Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பிற்படுத்தப்பட்டவருக்குப் பேரிடி!

$
0
0

கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில்  எடுக்கக்கூடாது என்ற

ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே!

பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசாணையை மாற்றியது - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - ஆணை மாற்றப்படவேண்டும் என்று  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 அன்று வெளியிட்டுள்ள ஆணையின்மூலம், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் "அனைவரும்'' முன்னேறியவர்கள் (கிரீமிலேயர்) என வரையறை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பிற்படுத்தப்பட் டோர் தங்களது பிள்ளைகளுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற முடியாத இக்கட்டான நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

குடிமைப் பணி தேர்வில் அநீதி

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குடிமைப்பணி தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு, பதவி ஒதுக்கீடு அளிப்பதில், மத்திய பணியாளர் நலத் துறை, மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

தொடர்ந்து 2016, 2017 மற்றும் நடப்பு ஆண்டிலும், இதேபோல், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிற் படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் சிலருக்கு, அவர்களது பெற்றோர் பொதுத் துறையில் பணியில் உள்ளார்கள் என்றும், அவர்களது ஆண்டு சம்பள வருமானம் அதிகம் உள்ளதால், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற பதவிகளுக்கான ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் நடப்பு ஆண்டு 2018 வரை சற்றேறக்குறைய நூறு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பதவி ஒதுக்கீடு அளிக்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாத சம்பளத்தை கிரீமிலேயரில் இணைக்கக் கூடாது.

1. 8.9.1993 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான தகுதியுள்ளோரை, வரையறைப்படுத்தும் ஆணையில், வருமான கணக்கீட்டில், மாதச் சம்பளம் மற்றும் விவசாய  வருமானம் சேர்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினருக்கு சமூகநீதி அமைச்சகத்தின் இணை செயலாளர் 25.4.2002 அன்று எழுதிய கடிதத்தில் கிரீமிலேயர் முறையை நிர்ணயிக்க மாத சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

2. மத்திய பணியாளர் நல அமைச்சர் 15.11.1993 அன்று வெளியிட்ட ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை இணைத்துள்ளது. இப்படிவத்தில் பிரிவு ஜி-1 இல் ஆண்டு வருமானம் பற்றிய குறிப்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, ஏனைய வருமானம் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சரியான ஆணை

3. டாக்டர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் 24.4.2000 தேதியிட்ட ஆணையில், மத்திய அரசின் பணிகளுக்காக ஓ.பி.சி. சான்றிதழ் பெறுவதற்கு, வருமான வரம்பு கணக்கிடும்போது, மாதச் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தெளிவாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் இதே கருத்தை வெளியிட்டு 20.7.2011 அன்று தி.மு.க. ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

4. ஆந்திர அரசும், மேற்கு வங்க அரசும், தமிழகத்தைப் பின்பற்றி, கிரீமிலேயர் தொடர்பாக மாத சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தெளிவான ஆணைகள், விளக்கங் களின் அடிப்படையில் ஓ.பி.சி. சான்றிதழை அந்தந்த மாநில அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது பதவி ஒதுக்கப்படாமல் உள்ள அத்தனை மாணவர்களின் ஓ.பி.சி. சான்றிதழையும், நேர்முகத் தேர்வில் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்யப்படாததாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும்...

பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். பாதிக்கப்பட்ட மாண வர்கள் அனைவருக்கும் பதவி ஒதுக்கீடு வழங்கிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று வரை பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாண வர்களுக்குப் பதவி ஒதுக்கீடு செய்திடாமல் அநீதியை இழைத்து வருகிறது மத்திய அரசு. சமூக அநீதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகம் 6.10.2017 தேதியிட்ட ஆணையின்மூலம் அனைத்து மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும், பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் பெறும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது.

கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், கிரீமிலேயர் எனும் முறையை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்குத் தொடர்ந்து மத்திய அரசால் அநீதி இழைக்கப்பட்டு வருவது போதாதென்று, தற்போது மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் 6.10.2017 தேதியிட்ட ஆணை மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் அபாய நிலையை உருவாக்கி உள்ளது.

இம்மாதம் 31 ஆம் தேதி

சென்னையில் மாநாடு

இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே மத்திய பி.ஜே.பி. அரசின் நோக்கமாக இருப்பதைத் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் புரிந்து கொண்டு கிளர்ந்தெழ வேண்டும்.

இதுகுறித்து வரும் 31 ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் "கிரீமிலேயர் ஒழிப்பு மாநாடு'' நடைபெற உள்ளது - பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

19.10.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles