Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

அரசியல் என்பது வெளித்தோற்றமே!

$
0
0

உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே!

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம்

திருச்சி, ஜன.24  அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத்துக்கும், சமதர்மத்திற்கும் இடையேதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

தேசம் காப்போம் மாநாடு

23.1.2019 அன்று  திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார் பில் நடைபெற்ற சனாதனமா? சனநாயகமா? தேசம் காப்போம்'' மாநாட்டில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார். அவரது உரை வருமாறு:

2019 இல் பலத்த அடியை மத்திய ஆட்சிக்குக் கொடுப்போம்!

மிகுந்த எழுச்சியோடு 2014 இல் தமிழகத்தில் முதலில் கணக்குத் தொடங்கவேண்டும் என்று நினைத்து, எந்தத் திடலிலே மோடி அவர்கள் தன்னுடைய அரசியலை ஆரம்பித்தார்களோ, அதே இடத்தில் விடுதலை சிறுத்தைகள் மூலமாக நம்முடைய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுடைய போர்ப் படைத் திறனோடு, வருகின்ற 2019 இல் பலத்த அடியை அந்த ஆட்சிக்குக் கொடுத்து விரட்டி, இந்தத் தேசத்தைக் காப்போம் என்ற உணர்வோடு அதே இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் நம்முடைய அருமை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே, இந்த மாநாட்டின் தலைவர் அவர்களே,

என்றைக்கும் நாங்கள் துணை இருப்போம், திராவிட இயக்கத்தினுடைய அடிப்படையே அதுதான்

என்றைக்கும் அவருக்குத் துணையாக, அதேபோல, இந்த சமுதாயத்திற்குத் துணையாக, ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையற்று இருக்கின்ற நேரத்தில் அவர்களுக்காக, என்றைக்கும் நாங்கள் துணை இருப்போம், திராவிட இயக்கத்தினுடைய அடிப்படையே அதுதான் என்பதை அடுத்துப் பிரகடனப்படுத்த வரவிருக்கின்ற எங்கள் ஈடு இணையற்ற தளபதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்றத் தலைவர், அன்புச் சகோதரர் மானமிகு தளபதி, மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றவிருக்கின்ற மேனாள் மத்திய அமைச்சர் கொடிக்குதிர் சுரேஷ் அவர்களே,

சி.பி.எம்.மின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய அருமை சகோதரர் நாட்டை யார் யாரெல்லாம் எவ்வளவு லாவகமாக பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பதை, அவருடைய கொஞ்சும் தமிழிலேயே சிறப்பாக இங்கே, சாதாரண மக்களுக்கும் புரியும்படி எடுத்துரைத்த அருமைத் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களே,

அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பிற்குரிய அருமைத் தோழர் சுதாகர் ரெட்டி அவர்களே,

புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களே,

தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவர் அன்பிற்குரிய சகோதரர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களே,

இந்நிகழ்வில் உரையாற்றி விடைபெற்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அரு மைத் தோழர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களே,

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தோழர் கே.என்.நேரு அவர்களே,

மேனாள் அமைச்சர் ஆ.இராசா அவர்களே,

இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அருமைத் தோழர் இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய தோழர் சிந்தனைச் செல்வன் அவர்களே,

சிந்தனையாளர் ரவிக்குமார் அவர்களே,

வரவேற்புரையாற்றிய பொருளாளர் முகமது யூசுப் அவர்களே,

இந்நிகழ்வில் நன்றியுரை கூறவிருக்கின்ற அருள் அவர்களே,

நாங்கள் உள்ளபடியே உரிமை இழந்தவர்கள் அல்ல!

விடுதலை சிறுத்தைகளின் அருமைப் போர்ப் படைத் தளபதிகளே, வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற எனதருமை சகோதரர்களே, இவ்வளவு அற்புதமான ஒரு தலைவரை, ஆற்றல்மிகுந்த ஒரு தளபதியை இங்கே நமக்கெல்லாம் தந்து, நாங்கள் உள்ளபடியே உரிமை இழந்தவர்கள் அல்ல - சனாதனத்தை வேரறுப்பதற் காக ஒரு பெரிய படையையே உருவாக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர் என்று, திருமாவளவன் அவர் கள் இந்தியாவிற்கே குரல் கொடுத்து வழிகாட்டியிருக் கிறார்களே அவர்களைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையார் அவர்களே,

தாய்மார்களே, தோழர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

அதிக நேரம் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒன்று, இந்த மாநாட்டிற்குத் தலைப்பைத் தேர்ந் தெடுத்தார்களே, அதற்காக இந்தியாவிற்கே விடுதலை சிறுத்தைகள் வழிகாட்டியிருக்கிறது.

ஒரே வார்த்தையில் இந்த மாநாட்டினுடைய தத்துவம் அடங்கியிருக்கிறது

எந்த ஜோதிபாபுலே, எந்த டாக்டர் அம்பேத்கர், எந்த நாராயணகுரு, எந்த தந்தை பெரியார் நாட்டிற்கே வழி காட்டினார்களோ, அவர்கள் அனைவரையும் சேர்த்து ஒரே வார்த்தையில் இந்த மாநாட்டினுடைய தத்துவம் அடங்கியிருக்கிறது. இதுதான் இன்றைய போராட்டம்.

அரசியல் என்பது வெளித்தோற்றம்; உண்மையான போராட்டம் என்பது சனாதனத்திற்கும் - சமதர்மத்திற்கும்.

சனாதனம் - பழைமையைத் தூக்கிப் பிடிப்பது

இன்னார்தான் இருக்கவேண்டும்; எல்லாருக்கும் எல்லாமும் கிடையாது என்று சொல்வது சனாதனம்.

எல்லாருக்கும் எல்லாமும் என்று சொல்வது ஜன நாயகம்.

ஜனநாயகமா? சமதர்மமா?

மோடியா? மற்றவர்களா? என்பதல்ல நண்பர்களே!

ஆர்.எஸ்.எஸா? விடுதலை சிறுத்தைகளா?

ஆர்.எஸ்.எஸா? திராவிடர் கழகமா?

ஆர்.எஸ்.எஸா? திராவிட முன்னேற்றக் கழகமா?

ஆர்.எஸ்.எஸா? கம்யூனிஸ்ட் இயக்கமா?

இந்தக் கேள்விக்கு வேறு ரூபத்தில் ஒரு பதில் உரு வாக்கியிருக்கிறார்கள். எது அவர்களுடைய அடிப்படை தத்துவமோ, அந்த அடிப்படைத் தத்துவத்தை, மற்றவர்கள் காண இயலாத தத்துவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்து காட்டியிருக்கிறார்.

எனவேதான், இதனைப் புரிந்துகொள்ளுங்கள். நான் அதிக நேரம் பேசவேண்டிய அவசியமில்லை. இங்கே தலைவர்கள் மிக அழகாக எடுத்துச் சொல்லியி ருக்கிறார்கள்.

பனி முக்கியமல்ல; பணிதான் முக்கியம்

பனியிலே அமர்ந்திருக்கிறீர்கள்; ஆனால், அதைவிட நமக்கு இருக்கிற பணியோ மிக முக்கியமானது; பனி முக்கியமல்ல; பணிதான் முக்கியம்.

எனவேதான், பனியிலே நாம் அமர்ந்திருந்தாலும், பணியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லக்கூடிய அந்த உணர்விற்கு வந்திருக்கிறார்கள்.

அருமையான விளம்பரத்தைக் கொடுத்தார்கள்; சனாதன எதிர்ப்புக்கு முதல் புரட்சியாளர் புத்தர். அது தான் மிக முக்கியம். அந்த புத்தரை அடைந்தவர் டாக்டர் அம்பேத்கர்.

