பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு காண முடியாத பிரச்சினைகளே கிடையாது
ஆசிரியர்கள் போராடுவது வலியால் - அதற்குப் பரிகாரம் அடக்குமுறையல்ல!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஜெயங்கொண்டம், ஜன.25 பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு காண முடியாத பிரச்சினைகளே கிடையாது; ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (25.1.2019) ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பேட்டியின் விவரம் வருமாறு:
அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவே ஆசிரியர்களின் வேலை நிறுத்தம்!
ஆசிரியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ போன்ற தொழிற்சங்க அமைப்புளைச் சேர்ந்தவர்கள் பல நாள்கள் அவர்களுடைய கோரிக்கைகளை அவர்கள் வற்புறுத்தி, அதனை ஏற்காத நிலையில்தான், தவிர்க்க இயலாத அளவிற்கு, அரசினுடைய கவனத்தை ஈர்க்க, பொதுமக்களிடையே தங்களுடைய கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை வலியுறுத்த அவர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வேலை நிறுத்தம் செய்யவேண்டும், பள்ளிகளுக்குத் தொல்லை உண்டாக்கவேண்டும் என்பது ஆசிரியர்களின் அமைப்புகளுடைய நோக்கமல்ல.
அவர்களுடைய வலியின் காரணமாகத்தான், அவர் களை அரசாங்கம் அழைத்துப் பேசி, உடனடியாக ஒரு தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கில்தான் அவர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதோ, போட்டியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று சொல்வதோ, அதற்குப் பரிகாரமாகாது.
இன்னமும் காலதாமதம் செய்யாமல், மனிதா பிமானத்தோடு அவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரி யர்களுடைய எண்ணிக்கைதான் மிக அதிகம்.
எனவே, பாலின நீதி, சமூகநீதிக்கும்கூட விரோதமாக அரசாங்கம் போகக்கூடாது. எனவேதான், உடனடியாக அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்!
பேசினால், தீர்வு காண முடியாத பிரச்சினைகளே கிடையாது. ஆகவே, விரைந்து அவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து நல்ல தீர்வு காணவேண்டும்.
தேர்வுப் பருவம் வருகின்ற இந்தக் காலகட்டத்தில், பள்ளிக்கூடங்கள் மூடி இருப்பதோ, வகுப்புகள் நடக்காமல் இருப்பதோ நல்லதல்ல. புதிய ஆசிரியர்களை நியமித்தால், அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. அது பெயரளவிற்குப் பள்ளிக்கூடங்கள் நடந்தது என்று காட்டத்தான் பயன்படுமே தவிர, மாணவர்களுடைய கல்விக்கு அது பயன்படாது. பெற்றோர்களும் கவலை யோடு இருக்கிறார்கள்.
ஆகவே, அரசாங்கம், குறிப்பாக கல்வித் துறை அமைச்சர் மற்றவர்கள் உடனடியாக இதற்குப் பரிகாரம் தேட, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சுமூகத் தீர்வை காணவேண்டியது அவசியம்.
அவர்கள் அவதிப்படுவது வலியால் - அதற்குப் பரிகாரம் அடக்குமுறையல்ல.
முதலில் அ.தி.மு.க.வில் கூட்டணி உருவாகட்டும்!
செய்தியாளர்: பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி என்று சொன்னீர்களே, அதுபற்றி...?
தமிழர் தலைவர்: கருவில் உருவாகி வெளியே வருவது குழந்தைதானா? அல்லது கருச்சிதைவா? என்பது சந்தேகமாக இருக்கிறது. அ.தி.மு.க. பா.ஜ.க. வோடு கூட்டணி சேருவது பிறகு; அ.தி.மு.க.வில் உள்ள வர்களிடையே ஒரு கூட்டணி உருவாகட்டும்; பிறகு மற்ற கட்சியுடன் கூட்டணிப் பற்றி பேசலாம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.