* தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை!
* கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மதிப்புமுறை (Protocol) புறக் கணிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, கலைஞர் மறைவின்போது முக்கிய பிரமுகர் களே நெரிசலுக்கு இலக்காகி சிரமப்பட்டனர் - இவைகளுக்கெல்லாம் காரணம் தமிழக அரசின் நிர்வாகக் குறைபாடே - மேலும் ஆளுநர் மாளிகையின் தலையீடுகளும் அதிகரித்து வருகின்றன - தமிழக அரசு செயல்படும் அரசாக மாறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (12.8.2018) சென்னை ஆளுநர் மாளிகையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக நியமிக்கப் பட்டுள்ள புதிய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் தகில ரமானி அவர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்ற பின், அங்கே நடந்த ஒழுங்கீன முறைகள்பற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் ஏற்பட்ட அதிருப்தியை, மனவேதனையை, சரியான முறைகளைப் பின்பற்றாதது குறித்து தங்களது கண்டனத்தை ஆளுநர் மாளிகை நிர்வாகத்திற்கும், குறிப்பாக தமிழக அரசுக்கும் தெரிவித்துள்ளது - இதற்கு முன் தமிழக வரலாற்றில் எப்போதும் நிகழாத ஒரு தலைகுனிவுச் சம்பவமாகும்!
நீதிபதிகள் வெளிப்படுத்திய வேதனை
மாண்புமிகு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்கள் தெரிவிக்கையில்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய தகுதி அடிப்படையில் மரபு ரீதியாக - Protocol - பின்பற்றாமல், இருக்கைகளில் அமைச்சர்கள் அதற்குப் பின் காவல்துறையினர், அதன் பின்னரே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கைகள் என்ற முறை தவறானதாகும். ஆளுநர் மாளிகை அதிகாரிகளும், அரசின் பொதுத் துறையும் சரியான முறைகளை இந்த நிகழ்வில் பின்பற்றாதது ஏன்? இதற்கு யார் பொறுப்பு என்று கேட்டு தங்களது வேதனையை வெளிப்படுத்தி இருப்பது - தமிழ்நாடு அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகுமா?
சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் இதுபற்றி கேட்டும், உரிய மாற்றம் செய்யக்கூட அவரை அனுமதியாதது - இன்னும் மோசமானது - வெந்த புண்ணில் வேலைச் சொருகியது போன்ற மிகப்பெரிய நிர்வாக ஒழுங்குமுறை தவறானது ஆகும்.
அதுபோலவே, நிகழ்ச்சி முடிந்து நீதிபதிகள் கார்களை எடுத்துத் திரும்பும்போதுகூட தேவையற்ற குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளதாக சில செய்தி ஏடுகளில் செய்தியும் வந்துள்ளது!
போட்டி அரசாங்கம் நடைபெறுகிறதா?
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஜனநாயக முறையிலான அரசும், அமைச்சரவையும் இருக்கும்போது, அதற்குப் போட்டி அரசு, நிர்வாகம் நடத்துவதுபோல, புதிய ஆளுநர் புரோகித் அவர்கள் மாவட்டந்தோறும் ஆய்வு செய்கிறோம் என்று கிளம்புவது - ஜனநாயக விரோதம் என்று தி.மு.க. போன்ற பல எதிர்க்கட்சிகள் ஆங்காங்கு கருப்புக் கொடி காட்டி அமைதி வழியில் அறப்போர் நடத்திக் கைதாகியுள்ளனர்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மருத்துவரே முதலில் உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று. அதுபோல, மற்ற அலுவலகங்களில் ஆளுநர் புரோகித் அவர்கள் சென்று ஆய்வுகள்' நடத்துவதைவிட, முதலில் இதுபோன்று - நீதிபதிகளையே அவமதிக்கும் முறைகேடுகள் ஏன் ஏற்பட்டது என்று ஆய்வு செய்து, தவறுக்கு நீதிபதிகளிடம் வருத்தம் தெரிவித்து, இந்த சீர்கேடுகளை சரிபடுத்த முயலுவது அவசரம், அவசியம்!