லட்சக்கணக்கான மக்களோடு போய்ச் சேருங்கள்!

அம்பேத்கர் அவர்களிடம், போகும்பொழுது நீங்கள் தனியே போகாதீர்கள்; பல லட்சக்கணக்கான மக்களோடு போய்ச் சேருங்கள்'' என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனவேதான், இந்த சனாதன எதிர்ப்பு மாநாடு என்பது இருக்கிறதே, வெறும் அரசியலுக்காக மட்டு மல்ல; வெறும் பதவி, நாற்காலிகளுக்காக அல்ல; அடுத்த தேர்தலை மட்டும் சிந்திக்கின்ற கூட்டம் அல்ல மக்களே - அடுத்த தலைமுறையை மாற்றவேண்டும் என்பதற்காக இருக்கக்கூடிய போர்ப் பட்டாளம் இங்கே திரண்டிருக்கிறது.

எனவேதான், இந்த மேடையில் இருக்கின்ற அத்துணை பேரும் நாங்கள் கைகளைப் பிடித்து உயர்த்தினோம் என்றால்,  அது வெறும் கைகள் அல்ல; இந்த பாசிச ஆட்சிக்கு, சனாதனத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்கிற ஆட்சிக்கு, சவப் பெட்டியின்மீது அடிக்கப்படுகின்ற ஆணிகளை அடிக்கின்ற சுத்தியல்கள் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சனாதனம் என்பது பழைமைவாதத்தைக் குறிக்கும்; ஆனால், பழைமை வாதம் என்பது காலத்தால் பழை மையானது என்று மட்டுமே பொருளாகாது. தற்போதைய காலச் சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத, புதிய மாற்றங்களைத் துளியும் ஏற்காத ஒரு அடிப்படைவாதக் கருத்தியலைக் குறிக்கும்.

போர்ப்படையைத் தயாரிக்கின்ற கூட்டம்

இதைவிட மிக அழகான ஒரு அரசியல் வகுப்பை இந்தக் கோடான கோடி மக்களுக்கு, இந்திய மக்களுக்கு - எதை தந்தை பெரியார், எதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சொன்னார்களோ, அதை இது வெறும் அரசியல் பதவிக்காக இருக்கின்ற கூட்டமல்ல; ஒரு லட்சியப் பயணத்தை நோக்கி, போர்ப்படையைத் தயாரிக்கின்ற கூட்டம் என்பதை மிகத் தெளிவாக உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு அடிப்படை மிக முக்கியம்.

இந்தக் காலத்தில், செவ்வாயக் கிரகத்தில் மனிதன் இறங்கிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், செவ் வாய்க் கிரகத்திற்குச் செல்லக்கூடிய ஒரு தாழ்த்தப் பட்ட சகோதரன், கோவில் கருவறைக்குள் செல்ல முடியவில்லையே - இதுதான் சனாதன எதிர்ப்பு. செவ் வாய்க் கிரகத்தைவிட, கோவில் கருவறை நீண்ட தூரத்தில் உள்ளதா? இவன் பார்த்து கட்டியது; என்னுடைய தோழன் தலையில் மண்ணை சுமக்காவிட்டால், உன்னுடைய கோவில் கருவறையும் கிடையாது; உன்னுடைய கோவிலும் கிடையாது; உன்னுடைய கடவுள் கிடையாது. மிஞ்சியது பொன்.மாணிக்கவேல்தான் மிஞ்சுவார். இதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

சனாதனத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்!

இன்னமும் தொடாதே, பார்க்காதே, நெருங்காதே, உண்ணாதே, எண்ணாதே என்று சொல்வதற்கு ஒரு அரசாங்கம் என்றால்,  அந்த சனாதனத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் திரண்டிருக்கிறது.

