மாநில - மத்திய அரசுகள் போதிய அளவில் உதவாவிட்டாலும்கூட உதவும் கரங்கள் உலகில் உண்டு;
தன்னம்பிக்கையோடு எழுவீர்!
கஜா புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வாழ் வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வண்ணம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தனது கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டது; ஏற்கெ னவே காவிரி நீர் வரத்து உரிய அளவு, உரிய காலத்தில் கிடைக்காத நிலைதான்; கருநாடகமும், அதற்கு மறைமுகமாக முழு ஒத்துழைப்பை தேர்தல் வெற்றி என்ற உள்நோக்கத்துடன் அளித்த மத்திய மோடி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியும் எமது விவசாயிகளை வஞ்சித்தன.
வாழ்வாதாரம் பறிபோனதே!
அந்த வெந்த புண்ணில் மீண்டும் வேலைச் சொருகி, நொந்த உள்ளங்கள் நொறுங்கி உடையும் வேதனையான நிலை புயலால் இப்போது!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று வருந்திய வள்ளலாரின் நாடு இது!
ஆனால், அங்கு நிலைமை என்ன? அங்கே வாழ்வாதாரமான தென்னைகளும், வீடுகளும் பிள்ளை களைவிடப் போற்றி வளர்க்கப்பட்டவை - சாய்க்கப்பட்டு விட்டனவே ஒரே இரவில்! கால்நடைகளும் மடிந்து விட்டனவே என்று அல்லற்பட்டு ஆற்றாது அழுது புலம்பி, தற்கொலை வரை செல்லும் துயரம் எங்கெங்கும் கோரக் காட்சியே மிச்சம்!
மத்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்?
மத்திய அரசின் தலைமையோ ஓடோடி வந்து உடனடியாக நிவாரண நிதி (முதல் கட்டமாக) அளித்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறிவிட்டது.
மாநில அரசோ இணக்கமாக டில்லியுடன் இருக்கி றோம்' என்று கூறிக்கொண்டே உரிமைகளைத் தட்டிக் கேட்கும் அரசாக இல்லாமல் இருப்பது வேதனைக்குக் கூட்டு வட்டிபோல் உள்ள ஒரு அவலம்!
கைகொடுக்கும் அரசல்ல மாநில அரசு!
காரணம், உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் உரமுள்ள அரசு அல்ல இந்த அரசு; நீட்' தேர்வு மசோதா புதைகுழிக்குச் சென்றது ஏன் என்றுகூட கேட்கத் தயாராக இல்லாத அரசு அல்லவா இது! தெருக்கூத்து ராஜாக்கள்போல் தர்பார்' நடத்தாமல், இனியாவது அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டி அரசுக்குப் பின்னால் தமிழகமே இப்பிரச்சினையில் ஒன்றாக நிற்கிறது என்று காட்டியாவது எதிர்பார்க்கும் மத்திய நிதியைக் (நமது மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் முக்கிய பகுதியிலிருந்து) கேட்க வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஆட்சியினர் ஈடுபட்டிருக்கவேண்டாமா?
வேதனையிலிருந்து வெளியே வாருங்கள் - விவசாயக் குடும்பத்தினரே!
கண்ணீர்க் கடலில் மிதக்கும் எமதருமை விவசாயப் பெருங்குடியினரே, வேதனையிலிருந்து வெளியே வாருங்கள்!
மனிதநேயமும், யாவரும் கேளிர் என்ற உறவு மனப்பாங்குடன் கூடிய உதவிக்கரங்களும் உங்களை அரவணைத்து நீங்கள் மறுவாழ்வு பெற உறுதி பூண்டுள்ளனர். ஆறுதல் அடைந்து, துன்பத்தைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்!
உங்கள் உழைப்பால்தானே விதைகள் முளைத்தன; செடிகள் மரங்களாயின. அதை எண்ணி உங்களின் தன்னம்பிக்கை மீண்டும் விஸ்வரூபம்' எடுக்கட்டும்! எடுக்கட்டும்!!
விரக்தியால் வீணே உயிரை மாய்த்துக் கொள்வ தாலோ, அழுது புலம்பிக் கொண்டே இருப்பதாலோ தீர்வு கிடைத்துவிடாது.
விழுவதைவிட முக்கியம் விரைந்து எழுவதே யாகும்.
வெறுங்கை என்பது மூடத்தனம் -
விரல்கள் பத்து என்பது மூலதனம்!''
என்ற மறைந்த கவிஞர் தாரா பாரதியின் வரிகளை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு, வீழ்வோம் என்று நினைத்தாயோ இயற்கையின் கோணல் புத்தியே - உனக்கே பாடம் கற்பிக்க எங்கள் தன்னம்பிக்கையும், கடும் உழைப்பும் உனக்குப் பாடம் கற்பிக்கும்!' என்று துயரிலிருந்து அறைகூவல் விட்டு வெளியே வாருங்கள்!
உதவிட உலகமே காத்திருக்கிறது!
பாதிக்கப்பட்ட எமதருமை டெல்டா விவசாயிகளே! உங்களுக்கு உதவிட, உங்கள் துயரத்தில் பங்கு கொள்ள உலகமே காத்திருக்கிறது. மன அழுத்தத்தைத் தூக்கி எறிந்து உள்ளத்தில் புதிய உறுதியுடன் வாருங்கள்!
இடையறாது பூகம்பத்தால் தாக்கப்படும் ஜப்பானிய மக்கள்,அதன் விளைவுகளைப் புறந்தள்ளி,புதுவாழ்வு பெறுகிறார்களே, அவர்களை நீங்கள் வழிகாட்டிகளாகக் கொண்டு, வாழ்க்கையில் இது ஒரு கட்டம் - அதனை தளராத தன்னம்பிக்கை, உதிரா உழைப்பினால் அதனையும் தாண்டி வாழ உறுதி பூணுவோம் என்று உள்ளத்தால் திரும்பத் திரும்பக் கூறிடுங்கள்!
விரைவில் சந்திக்கிறோம்!
உதவும் கரங்கள் உலகில் பல கோடி உங்கள் பக்கம் - மறவாதீர்! எப்போதும் மனிதர்களை நினைக்கச் சொன்ன பேராசான் தந்தை பெரியாரின் தொண்டர்கள்'' வழிகாட்டிகளாக, எடுத்துக்காட்டு களாகத் திகழ, உடனடியாக முன்வாருங்கள், தோழர் களே!
விரைவாக சந்திக்க வருகிறோம்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
23.11.2018