்தாரா?

தேர்தல் வாக்குறுதிகள் என்னாயிற்று?

இப்போது கணக்குப் பார்க்கலாமா?

1. அவர் தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளில் முதன்மையானது ‘‘காங்கிரசு 60 ஆண்டுகளில் செய்யாததை, நான் 60 நாள்களில் அல்லது 60 மாதங்களில் செய்வேன்'' என்று தனது ‘‘56 அங்குல மார்பை''த் தட்டினாரே அது உண்மையில் நடந்துள்ளதா? நாடே கேட்கிறது!

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தப் பாரத தேசமென்ற பழம்பெரும் நாட்டிலிருந்து விரட்டினாரா?

‘விகாஸ், விகாஸ்' என்று அடிவயிற்றிலிருந்து பிரதமர் பேசுகிறாரே அந்த ‘‘வளர்ச்சி'' எந்தத் துறையில் ஏற்பட்டுள்ளது?

கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதா?

2. வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணத்தை வேட்டையாடிக் கண்டுபிடித்து 15 லட்சம் ரூபாயை குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் போடுவேன் என்று பேசியது நடைமுறையில் வந்ததா?

மாறாக, மக்கள் கையில் சேமித்து வைத்த பணத்தை - பண மதிப்பு இழப்புத் திட்டம் - ஏழை, எளிய, நடுத்தர வங்கிக் கணக்காளர்கள் எடுக்க முடியாமல் திண்டாடியதுதானே மிச்சம்!

தான் போட்ட பணத்தையே வங்கியிலிருந்து மீண்டும் செலவுக்கு எடுக்கும்போது அபராதம் செலுத்துவதுபோல் கட்டணம் கட்டித்தானே எடுக்கும் அவலம் அரங்கேறியது; இதைத் தவிர வேறு என்ன நன்மை கண்டார்கள்?

பண மதிப்பிழப்பு - யாருக்காக?

அதேநேரத்தில், பண மதிப்பு இழப்பை அறிவிப்பதற்கு முன்போ அல்லது அந்தக் காலகட்டத்திலோ வங்கிகள்மூலம் செல்வாக்குள்ள அரசியல் கட்சியும், அதனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால் பல லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பண மாற்றம் நடந்துள்ளது உலகறிந்த உண்மை!

வங்கிகளில் ஊழல்கள் நாளும் கோடிக்கணக்கில் - அரசு தடுத்ததா?

ஆட்சிக்கு வரும்போது பா.ஜ.க. பெற்ற பெரும்பான்மை 282 உறுப்பினர்கள்; இப்போது 272 (10 குறைந்துள்ளதால்) சிறுபான்மை (மைனாரிட்டி) ஆகி உள்ளதுதான் பா.ஜ.க.வின் வளர்ச்சியா?

‘‘மோடி வித்தை'' அரசியலில் எப்படியெல்லாம் காட்சியாகி உள்ளது என்பதை மத்தியில் மட்டுமல்ல, மாநிலங்களில்கூட ‘‘22 மாநிலங்களில் எங்கள் ஆட்சி'' என்றே புதுச்சேரியில் மார்தட்டி மமதைக் குரலில் பிரதமர் மோடி முழங்கினாரே, அது எப்படி சாத்தியம்?

பா.ஜ.க.தான் வலிமையான

செல்வாக்கான கட்சியா? ஆட்சியா?

அது முழு உண்மையா? அல்லது திட்டமிட்ட பிரச்சாரமா?

இதோ புள்ளிவிவரங்கள் பேசுகின்றன!

மொத்தம் உள்ள 29 மாநிலங்களில், 10 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. செல்வாக்கு (எம்.எல்.ஏ.,க்கள்) நிலவரம் என்ன?