ஒரு விரல் புரட்சியினாலே அதனை செய்ய முடியும். அந்த ஒரு விரல் புரட்சிக்கு முன் மனித சிந்தனைகள் கிளம்பவேண்டும். அந்த சிந்தனையைத் தூண்டிவிட வேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, வருண அடிப்படையில் - ஜாதி அடிப்படையில் காலங்காலமாகப் பின்பற்றி வந்த குலத்தொழில்களை மீறக்கூடாது என்பதை வற்புறுத்துவதும், மீறினால் தண்டிப்பதும்தான் சனாதனம். இந்த சனாதனத்திற்கு இங்கே இடம் உண்டா? பெரியார் மண்ணிலே மட்டும் எப்பொழுதும் கிடையாது என்பதோடு, இந்தியாவிலேயே இடம் கிடையாது என்று சொல்வதற்காக அறைகூவல் விடுவதற்காகத்தான் இந்த மாநாடு.

உங்கள் சிந்தனையினுடைய கருவே சிதைக்கப்படும். கருவே அழிக்கப்படும்!

எனவே, இந்த மாநாடு சாதாரண கேளிக்கை மாநாடல்ல; வேடிக்கை மாநாடல்ல; கூடிக் களைகின்ற மாநாடல்ல; கூடி திட்டமிட்டு அடுத்தபடியாக வரவேண்டும் - பாபா சாகேப் அம்பேத்கரும், மற்றவர்களும் உருவாக்கிய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, எவரோ தெரியாமல் உருவாக்கிய பார்ப்பனிய மனுதர்மத்தை அரசியல் சட்டமாக வைக்கலாம் என்று நினைக்கிறீர்களே, உங்கள் சிந்தனையினுடைய கருவே சிதைக்கப்படும். கருவே அழிக்கப்படுவதற்காகத்தான் இந்த சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது.

14 தீர்மானங்களை, அழகான தீர்மானங்களை, தேசம் காப்போம் மாநாட்டுத் தலைவர் அவர்கள் நிறை வேற்றினார். நம்முடைய கலைஞர் அவர்களுடைய மறைவுக்கு வீர வணக்கம், வருத்தம் என்ற தீர்மானத்தோடு மற்ற 13 தீர்மானங்களும் சாதாரணமானவையல்ல.

சமூக வரலாற்றை, சமூகப் புரட்சியினுடய எழுச்சியை எதிர்காலத்தில், இந்த மாநாட்டினுடைய தீர்மானங்கள் நிரூபிக்கப் போகின்றன. இது வேடிக்கை மாநாடல்ல என்பதற்கு அதுவே அடையாளம்.

எவ்வளவு தொலைநோக்கு என்பதற்கு அடையாளம் நண்பர்களே, அரசியல் சட்டத்தை, தேசத்தைப் பாதுகாப் போம் என்று சொல்லுகின்றபொழுது,

இனிமேல் நீங்கள் வளர்ச்சி'' என்று சொல்லி ஏமாற்ற முடியாது

இந்த நாட்டை இந்து நாடாக்கவேண்டும்; இந்துராஷ் டிரா என்று சொல்லக்கூடிய இந்து நாடாக்கவேண்டும் என்று சொன்னால், அதற்கு இங்கே இடமில்லை என்று காட்டுவதற்கு, நம்முடைய படை இங்கே தயாராக இருக்கிறது. இனிமேல் நீங்கள் வளர்ச்சி'' என்று சொல்லி ஏமாற்ற முடியாது என்பதற்கு அடையாளமாக இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு அற்புதமான பாடங்கள்.

ஆயிரங்கோடி வணக்கங்கள் இந்த மாநாட்டிற்கு!

காலங்காலமாக அரசியலில் நடைபெற்ற ஏமாற்று வேலைகள் எப்படி இருக்கின்றன என்பதை அந்தத் தீர்மானங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

சனாதனம் என்னும் மனுதர்மத்தை மீண்டும் இம் மண்ணை ஆளும் அதிகாரபூர்வமான அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்பது, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்கவேண்டும் என்பதுமே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், அவற்றின் அரசியல் முகமான பா.ஜ.க. ஆகியவற்றின் முதன்மையான நோக்கமாகும்.

எதிரியை சரியாக அடையாளம் காணவேண்டும்; நோய்க் கிருமிகளை சரியாக அடையாளம் காணவேண் டும். நோய்க் கிருமிகள் எங்கிருந்து உற்பத்தி ஆகின்றதோ அதையும் சரியாக அடையாளம் காணவேண்டும். இவை அத்தனையும் செய்கின்ற விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையை இந்த சனாதன எதிர்ப்பு மாநாடு விடுதலை சிறுத்தைகள் மாநாடு செய்திருக்கிறது - ஆயிரங்கோடி வணக்கங்கள் இந்த மாநாட்டிற்கு.

ஏனென்றால், இப்படி ஒரு சமூகப் பிரச்சினையை - இவ்வளவு சரியான காலகட்டத்தில் தேர்ந்தெடுத்து - இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்; அந்தத் துணிச்சலுக்குப் பெயர் பெற்றவர்கள் இங்கே இருப்பவர்கள். அந்தத் துணிச்சலின் மொத்த உருவம்தான் சகோதரர் திருமாவளவன் அவர்கள்.

அவர்களுக்குத் துணை  நிற்கின்ற ஆயுதங்கள்தான் எங்களைப் போன்றவர்கள் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், ஒரு அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து...

ஆகவே நண்பர்களே, சனாதன தேசம் என்ற நிலையிலிருந்து மாறி, படிப்படியாக இந்தியா ஒரு ஜனநாயக தேசமாக பரிணாமம் பெறுவது தொடர வேண்டும் எனில், தற்போது உள்ள அரசியல் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும், ஒரு அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து சனாதன சக்திகளை, அனைத்து சதி முயற்சிகளை முறியடிக்கவேண்டும். ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது; ஒவ்வொரு வாக்கியத்திற்கும் பத்து மாநாடு களை நடத்தவேண்டும்.  இன்னொரு தீர்மானத்தில் தெளிவாக சொல்லியிருக் கிறார்கள்; மிக முக்கியமான பகுதி இது.

சனாதன் சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று.

இது பயங்கரவாதம்; பயங்கரவாதம், பயங்கரவாதம் என்று எங்களைப் பார்த்துச் சொல்கிறார்கள். தேசத் திற்கு விரோதம்; தேச விரோதம்; தேச பக்திக்கு விரோதம் என்று காம்ரேடு ராஜாவின் மகள்மீது குற்றம் சாட்டுகிறார்கள்; அதேபோன்று கண்ணையாகுமார்மீது குற்றம் சாட்டுகிறார்கள். நண்பர்களே, நேரமின்மை காரணத்தினால், சுருக்கமாக சொல்கிறோம்.

Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva

இதோ என்னுடைய கைகளில் இருப்பது Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutvaஎன்ற தலைப்பில் வெளிவந்த புத்தகம். இந்துத்துவாவை நடத்துவதற்காக பயங்கரவாதத் திட்டம்; ஆயுதங்களைத் தயாரித்து, துப்பாக்கிச் சுடுவதற்குப் பயிற்சி கொடுக்கும் அமைப்புகளில் ஒன்றுதான் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பாகும். அதனைத் தடை செய்யவேண்டும் என்று இங்கே பேசினார்கள்.

நண்பர்களே! சேர்த்துக் கொள்ளுங்கள் - தடை செய்ய வேண்டும் என்று சொல்லும்பொழுது, ஏன் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறீர்கள்.

Bhonsala Military School

அந்த நூலில் இருக்கின்ற ஒரு பகுதியை இங்கே சொல்கிறோம்.

சனதானம் என்று சொன்னால், பக்தி கன்னத்தில் போட்டுக்கொள்வதல்ல நண்பர்களே! சனாதனத்திற்குப் பின்னால், துப்பாக்கி இருக்கிறது; சனாதனத்திற்குப் பின் னாலே கத்தி இருக்கிறது; சனாதனத்திற்குப் பின்னாலே வாள் இருக்கிறது.

