புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும்
மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர்களும் உள்ளே நுழைய வழி செய்யும் சூழ்ச்சியைக் கண்டித்தும், பழைய நிலையே தொடரவேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடை மையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளுக்கு, அந்தந்த மாநிலத்தவர்க்கே இதுவரை வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேசவேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணிகளில் இங்கே தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தன.
இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் இந்திய வங்கித் தேர்வு நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்ட விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தியது.
இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, எழுத்தர் (கிளார்க்) பணி களிலும் அபகரிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது!
எடுத்துக்காட்டாக....
எடுத்துக்காட்டாக, தற்போது அரசுடைமையாக்கப்பட்ட வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் தமிழகக் கிளைகளில் பணியமர்த்த எழுத்தர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 65 இடங்களில் பத்து பேர் வேறு மாநிலத்தவர் ஆகும். இவர்கள் அனைவருக்கும் தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாது என்பது மட்டுமல்ல, இவர்களது விண்ணப்பத்தில் தங்களுக்குத் தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரியும் என்று பொய்யாக விண்ணப்பித்து, இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
காப்பீட்டுக் கழகத்தின் நிலை என்ன?
மத்திய அரசின் நிதித் துறையில் ஓர் அங்கமாக இருக்கும் காப்பீட்டுக் கழகத்தின் எழுத்தர் பணிகளில், அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற விதி முறையாகக் கடைபிடிக்கப்படுகிறது.
ஆனால், நிதித்துறையில் உள்ள வங்கிப் பணி களுக்கு மட்டும் இந்த விதி புறக்கணிக்கப்பட்டிருப்பது - ஏன்? இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும் எழுத்தர் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வங்கித் தேர்வு நடத்தும் நிறுவனம் எழுத்தர் பணிக்கு, மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே உள்ள விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே நிரந்தர தீர்வாக அமையும்.
மத்திய அரசின் சூழ்ச்சி?
மத்திய அரசுத் துறை என்றாலே மாநில உரிமைகளை ஒடுக்குவதுதானா? சந்துப் பொந்துகளை ஏற்படுத்தி மாநில அளவில் உள்ள வேலைகளைத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சி - தந்திரம்தானா?
சந்தடியில்லாமல் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் போக்கை மத்திய அரசு கைவிடவேண்டும்.
கடந்த 15.10.2018 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழியக்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் வேலை வாய்ப்புப் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
போராட்டத்துக்கு வேலை வைக்காதீர்கள்!
போராட்ட உணர்வுகள் வெடித்துக் கிளம்பவேண்டிய காலகட்டமாக இன்றைய சூழ்நிலை மாறி வருகிறது. ஒரு பக்கத்தில் மதவாதப் பிரச்சினைகளைக் கிளறிவிட்டு, மற்றொரு பக்கத்தில் இதுபோன்ற சன்னமான சூழ்ச்சி வலைகளைப் பின்னும் மத்திய பி.ஜே.பி. அரசைத் தமிழ் நாட்டு மக்கள் சரியானபடி, அடையாளம் காணவேண்டும்.
வங்கிப் பணி என்பது உள்ளூர் மக்களின் அன்றாட தொடர்புடையது. இதில் மொழி தெரியாதவர்களை நியமித்தால் நடைமுறையில் சிக்கல்கள்தான். மாநில மொழி அறிந்தவர்களே தேர்வு எழுதும் பழைய நிலை நீடிக்கவேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பித் தீர்வு காணவேண்டும்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
18.10.2018