1. சிக்கிம்         -              0

2. மிசோராம்                -              0

3. தமிழ்நாடு                -              0

4. ஆந்திரா      -              175 மொத்த இடங்களில் 4 தான்

5. கேரளா        -              140 இல் ஒன்றே ஒன்றுதான்

6. பஞ்சாப்       -              117 இல்  3 தான்

7. தெலங்கானா        -              119 இல் 5 தான்

8. டில்லி          -              70 இல் 3 தான்

9. ஒரிசா           -              140 இல் 7 தான்

10. நாகாலாந்து          -              60 இல் 10 தான்

கூட்டுச் சேர்ந்துள்ள ஆட்சியில் பா.ஜ.க.வின் பலம் என்ன

11. பீகார்           -              243 இல் 53 தான்

12. மேகாலாயா        -              60 இல் வெறும் 2 தான்

13. ஜம்மு காஷ்மீர் -              87 இல் 25 தான்

14. கோவா     -              40 இல் 13 தான்

இவைகளைக் கூட்டிப் பார்த்தால் -

மொத்தம் 4139 சட்டமன்ற உறுப்பினர்களில், பா.ஜ.க. பெற்றுள்ளவை 1516 தான்! இதில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் பெரிதும் உள்ளது 6 மாநிலங்களிலிருந்து மட்டுமே!

அதுமட்டுமா!

2014 இல் பொதுத் தேர்தலில் மோடி பெற்ற வாக்கு சதவிகிதம் ஒவ்வொரு தேர்தலிலும் கீழிறக்கம்தான் என்பதை மறுக்க முடியுமா?

குஜராத், மகாராஷ்டிரா, கருநாடகா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் என பெரிதும் இந்தி மாநில வடபுலத்தில்தான் அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. (கருநாடகாவைத் தவிர)

எனவே, பா.ஜ.க. 22 மாநிலங்களில் இனிமேல் கருநாடகத் தேர்தலுக்குப் பின்னர், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமிதான் மிஞ்சி இருப்பார் என்ற பிரதமர் மோடி ஆணவமாகப் பேசினார். முந்தைய 13 நாள் பிரதமர், 13 மாதப் பிரதமர் என்ற பழைய வரலாறு படைத்த வாஜ்பேயி- கருநாடக ‘மிஸ்டர் பரிசுத்தம்' எடியூரப்பா 3 நாள் முதல்வர் (அதை இவ்வாறு ‘ஆர்கனைசர்' பா.ஜ.க. ஆட்சி கருநாடகத்தில் என்று தலையங்கம் தீட்டி கனவுலகில் மகிழ்ந்து கானல் நீரில் குளிக்கிறது).

இரத்தக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்

3. விலைவாசி ஏற்றம் குறைந்ததா? பெட்ரோல், டீசல் விலை இதுவரை வரலாறு காணாத வகையில் வானைமுட்டும் அளவுக்கு உயர்ந்து வாகனம் வைத்திருப்போரை, எளிய (இரு சக்கர வாகனங்கள் ஓட்டிகளை) மிகவும் வதைக்கிறதே! விவசாயிகள் டீசல் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனரே!

(கருநாடகத் தேர்தல் நேரத்தில் மட்டும் விலை ஏறவில்லையே, அது என்ன வித்தை?)

நாடெங்கும் விவசாயிகளின் தற்கொலைகள்தானே அதிகரித்து வருகின்றன லாரி உரிமையாளர்கள் லாரிகளை காயலான் கடைக்கு உடைத்து அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் போன்ற ஊர்களில் - அத்தொழிலுக்குப் பெயர் போன ஊர் இன்று தஞ்சை விவசாயிகள் போல் ஆகி, ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனரே!

வீதி வீதியாக விளக்கவேண்டும்

தமிழ்நாட்டின் பிரபல தொழில் நகரமான திருப்பூர் - பின்னலாடை ஏற்றுமதி வீழ்ச்சியுற்று உரிமையாளர்களும், தொழிலாளர்களும் சொல் லொணாத் துயரம் அனுபவிக்கின்றனரே!

இதுதான் நான்காண்டு கால மோடியின் சாதனைகளா? வேதனைகளா? எல்லா வகைகளிலும் வீழ்ச்சி, வீழ்ச்சிதான்!

மக்கள் வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும். வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டுக் கொடுமைகள் - மத்திய அரசின் பழி வாங்கும் படலம் பற்றி தனியே எழுதுவோம்!

 

 

சென்னை

26.5.201

 


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles