இந்திய அளவில் நுழைவுத் தேர்வை மத்திய அரசே நடத்தலாமா?
தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை வலிமையாகத் தெரிவிக்கட்டும்!
கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும்!
மாவட்ட நீதிபதிகள் மற்றும் கீழமை நீதிபதிகள் நியமனம் என்பது சட்டப்படி மாநில அரசுகளின் உரிமையாக இருக்கும் நிலையில், தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தித் தேர்வு செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பது சட்ட விரோதமானது. தமிழக அரசு இதில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். கட்சிகள், இயக்கங்கள், வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி செயல்படும் மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி - அரசியல் சட்டப்படி, பதவியேற்கையில் பிரமாணம் எடுத்தது; என்றாலும், அதை தனது ஒவ்வொரு ஆணை, திட்டம்மூலம் கறையான்கள் உள்ளிருந்தே புத்தகங்களை அரிப்பதுபோல, அரசியல் சட்ட விதிமுறைகளை அறவே புறக்கணித்து ஜனநாயக மாண்பினையே குழிதோண்டிப் புதைக்கிறது!
ஆர்.எஸ்.எஸ்.சின் ஒற்றை ஆட்சிக் கொள்கை
நாளும் மாநில உரிமைகளைப் பறித்த வண்ணம் உள்ளது; காரணம், ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை கூட் டாட்சி கூடாது; மாநில ஆட்சிகள் தனித்து இல்லாத ஒற்றை ஆட்சி (ஹிஸீவீtணீக்ஷீஹ் ஷிtணீtமீ) முறையில் மத்திய அரசின்கீழே இயங்கிட வேண்டும் என்பதேயாகும்.
இதனை மெல்ல மெல்லக் கூட அல்லாது - வேக வேகமாக நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமும் செய்து வருகின்றது மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி!
‘நீட்' தேர்வு என்ற பெயரில், மாநிலக் கல்வி உரிமையைப் பறித்துக் கொண்டு, சமூகநீதியையும் குழிதோண்டிப் புதைத்து, இன்றும் கிராமப்புற, முதல் தலைமுறை ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக ஆக்கப்பட்டு விட்டது!
தமிழ்நாட்டில் பொம்மலாட்ட ஆட்சியா?
இதை எதிர்க்கவேண்டிய பல மாநில அரசுகள் ‘மவுன சாமியார்களாகி' - மண்டியிட்டன; தமிழ்நாடு - பெரியார் பூமியானதால், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு எதிர்க்குரல் கொடுத்தது; மாநில அரசோ ஒரு பொம்மலாட்ட அரசாக - மோடி இழுக்கும் கயிறுக்கு - ஆடும் அரசாக இருப்பதால், இரண்டு ஆண்டுகளுக்குமுன் சட்டமன்றம் இயற்றிய ‘நீட்' தேர்வுக்கான விதிவிலக்குக் கோரும் மசோதாக்கள் ஊறுகாய் ஜாடியில் - மத்திய அரசால் ஊற வைக்கப்பட்டுள்ளது! கேட்டுப் பெறும் நிலையில் இங்குள்ள அரசு இல்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.
அதுபோல, ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியை மத்தியப் பட்டியலிலேயே நடை முறைப்படுத்தும் வண்ணம் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக் கானதாக ஆக்கிக் கொண்டு உள்ள பரிதாப நிலை!
மாநில உரிமைகள் வெட்ட வெளிச்சமாய், பட்டாங்க மாகப் பறிபோகின்றது!
இதோ இன்றொரு திடுக்கிடும் மாநில உரிமையைப் பறிக்கும் - அரசியல் விரோத நடவடிக்கை - யோசனை அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது!
6000 கீழமை நீதிபதிகளை மத்திய அரசே நேரடியாக நியமிக்குமாம்!
கீழமை நீதிபதிகளை நியமிக்கும் உரிமை
மாநில அரசுக்கே உரியது!
கீழமை நீதிமன்ற நீதிபதிகளை - மாவட்ட அதற்குக் கீழே இருக்கின்ற நீதி விசாரணை நீதிபதிகளை நியமிப்பது என்பது, இந்திய அரசியல் சட்டத்தின் 234, 235, 236 - பிரிவுகளின்படி மாநிலங்களுக்கு உள்ள தனி அதிகாரம் ஆகும்.
மாநில தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மாநிலத் தில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தோடு கலந்து ஆலோசித்து (சிஷீஸீsuறீtணீtவீஷீஸீ) கீழமை நீதித்துறை நடுவர் களை நியமிக்கவேண்டும்.
இது சமூகநீதிப்படி இட ஒதுக்கீட்டு சட்டப்படியே நடைபெற்றாக வேண்டியது சட்டக் கட்டளை - நடை முறையாகும். வழக்குகள் ஏராளம் நிலுவையில் உள்ளன என்பது உண்மையே; அதற்காக காலியாக இருக்கும் கீழமை நீதிபதிகளுக்கான பதவிகளை நிரப்பிட மத்திய அரசே, உள்துறை சட்டத்துறையே ஏற்பாடு செய்யப் போகிறதாம்!
‘நீட்' தேர்வு மாதிரி ஒரு பொதுத் தேர்வை, நாடு முழுமைக்கான ஒரே தேர்வு நடத்தி, அதன்மூலம் இவர்களே தேர்வு செய்வார்களாம்! உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி - பைசலாகாத வழக்குகள் 2 இலட்சத்திற்குமேல் தேங்கியுள்ளன என்று கூறியதை ஒரு சாக்காகக் கொண்டு - இப்படி ஒரு மாநில அதிகாரப் பறிப்பு முறையை செயல்படுத்திட திட்டமிட்டுள்ளார்கள்!
மாநில அரசுகள் எதிர்க்கவேண்டும்
மாநிலங்களுக்கு மாநிலம் கீழமை நீதிமன்ற விசார ணைகளில் மொழிப் பிரச்சினை உண்டு. பல கலாச்சார மாறுபாடுகள் வழக்குகளில் பிரதிபலிக்கும்.
தலைமை நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களில் பிற மாநிலங்களிலிருந்து மாநில உயர்நீதிமன்றங்களில் நிய மிக்கப்படுவதும்கூட வழக்குகள் நிலுவைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
எனவே, மத்திய அரசின் இந்த மாநில அதிகாரப் பறிப்புத் திட்டத்தை மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இதுபற்றி உச்சநீதிமன்றமும் அவசரக் கோலம் - அள்ளித் தெளித்த கதைபோல செயல்படுவது சரியல்ல!
மாநில அரசுகளே அவசரமாக குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் மாநில சர்வீஸ் கமிஷன்கள் மூலம் உயர்நீதிமன்ற கலந்தாலோசனைகளோடு உடனடியாக செய்ய பிரித்துக் கொடுத்தால் பணி மேலும் எளிதாகும், இட ஒதுக்கீடும் பாதுகாக்கப்படும்.
சூழ்ச்சி வலைப் பின்னப்படுகிறது!
மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில், தனது ஆழ்ந்த மறுப்பினை, ஏற்க இயலாத நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு தமிழ்நாடு மாநில அரசின் உள்துறை, சட்டத்துறை உடனடியாகத் தெரிவித்து, மற்ற மாநில அரசுகளுக்குக்கூட இதில் உள்ள உரிமை பறிப்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கிடவேண்டும்.
கட்சிகள் - இயக்கங்கள் - வழக்குரைஞர்கள் எதிர்க்கவேண்டும்
தமிழ்நாட்டுக் கட்சிகள், இயக்கங்கள், மாநில உரி மையைப் பாதுகாக்க இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்த்து முளையிலேயே கிள்ளி எறிவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசர அவசிய மாகும்!
ஆங்காங்கு உள்ள வழக்குரைஞர்கள் அமைப்புகள், பார் கவுன்சில்கள் இதனைக் கண்டித்துத் தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்ப முன்வருதல் வேண்டும். மாநில உரிமைகளையும், சமூகநீதியையும் - ஏன் வழக்கு ரைஞர்களின் உரிமைகளையும் கூடப் பாதுகாக்க முன்வர வேண்டும், முன்வரவேண்டும்!
சென்னை
23.10.2018