ஆளுநர் செயலாளரின் அத்துமீறல்!
முன்பு எப்போதுமில்லாத ஒரு புதுமை' ஆளுநரிடம் யார் சந்திக்க அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வாய்ப்பு கிடைத்துப் போனாலும், அவரது செயலாளராகிய ஒரு அதிகாரி பக்கத்திலேயே இணையாக இருப்பதும் விசித்திரமான தாகும்! பலருக்கு அவரே உபதேசிப்பதும் நடக்கிறது.
இதற்குமுன்பு செயலாளர்கள், ஆளுநர் அழைத்தால் மட்டுமே வந்து விவாதத்திலோ, பின் தொடரவேண்டிய நடவடிக்கைகளிலோ கலந்துகொள்வர்.
இந்த செயலாளர் மற்ற மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி களுக்கு வகுப்பெடுப்பதுபோல'' பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது - மூத்த அதிகாரிகள் மட்டத்திலேயே அதிருப்தி அலைகளை உருவாக்குவதாக பேச்சுகள் அடிபடுகின்றன!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நீதிபதிகளின் இந்தப் புகார்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதைத் தெரிவிக்கவேண்டும்.
மனுகுல மைந்தர்களின்' கூட்டாட்சி நடைபெறுவது போன்று ஏற்பட்டுள்ள தோற்றத்தை மாற்றிட முயலட்டும்!
கலைஞர் மறைவின்போதும் ஏகப்பட்ட நிர்வாகக் குறைபாடுகள்
தலைமை நீதிபதி பதவிப் பிரமாண நிகழ்வுகளை இனி உயர்நீதிமன்றமே நடத்திக்கொள்ள - ஏற்பாடுகளைச் செய்துகொள்வதுதான் நல்லது என்று மூத்த நீதிபதிகள் மனவேதனையை வெளிப்படுத்தும் அளவுக்கு, நிலைமை கள் சென்றுள்ளன! இந்நிலை, ஆளுநருக்கோ, தமிழக அரசுக்கோ பெருமை சேர்க்காது!
மெரினாவில் அண்ணா நினைவிடம் பக்கம் கலைஞர் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த அவமானம், பழி ஒரு பக்கம்; கலைஞர் இறுதி நிகழ்வில் காவல்துறையினர் சரியான ஏற்பாட்டை செய்யவில்லை; அகில இந்திய வெகுமுக்கியப் பிரமுகர்களுக்குக்கூட சரியான பாதுகாப்புத் தராமலும், மக்களின் நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது. அதன்மூலம் 4 பேர் மரணம் - 25 பேர் காயம் - இதனால் ஏற்பட்ட கடும் விமர்சனங்கள் காரணமாக உருவாகியுள்ள அவமானத்தோடு, நேற்றைய ஆளுநர் மாளிகை நிகழ்வின்போது நிர்வாக அலங்கோலம் ஏற்பட்டுள்ளது. இந்த போனஸ் அவமான''ங்களையெல்லாம் எப்படி தமிழக அரசும், முதல்வரும், அமைச்சர்களும், முக்கிய பொறுப்பாளர்களும் செரிமானம் செய்துகொள்ள முடிகிறது?
தமிழ்நாட்டிற்குத் தலைக்குனிவு!
மற்ற மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முக்கிய தலைவர்கள்கூட சரியானபடி, மறைந்த தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்த வாய்ப்பிழந்தது - இவ்வாட்சிக்கு எத்தகைய பெரிய கறை என்பதை உணர்ந்து, தவறு செய்த அதிகாரிகள், பொறுப்பாளர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!
விசித்திரமாக ஆளுநர் மாளிகையிலிருந்து தனி அறிவிப்புகள் - அச்சுறுத்தல் அறிக்கைகள் வருகின்றன - இதற்குரிய பதிலைக் கூறவேண்டாமா? நமக்கல்ல - புண்பட்ட நீதிபதிகளுக்கு?
தமிழ்நாட்டிற்கே மாபெரும் தலைக்குனிவு இதனால்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
13.8.2018