அந்த நூலில் அவர்,

Four of these organisations – the Bajrang Dal, the Bhonsala Military School, the Hindu Aikya Vedi and the Rashtriya Sikh Sangat – are affiliated to the Rashtriya Swayamsevak Sangh (RSS). Others – the Sanatan Sanstha, the Hindu Yuva Vahini, the Sri Ram Sene and Abhinav Bharat

இந்த அமைப்புகளில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். இந்த அமைப்புகளிலே உள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்பு தான் தபோல்கரை கொலை செய்தது, கோவிந்த்  பன்சாராவை கொலை செய்தது, கவுரி லங்கேசை கொலை செய்தது. இந்திய ராணுவப் படையில் இருந்த துப்பாக்கி மருந்துகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.

இதில் பல அமைப்புகள் இருக்கிறது - அதிலே கொலை அமைப்புகள் இருப்பது மட்டுமல்ல,   Bhonsala Military School  என்று இருக்கக்கூடிய அமைப்பில், ராணுவத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், இத்தாலிக்குச் சென்று முசோலினியினுடைய பாசிசத்தைக் கற்றுக்கொண்டு வந்த இந்து மகாசபை தலைவர் மூஞ்ஜே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்குச் சொல்லிக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அதைப் பயன்படுத்தி, நடைபெற்றதுதான் மாலேகான் குண்டுவெடிப்பு. இதுபோன்ற ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

இந்தியாவினுடைய ராணுவ தளவாடத்தைக்கள வாடி, அவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள் சனாதனத்தைக் காப்பாற்ற, மனுதர்மத்தை மீண்டும் கொண்டுவர!

எனவேதான், இந்த மாநாடு என்பது இருக்கிறதே, இது வெறும் அரசியல் பார்வையோடு போடப்பட்டிருக்கின்ற மாநாடல்ல நண்பர்களே! அதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நீங்கள் வேகமாக செயல்படவேண்டும்.

அடுத்தபடியாக ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்; இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த செய்தி என்னவென்றால் நண்பர்களே,

வேதம் படித்தால் - பொறியியல் கல்லூரியில் சேரலாமாம்!

மிக முக்கியமாக வேதம் படித்தால், அடுத்தபடியாக அவர்கள் என்ஜினியரிங் காலேஜில் நேரே சேருவதற்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

வேதம் படித்தால், வடமொழி படித்தால், சமஸ்கிருதம் படித்தால், உடனடியாக பொறியியல் கல்லூரியில் சேர லாம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு கல்வி வாரியம்; சிஷ்டா போர்டு என்று சொல்லி, மத்திய கல்வி வாரியத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எனவேதான், சனாதனத்தை, மனுதர்மத்தை மீண்டும் வரவிடக்கூடாது என்பது மட்டுமல்ல - சூத்திரனுக்கு, பஞ்சமனுக்கு எதைக் கொடுத்தாலும் படிப்பைக் கொடுக்காதே என்று சொன்ன அந்த சனாதனப் பார்ப்பனிய சனாதனத்தை மீண்டும் இங்கே கொண்டு வருவதற்குத்தான் அடுத்து மோடி வருகின்றார்.

தப்பித்தவறி, சர்க்கார் சாப்; சர்க்காரி சாப் என்றெல்லாம் நீங்கள் சொல்ல ஏமாந்தார்களே இளைஞர்கள், வேலை வாய்ப்பு என்று  அதுபோல இப்பொழுது முடியாது.

எந்த உயர்ஜாதிக்காரன் அந்த 100 நாள்கள் வேலைக்குப் போயிருக்கிறார்களா?

10 சதவிகித இட ஒதுக்கீடு ஏழைகளுக்கு என்று சொல்கிறீர்களே, அது என்ன உயர்ஜாதி ஏழைகளுக்கு? ஏழைகள் என்றால், உயர்ஜாதி ஏழைகள்தானா? ஏழைகள் எல்லா இடங்களிலும் இல்லையா? அந்த உயர்ஜாதி ஏழைகளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறோம், தயவு செய்து அதற்குப் பதில் சொல்லட்டும் - எங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கின்றவர்கள் யாராக இருந்தாலும், இதனை ஆதரிக்கிறோம் என்று சொல்கின்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறோம்; 100 நாள் வேலைத் திட்டம் கொடுக்கிறார்கள் அல்லவா - அது வறுமை ஒழிப்புத் திட்டம்தானே - அந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தில், 100 நாள்கள் வேலை செய்கிறார்களே, அந்தத் தாய்மார்களில், அந்தத் தொழிலாளர்களில் எந்த உயர்ஜாதிக்காரன் அந்த 100 நாள்கள் வேலைக்குப் போயிருக்கிறார்களா? என்பதை தயவு செய்து புள்ளி விவரத்தைக் காட்டுங்கள் பார்க்கலாம். எனவேதான், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முதல் அறிக்கை கொடுத்தார். இந்தியாவிற்கே திராவிட முன்னேற்றக் கழகம்தான் அறிக்கை கொடுத்தது. கனிமொழி எம்.பி.தான் அங்கே ஒரு சிறந்த திட்டத்தைக் கொடுத்தார்; ஏனோ எதிர்க்கட்சி நண்பர்கள் கொஞ்சம் தவறிவிட்டார்கள் அதிலே - அதிலே அவர்கள் சரியாக இருந்தால், அந்த மசோதா செலக்ட் கமிட்டிக்குச் சென்றிருக்கும். ஆனாலும், பரவாயில்லை, அந்த மசோதா நீதிமன்றத்தில் நிற்காது.

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குப் போட்டிருக் கிறது; திராவிடர் கழகம் வழக்குப் போட்டிருக்கிறது; விடுதலை சிறுத்தைகள் வழக்குப் போட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

எனவேதான், நாங்கள் நீதிமன்றத்திலும் உங்களை சந்திப்போம்; வீதி மன்றத்திலும் உங்களை சந்திப்போம்; மக்கள் மன்றத்திலும்  உங்களை சந்திப்போம். இதுதான் உங்களுடைய கடைசிக் குரல்;

இதுதான் உங்களுடைய கடைசி வாய்ப்பு

இந்தப் படை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

என்று கேட்கக்கூடிய அந்த உரிமையோடு வந்திருக் கின்ற படையே, தயாராகுங்கள் - ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுங்கள் - போர்ச் சங்கை ஊதிவிட்டோம் - போர்ப் படைத் தளபதிகள் தயாராக இருக்கவேண்டும். போர் முரசு கொட்டுவதுபோல, நாராயணசாமி அவர்கள் ஓங்கி ஒரு தட்டுத் தட்டினார்.

அமித்ஷாவிற்குப் பன்றிக் காய்ச்சல் வந்தது; மோடிக்குப் பதவிக் காய்ச்சல்

எனவே, இரண்டு தட்டு - மூன்றாவது தட்டு போர் முழக்கம் தொடங்கிவிட்டது; மோடிகளுடைய வாலாட்டங்கள் இனிமேல் நடக்காது; அமித்ஷாவிற்கு ஏற்கெனவே காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வந்திருக்கிறார். நீண்ட நாள் அவர் வாழவேண்டும். அமித்ஷாவிற்குப் பன்றிக் காய்ச்சல் வந்தது; மோடிக்குப் பதவிக் காய்ச்சல் வந்தது.

எனவே, எல்லாக் காய்ச்சல்களையும் சந்திப்போம் -சந்திப்போம் - சந்திப்போம்!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வீழ்க சனாதனம்! வாழ்க அம்பேத்கர்!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles